இந்தக் கொலை இத்தோடு தொடங்கவும் இல்லை, இது இத்தோடு முடியப் போவதும் இல்லை. கருத்துக்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு புதிய கருத்துக்களை பிரசவிப்பதைப் பற்றி முற்போக்குவாதிகள் அறிந்திருப்பார்கள். ஆனால் கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு, தன் குரல் வளையை தானே நெறித்துக் கொள்ளும், அறுத்துக் கொள்ளும் அபூர்வ செயல் இந்தியாவில் மட்டுமே நடைபெறும். அப்படித்தான் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களின் நூல்கள் ஆடிபெருக்கில் ஆன்மீகத்தின் பெயரால் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. வரலாறு முழுவதிலும் கடுங்கோட்பாட்டுவாதிகள் அடுத்தவர்களை மட்டுமே தனது ஆன்மீக பலத்தை நிரூபிக்கச் சொல்லி கேட்டிருக்கின்றார்கள். ஆனால் தவறியும் ஒருநாளும் அவர்கள் தனது ஆன்மீக பலத்தை ஊரே பார்க்க சாதித்துக் காட்டியவர்கள் இல்லை. ஆனால் மதவாதியின் அற்ப மனது அதைப் பற்றியெல்லாம் எப்பொழுதும் கவலைப்பட்டதில்லை. அது தன் எதிராளியை எப்படி நயவஞ்சகமான முறையில் அழித்துவிட்டு அந்தப் பழிச்சொல்லில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றுதான் பெரும்பாலும் பார்க்கின்றது.

gouri lankeshஎப்போதுமே தீவிர கருத்துமுதல்வாதிகள் பொருள்முதல்வாதிகளை வன்முறையாளர்கள் என்றும், மனித குலத்திற்கு எதிரானவர்கள் என்றும், கட்டற்ற பாலியல் உறவு கொள்பவர்கள் என்றும் கொச்சைப் படுத்தியே வந்திருக்கின்றார்கள். ஆனால் பொருள் முதல்வாதிகள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் எப்பொழுதுமே அவர்கள் ஒழுக்கக் கேடானவர்களாகவும் , தன் சக மனிதனை அடக்கி ஒடுக்கி அவனது உழைப்பைச் சுரண்டி கொழுக்கும் மனிதர்களாகவும் காட்டியதில்லை. வரலாறு முழுவதும் கருத்துமுதல்வாதிகள் தான் பொருள்முதல்வாதிகளைக் கொன்று, தனது ஆத்திரத்தையும், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற கோழைத்தனத்தையும் நிரூபித்து வந்திருக்கின்றார்கள். அவர்களின் அந்தக் கோழைத்தனம் தான் சாக்ரடிசை கொல்லத் தூண்டியது, கத்தோலிக்க திருச்சபையால் கலிலியோவை சாகும்வரை வீட்டுக்காவலில் சிறை வைக்கவும் தூண்டியது. ஆனால் வரலாறு நெடுகிலும் பொருள்முதல்வாதிகள்தான் சக மனிதன் மீதும், அவன் எந்தக் கருத்தைக் கொண்டவனாக இருந்தாலும் அவன் மீது அன்பு பாராட்டியும், அவன் கருத்தை வன்முறை மூலம் அல்லாமல் தார்மீக வழிகளில் நியாயமாக எதிர்கொண்டே வந்திருக்கின்றார்கள்.

இந்தியாவில் எவ்வளவோ தத்துவ தரிசனங்கள் எல்லாம் தோன்றி இருக்கின்றன. சாங்கியம், உலகாயதம், மீமாம்சம், நியாய வைசேடிகம், சமணம், பெளத்தம் என பல்வேறு வகையான தத்துவப் பிரிவுகள் எல்லாம் தோன்றி இருக்கின்றன். ஆனால் இவை எவையும் தனக்குள் கருத்துமோதலை தவிர பிற வன்முறையைப் பயன்படுத்தியதாக வரலாறு இல்லை. ஆனால் எப்போது இந்திய வரலாற்றில் பார்ப்பனியம் ஒரு மதமாக வளர்ச்சி அடைகின்றதோ, அப்போதில் இருந்துதான் மற்ற அனைத்து தத்துவ தரிசனங்கள் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அது இருந்த இடம் தெரியாமல் அழித்தொழிக்கப்படுகின்றது.

ஒன்று தனக்கு எதிரான கருத்துக்களை வன்முறையான வழிகளை பயன்படுத்தி அழித்தொழிப்பது; இல்லை என்றால் அதன் மையமான கருத்துக்களை செரித்து அதை உள்வாங்கிக்கொள்வது என்ற இரண்டு உத்தியைத்தான் பார்ப்பனியம் வரலாறு முழுவதும் செயல்படுத்தி வந்திருக்கின்றது. அப்படித்தான் அது புத்தரையும், மகாவீரரையும், உலகாயதத்தையும் இந்திய மண்ணில் இருந்து அழித்தொழித்தது. அதன் மிச்ச சொச்சங்கள் எங்காவது இருந்தாலும் அதுவும் பார்ப்பனிய சாயம் பூசப்பட்டதாகவே தான் இருந்தது. சுத்தமான பொருள்முதல்வாத வழியில் தோன்றிய எந்தத் தத்துவத்தையும் அது இந்திய மண்ணில் இருந்து நிரந்தரமாக அழித்து வந்திருக்கின்றது என்பதைத்தான் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

இந்துமத பார்ப்பன வருணாசிரம தத்துவத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டதற்காக நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார், கோவிந்து பன்சாரே கொல்லப்பாட்டர், கல்புர்கி கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அனைவருமே ஒரே மாதிரி கொல்லப்பட்டதாக கர்நாடக காவல்துறை தனது விசாரணையில் கண்டுபிடுத்தது. இது தொடர்பாக சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரை போலீஸ் கைதும் செய்தது. ஆனால் சங்பரிவாரக் கும்பல் என்பது பெரிய வலைபின்னலைக் கொண்ட தீவிரவாத அமைப்பு. அதில் ஒரு நபரை கொலை செய்ததற்காகவோ, இல்லை குண்டு வைத்ததற்காகவோ கைது செய்யப்படும் போது, அவர் சங்பரிவாரத்தில் இருந்து கொலை நடந்ததற்கோ, இல்லை குண்டு வைக்கப்பட்டதற்கோ சில மாதங்களுக்கு முன்னாலேயே நீக்கப்பட்டிருப்பார். அதன் மூலம் காவி பயங்கரவாதிகள் எப்பொழுதுமே தங்களை பாதுகாப்பாகவும் , புனிதமானவர்களாகவும் காத்துக் கொள்வார்கள்.

கவுரி லங்கேஷ் கொலையானது கர்நாடகாவில் கல்புர்கி அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அடுத்து நடக்கும் கொலை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இரண்டு கொலையும், அவர்கள் இந்துமதத்தை எதிர்த்துப் பேசியதற்காக இந்து சனாதனவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதான் தோன்றும். அப்படித்தான் பலரும் எழுதியும், பேசியும் வருகின்றார்கள். ஆனால் கல்புர்கி அவர்களின் கொலைக்கும், கவுரி லங்கேஷ் அவர்களின் கொலைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. அது இரண்டு பேருமே லிங்கயாத்துக்களை தனி மதப்பிரிவாக அங்கீகரிக்கச் சொன்னவர்கள். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி எழுதியவர்கள். கர்நாடகாவில் லிங்காயத்துக்கள் தங்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவல்ல, தங்களை தனி மதப்பிரிவாக அங்கீகரிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இது கர்நாடக பிஜேபிக்குக் கடும் எரிச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. அதன் அரசியல் எதிர்காலத்திற்கே அது நிச்சயமற்ற தன்மையை வழங்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த அடிப்படையில் இருந்துதான் கல்புர்கி அவர்களும், கவுரி லங்கேஷ் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இருவருமே பசவண்ணரை ஆதரிக்கக் கூடியவர்கள், லிங்கயாத்துக்களை தனி சிறுபான்மை மதப் பிரிவாக அங்கீகரிக்கக் கூடியவர்கள்.

லிங்காயத்துக்கள் கர்நாடகாவில் ஏறக்குறைய 19 சதவீதம் வரை உள்ளனர். 224 சட்டபேரவைத் தொகுதிகளில் 110 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். இவர்களை எல்லாம் இத்தனை நாட்களாக இந்துத்துவ அரசியலைப் பேசியே பாஜக தன்னுடைய ஓட்டுவங்கியாக பயன்படுத்தி வந்தது ஆனால் இப்போது அவர்கள் தங்களை இந்து மதத்தில் இருந்து துண்டித்துக் கொள்ள பெரும் போராட்டங்களை நடத்தி வருவதும், அதற்கு கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்கள் கருத்தியல் ரீதியான ஆயுதத்தை வழங்குவதும் பிஜேபியின் இந்துத்துவ அரசியல் செயல்திட்டத்தை கர்நாடகாவில் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இதுதான் கவுரி லங்கேஷ் அவர்களை சுட்டுக் கொல்லும் அளவிற்குக் கொண்டுபோய்விட்டுள்ளது.

சிவாஜியை வைத்து மகாராஷ்டிராவில் தனது இந்துத்துவ அரசியலைப் பரப்ப நினைத்த பிஜேபி கும்பலுக்கு கோவிந்த் பன்சாரே தனது ’சிவாஜி கோன் ஹோட்டா’ என்ற நூலின் மூலம் சரியான பதிலடி கொடுத்து சிவாஜியை இந்துமத வெறியனாக சித்தரிக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் திட்டத்தில் மண்ணை வாரிப் போட்டார். அதனால் அவரை இந்துமத வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். இப்போது இந்துமதத்திற்கு எதிராக வீரசைவத்தை முன்னிறுத்தும் அரசியலுக்கு உதவியதற்காக கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் அடிமடியில் கைவைக்கும் அனைவருக்கும் இந்த நிலை நிச்சயம் நாளைக்கு ஏற்படும் என்பதை அவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

அவர்களின் துப்பாக்கிகளில் தோட்டாக்கள் இன்னும் மீதமிருக்கின்றன. அது நாளை இன்னுமொரு எழுத்தாளனைக் கொல்ல காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் திட்டமிட்ட முறையில் தனது கொலைகளை அரங்கேற்றுகின்றார்கள். கொலைக்கான சமிக்ஞைகள் ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் இருந்து அவர்களுக்கு வந்துகொண்டிருக்கின்றன. மோடியின் ஆட்சி முடிவதற்குள் இந்தியாவை ஒரு முழுமை பெற்ற இந்து ராஷ்டிரமாக மாற்ற அவர்கள் உறுதி பூண்டு செயலாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு எதிராகப் பேசுகின்றவர்கள், எழுதுகின்றவர்கள் , சிந்திப்பவர்கள் என அனைவருமே குறி வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்றால் கூட அதற்கும் ஒரு ஆழ்ந்த அறிவு, தான் சார்ந்த கடைபிடிக்கும் சித்தாந்தத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலுக்கு அப்படி எந்தச் சித்தாந்த புலமையும் கிடையாது. அது அடாவடித்தனமாக மற்றவர்கள் மீது தன் பார்ப்பனிய கருத்தைத் திணிக்கவே எப்போதுமே முயற்சித்து வருகின்றது. அடாவடித்தனங்கள் பலனற்றுத் தோற்கும் போது அதை எதிர்கொள்ளத் திராணியற்று தனது கள்ளத்துப்பாக்கிகளை தூக்குகின்றது.

ஒவ்வொரு கொலையும் நடந்தவுடன் அதற்காக வருத்தப்படுவதும், துயரால் புலம்புவதும் மட்டுமே முற்போக்குவாதிகளான நாம் செய்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் தீர்வு என்பது வருத்தப்படுவதோ, இல்லை புலம்புவதோ இல்லை. நேரடியாக களத்தில் இறங்கி அவர்களின் மதவெறி அரசியலை முறியடிப்பதுதான். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்யவேண்டும். கள்ளத்துப்பாக்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் சித்தாந்தம் தெரியாது என்பதையும், அது எங்கு இருந்தால் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் முற்போக்குவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வது ஜனநாயகம் என்றால் துப்பாக்கிகளை துப்பாக்கிகளால் எதிர்கொள்வதும் ஜனநாயகம் தான். வேண்டும் என்றால் அதைப் புதிய ஜனநாயகம் என்று கூட அழைக்கலாம். நாட்டைச் சூழ்ந்துள்ள இந்துமதவெறி அடிப்படைவாதத்தில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்றால் நாம் புதிய ஜனநாயகப் பாதையில் சென்றால்தான் முடியும் என்றால், அதைச் செய்ய முற்போக்குவாதிகள் தயாராகவே இருக்க வேண்டும். “நாம் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று நம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான்”.

- செ.கார்கி

Pin It