அம்பேத்கர் சாதி ஒழிப்பை விரும்பினார். ஆனால், அவர் சாதி ஒழிப்பிற்கு சாத்தியமான வழிமுறையைக் கண்டுபிடித்தாரா என்றால், இல்லையென்பதே விடையாகும். அவர் கூறுகிறார், “இந்திய சமூகத்தைப் பொருத்தமட்டில் இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்கள் யாருமில்லை. அவர்களுக்கு இழக்க முடியாத சாதி இருக்கிறது. ஆகவே, இங்கு வர்க்க ஒற்றுமையும் சாத்தியமில்லை; வர்க்கப் போராட்டமும் சாத்தியமில்லை” (“புத்தாரா? கார்ல் மார்க்ஸா? நூலில்)

அம்பேத்கரின் இந்த கருத்து இந்தியாவில் வர்க்கப்போராட்டமும் சமூக மாற்றமும் சாத்தியமில்லை என்பதோடு சுருங்கிவிடவில்லை. இது சாதி ஒழிப்பும்கூட சாத்தியமில்லை என்றே வலியுறுத்துகிறது.

ambedkar 452அதாவது, சாதி ஒழிப்பிற்கு சாதி ஆதிக்க சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பதும்; அதற்கு தலித் மக்களோடு தலித் அல்லாத மற்ற சாதியிலுள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதும் அடிப்படைத் தேவையாகும். ஆனால், வர்க்க ஒற்றுமை என்னும் உழைக்கும் மக்களின் ஒற்றுமை சாத்தியமில்லை என்பதால் தலித் மக்களோடு வேறு எந்த சமூகப்பிரிவு மக்களும் ஒன்றிணைய மாட்டார்கள் என்பதே அம்பேத்கரின் கருத்து. இந்த நிலையில் சாதியை ஒழிக்க வேறு என்னதான் வழி? ஒரேயொரு வழிதான் உள்ளது. அது, சாதிய வன்கொடுமைகளுக்கு காரணமான சாதியாதிக்க சக்திகளை ஒழித்துக்கட்டுவதோடு, சாதியை இழக்க விரும்பாத தலித் அல்லாத பிற சாதி மக்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும்! அதாவது தலித் அல்லாத அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்பதே அவ்வழி. இது சாத்தியமா? சாத்தியமே இல்லை.

அம்பேத்கரிடம் சாதியை ஒழிக்க எந்த வழிமுறையும் இல்லை என்பது போலவே சாதிய ஒடுக்குமுறையைத் தடுக்கவும்கூட வழிமுறை எதுவும் கிடையாது என்பதும் உண்மையாகும். அவர் சொல்கிறார், “எவ்வளவுதான் உயர்ந்த இலட்சியத்தையும் மிகச்சிறந்த விளைவுகளையும் ஏற்படுத்தினாலும் இரத்தம் சிந்துகிற வழிமுறையை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” (“புத்தாரா? கார்ல் மார்க்ஸா?) சாதிய ஒடுக்குமுறையை, வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால் அதை நிகழ்த்துவதற்கு காரணமான ஆதிக்க சக்திகள் மீது பதில் தாக்குதல்கள் நடத்த வேண்டியது அவசியாமாகும். ஆனால், அம்பேத்கரோ இதையெல்லாம் கூடாது என்பதோடு அவர்கள் மீது அன்பு காட்ட வேண்டுமென்கிற புத்தரின் போதனைகளைத்தான் பரிந்துரைக்கிறார்.

அம்பேத்கரின் இந்த அகிம்சை கூற்று வேடிக்கையானது. இரத்தம் சிந்துகிற வழிமுறைகளை தடுப்பதன் மூலமாக அவர் ஆதிக்கசக்திகளை காப்பாற்றி விடுகிறார். அதேநேரத்தில் ஆதிக்க சக்திகளால் அன்றாடம் வதைக்கப்படுகிற, இரத்தம் சிந்துகிற நம்மை கைவிட்டுவிடுகிறார்.  

ஆகவே அம்பேத்கரிடம் சாதி ஒழிப்பிற்கான எந்த வழிமுறையும் கிடையாது. ஆனால் ‘புத்தரின் போதனையை பின்பற்றுவதன் மூலம் இரத்தம் சிந்தாமல் எதிரிகளின் மனதை மாற்றினால் ஒருவேளை சாதியை ஒழிக்க முடியும்’ என்று அவர் நம்பினார்.

அறிவியல்பூர்வமாக, ஆணித்தரமாக நிரூபிக்காத, இந்த வெற்று நம்பிக்கை என்பது சாதி ஒழிப்பிற்கான தத்துவமோ, அரசியலோ, வழிமுறையோ ஆகாது. அது வெறும் நம்பிக்கைத்தான். ஆகவே, அம்பேத்கரியம் என்று ஒன்று இல்லை; அம்பேத்கரியம் என்று நம்பபடுவதெல்லாம் புத்தரின் வெற்று போதனைகளேயாகும் என்பதுதான் உண்மை.

கம்யூனிஸ்டுகளின் அறிவியல்பூர்வமான வழிமுறை

கம்யூனிஸ்டுகள் வர்க்கப்போராட்டத்தையும் சாதி ஒழிப்பையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையில் சாதி ஒழிப்பையும் வர்க்கப்போராட்டத்தையும் தனிதனியாகப் பிரித்துப் பார்க்கிறவர்கள்தான் குழம்பிக் கிடக்கிறார்கள்.

சாதி தோன்றியது குறித்து இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட கண்ணோட்டங்கள் உள்ளன. ஆனாலும் சாதிய ஒடுக்குமுறையானது வர்க்க ஒடுக்குமுறையோடுப் பின்னிப்பிணைந்தது என்பதில் மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்க முடியாது. ஆகவே சாதிய சிக்கலையும் வர்க்கப்போராட்டத்தையும் இணைத்துப் பார்க்க தெரியாத எவராலும் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று உணர முடியாது. அதனால் அவர்களால் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக படை திரட்டவோ, யுத்தம் செய்யவோ, வெற்றிப்பெறவோ முடியாது.

நாம் சாதிய ஒடுக்குமுறைகளும் சுரண்டலின் வர்க்க நலன்களும் பின்னிப்பிணைந்திருப்பதை பார்ப்போம். 

சாதிய ஒடுக்குமுறைகளுக்குப் பின்னாலிருக்கும் வர்க்க நலன்!

சாதிய ஒடுக்குமுறைகளும் தாக்குதல்களும் சொத்துடைய வர்க்கங்களின் பொருளாதார நலனிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. கூலியில்லாமல் வேலைவாங்கும் வெட்டிவேலை முறை மன்னர்கள் காலம் தொட்டு இருந்திருக்கிறது. இந்தவகையில் கோயில்கள் கட்டப்பட்டன; கோயில் நிலங்கள் விளைவிக்கப்பட்டன; காவிரிக்கரையை உயர்த்தும் பணிக்கூட இம்முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் மன்னராட்சியில் 64 வகை வேலைகள் வெட்டிவேலையாக கருதப்பட்டு உழைப்பு சுரண்டப்பட்டுள்ளது.

செய்த வேலைக்கு கூலி கிடையாது. வேலையினை செய்யாவிட்டால் தண்டனை உண்டு. சாதிய ஒடுக்குமுறைகளும் தாக்குதல்களும் சொத்துடைய வர்க்கங்களின் பொருளாதார நலனிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன.

மன்னராட்சிக்குப் பின்பும் இதேநிலைதான். வெள்ளையர் ஆட்சிக்காலத்திலும் கூட திருவிதாங்கூர் சாம்ராஜ்யத்தில் நீடித்தது போலவே இன்றைய ஆந்திராவின் பலபகுதிகளில் குறிப்பாக தெலுங்கானா பகுதிகளில் வெட்டிவேலை முறை இருந்தது. மீறுவோருக்கு கடுமையான தண்டனைகளும் இருந்தன.

தமிழ்நாட்டில் பண்ணை அடிமைமுறை நீடித்தது; கட்டாய உழைப்பு இருந்தது; பேருக்கு கூலி கொடுத்தார்கள்; கல்வி உரிமை கிடையாது; கடுமையான தண்டனைகள் உண்டு. இதற்கு நல்ல உதாரணம் தஞ்சை. வேலை நேரத்தின்போது கடுமையான தண்டனைகளும் உண்டு. களைத்து சோர்வடைந்தவர்களை உடம்பில் இரத்தம் வரும் அளவுக்கு சாட்டையாலும், சவுக்கு தடியாலும் அடித்து, உதைத்து, நிர்பந்தித்து உழைக்கச் சொல்வர். மாட்டுச் சாணியை கரைத்து குடிக்கச் செய்வர்.

இதையெல்லாம் எதிர்கொள்ளவே விவசாயக்கூலிகள் சங்கம் கண்டனர்; 1967-இல் உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்தனர். பண்ணையார்கள் நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைத்தனர்; விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொலை செய்யும் சதியில் பண்ணையார்கள் ஈடுபட்டனர். 25.12.1968 அன்று மாலை முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை பண்ணையார்கள் கடத்திக்கொண்டு வந்து சவரிராஜ் நாயுடு என்ற பண்ணையார் வீட்டில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். விவசாயத் தொழிலாளர்கள் திரண்டுவந்து முத்துச்சாமி, கணபதி ஆகியோரை மீட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பண்ணைகள் கோபால கிருஷ்ண நாயுடு எனும் பண்ணையின் தலைமையிலும்  காவல்துறை மற்றும் அடியாட்களோடும் வெண்மணி கிராமத்துக்குள் நுழைந்தனர். கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். மக்கள் சிதறி ஓடினர். தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யாவின் எட்டடி நீளமும் ஐந்தடி அகலமும் உள்ள குடிசைக்குள் பதுங்கினர்.

பண்ணையார்களும் அவர்களின் அடியாள்படைகளும் குடிசையின் கதவை பூட்டி தீ வைத்தனர். அதுதான் கீழவெண்மணி.

சாதிய ஒடுக்குமுறைகளும் தாக்குதல்களும் சொத்துடைய வர்க்கங்களின் பொருளாதார நலனிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

இன்றைய தாக்குதல்களால் யாருக்கு இலாபம்?

வெட்டிவேலையின் பேரில் மன்னர்களின் பொருளாதார நலன், கட்டாய உழைப்பின் பேரிலான பண்ணையார்களின் பொருளாதார நலன் ஆகியவை புலப்படக்கூடியவை. ஆனால், முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த  காலத்தில் ஆட்களை அடித்து, குடிசைகளை எரித்து, சொத்துக்களைச் சூறையாடி, ஆணவ படுகொலைகள் நிகழ்த்துவதில் யாருக்கு இலாபம்?

இன்றைக்கு நிகழ்த்தப்படும் இத்தகைய வன்கொடுமைகளில் சராசரியான இளைஞர்களும் பொதுமக்களும்தான் நேரடியாகப் பங்கெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இதில் நிறைவேற்றப்படும் சூறையாடல்களில் பொருட்களை அபகரிப்பதும் மக்கள்தான். அப்படியானால் இன்றைய தாக்குதல்களால் இலாபம் அடைகிறவர்கள் பொதுமக்களா?

இல்லை, முதலாளிகள். எப்படி? இதனை சற்று விரிவாக பார்க்க வேண்டும்.

சாதிய மூலதனம், சாதிய முதலாளிகள், மூலதன போட்டியை எதிர்கொள்ள சாதிய அமைப்பாக்கல், சாதிய வெறியாட்டம்!

 • சாதிய மூலதனமும் சாதிய முதலாளிகளின் தோற்றமும்   

தமிழகத்திலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் தொழில்துறை விஞ்ஞானம் வளர்ந்து, அதற்கு நிலவுடமை சாதிய சக்திகள் தடையாய் இருந்து, அந்த தடையை தகர்க்க புரட்சி நடத்தி முதலாளித்துவம் உருவாகவோ, வளரவோ இல்லை. அப்படி மாறுகிற நிகழ்ச்சிப்போக்கு அரும்பிய காலத்தில் நுழைந்த வெள்ளை ஏகாதிபத்தியம் அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது.

வெள்ளையர்களின் ஆரம்ப வணிகத்திற்கும், தொழில் தொடக்கத்திற்கும் கூட்டு மூலதனம் தேவைப்பட்டபோது மார்வாரி, பனியா மற்றும் இசுலாமியர்கள் போன்ற குறிப்பிட்ட சமூகத்தின் உடமையாளர்கள் மூலதன கூட்டாளிகளாக ஆகி முதலாளிகளாக மாறினர். பெரும்பாலும் வடஇந்திய பின்புலத்தைக் கொண்ட இவர்கள் முதலாளியாக மாறியப்பிறகும் சொந்த சாதி, மத பின்புலங்களை வளர்க்கவே செய்தனர். தங்களின் சாதி சார்ந்த சமூகத்தவரின் வளர்ச்சிக்கு கூட்டுறவு முறைகளை உருவாக்கினார்கள். இதை மார்வாரிகளின் சாதி சமூக வளர்ச்சியில் தெளிவாக காணலாம்.

முதல் உலகப்போருக்குப் பிறகான நிலைமை தமிழகம் உள்ளிட்ட பிராந்தியங்களைச் சார்ந்த மற்ற மேல்சாதி சொத்துடையவர்களுக்கும் சாதகமாக மாறியது. பிரிட்டனுக்கு இருந்த நெருக்கடிகள் காரணமாக இவர்களும் மூலதன கூட்டாளிகளாக ஆகி முதலாளிகளாக மாறினர். இப்படித்தான் தமிழ்நாட்டில் பிள்ளைமார்கள், செட்டியார்கள், முதலியார்கள், ரெட்டியார்கள், நாயுடுகள் போன்ற மேல்நிலை சாதிய சொத்துடையவர்கள் முதலாளிகளாக மாறினர். இப்படி முதலாளிகளாக மாறிய இவர்களும் கூட தங்களுடைய சொந்த சாதியை ஊக்குவித்து வளர்க்கவே செய்தனர்.

இதற்கு நல்ல உதாரணமாக ரெட்டியார், நாயுடு, பிள்ளைமார், முதலியார் போன்ற மேல்சாதியினர் ஆதிக்கத்தையும் அந்த ஆதிக்கத்திற்கு எதிராக 1944 - 1946 காலகட்டத்தில் வன்னியர்கள் அமைப்பானதையும் கூறலாம்.

தென்னாற்காடு மாவட்டத்தில் சீத்தாராம் ரெட்டியார், வேங்கடகிருஷ்ணா ரெட்டியார், பாஷ்யம் ரெட்டியார், லெட்சுமி நாராயண ரெட்டியார், மார்க்கண்டம் பிள்ளை, வேணுகோபால் பிள்ளை, கனகசபை பிள்ளை போன்றவர்களும்; திருச்சி மாவட்டத்தில் பெருவளப்பூர் பி.பி.கே ராஜா சிதம்பரம் ரெட்டியார், திருவானைக்காவல் ராஜா சிதம்பரம் ரெட்டியார், துறையூர் கிருஷ்ணசாமி ரெட்டியார், அரும்பாவூர் நாட்டார், அரியலூர் வெங்கடாசலம் பிள்ளை, காடூர் நடராசம்பிள்ளை, உடையார்பாளையம் பி.நடராசம் பிள்ளை போன்றவர்களும்; வடஆற்காடு செங்கற்பட்டு மாவட்டங்களில் ரெட்டியார், தொண்டை மண்டல முதலியார், கம்மவார் நாயுடு போன்ற மேல்நிலை சாதியினரின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்தது. இவர்களனைவரும் காங்கிரசுக்காரர்கள். இங்கு பெரும்பான்மை மக்களாக இருந்த வன்னிய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலோரும் காங்கிரசுக்காரர்கள்தான்.

இத்தகைய மேல்சாதி காங்கிரசுக்காரர்களின் ஆகிக்கத்திற்கு எதிராக 1944 - 1946 காலகட்டத்தில் “அரசர்குல வாலிபர் சங்கம்” என்ற வன்னிய இளைஞர் அமைப்பு உருவானது. 1946-இல் எஸ்.எஸ்.ராமசாமிப் படையாட்சியைத் தலைவராகவும் கடலூர் ஆ.கோவிந்தசாமி மற்றும் பி.ஜி.நாராயணசாமி ஆகியோரைச் செயலாளர்களாகவும் கொண்டு வன்னியகுல சத்திரியர் சங்கம் தோன்றியது.

வன்னியகுல சத்திரியர் சங்கம் 1949-இல் தமிழ்நாட்டில் நடந்த மாவட்ட மன்றத் தேர்தலில் தென்னாற்காடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் போட்டியிட்டு அங்கெல்லாம் அதிக இடங்களைக் கைப்பற்றி காங்கிரசிற்கு (காங்கிரசில் போட்டியிட்ட மேல்சாதிக்காரர்களுக்கு) பலமான அடியை கொடுத்தது.

ஆக, பிள்ளைமார்கள், செட்டியார்கள், முதலியார்கள், ரெட்டியார்கள், நாயுடுகள் என்ற சாதி மூலதனத்தைக் கொண்டு உருவான முதலாளிகள் சாதிய முதலாளிகளாக வளர்ந்ததோடு மட்டுமில்லாமல் மற்ற சாதியினரின் வளர்ச்சிக்குத் தடையாகவும் இருந்தனர். இவ்வகையில் ஒடுக்குகிற சாதியும் ஒடுக்கப்படுகிற சாதியுமாக இருக்கும் சாதியமைப்பை முதலாளிகள் பாதுகாத்து பயன்படுத்தவே செய்தனர்; செய்கின்றனர்.

சாதிய மூலதனம் சாதிய முதலாளித்துவமாக வளர்ந்து விரிவடைந்து வருவது குறித்து இன்னொரு உதாரணத்தையும் பார்க்கலாம். 1947 அதிகார மாற்றத்திற்குப்பிறகு வளர்ச்சியடைந்த மூலதனத்தில் நாடார் போன்ற இடைநிலை சாதிகளின் மூலதனங்கள் முக்கியமானவை. இதில் நாடார் சமூகத்தில் சொத்துடைய வர்க்கம் சாதிய முதலாளித்துவமாக வளர்ந்து விரிவடைந்துள்ளதை மட்டும் பார்ப்போம். (இது தோழர் பாஸ்கரின் முகநூல் பதிவின் அடிப்படையிலான விபரம். முடிந்தவரை பரிசீலிதிருக்கிறோம். திருத்தம் வந்தால் முறைபடுத்துவோம்)

நாடார்களின் வணிக நிறுவனங்கள்: ஆரோக்யா பால்,  ஹட்சன் பால், கோமாதா பால்,  அருண் ஐஸ்கிரீம், opacity ஐஸ்கிரீம்,  Ibaco ஐஸ்கிரீம் கடைகள், Gold winner, இதயம் நல்லெண்ணெய், VVD தேங்காய் எண்ணெய்,  AVM தேங்காய் எண்ணெய், ஆச்சி மசாலா, ஸ்ரீ கோல்டு பருப்பு,  நந்தி பருப்புகள், Bovonto குளிர்பானங்கள், பவர் சோப், அரசன் சோப்,  டிஸ்கவுண்ட் சோப்,  கோபால் பற்பொடி, ஐடியல் பிரஷர் குக்கர், அனிதா மெட்டல்,  வீனஸ் வாட்டர் ஹீட்டர்ஸ்.

தீப்பெட்டி மற்றும் பட்டாசு நிறுவனங்கள்: சைக்கிள் அகர்பத்தி, STANDARD பட்டாசு,  குயில் மார்க் பட்டாசு, அணில் மார்க் பட்டாசு, செஞ்சூரின் பட்டாசு என சுமார் 70% பட்டாசு நிறுவனங்கள். அலுமினிய சம்பந்தப்பட்ட 70% தாயாரிப்புகள்.

appu balan statues 640வணிக பெரு நிறுவனங்கள்: சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், ஜெயசந்திரன Tex Titles, சௌந்திரபாண்டியன் ஸ்டோர்ஸ், வசந்த் &கோ, உங்கள் Sathya, பொம்மீஸ் நைட்டிஸ், விகாஷ் நைட்டிஸ், ராஜாத்தி நைட்டிஸ்.

உணவு நிறுவனங்கள்: HOTEL சரவண பவன். நிலா sea Food. தீம் பார்க்ஸ்: VGP (Chennai), MGM (Chennai), QUEENS LAND,(Chennai) வங்கி: TAMILNADU MERCANTILE BANK மென்பொருள் நிறுவனம்: HCL (software solution company) கட்டிட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்: அருண் பில்டர்ஸ், ரூபி பில்டர்ஸ்

கல்வி நிறுவனங்கள்: சென்னையில் இருக்குற SSN engineering college உட்பட 30% கல்வி நிறுவனங்களையும், திருநெல்வேலி, தூத்துகுடி, குமரி மாவட்டங்களில்  உள்ள  கல்வி நிறுவனங்களில் 70%-ஐயும் கொண்டு தமிழகத்தில் சராசரியாக 34% கல்வி நிறுவனங்கள் இவர்கள் வசமே உள்ளன. உத்திர பிரதேசத்தில் உள்ள Siva Nadar university-யும் இவர்களுடையதே.

பத்திரிக்கைகள்: தினத்தந்தி, மாலை மலர், மாலை முரசு, ராணி வார இதழ். தொலைக்காட்சிகள்: தந்தி TV, வசந்த் TV, இமயம் TV, சத்தியம்TV,  News 7 TV, மாலைமலர் TV, ஆசீர்வாதம் TV, தமிழன் TV

இவைபோக சென்னையில் உள்ள 60% சூப்பர் மார்கெட் மற்றும் மளிகைக் கடைகள், தமிழகத்தில் உள்ள 45% வணிக நிறுவனங்கள்  நாடார்களுடையது. தமிழகத்தின் ஒவ்வொரு சிறு கிராமங்களிலும் மளிகை கடைகளை வைத்துள்ளார்கள்.

இப்படி வளர்ந்துள்ள நாடார் முதலாளித்துவம் மற்ற சாதி முதலாளித்துவத்தை எதிர்கொள்ள சமத்துவ மக்கள் கட்சி முதலான அரசியல் இயக்கங்களை உருவாக்கி வளர்த்து வருகிறது. தமிழக வணிகர் சங்கங்கள் அனைத்தும் நாடார்களின் தலைமையில்தான் உள்ளன.

ஆக, சாதிய மூலதனத்தால் சாதிய முதலாளிகள்தான் உருவானார்கள்; அவர்கள் சாதியை பாதுகாத்து வளர்த்தார்கள்.

 • சாதிய முதலாளிகளுக்கு இடையிலானப் போட்டியும் சாதிய அமைப்பாக்கலும்! 

நாம் முதலாளிகள் என்றால் சகோதரத்துவம், சமத்துவம், சனநாயகம் என்ற முழக்கத்தின் கீழ் மக்களைத் திரட்டுவார்கள் என்றும்; அதன் மூலம் முதலாளித்துவ சனநாயகத்திற்கு எதிராக இருக்கும் பிற்போக்கு நிலவுடமையாளர்களுக்கு எதிரானப் போரை நடத்துவார்கள் என்ற பதிவைக் கொண்டுள்ளோம். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் சாதியப் பின்புலத்தில் உருவான முதலாளிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே தங்களுக்கிடையிலானப் போட்டியை எதிர்கொள்வதே முக்கியமானதாக இருந்தது; இருக்கிறது.

தமிழ்நாடு உட்பட பிராந்திய மூலதன உடமையாளர்கள் முதலாளிகளாக மாறியபோது அவர்கள் தங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பலமாக இருந்த வடநாட்டு மூலதனத்தை எதிகொள்ள வேண்டியிருந்தது. அதற்கு பிராந்திய முதலாளிகளுக்கு அரசியல் அதிகாரம் தேவைப்பட்டது. அப்போது இந்திய முதலாளிகளின் கட்சியாக இருந்த காங்கிரசு வடநாட்டு முதலாளிகளின் நலணை முதன்மையாகக் கொண்டிருந்ததால் தமிழ்நாட்டில் நீதி கட்சி தோன்றியது.

அப்படி தமிழ்நாட்டு முதலாளிகள் வடநாட்டு முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்தார்கள். ஆனால் அதே முதலாளிகள் தங்களின் பலத்தை தனித்தனியாக காட்ட மக்களை சாதியின் அடிப்படையில்தான் திரட்டினார்கள். நீதி கட்சியில் இருந்த ஒவ்வொரு சாதிப் பின்னணியினரும் மக்களைத் திரட்டுவதற்கு தத்தமது சாதி சங்கங்களை ஊக்குவித்தனர். முதலியார் சங்கம், ரெட்டியார் சங்கம், செட்டியார் சங்கமென சாதிய சங்கங்களை அந்தந்த சாதி முதலாளிகள் பின்புலமாக இருந்து வளர்த்தனர். தி.மு.க-வும் அதை அப்படியே பின்பற்றியது. பின்னர் வந்த அ.தி.மு.க உட்பட எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

காங்கிரசின் தயவில் வளர்ந்துகொண்டிருந்த நாடார்கள் தி.மு.க-வை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும்; தி.மு.க முதலியார், பிள்ளைமார் போன்ற மேல்நிலை சாதிகளுக்கானதாக நின்றுபோனதால்தான் கவுண்டர், முக்குலத்தோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் ஆதரவுடன் அ.தி.மு.க வளர்ந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது. எல்லா கட்சிகளுமே தொகுதியிலுள்ள பெரும்பான்மை சாதியை சார்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றியை சுவைக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி ஆரம்பத்திலேயே சாதியப் பின்புலத்தோடு தங்களுக்கான பேரத்தை நடத்தி வளர்ந்த முதலாளிகள் மேற்கொண்ட சாதிய அரசியலின் நிலைமை இப்போது இன்னும் மோசமாகிவிட்டது. இப்போது ஒவ்வொரு சாதி சங்கங்களும் அரசியல் கட்சியாக பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிக்கு தத்துவார்த்த முலாம் பூசுகிற வேலையை முதலாளித்து அறிஞர்கள் மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் கையிலெடுத்துள்ள ஒரே ஆயுதம் ‘ஆண்ட பரம்பரை’ என்னும் அரசியலாகும். தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்றவற்றில் செல்வாக்கு செலுத்தும் சாதிய ஆளும்வர்க்கங்களால் தடைகளை எதிர்கொள்ளும் பிறசாதி முதலாளிகள் தங்களது செல்வாக்கை காண்பிக்க இத்தகைய நேரடியான சாதி கட்சிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, நாடார் சமூகத்தவர் தமது அரசியல் பேரத்திற்காக சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி; தேவர் சாதி கூட்டமைப்பினர் முக்குலத்தோர் புலிப்படை; கவுண்டர் சமூகத்தவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உட்பட இன்னும் சில கட்சிகளை உருவாக்கியிருப்பது போல்.

ஆக, முதலாளிகள் மக்களை சாதிய ரீதியாகப் பிளவுபடுத்தும் வகையிலேயே அமைப்பாக்குகிறார்கள். அதன்மூலமாகவே தங்களுக்கிடையிலான தொழில் மற்றும் அரசியல் பேரங்களை நடத்தி கொழுக்கின்றார்கள்.

 • மக்களுக்கு கொடுக்க முதலாளிகளிடம் சாதிய வெறியாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை! 

தங்களுக்கிடையிலானப் போட்டியையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்வதற்கு சாதியை வலுவான ஆயுதமாகப் பயன்படுத்தி, மக்களை சாதிய ரீதியில் திரட்டி வைத்திருக்கிற முதலாளிகளிடம் மக்களின் நெருக்கடிகளைத் தீர்க்கும் வழிமுறைகள் எதுவும் இல்லை. ஆகவே முதலாளிகள் மக்களிடம் சாதிய மோதல்களை உருவாக்கிவிட்டு தப்பித்துக்கொள்கிறார்கள்.

தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் உயிரிழந்த மாணவி அனிதாவின் கதையை எடுத்துக்கொள்வோம்.

நீட் தேர்வு மருத்துவத்திற்கு மட்டுமல்ல, வழக்குரைஞர் மற்றும் பொறியியல் துறையென விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு நீட் எனும் தகுதிபடுத்தல் மூலம் என்ன இலாபம்? அதற்கான தனிப்பயிற்சிகள் உருவாகும். அது தனியார் கல்வி கூடங்களுக்கும் தனிப்பயிற்சிக் கூடங்களுக்கும் இலாபத்தை கொட்டும்.

முதலாளித்துவம் தனது சந்தைக்கான சமூகப்பிரிவினரின் வாங்கும் திறன் குறித்து இடைவிடாத ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. அந்தவகையில்தான் தனது தயாரிப்புகளை உருவாக்குகிறது. அதனடிப்படையில் முதலாளித்துவம் வெறும் கார் மற்றும் சொகுசுப்பொருட்களை மட்டும் தயாரிப்பதில்லை. அது மக்களின் அடிப்படைத் தேவையான குடியிருப்பு, மருத்துவம் மற்றும் கல்வியையும் அப்படித்தான் வணிகப்பொருளாக்குகிறது.

முதலாளிகள் இந்தியப் பெற்றோர்களை சுரண்டுவதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். தன் வாழ்நாள் உழைப்பையெல்லாம் கல்விக்காக கொட்டுகிற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தியப் பெற்றோர்களின் கடைசி சொட்டு இரத்தத்தையும் உறிஞ்சுவதற்காக முதலாளிகள் உருவாக்கியுள்ள புதிய கொடுக்குதான் நீட்.

இதன் பொருள் என்ன? முதலாளித்துவத்திடம் மக்களுக்கு செய்வதற்கான சீர்த்திருத்தம் எதுவுமில்லை என்றுப் பொருள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், குடியிருப்பு என அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கூட பணமிருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனப் பொருள். இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சீர்த்திருத்தங்களையும் முதலாளித்துவம் கைக்கழுவி விட்டது எனப் பொருள்.

இப்போது ஏழைகள் மற்றும் நலிவடைந்தப் பிரிவினர் அனைவரும் நீட்டிற்கு எதிராக அணிதிரள்வது இயல்பு. இப்படி அணிதிரள்வதை தடுக்கவும் மக்களை திசைத்திருப்பவும் சாதியானது முதலாளிகளுக்கு சேவை செய்கிறது.

எப்படி? ஒவ்வொரு சாதியிலுமுள்ள முதலாளித்துவ இயக்கங்களும் கட்சிகளும் தமது சாதி உழைக்கும் மக்களிடம் தவறான தகவலைப் பரப்புவார்கள். நீட் என்பது முதலாளித்துவ நெருக்கடி என்பதற்கு மாறாக “நாம் அறிவாளிகள், நாம் பண்டைய காலம்தொட்டு அறிஞர் சமூகங்கள், ஆகையால் நீட் மட்டுமல்ல வேறு என்ன வந்தாலும் நமது பிள்ளைகளால் படித்து முன்னேற முடியும். படிக்க முடியாத, அறிவு இல்லாத, அடிமை சாதிகளுக்குத்தான் இதுப் பிரச்சினை” என்று பிரச்சாரம் செய்வார்கள். உழைக்கும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பார்கள்; ஒருவருக்கு எதிராக மற்றவரைத் தூண்டி விடுவார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் நிலைப்பாடு அப்படியானதே.

ஆக, இடஒதுக்கீடு போன்றவற்றால்தான் தகுதியானவர்கள் மேலே வரமுடியாமல் போகிறது என்று பொய் பரப்பும் பார்ப்பன உயர்சாதியினரோடு அனைத்து சாதியிலுமுள்ள பொருளாதாரத்தில் முன்னேறியப் பிரிவினர் அனைவரையும் முதலாளித்துவ சாதியவாதிகள் அணி சேர்ப்பார்கள். அதேநேரத்தில் பார்ப்பன உயர்சாதியினர் அல்லாத பிற அனைத்து சாதி உழைக்கும் மக்களும் ஒன்றாவதை தடுத்துவிடுவார்கள்.

இப்படித்தான் காவிரிப் பிரச்சினையை கையாள்கிறார்கள். 1828-இல் அசாமில் உள்ள திஹிங் (Dihing) நதியின் கரைகளில் பெட்ரோலிய கசிவை இந்திய புவியியல் துறை கண்டுபிடித்த காலம் முதலே இந்தியா முழுவதும் பெட்ரோலிய கனிம தேடுதல் வேட்டை தொடங்கிவிட்டது. 1958 முதல் காவிரிப்படுகையில் பெட்ரோலிய பொருள் தேடல் துவங்கியது. 1964-இல் முதன்முதல் சோதனை கிணறு தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்று முதலே காவிரிப்படுகை விவசாயத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றும் முயற்சித் தொடங்கிவிட்டது. இந்த முயற்சியில் மத்திய அரசோடு கர்நாடக அரசும் தமிழக அரசும் இணங்கியே செயல்படுகின்றன. இவ்வாறு மூன்று அரசுகளும் சேர்ந்து ஏற்படுத்திய நெருக்கடியின் ஒருபகுதிதான் காவிரி சிக்கல்.

ஆனால் முதலாளித்துவ கட்சிகளால் இது எப்படி அரசியலாக்கப் பட்டிருக்கிறது? ஒருபுறத்தில் கர்நாடக மக்களுக்கு எதிரான இனவெறியாக மாற்றப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக, “இது நிலம், சொத்து இருக்கிற சாதிகளின் சொந்தப் பிரச்சினை; அதில் நாம் அக்கறை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை” என்று மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, விவசாயம் கடும் நெருக்கடி அடைய முதலாளித்துவக் கொள்கைகள்தான் காரணம். விவசாய மானியங்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம் அனைத்து  இடுபொருட்களிலும் முதலாளிகளுக்கான நேரடி இலாபம் அதிகரித்திருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி போன்ற முதலாளிகளின் கொள்கையாலும் விவசாயம் கடும் நெருக்கடியை சந்திக்கிறது.

இந்நிலையில் இவற்றை எதிர்கொள்கிற விவசாயிகளை திசைத்திருப்ப “விவசாய கூலிவேலைகளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியேறுவதால்தான் விவசாயிகள் கூடுதல் சிக்கலுக்குள்ளாகிறார்கள்” என்ற பிரச்சாரத்தை முதலாளிகளின் சாதிய கட்சிகள் மேற்கொண்டு சாதிய வன்மத்தை வளர்க்கின்றன.

இதேபோல்தான் சிறுதொழில், சில்லறை வணிகம் என அனைத்தும் உலகமயமாக்கல் எனும் கார்ப்பரேட் மயமாக்கலால் கடும் நெருக்கடியை சந்தித்து நசிந்து வருகின்றன. இதனால் சொந்த தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே அதிலிருந்து விலகும் நிலை ஏற்படுவதோடு, புதிய தலைமுறையானது அதில் ஈடுபட விரும்பாத நிலையும் உள்ளது. இளைஞர்கள் எல்லோருமே தனியார் மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளை மட்டுமே நம்பும் நெருக்கடியில் உள்ளனர். இந்த நிலையில் வேலை கிடைத்தவர்களுக்கு வேலைப்பளு எனும் சுமை தாங்க முடியாததாக உள்ளது.

இப்படி சிறுதொழில், சில்லறை வணிகம் என சுயதொழில் முனைபவர்களை முதலாளித்துவம் அடியோடு நசுக்குகிறது. அனைத்து தொழிலாளர்களையும் பணி சுமையால் நசுக்குகிறது. கூடவே விவசாயம் என்பதை தற்கொலை பாதையாக மாற்றிவிட்டது. ஆனால், முதலாளித்துவ கட்சிகள் இதையெல்லாம் மறைத்து, “காதல் திருமணங்களால்தான் எல்லா பிரச்சினைகளும் உருவாகிறது; பெண்ணுக்கு சொத்துரிமை இருப்பதால், அவர் காதல் செய்து வேறு சாதி ஆணோடு போகும்போது சொத்தும் பறிபோகிறது; சேமிப்பும் அந்தஸ்தும் இல்லாமல் போகிறது” என்று பிரச்சாரம் செய்கின்றன. மக்களை வெறியேற்றி பளியிடுகின்றன.

இவையெல்லாம் சேர்ந்துதான் சாதி வெறியாட்டம் முன்பைவிட முதலாளித்துவ காலகட்டமான இப்போது மிக மூர்க்கமாக அரங்கேறுகிறது. அது ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை சூறையாடி அழிப்பதை கடமையாகக் கொண்டிருக்கிறது.

ஆக, சாதிய பின்புலத்தை பயன்படுத்திக்கொண்டு சாதிரீதியாக வளர்ந்த முதலாளித்துவத்தால் மக்களிடையே சகோதரத்துவம், சமத்துவம், சனநாயகத்தை உருவாக்க முடியவில்லை. அதேபோல தங்களுக்கிடையிலானப் போட்டியிலும் அந்நிய மூலதனத்தின் நெருக்கடியிலும் தப்பிப்பிழைத்து வளருகிற முதலாளிகளால் மக்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட நிலையான பொருளாதார, சமூக சீர்த்திருத்தங்கள் எதையும் செய்யவும் இயலவில்லை.

எனவே, முதலாளித்துவத்தால் சமூக நெருக்கடிகளை மட்டுமே உருவாக்க முடிகிறது. அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் எதுவும் அதனிடமில்லை. அவர்கள் கையிலிருப்பது ஒன்றே ஒன்றுதான். அது மக்களின் நெருக்கடிகளையெல்லாம் சாதிய மோதல்களின் மூலம் திசைத்திருப்புவது மட்டுமே.

இப்படி முதலாளிகளின் சதிக்கு பலியாகும் சாதாரண மக்கள் வன்முறையில் ஈடுபடுவது நமக்கு எளிதாகப் புலப்படுகிறது. ஆனால், அதன் பின்னாலிருக்கும் முதலாளித்துவ நலன்கள் மறைக்கப்படுகிறது.  

சாதியை சாதி கடந்த மக்களின் வர்க்க ஒற்றுமையால்தான் எதிர்கொள்ள முடியுமென கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்!

கம்யூனிஸ்டுகள் சாதியப் பிரச்சினையை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்ற முட்டாள்களின் புகழ்பெற்ற பொய் இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.

முதலாளித்துவ காலத்தில் மட்டுமில்லாது நிலவுடமை காலத்திலும்கூட சாதிய சிக்கல் வேறுவகையில் பூடகமாகத்தானிருந்தது. அன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் அனைவரும் சொத்து வசதியற்ற சுரண்டலுக்கு உள்ளாகிற உழைக்கும் வர்க்கத்தினராய் இருந்தனர். சொத்துடைய வர்க்கத்தினர் ஆதிக்க சாதியாய் இருந்தனர். அதேநேரத்தில் சொத்துடைய வர்க்கத்தின் சாதியிலும் கூட பெரும்பான்மை மக்கள் உழைக்கும் வர்க்கமாகவே இருந்தனர். (இப்போதும் அப்படித்தான் இருக்கின்றனர்)

இந்த வகையில் தலித் மக்களோடு ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்கள் அனைவரும் இயல்பாக ஒன்றாக வேண்டும். ஆனால் அந்த நிகழ்ச்சிப்போக்கு ஆளும்வர்க்க கருத்தின் வலிமையால் தடுக்கப்பட்டிருந்தது.

நிலவுடமை காலத்தில் ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களுக்கு பொருளாதார சுரண்டல் மட்டுமே மேலோங்கியிருந்தது. அதேநேரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான பொருளாதார சுரண்டல் என்பது கூலியே இல்லாத இலவச உழைப்பு என்கிற வகையில் கொடூரமானதாக இருந்தது. கூடுதலாக பாலியல் வன்கொடுமைகளும், உயிரைப் பறிக்கிற வகையிலான தண்டனைகளும், இழிவுபடுத்தல்களும் இருந்தன. இந்த வேறுபாடுகள் ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களுக்கு ‘நாம் எவ்வளவோ மேல்’ என்றும், ‘ஆண்டைகளுக்கு சமமான சாதி என்பதால்தான் தாழ்த்தப்பட்டோருக்கான கொடுமைகள் நமக்கு இழைக்கப்படுவதில்லை’ என்றும் சிந்தனையை உருவாக்கியிருந்தது.

இந்த சிந்தனைகள் யாவும் சாதிய அடிப்படையில்தான் ஏற்றத்தாழ்வுகள் உருவாகுகின்றன என்ற ஆளும்வர்க்க கருத்தின் அடிப்படையிலானதாகும்.

ஆதிக்க சாதியிலுள்ள உழைக்கும் மக்களின் இந்த சிந்தனைதான் சுரண்டும் வர்க்கத்தினரின் முதல் பாதுகாப்பு, உறுதிமிக்க பாதுகாப்பு என்பதையும்; இதை தகர்க்காமல் சமூக மாற்றத்தில் ஒரு அடியைக்கூட நகர்த்த முடியாது என்பதையும் உணர்ந்துதான் கம்யூனிஸ்டுகளின் பணிகள் அமைந்தன. சமூகத்தின் கடைநிலை மக்களை அமைப்பாக்குகிற அதேநேரத்தில் ஆதிக்க சாதியிலுள்ள சமூக அக்கறையுடையவர்களை அமைப்பாக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

இரு பக்கத்திலுமிருந்த முன்னணியாளர்கள் கம்யூனிஸ்டுகளாக உருவானார்கள். ஆதிக்க சாதியிலிருந்து உருவான கம்யூனிஸ்டுகள் அங்குள்ள உழைக்கும் மக்களிடமிருந்த சாதியாதிக்க உணர்வை நீக்கினார்கள்.

இப்படித்தான் தமிழக கம்யூனிச வரலாற்றில் சீனிவாச ராவ் முதல் இடுவாய் (திருப்பூர்) இரத்தினசாமி வரையிலுமாக அனைத்து தோழர்களும் உருவானார்கள். களப்பால் குப்பு, ஜாம்பவன் ஓடை சிவராமன் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணி கொண்ட தோழர்களோடு வாட்டக்குடி இரணியன், ஆம்பலாம்பட்டு ஆறுமுகம் போன்ற மேல்சாதி பின்னணி கொண்ட தோழர்களின் பங்களிப்பும் சேர்ந்துதான் தஞ்சை சுற்றுவட்டாரத்தில் உழைக்கும் மக்களின் சாதிகடந்த வர்க்க அணிசேர்க்கையை சாதித்தது; சாதியக் கொடுமைகள் தளர்ந்தது.

நாகை மாவட்டம் ஆடுதுறை பக்கமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலமும் ஞாயமான கூலியும் வாங்கி கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – லிபரேசன்) அமைப்பை சார்ந்த தோழர் சந்திரகுமார் ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணி, தோழர் சந்திரசேகர் மேல்சாதி பின்னணி.

தோழர் அப்புவின் தலைமையில் உதித்த நக்சல்பாரி இயக்கத்தில் தோழர் பாலனின் வழிகாட்டுதலில் இயங்கிய தமிழ்வாணன், ஏலகிரி ராமன், சித்தானந்தம், திம்மகாளி, பச்சியப்பன், நகராசன்பட்டி கோபால் என பொறுப்போடு செயல்பட்டவர்களில் பெரும்பாலோர் மேல்சாதி சமூகப் பின்னணியுடையவர்கள்.

தோழர்கள் தமிழரசன், லெனின், கலிய பெருமாள், சுந்தரம், ஜீவகன் (கண்ணாமணி குழு), பொன்பரப்பி ராஜேந்திரன், புதுவை தமிழ்ச்செல்வன், மாறன் (கொடைக்கானல் நடவடிக்கையில் இறந்தவர்) உள்ளிட்ட தோழர்களில் பெரும்பாலானோர் மேல்சாதி சமூகப் பின்னணியுடையவர்களே. தோழர் தமிழரசனோடு உயிர்துறந்த தோழர்களில் பழனிவேல் தவிர அன்பழகன், தருமலிங்கம், ஜெகநாதன் ஆகியோரும் மேல்சாதி சமூகப் பின்னணியுடையவர்களே.

தோழர் தமிழரசனுக்குப் பிறகு இயங்கிய தோழர்கள் லெனின், மாறன், இளவரசன், ஆம்பலாம்பட்டு முருகேசன், தடா நல்லரசன் ஆகியோரிலும் பலர் மேல்சாதி சமூகப் பின்னணியுடையவர்களே.

இவர்களால்தான் “உயர்சாதி திமிர் ஒழிப்போம்! உழைக்கும் மக்களாக ஒன்றிணைவோம்!” என்ற அறிவியல்பூர்வமான முழக்கம் பிறந்தது. தலித் மற்றும் தலித் அல்லாத உழைக்கும் மக்கள் ஓரணியில் திரட்டப்பட்டனர். சாதியாதிக்க சக்திகள் தனிமைபடுத்தப்பட்டனர். இதிலிருந்துதான் சாதி ஒழிப்பு என்பது நபர்களை ஒழிப்பதல்ல; சாதிய ஒடுக்குமுறைக்கு காரணமான பொருளாதார அடிதளத்தை ஒழிப்பது என்னும் இலக்கு எட்டபட்டது.

சாதி ஒழிப்பும் வர்க்கப்போராட்டமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்னும் அறிவியல் நிலைநாட்டப்பட்டது.

சாதி ஒழிப்பிற்கு அடிப்படைத் தேவை புலம்பல்கள் அல்ல, புரட்சிக்கர நடைமுறையே என நிரூபித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்!

ஒரு பிரச்சினையின் தீர்வுகள் அதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை ஒட்டியே அமைகின்றன.

இப்போது சாதியப் பிரச்சினைகள் அனைத்திலும் தலித் இயக்கங்களே தலையீடு செய்கின்றன. அம்பேத்கர் நூற்றாண்டிற்குப் பிறகு தலித் மக்களிடம் இருந்த பல்வேறு போராட்ட இயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டு, இப்போது முழுக்கமுழுக்க தலித் இயக்கங்களின் பிடி இறுகியுள்ளது. தருமபுரி இளவரசன் முதல் உடுமலை சங்கர் வரையிலான ஆணவக்கொலைகள் மற்றும் சாதிய சிக்கல்கள் அனைத்தையும் அவைகளே எதிர்கொள்கின்றன.

என்னவகையான நடைமுறைகள் மூலம் தலையீடு செய்கின்றன?

 • தலித் மக்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை மட்டும் ஒருங்கிணைக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • தலித் மக்களை காட்சிப் பொருளாக்கும் கண்டன மறியல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 • சாதியாதிக்கவாதிகளுக்கும் அவர்களது அரசியலுக்கும் நெருக்கடி கொடுப்பதற்கு மாறாக, சட்டம் ஒழுங்கு எனும் வகையில் சாதாரண நெருக்கடிகள் கொடுக்கும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இப்படியான நடைமுறைகள் மூலம் என்ன மாதிரியான தீர்வுகளை ஏற்படுத்துகின்றன?

 • ஒன்றுமில்லை. வெறும் இழப்பீடுகளை மட்டுமே பெற்று தருகின்றன.

தலித் இயக்கங்களின் இத்தகைய நடைமுறைகளால் சாதிய வன்முறைகள் துளியளவு கூட தடைபடுவதில்லை.

கடந்த 25/08/2017. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நெல்லூர் கிராமம். இங்கே தலித் சமூகத்தினர் தாங்கள் வாழும் பகுதியில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தனர். விழாக்கால மனநிலையில் குழந்தைகளும், பெரியவர்களும் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருக்கும் வேளையில் வன்னிய இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களை வேகமாக ஒட்டியபடி உள்ளே நுழைந்திருக்கின்றனர்.  பதட்டமடைந்த தலித்மக்கள் அவர்களை தடுத்து, ‘குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் இருப்பதால் மெதுவாக செல்லுமாறு’ கூறியுள்ளனர். தங்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தியதாலும் தங்களுக்கே அறிவுரை வழங்கியதாலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தலித் மக்களை தரக்குறைவாக திட்டினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட இளைஞர்கள் தங்கள் பகுதிக்கு சென்று ஒரு சிறு படையைத் திரட்டிக்கொண்டு வந்து தலித் மக்களின் வீடுகளுக்குள் புகுந்தனர்; தொலைக்காட்சி பெட்டிகள், இருசக்கர வாகனங்கள் என உழைத்து சேர்த்தப் பொருட்களையெல்லாம் அடித்து உடைத்தனர்; பின்னர் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இதற்கு முன்பு, 2017 ஜூலை 23. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள புளியரம்பாக்கம் கிராமத்திலும் இதுதான் நடந்தது. 50-க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்ட அனைவரையும் தாக்கினர்; வீடுகள், மளிகைக் கடை, இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன; பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன; வெங்கடேசன், ஆதிகேசவன் ஆகிய இருவரையும் கடத்திச்சென்று கொலைவெறியுடன் தாக்கினர்; அதில் வெங்கடேசன் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

அதற்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேலிருப்பு கிராமம். 2013-இல் காணும் பொங்கல் நாளன்று தலித் மக்களின் குடியிருப்புகளைத் தாக்கி, சொத்துக்களைச் சூறையாடி, கொள்ளையடித்த பின்னர் குடிசைகளுக்குத் தீ வைத்து அழித்தனர்.

இவற்றுக்கு முன்னோடியாய் தருமபுரி நாய்க்கன் கொட்டாய் தாக்குதல். 15 வயதிலிருந்து 35 வயதிற்குள்ளான கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்டோர் நடத்திய திட்டமிட்ட தாக்குதல். அடுத்தடுத்த கிராமங்களில் மொத்தம் 268-க்கும் மேலான வீடுகள் நொறுக்கப்பட்டன. அவற்றில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டன.

தமிழகத்தில் 2013-லிருந்து இதுவரை விமலா தேவி, கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என 100-க்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.

உழைப்பிற்கு கூலி கேட்டதற்கு, சாதிமறுப்பு திருமணங்கள் செய்ததற்கு நடைபெற்று கொண்டிருந்த தாக்குதல்கள் இப்போது மாட்டிறைச்சியின் பேராலும் நடத்தப்படுகிறது. இது வடநாட்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தலைதூக்கியுள்ளது என்பதை சென்னை ஐஐடி-யில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர் சுராஜ் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உணர்த்தும்.

ஆக, தலித் இயக்கங்களின் நடைமுறைகளால் சாதியாதிக்கவாதிகள் செயலிழக்கவும் இல்லை; சாதிய வன்கொடுமைகள் மட்டுப்படவும் இல்லை.

ஆனால், கம்யூனிஸ்டுகளின் புரட்சிகர நடைமுறையானது சாதியாதிக்கவாதிகளை செயலிழக்க வைத்து சாதிய வன்கொடுமைகளை மட்டுபடுத்தியது.

இன்று மாட்டரசியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களையும் இசுலாமிய சமூகத்தையும் சுற்றியுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்கிற ஒவ்வொருவரும் இதை அறிந்திருக்க வேண்டும். நாய்க்கன் கொட்டாய் பகுதி நினைவிருக்கிறதா? இளவரசன் – திவ்யா காதல் திருமணப் பிரச்சினையையொட்டி தீப்பிடித்த அதே நாய்க்கன் கொட்டாய்தான். சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை இப்பகுதியில் புதன்கிழமை தோறும் 8 மாடுகள் கறிக்காக வெட்டப்படும். வன்னியர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் என உழைக்கும் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாங்கிசெல்வர்.

சும்மா நடக்கவில்லை இது. சாதி மறுத்த, உழைக்கும் மக்கள் பண்பாட்டை திட்டமிட்டு செயல்படுத்திய நக்சல்பாரி கம்யூனிஸ்டுகளால் நடைமுறைக்கு வந்தது. நக்சல்பாரிகள் தங்கள் முன்னோடிகளான “அடித்தால் திருப்பி அடி” எனும் புரட்சிகர நடைமுறையை துவக்கிவைத்த தஞ்சை தோழர்களிடமிருந்து கற்றுக்கொண்டது இது.

தருமபுரியில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான புரட்சிகர நடைமுறைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நல்லம்பள்ளி பெரியண்ண செட்டியார், நாகரசன்பட்டி தருமலிங்க செட்டியார் ஆகியோர் நிலச்சுவன்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடுங்கோலர்கள். இவர்களால் 43 பெண்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு கணக்கு உள்ளது. இவர்கள் கந்துவட்டி கயவர்களும் கூட. இந்த இருவரையும் 1970-களிலலேயே அழித்தொழித்தனர் தோழர் அப்புவின் தலைமையில் செயல்பட்ட நகராசன்பட்டியை சேர்ந்த தோழர் கோபால் உள்ளிட்டோர்.

1980-களில் நாய்க்கன் கொட்டாய் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரட்டைக்குவளைகளை உடைத்ததோடு சாதிய ஒடுக்குமுறை செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்தவர்கள் பாலன் தலைமையிலான சித்தானந்தம் உள்ளிட்டத் தோழர்கள்.

இதை திசைத்திருப்ப ஆதிக்கவாதிகள் பொய் பிரச்சாரம் செய்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் கட்சி மூலம் மிரட்டி கவுண்டர்கள் வீட்டில் பெண் கேட்பதாக கதையை கட்டிவிட்டனர். இதன்மூலம் வன்னிய உழைக்கும் மக்களுக்கு சாதி வெறியேற்றி வர்க்க ஒற்றுமையை உடைக்க நினைத்தனர். ஆனால், 23 ஊர் சார்ந்த வன்னியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒரே அணியாக திரட்டி ஆதிக்கவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து, மக்கள் நலனை காப்பாற்றினர் கம்யூனிஸ்டுகள்.

வன்னிய உழைக்கும் மக்களிடம் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்யை வன்னிய சமூகப்பின்னணி கொண்ட தோழர்கள் மூலம்தான் எளிதாக உடைக்க முடிந்தது என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.

தருமபுரி மாறவாடியை சார்ந்த பணக்கார விவசாயியான செட்டியார் ஒருவர் ஒடுக்கப்பட்ட கூலிவிவசாயப் பெண்களை கொச்சையாக பேசி வந்தார். அப்பெண்கள் விவசாய சங்கத்தில் புகார் தெரிவித்து விட்டார்கள் என்று தெரிந்ததும் பயந்தோடி வந்து சங்கத்தினர் முன் தலித் பெண்களின் முன் மண்டியிடு மன்னிப்பு கேட்டார் செட்டியார்.

புரட்சிகர நடைமுறைதான் சாதியாதிக்கவாதிகளை அச்சுறுத்தி, வன்கொடுமைகளை மட்டுபடுத்தியது.

நாகை மாவட்டம் ஆடுதுறை பக்கமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை மிரட்டி, அச்சுறுத்தி உழைப்பை சுரண்டி வந்த இராமையா என்கிற வன்னிய பண்ணையாரை அடிபணியவைத்து தலித் மக்களுக்கு ஞாயமான கூலியும் நிலமும் வாங்கி கொடுத்தது புரட்சிகர நடைமுறை.

கலிங்கராணி மீண்சுருட்டியை சேர்ந்த ஆசிரியை, ஒடுக்கப்பட்டவர். முக்குலத்தவரில் பிள்ளைமார் என்ற பிரிவை சார்ந்த பண்ணையாரின் மருமகனால் காதலில் வீழ்த்தப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டார். வேறு வழியின்றி ஏற்கனவே திருமணமாகியிருந்த பண்ணையாரின் மருமகனிடம் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும்படி கதறினார் கலிங்கராணி. அவரை உயிரோடு எரித்து சாம்பலையும் எலும்புகளையும் வயலில் தூவி உழுதுவிட்டார்கள் பண்ணையார் வகையறாக்கள். கலிங்கராணியின் தாய்மாமன் மூலம் அமைப்பிற்கு தெரியவர தோழர் தமிழரசன் தலைமையிலானவர்கள் அந்த அயோக்கியர்களை அழித்தொழித்தார்கள். செய்துவிட்டு அதுமட்டுமே போதாதென மக்கள்திரள் நடவடிக்கைக்கு திட்டமிடுகிறார்.

சாதி ஒழிப்பும் தமிழக விடுதலையின் தேவையும் என்ற மீன்சுருட்டி அறிக்கைக்கு தூண்டுகோலாக இந்த சம்பவமும் இருந்தது.

அன்னக்கிளி என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்ணை சாராய வழக்கில் கைதுசெய்து பாலியல் வன்கொடுமை செய்தனர் புத்தூர் காவல்நிலையத்தினர். இந்த கொடூர மிருகங்களை தண்டிக்கும் வகையில் அக்காவல் நிலையம் மீது 1991-இல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல் 1992-இல் சிதம்பரம் அண்ணாமலை காவல்நிலையத்தில் பத்மினியின் கணவரை சந்தேக வழக்கில் பிடித்து சென்றதோடு பின்னர் பத்மினியையும் கைதுசெய்து கணவர் கண் முன்பே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் காவல்துறை மிருகங்கள். இறுதியில் கணவரை அடித்து கொன்றும் போட்டனர். அக்காவல்நிலையம் மீதும் தோழர்கள் தாக்குதல் நடத்தினர்.

இத்தகைய புரட்சிகர நடைமுறைகளால்தான் இன்று பெண்களுக்கென பெண் காவலர்களைக் கொண்ட மகளிர் காவல்நிலையங்கள் உருவாகின.

ஆக, புரட்சிகர நடைமுறைகள்தான் சாதியாதிக்கவாதிகளை அச்சுறுத்தி முடக்கியதோடு, சாதியாதிக்கவாதிகளுக்கு ஆதரவான அரசையும் பணியவைத்தது.

சாதி ஒழிப்பிற்கு சாத்தியமான ஒரே வழி!

 • இப்போதிருக்கிற இந்த முதலாளித்துவ அரசில் இது சாத்தியமில்லை. இது சாதிய முதலாளிகளின் அரசு. இந்த அரசிலுள்ள முதலாளிகள் தங்களுக்கிடையிலான பேரங்களை நிகழ்த்த தங்களின் சாதிய பலத்தையே நம்பியிருக்கிறார்கள்.
 • தவிர, உலக மூலதனத்தின் நெருக்கடிக்குள் வளருகின்ற இந்திய – தமிழக முதலாளிகளால் சமூகத்தில் அரசியல் – பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கவே முடியாது. ஆகவே, தம்மால் தீர்க்க முடியாத நெருக்கடிகளை திசைதிருப்பியே ஆகவேண்டும். அதற்கு சாதி அவர்களுக்கு இன்றியமையாத நிவாரணியாக இருக்கிறது. எனவே அவர்கள் சாதியை பாதுகாக்கவே செய்வார்; அதன் மூலம் பலனை அனுபவிக்க சாதிய மோதல்களை ஊக்குவிக்கவே செய்வார்.
 • அம்பேத்கரியத்தால் சாதியை ஒழிக்க முடியவே முடியாது. ஏனென்றால், சாதியை ஒழிக்க வேண்டுமானால் அதனால் உயிர் வாழ்கிற இந்த சாதிய முதலாளித்துவ அரசை ஒழிக்க வேண்டும். கொடுங்கோலர்களான இந்த சாதிய முதலாளிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள நடத்துகிற அரச பயங்கரவாதத்தை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே ஒரு புரட்சிகர யுத்தமில்லாமல் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த முடியாது. அம்பேத்கரியம் அரசியல் மாற்றம், சமூக மாற்றம் குறித்து அக்கரைக் கொண்டிருக்கிற அதேநேரத்தில் புரட்சிகர செயல்பாட்டை அது மறுப்பதால் அதனால் சமூக மாற்றத்தை சாதிக்க இயலாது. ஆகவே அம்பேத்கரியத்தால் சாதியை ஒழிக்க முடியாது.
 • ஆதலால் புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் புரட்சிகர அரசியல் மாற்றத்தை நிகழ்த்தி, புரட்சிகர அரசை நிறுவுகிற கம்யூனிஸ்டுகளால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.

சவால்: மாற்றம் என்பது அதற்கான ஆசைகளால் நிறைவேறுவதில்லை. அதற்கேயான நடவடிக்கைகள் முதல் தேவை. அடுத்து நமது விருப்பங்களை நிலைநிறுத்துவதற்கான அரசியல் அதிகாரம் தேவை.

நமக்கு அதிகாரம் வந்துவிட்ட உடனேயே நமது எதிரிகள் அனைவரும் ஒரு மாயம் போல் மறைந்துவிடுவதில்லை. புரட்சிக்குப் பின்பும் கூட கட்டுப்படுத்தப்பட்ட வகையில் சுரண்டும் வர்க்க சக்திகள் நீடிப்பர் என்பது போலவே இந்திய துணைக்கண்டத்தில் சாதியவாத சக்திகளும் நீடிப்பர். அவர்கள் ஏதோ ஒருவகையில் தமது நலனிலிருந்து சாதிய பிற்போக்குத்தனங்களை மீட்டெடுக்க முயற்சிப்பார். அதுபோலவே புரட்சிக்குப் பிந்தைய மனிதர்கள் எல்லோரும் அதற்கு முந்தைய சமூகத்தில் வாழ்ந்தவர்களாகவே இருப்பார். அவர்களிடமும் முந்தைய சமூகத்தின் எல்லா எச்சசொச்சங்களும் படிந்திருக்கும்.

இவற்றை கணக்கில் கொண்டு களைவதற்கான நடவடிக்கையை புரட்சிகர அரசாங்கம் மேற்கொள்ளும். பிற்போக்கு தனத்தை ஊக்குவித்து பலனடையத் தூண்டுகிறவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும். அறியாமையில் உழலுகிறவர்களை மீட்பதற்கான புதிய பண்பாடுகளை உருவாக்கும். சாதிய பிற்போக்கு சடங்குகள் அனைத்தும் மக்களின் புரிதலோடு தடைசெய்யப்படும். சாதிமறுப்பு திருமணங்கள் மதிப்பிற்குரியதாகவும் சாதிய திருமணங்கள் பிற்போக்கானதாகவும் நிரூபிக்கப்பட்டு முடிவில் சாதி வேறுபாடற்ற சமூக உறவுகள் நிலைநிறுத்தப்படும்.

ஆக, சாதி ஒழிப்பை சாதி கடந்த வர்க்க ஒற்றுமையின் மூலமாக, புரட்சிகர மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலமாக, புரட்சிகர அதிகாரத்தின் மூலமாக கம்யூனிஸ்டுகள் நிறைவேற்றுவார்கள் என்பது அறிவியல். இது தவறு, எங்களிடம்தான் சரியான வழிமுறைகள் இருக்கிறது என்று அம்பேத்கரியவாதிகள் யாராவது வாதிட்டால் எதிர்கொள்ள காத்திருக்கிறோம். இது ஒரு சவால்! 

- பாவெல் சக்தி & திருப்பூர் குணா

Pin It