தந்தை பெரியார் திராவிடர் கழகம் 07.08.2017 அன்று ஆவிணி அவிட்டம் என்ற பார்ப்பனர்கள் பூணூல் அணியும் நாளில் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரி முன்பு நடத்துவதாக அறிவித்துள்ளது. பிறக்கின்ற அனைவரும் அசுத்தமானவர் களாகப் பிறக்கிறார்கள். அவர்களிடம் தீட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்களாகச் சொல்லுகிற பார்ப்பனர்களுக்கும் இது பொருந்துகிறது. அவர்கள் பிறந்து பிறகு அணிந்து கொள்ளும் பூணூலே பார்ப்பனர்களை உயர் பிறப்பாளனாக மாற்றுகிறது என்பதை மனுதர்மம், புராணங்கள் கூறுகிறது. பூணூல் அணியாத மற்றவர்கள், அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் கீழ்சாதியாய், பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாய் அறியப்படுகிறார்கள். திராவிடர்கள் மீது சுமத்தப்பட்ட பாரம்பரிய இழிவை வெளிப்படையாக அறிவிப்பதாக பூணூல் விளங்கி வருவதால் அந்த பிறவி இழிவை ஏற்க மறுத்து பூணூல் போடும் விழாவை தடை செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை நடத்துகிறது.
திராவிடர்களை இழிவுபடுத்தும் ஆரியப் பார்ப்பனர்கள் போடும் பூணூலை எதிர்த்து இப்போராட்டத்தின் நோக்கம் தெளிவாக விளக்கப்பட்ட நிலையிலும் இப்போராட்டத்தை திசை திருப்பும் வகையில் பார்ப்பனர்கள் தவிர்த்து வேறு சிலரும் பூணூல் போடுகிறார்கள் என்று சூத்திர சாதியில் உள்ள சில பூணூல் போடும் பிரிவினரை இப்போராட்டத்திற்கு எதிராகத் தூண்டி விடும் சூழ்ச்சி யில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்குப் பலியான சில சூத்திரர்களும் எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆரியப் பார்ப்பனர்கள் அணியும் பூணூலுக்கு இருக்கும் சமூக மரியாதைக ளும், சிறப்பு உரிமைகளும் பூணூல் அணியும் மற்ற பிரிவினர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றியே இக்கட்டுரை பேசுகிறது.
பூணூலுக்கு இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரம், மரியாதை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உரியது. மற்றவர்கள் அணியும் பூணூல் அவர்களின் உடலில் ஏறிவிட்ட ஒரு சுமை என்ற அளவில் தான் இருக்கிறது. கற்பனையில் கட்டிவிடும் கதையல்ல இது. ஆரியப் பார்ப்பனர்களின் புனித நூல்கள் என்பவற்றிலிருந்து, பூணூல் அணிவது பற்றிய ஆதார நூல்களிலிருந்து காட்டப்படும் மறுக்க முடியாத சான்றுகள்.
“பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (2:44)” என்று யார் யாருக்கு எந்த வகையில் பூணூல் அணிய வேண்டுமென மனுதர்மம் கூறுகிறது. மேலும், பூணூலின் முக்கியத்துவத்தை கூறவந்த மனுதர்மம் “உபநயனஞ் செய்து கொள்ளுவதற்கு முன்பு சூத்திரனுக்கு ஒப்பாவான வன் (2:172)” என்பதன் மூலம் பூணூல்தான் பார்ப்பனர்களை உயர்ந்தவர் களாக்குகிறது, மற்றவர்களை இழிவானவர்களாக்குகிறது என்று அறிவிக்கிறது.
பூணூல் அணிந்த பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருக்க வேண்டிய உயர் நிலை பற்றிப் பேசகின்ற மனுதர்மம், “வைதீகமாக இருந்தாலும் லெளகீகமாக இருந்தாலும் அக்கினியானது எப்படி மேலான தெய்வமாகவே இருக்கிறதோ அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம் (9:317)”, ”பிராமணர்கள் கெட்ட காரியங்களில் பிரவேசித்து இருந்தாலும் சகலமான சுபாசுபங்களிலும் பூசிக்கத்தக்கவர்கள். ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்லவா! (9:319)” என பல்வேறு கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. அதிலிருந்து ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.
”இந்துக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சடங்குகள், விழாக்கள்” என்று நூலில் இந்துக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ”ஆபே ஜெ.துபுவா” எழுதும்போது, “பிராமணன் என்பவன் சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களிடமிருந்து வேறுபட்டவன். மற்றவர்கள் அவர்கள் பிறந்த நிலையிலேயே வாழ வேண்டும். ஆனால், பூணூல் அணிந்த பிறகே ஒருவன் பிராமணன் ஆகிறான். பிறப்பினால் அவனுக்கு எந்த உயர்வும் கிடைப்பதில்லை. இச்சடங்கிற்குப் (பூணூல் சடங்கு) பிறகே அவன் துவிஜன் (இரு பிறப்பாளன்) எனப்படுகிறான்.
முதல் பிறப்பு மற்றவர்களுடன் அவனும் மனிதனாகிறான். இரண்டாவதாக பூணூல் போடுதல் அவனுக்கு உயர்நிலையை அளித்து சமூகத்தில் அவன் உயர்ந்தவனாகிறான்”என்று குறிப்பிடுகிறார்.
பூணூல் போடுவதன் மூலமே ஒரு இந்து இரு பிறப்பாளனாக மாறி உயர்நிலை அடைகிறான் என்பதையும் பூணூல் போடாததால் மற்றவர்கள் இழி பிறப்பாகவே கருதப்படுகிறார்கள் என்பதை ஆய்வின் மூலம் விளக்குகிறார்.
மனுதர்மத்தில் சொல்லப்பட்டதைப் போலவே பூணூல் அணிந்து தங்களை பிராமணர்கள், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதால் சமூகத்தில், யதார்த்தத்தில் பார்ப்பனர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் கிடைக்கின்ற சிறப்பு உரிமைகளையும் வெளிப்படுத்தி யுள்ளார்.
பார்ப்பனர்கள் மட்டுமல்ல நாங்களும்தான் பூணூல் அணிகிறோம்; இப்போராட்டத்தின் மூலம் எங்களையும் நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள் என்கிற பார்ப்பனரல்லாத திராவிடர்களைப் பார்த்து நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம்,
பார்ப்பனர்களைப் போல நீங்களும் பூணூல் அணிந்திருந்தாலும் ”மூடனாக இருந்தாலும் மேலான தெய்வங்கள்” ”கெட்டவனாக இருந்தாலும் பூசிக்கத்தக்க மேலான தெய்வங்கள்” என்று பார்ப்பனர்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமைகள் உங்களுக்கு வழங்கப்பட் டிருக்கிறதா?
அதுமட்டுமல்ல. பார்ப்பனர்களின் தொழில் பற்றியும் மற்றவர்களின் தொழில் பற்றியும் வரையறை செய்த மனுதர்மம், பார்ப்பனர்களுக்கு ”ஓதி வைத்தல், ஓதல், யாகஞ்செய்தல், யாகஞ் செய்வித்தல், கொடுத்தல், வாங்குதல் இவ்வாறும் பிராமணன் தொழில் (10:75)” என்கிறது.
அதேசமயம், “தன்றன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம, சத்திரிய, வைசியர் மூவரும் வேதமோத வேண்டும். அதில் சத்திரிய, வைசியர்களுக்கு பிராமணனே ஓதி வைக்க வேண்டும். அவ்விருவரும் ஓதி வைக்கக் கூடாது. இது சாஸ்திர நிச்சயம் (10:1)” என்று பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் சத்திரிய, வைசியர்கள் பார்ப்பனர்களைப்போல பூணூல் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துவிட்டு, பார்ப்பனர்களைப் போல, “சத்திரியனுக்கு பிராமணனுக்குச் சொல்லிய ஆறுகமங்களில் ஓதிவைத்தல், யாகஞ் செய்வித்தல், தானம் வாங்குதல் இம்மூன்று நீங்கலாக மற்றவற்றை அறிய வேண்டியது (10:77)”, ”வைசியனுக்கும் ஓதி வைத்தல் முதலிய மூன்றும் கிடையாது. எனென்றால், இவ்விருவருக்கும் பிராமணனுக்கு ஜீவனவிர்த்தியாக விதித்த தொழில்களை மனுப்பிரஜாபதி விதிக்கவில்லையல்லவா (10:78)” என்று பார்ப்பனர்களுக்கு வழங்கிய சிறப்பு உரிமைகளை மற்றவர்களுக்கு மறுத்திருக்கிறது மனுதர்மம்.
பூணூல் என்றால் அதற்கான மகத்துவமும், உயர்வும், உச்சபட்ச அதிகாரமும், சமூக அந்தஸ்தும் பார்ப்பனர்கள் போட்டிருக்கிற பூணூலுக்குத்தான் இருக்கிறது. மற்றவர்கள் போட்டிருப்பதெல்லாம் வெறும் நூலே என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் உங்களுக்கு விளக்கியிருக்கும்.
இவ்வளவு தெளிவான விளக்கங்கள் இருந்தும் நாங்களும் பூணூல் அணிந்திருப்பதால் பார்ப்பனர்களைவிட மேலானவர்கள், பார்ப்பனர்க ளுக்குச் சமமானவர்கள் என்று பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத மக்கள், திராவிடர்கள் வழக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தபோது பார்ப்பனர்கள் அதற்கு எதிராக திரண்டெழுந்ததை வரலாறு பாதுகாத்து வைத்திருக்கிறது.
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை எதிர்க்கும் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத மக்களின் கவனத்திற்கு அந்த வரலாற்றுச் செய்திகளையும் முன்வைக்கிறேன். பூணூல் என்பது எது? என்று அப்போது உங்களுக்குப் புரியும்.
இரும்புத்தொழில், தச்சுத்தொழில், கல் தொழில், செம்புத் தொழில், தங்கத்தொழில் உள்ளிட்ட தொழில்களைச் செய்யும் பஞ்சகருமார் என்பவர்கள் தங்களை விஸ்வ பிரம்ம குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைத்து கொள்வது வழக்கம். இவர்களும் பூணூல் அணிந்திருக்கக் கூடிய பிரிவினர்கள்.
ஆசாரிகள் என்றழைக்கப்படும் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 1814 ஆம் ஆண்டு சித்தூர் மாவட்டம் சதுர்ப்பேரியில், அக்குலத்தைச் சேர்ந்த பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உள்ளிட்ட சிலர் வேத விதிப்படி திருமணங்கள் செய்வித்த போது, அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சாங்கம் குண்டையன் மற்றும் பார்ப்பனர்கள் அங்குகூடி அத்திருமணங்களை எதிர்த்து கலகம் செய்தனர். ஆசாரிகள் தங்கள் திருமணங்களை தாங்களே நடத்திக் கொள்ள உரிமையில்லை. திருமணத்தை பார்ப்பனர்கள்தான் நடத்தி வைக்க உரிமையுண்டு என்று வாதிட்டு இப்பிரச்சினை எழுந்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பஞ்சாயத்தார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றபோது, பஞ்சாயத்தார் பார்ப்பனர் பஞ்சாங்கம் குண்டையன் கேட்கிற கேள்விகளுக்கு ஆசாரி பிரிவினர் வேத பிரமாணபடி பதில் கூறவேண்டும். கூறிவிட்டால் நீங்களே உங்கள் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்; இல்லையென்றால் பார்ப்பனர்களை வைத்துத்தான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறுகிறார்கள்.
பஞ்சாயத்தாரின் விதிகளுக்கு உட்பட்டு பார்ப்பன பஞ்சாங்க குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு மார்க்க சகாயம் ஆசாரி வேதப் பிரமாணமாக விடை அளித்தார். இரு தரப்பையும் கேட்டறிந்த பஞ்சாயத்தார்,
”பண்டிதர் மார்க்க சகாயம் ஆசாரி உங்கள் புராணங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யாவருக்கும் நன்றாக விளங்கும்படி உம்மிடத்தில் தர்க்கித்ததற்கும் மறுமொழி சொல்ல வகையில்லாமல் நீர் பிரமை கொண்டது யாவருக்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இனி விஸ்வப் பிரம்ம சங்கத்தார் வேத விதிப்படி விவாக முடிப்பதற்கு இந்த பஞ்சாங்கக் குண்டையன் முதலியோர் யாதொரு தடங்கல் செய்யக் கூடாதென்று” 1818 இல் தீர்ப்பு சொல்லப்பட்டது.
இத்தீர்ப்பை ஒப்புக்கொள்ளாமல் பஞ்சாங்கக் குண்டையனும் மற்றும் சில பார்ப்பனர்களும் சேர்ந்து கொண்டு ஆசாரிகளுடன் அடிதடிச் சண்டையில் ஈடுபட்டார்கள்.
இந்த செய்திகள் ”சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு” என்ற நூலில் விரிவாக வெளிவந்துள்ளது.
மனுதர்மம் கூறியபடி பார்ப்பனர்களுக்குத்தான் வேதம் ஓதுவித்தல் உள்ளிட்ட கடமைகள் செய்ய உரிமையுண்டு என்பதை சண்டையில் இறங்கி பார்ப்பனர்கள் நிரூபித்ததற்கு சித்தூர் வழக்கே உதாரணமாகும்.
பூணூல் போட்டிருந்தாலும் வேதங்களில் கரைகண்டிருந்தாலும் விஸ்வ பிரம்ம குலம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் பார்ப்பனர்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்து மற்றவர்களுக்கு கிடையாது என்பதுடன், அதை யார் மீறினாலும் பார்ப்பனர்கள் கொதித்து எழுவார்கள் என்பதற்கும் மேற்கண்ட வரலாற்று சம்பவமே சாட்சி.
அதே விஸ்வ பிராம்மணர்கள் என்கிற சமூகத்தினர் 1938 ஆம் ஆண்டுகளில் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொண்டனர். அப்போது சென்னை ராஜதானி என்ற தமிழ்நாட்டின் முதல்வராக இராஜகோபாலச்சாரி பதவியில் இருந்தார். பஞ்ச கருமார்கள் என்பவர்களும், பார்ப்பன இராஜாஜியும் ஆச்சாரியார்களா? பொறுத்துக் கொள்ளக்கூடிய செயலா? இருவரும் ஒன்றாக முடியுமா?
சாதிய வேறுபாடுகளை எல்லாம் சுயராஜ்ஜியம் அடைந்ததும் போக்கிக் கொள்ளலாம் என்று காந்தியும் இராஜாஜியும் பேசி வந்த காலம் அது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிராக வைக்கப்பட்ட வாதமாக இருந்தாலும் காங்கிரஸ்காரர்களால் பரவலாகப் பேசப்பட்ட வார்த்தை அது. அதையொட்டியே, சுயமரியாதைப் பிரச்சாரம் செய்த பெரியாரை தேசத்துரோகியாக சித்தரித்தார்கள்.
சுயமரியாதை என்பது பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களும் ஒரே நிலையிலா இருக்கிறது? சமூகமே பார்ப்பன ஆதரவு நிலை கொண்டிருந்த காரணத்தால், சுயராஜ்ஜியமாவது? மண்ணாவது? கொதித்தெழுந்த இராஜகோபாலாச்சாரி விஸ்வகர்ம சாதியார் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போடக்கூடாது; ”ஆசாரி” என்றுதான் போடவேண்டும் என்று உத்திரவு போட்டார் என்பதும் பாதுகாக்கப்பட்ட வரலாறு சொல்லும் உண்மை.
”சமுதாயத் துறையிலோ பிராமணர் வேறு, பிராமணரல்லாதார் வேறு. அதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற தலைப்பில் வரக்கூடாது என்று கருதி, இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமண பட்டமும் பிரம்ம பட்டமும், ஆச்சாரியார் பட்டமும் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட்டு விட்டன” என்று 07.08.1938 குடிஅரசு தலையங்கத்தில் தந்தை பெரியார் எழுதினார்.
தங்கள் சமூக திருமணங்களை தாங்களே நடத்திக் கொள்ள ஆரியப் பிராமண ஆதார நூல்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தாங்களும் பிராமணர்கள் என்பதைக் காட்ட பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சமூக நிலையில் தாங்களும் பூணூல் போட்டவர்கள், உயர் வகுப்பார் என்று சொல்லிக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? என்பதையும் எல்லாம் வல்ல சக்தி படைத்தது பார்ப்பனர்கள் போட்டிருக்கும் பூணூலே என்பதையும் பூணூல் போட்டிருக்கும் பார்ப்பனர் அல்லாதவர்கள் யோசித்துப் பார்க்கும்படியும், பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் என்பது பார்ப்பனீயத்தின் மேலாதிக்கத்திற்கு எதிரானதும், மனிதர்களை கேவலப்படுத்தும் பாசிச சிந்தனைக்கும் செயல்முறைக்கும் எதிரானது என்பதோடு, சமூக சமத்துவம் தோன்ற தடையாக, சாதியின் குறியீடாக இருக்கும் பூணூலின் மேல் கட்டப்பட்டிருக்கும் புனிதத்தை தகர்ப்பதுமேயாகும்.
மேற்கண்ட நோக்கங்களோடு தொடங்கப்பட்ட இப்போராட்டத்தில் விசித்திரமான செய்தியும் ஒன்றுண்டு. பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை விழாவாகக் கொண்டாடுவதாக நாங்கள் அறிவித்திருந்தாலும் இறுதியில் பன்றிக்குப் பதிலாக பார்ப்பனர்களுக்கு பூணூல் போடும் விழாவாக மாறிவிடும் போலிருக்கிறது. இதற்கும் எங்களுக்கும் எந்தவிதப் பொறுப்பும் இல்லை. இது ஆரியப் புராணங்களின் அற்புதத் திருவிளையாடல்களில் ஒன்று. நாம் என்ன செய்யமுடியும்? சாதாரண மனிதர்கள்தானே? அவதாரங்கள் அல்லவே!
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நாகரீகமற்ற முறையில் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்தி எங்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்று கிருஷ்ணகிரியில் பார்ப்பனர்கள் குடும்பங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் பார்வைக்கும் இச்செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.
பதினெண் புராணங்களில் இராண்டாவது புராணமாகிய பத்ம புராணத்தில்,
”தாம்ப்ர பாணர தம்
விப்ரம் நரஹ
தாதாரோ நரகம் யாதிப்
ராமணோக் ராம சூக்ர ஹ”
என்று ஒரு ஸ்லோகம் சொல்லப்பட்டிருக்கிறது. ”புகையிலைச் சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர்களுக்கு தர்மவான்கள் தர்மம் செய்யக் கூடாது. அப்படிப்பட்டவனுக்கு தர்மம் செய்கிறவன் நரகத்திற்குப் போவான். மேலும், புகையிலை சுருட்டு பிடிக்கும் பார்ப்பனர் அடுத்த ஜென்மத்தில் பன்றியாகப் பிறப்பான்” என்பது இச் ஸ்லோகத்தின் பொருள்.
ஆக, பூணூல் போடுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுக்கும் பன்றி முன் ஜென்மத்தில் சுருட்டு பிடித்த பார்ப்பனராக இருந்துவிட்டால் எங்கள் போராட்டம் பார்ப்பனருக்கு பூணூல் போடும் விழாவாக மாறக்கூடிய அபாயமும் இருக்கிறது என்பதுதான் அந்த விசித்திரம்.
முக்காலமும் உணர்ந்த பார்ப்பனர்கள் நாங்கள் நாகரீகமற்ற முறையில் பன்றிக்கு பூணூல் போடவில்லை; உங்கள் முன்னோர்களுக்குத்தான் போட்டோம் என்பதை அறிந்து பெருமை கொள்ளுங்கள்.
- கா.கருமலையப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்