கேள்வி: ஏன் யோகா, தியான வகுப்புகளை எதிர்க்கிறீர்கள்?

பதில்: யோகா, தியானம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது தான். ஆனால் இவற்றைப் பரப்புவதன் பின்னணியில் ஓர் அரசியல் இருக்கிறது. அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

periyar 592யோகா, தியானம், சுய முன்னேற்றம் எனும் பெயரால் அரசியலற்ற வெளி இன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இம்மூன்றுக்குள் ஆட்படாத இளைஞர்களே கிடையாது. சமூக மனிதர்களை உதிரி மனிதர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தோழர் லெனினிடம் உழைக்கும் மக்களுக்கு மிகப் பெரிய எதிரி யார், ஏகாதிபத்தியமா, முதலாளித்துவமா, எது எனக் கேட்டார்கள்? அதற்கு அவர் சொன்னது “உதிரிகள்”. இன்று சமூகப் பார்வையே இல்லாத உதிரிகள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். உன்னுடைய வளர்ச்சி, உன்னுடைய முன்னேற்றம், உன்னுடைய மனஅமைதி, ஒரே நாளில் லட்சாதிபதி ஆவது எப்படி? என்று இளைஞர்களை சிந்திக்க விடாமல் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் . இன்றைக்கு இது மதம் கடந்து, சாதி கடந்து நடந்து கொண்டிருக்கிறது.

சாமியார்கள் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் அரசியல்மயப்படுவதைத் தடுக்கிறார்கள், அதனால் எதிர்க்கிறோம்.

கேள்வி : இது இராவணன் மண்ணு. இராமனுக்கு இடம் கிடையாது. இராவணன் ஒரு பிராமணன். அப்ப நீ பார்ப்பான் வழித்தோன்றலென்று ஒத்துக்கொள்வாயா? இராவணன் சுத்த சைவம். சைவம் சாப்பிடறவனும் வீரன்னு ஒத்துக்கொள்வாயா? இராவணன் மிகப்பெரிய சைவபக்தன். அப்ப பெரியார் ஒரு டூபாக்கூர்ன்னு ஒத்துக்கொள்வாயா? இராவணன் ராவணன் சம்ஹிதா, அர்க பிரகாஷம் என்ற சமஸ்க்ரித நூல்களை இயற்றியவன். அப்ப சமஸ்க்ரிதமும் ஆதி மொழின்னு ஒத்துக்கொள்வாயா? இராவணன் நாலு வேதத்தையும் கற்ற பண்டிதன். நீயும் வேதங்களில் என்ன இருக்குதுன்னு படிச்சு தெரிஞ்சுக்குவியா? இது எதுவுமே பண்ணாம இது இராவணன் மண் என்று எங்களுக்கு படம் காட்டுறீங்களேடா.

பதில்: பார்ப்பனர்களைப் பொருத்தவரை ஒருவனின் தந்தை பார்ப்பனனாக இருந்தால், அவனை பார்ப்பான் என ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அம்மா பார்ப்பனராக இருக்க வேண்டும். இது தான் அவர்களது விதி.

பார்ப்பனியத்தை எதிர்த்தவர்களை பார்ப்பனீயம் அழிக்க நினைக்கும் அல்லது தனதாக்கிக் கொள்ளும்., கடவுள் இல்லை எனவும், வர்ணாசிரமத்தை, சனாதன தர்மத்தை, வேள்வியில் அறிவில்லாமல் உணவுப் பொருட்களை வீணடிப்பதை எதிர்த்த புத்தரை மகா விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்லி, நாகர்ஜுனா எனும் தெலுங்கு பார்ப்பான் புத்தரையே கடவுள் எனச் சொல்லி மக்களிடம் பரப்பி புத்த மதம் மகாயானம், ஈனயானம் என இரண்டாகப் பிரிந்து போக காரணமாக இருந்தான்.

கடைசி வரை இந்து மதத்தை, வர்ணாசிரமத்தை சனதான (அ)தர்மத்தை அம்பேத்கர் எதிர்த்தே வந்தார். ஆனால் இன்று அம்பேத்கரையும்,

நான் ஏன் நாத்திகனானேன்? புத்தகத்தை எழுதிய, RSS க்கு எதிராக பேசிய மாவீரன் பகத்சிங்கையும் தனதாக்க முயற்சி செய்கிறது பார்ப்பனீயம்.

அதே போல இராவணனையும் தனதாக்க முயற்சி செய்கிறது. ஒருவர் மிகத் திறமைசாலியாக இருந்தால் பார்ப்பனீயம் அவன் தனது இனத்தைச் சேர்ந்தவன் என பொய்யான செய்தியைப் பரப்ப கொஞ்சமும் கூச்சமோ வெட்கமோ படாது.

சில வருடங்கள் கழித்து, பெரியாரை எதிர்க்க முடியாமல் தனதாக்க முயன்றாலும் முயலலாம். ஆனால் பார்ப்பனியத்தின் ஆணிவேரையே பெரியார் பேச்சின் மூலம், எழுத்தின் மூலம் கடுமையாக எதிர்த்திருப்பதால் அது நடக்காது.

பார்ப்பனர்களின் விதியின் படி இராவணன் பார்ப்பனர் கிடையாது.

பார்ப்பனர் வழித்தோன்றல் என ஒத்துக்கொள்வாயா’ எனக் கேட்பதில் மிகப் பெரிய சூட்சமம் இருக்கிறது. இது மிக சாதாரணமான கேள்வி இல்லை.

ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங்க பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். ஆரியர்கள் தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று வலிந்தும் பொய்யாகவும் பேசி வந்தனர்.

இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக, மரபணு ஆராய்ச்சி ஒன்று உண்மையை மறுக்க முடியாமல் எடுத்துரைக்கிறது. மற்ற ஆய்வுமுறைகளை விட மரபணு ஆராய்ச்சி இன்னும் துல்லியமானது. கி.மு. 2000 ஆம் ஆண்டுவாக்கில் மத்திய ஆசியாவிலிருந்து சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை வேராகக் கொண்ட ஆரியர்களின் வருகையை இந்த ஆய்வு சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுகிறது. அதே காலத்தில் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்து போனதும் நடந்திருக்கிறது.

இந்த ஆய்வை பற்றி விரிவாகப் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்:

https://goo.gl/jJdbRh

மகஇக "ஆரியர்கள் வந்தேறிகள்" என இந்தக் கட்டுரையை மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்தின் மின்னூலுக்கான இணைப்பு கீழே தரப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம்.

https://goo.gl/cGvUJs

மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது எனும் கருத்து பழையது. ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து வந்த மனிதர்களின் காலத்திற்கு முன்பே இங்கே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது அதிரம்பாக்கம் ஆய்வின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. உலகின் முதல் மனிதன் தமிழன் தான், தமிழ் நாட்டில் தான் உருவாகியிருக்கிறான். நாம் பார்ப்பனர்களின் வழித்தோன்றல் அல்ல, தமிழர்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் பூர்வ குடிகள். இந்த ஆய்வின் இணைப்பு:

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29388951

https://goo.gl/w5Xb9k

https://goo.gl/rbhTJD

https://goo.gl/nY9dCE

ஆரியர்கள் வருவதற்கு முன்னர், பண்டைய இந்தியாவில் பரந்து வாழ்ந்த தொல்குடியினர், திராவிடர்கள். இத் தொல்குடியினர் நாகர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.

“திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே என்பதை ஒப்புக் கொள்ள வெகுசிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்க முடியாது. அதே போன்று திராவிடர்கள் நாகர்களாக தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பரவியிருந்தனர் என்பதையும் சிலரே ஒப்புக்கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை” - இது பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர் தரும் செய்தி.

"திராவிடர்கள் தமிழர்கள்" என ஆதாரத்துடன் கட்டுரை எழுதி இருக்கிறார் அய்யா எழில்.இளங்கோவன் அவர்கள். இணைப்பு: https://goo.gl/3up1pW

மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து தெரிவது தமிழர்கள் இந்தியாவின், தமிழ் நாட்டின் பூர்வ குடிகள். ஆரியர்கள் வந்தேறிகள். நாகரிகமாக சொல்ல வேண்டும் என்றால் குடியேறிகள், அதனால் நாங்கள் பார்ப்பனர்களின் வழித்தோன்றல் அல்ல.

இராவணன் சுத்த சைவம். சைவம் சாப்பிடறவனும் வீரன்னு ஒத்துக்கொள்வாயா?

உணவு பழக்கத்திலிருந்து வருவது அல்ல வீரம் என்பது. நமது மூளையில் subgenual anterior cingulate cortex (sgACC) என இருக்கும் ஒரு பகுதியே வீரத்திற்கு காரணம் என அறிவியல் சொல்கிறது. இணைப்பு: https://goo.gl/QVoAac

சைவம், அசைவம், மாட்டுக்கறி என எதை சாப்பிடுகிறவரும் வீரனாக இருக்கலாம்.

இந்த கேள்விக்குப் பின்னால் இருக்கும் அரசியல் தெரியாமல் இல்லை. சைவம் சாப்பிடுகிறவர்கள் நல்லவர்கள், அவர்களுக்கு கோபம் வராது, குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லை எனும் ஒரு பொதுப் புத்தி நம் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது உண்மையா ?

 • நந்த மரபைச் சேர்ந்த மன்னர்களையும் போர்வீரர்களையும் அவர்கள் உறங்கும்போதும் கொன்றவன் புஸ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பனன் தான்.
 • ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை.
 • சங்கரராமனைக் கொன்றது யார் ?
 • அக்கால வரலாற்றுச் சான்றுகள் பார்ப்பனர்கள் கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றில் கைதேர்ந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
 • காசியில் மனிதக் கறி தின்கிறார்கள் அகோரிகள். அவர்களை தெய்வமாக வணங்குபவர்கள் யார் ?

இணைப்பு:

 https://goo.gl/kPguub

https://goo.gl/1WbM7C

வேத காலத்தில் மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள் பார்ப்பனர்கள்.,

உயிர் கொல்லாமையை வலியுறுத்திய புத்த, ஜைன மதங்களுடன் போட்டி போட முடியாமல் தான் விரும்பி உண்கின்ற மாட்டுக்கறியை பார்ப்பனர்கள் கைவிட்டார்கள். அதுமட்டுமில்லாது சைவ உணவு முறைக்கு மாறுகிறார்கள்.

மாட்டுக்கறியை எப்படி வெட்டி, நெய்யிட்டு உண்ண வேண்டும் என்பது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு அவர்கள் இராவணனை சொல்லவில்லை, இராவணன் என்பது ஒரு குறியீடு, அது பார்ப்பனர்களையே குறிக்கும் .

இராவணன் மிகப் பெரிய சைவ பக்தன். அப்ப பெரியார் ஒரு டூபாக்கூர்ன்னு ஒத்துக்கொள்வாயா என கேட்டிருக்கிறார்கள்.

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற வேலை.

நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள், கடவுள் அண்டத்தைப் படைக்கவில்லை என்பதை அறிவியல் நிரூபித்து விட்டது, அதனால் காஞ்சி மகா பெரியவாளை ஒரு டூபாக்கூர்ன்னு ஒத்துக்கொள்வாயா?

கடவுள் வழிபாடு என்பது அவரவர் விருப்பம், அது வழிப்பாட்டு உரிமை. தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்ல வேண்டும், அர்ச்சகராக வேண்டுமென்பதற்காக தான் பெரியாரே போராடினார்.

இராவணன் சைவ பக்தனாக இருப்பதால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. அது அவர் விருப்பம், அவர் உரிமை, அவர் நம்பிக்கை.

இராவணன் ராவணன் சம்ஹிதா, அர்க பிரகாஷம் என்ற சமஸ்க்ரித நூல்களை இயற்றியவன். அப்ப சமஸ்கிருதமும் ஆதி மொழின்னு ஒத்துக்கொள்வாயா?

ம்பால் நகரில் மணிப்பூர் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த 105-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடியும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ஹர்ஷ் வர்தன் “சமீபத்தில் நாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, அண்டவெளி ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்துவிட்டோம். அவர் ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்று ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளார்” என்று பேசினார். அப்போது மோடியும் அதை ரசித்துக் கொண்டிருந்தார்.

ஹாக்கிங் எங்கு கூறியிருக்கிறார், ஆதாரம் என்ன என்று மத்திய அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது, “மீடியாவில் இருக்கும் நீங்கள் கொஞ்சம் உழைத்துக் கண்டுபிடியுங்கள், உங்களால் முடியாது எனும்போது நான் ஆதாரத்தைத் தருகிறேன்” என்று மழுப்பினார்.

பிறகு அமைச்சரின் இந்த பொய்யான செய்தியின் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் காறித்துப்பினர். ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் அறிவிலி கூறியதை வைத்து அமைச்சர் துணிந்து இந்த உளறலை கூறியிருக்கிறார். இவர்தான் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் என்றால் நம் நாடு உருப்படுமா?

இது போல அறிவியலில் எதை கண்டுபிடித்தாலும் வேதத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது என கூச்சமே இல்லமால் பொய் சொல்வது பார்ப்பனர்களால் மட்டுமே முடியும்., அதற்கு எந்த வித ஆதாரமோ துளியும் இருக்காது., அனைத்து புராண இதிகாச கதைகளிலும் அறிவியல் இருக்கிறதா ஆபாசம் இருக்கிறதா என்பதை மக்கள் அறிவார்கள்.

சமசுகிருதம் ஆதி மொழி என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786 இல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம் சமஸ்கிருதத்தை மய்யமாகக் கொண்டு அமைந்தது.

இந்திய தேசியம், இந்துச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள் தான். மனு ஸ்ம்ரிதி, யாக்கிய வள்ளி போன்ற இந்து மத நூல்களை இந்து சட்டமாகிவிட்டார்கள்.

தமிழ் நாட்டு பார்ப்பனர்கள் கொல்கத்தா சென்று இந்திய மொழிகளின் தாய், மூலம், சமசுகிருதம் எனக் கட்டுக்கதை விட, இல்லாத ஆரிய மேன்மை, இல்லாத சமசுகிருத மேன்மைகளை சேர்த்து கோர்த்து விட அப்பாவியாக அதை நம்பிய வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஒரு ஆங்கிலேயன் எழுதுனதினால்,” வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானென” உலகம் அதை ஆராயாமல் நம்பியது.,

மாக்ஸ் முல்லர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து பெரும்பான்மையான சமசுகிருத, வட மொழி நூல்களையும் மொழி பெயர்த்து விட்டார்கள். அதனால் உலகம் முழுமைக்கும் ‘இல்லாத சமசுகிருத மேன்மை’ சென்று சேர்ந்தது.

அப்போது தமிழில் வெறும் இரண்டே இரண்டு நூல்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது, அவை திருக்குறளும், நாலடியாரும்.

பின்னர் வந்த எல்லீசு (Francis White Ellis) சமசுகிருத கறை படியாத ஒரு மொழி உண்டு., சமசுகிருதத்திற்கு மேம்பட்ட ஒரு மொழி இருக்கிறது, அது தமிழ் நாட்டில் உள்ள தமிழ்., அந்த மொழி குடும்பம் திராவிட மொழி குடும்பம் என்று சொன்னார் ., அதை அறிவியல் முறைப்படி நிரூபித்தவர் கால்டுவல் (Bishop Robert Caldwell).             

சமசுகிருதம் ஆதி மொழி அல்ல.

 இராவணன் நாலு வேதத்தையும் கற்ற பண்டிதன். நீயும் வேதங்களில் என்ன இருக்குதுன்னு படிச்சு தெரிஞ்சுக்குவியா?

வேதங்களைப் பார்ப்பனர்கள் அச்சில் ஏற்றாமல், தங்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து வைத் தார்கள். எனவே அதற்கு ‘மறை’ என்று பெயர் சூட்டப்பட்டது. மக்களிடம் வேதத்தை கொண்டு செல்ல பார்ப்பனர்கள் மறுத்த காரணம் - அது தங்களின் சுரண்டும் உடைமை என்பதால் தான்.

எதை கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியை கொடுக்காதே என சொல்லி, படித்தவர்களின் காதில் ஈயம் காய்ச்சி காதில் ஊற்றப்பட்டது.

ஆனால் வில்லியம் ஜோன்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்னர் இன்று நான்கு வேதங்களும் தமிழில் மொழி பெயர்த்தாகி விட்டது. வேதங்களில் எந்த பெரிய புடலங்காய் விஷயங்களும் சொல்லப்படவில்லை.

கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என பிச்சை கேட்பதும், சூனியம் பற்றியும், சாபமிடுதலும், வருணாசிரமத்தை நியாயப்படுத்தியும் இன்னும் பிற கேவலமான செய்திகளே வேதங்களின் தொகுப்புகள். விளக்கமாக அறிந்து கொள்ள படிக்க வேண்டிய புத்தகம் : இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாஸ்.

கேள்வி : படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னென்ன?

பதில்:

 1. இந்திய வரலாற்றில் பகவத் கீதை - திரு.பிரேம்நாத் பசாஸ்,
 2. பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் – திரு. சுப. வீரபாண்டியன்
 3. திரு.ஜோதிராவ் புலே எழுதிய அடிமைத்தனம் (குலாம்கிரி)
 4.  திராவிடச் சான்று - Thomas Trautmann
 5. அரசியல் எனக்குப் பிடிக்கும், திரு.ச.தமிழ்ச்செல்வன்
 6. கம்யூனிசம் நேற்று இன்று நாளை - தோழர் ஜவஹர்
 7. இராகுல் சாங்கிருத்தியாயன் நூல்கள்

- சுபாஷ், தபெதிக, சூலூர், கோவை

Pin It