வில்டியூரெண்ட் - ஒரு வரலாற்றுத் தத்துவ அறிஞர். அவர் எழுதிய The Pheasure of Philosophy’ எனும் நூலின் ஒரு பகுதியை பேராசிரியர் வாசுகி பெரியார்தாசன் ‘உலக மதங்கள் - ஒரு தத்துவப் பார்வை’ என்கிற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறார். மதங்களைப் பற்றி பல்வேறு கோணங்களில் அலசப்படும் இந்த முயற்சி வாசகர்களின் சுயசிந்தனையை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

விவாதிப்பவர்கள்

ஆண்ட்ரூ : நாத்திகர்
ஏரியல் : ஏற்பாட்டாளர்
க்ளாரன்ஸ் : உலோகாயதவாதி
எஸ்தர் : யூதர்
சர்.ஜேம்ஸ் : மானுடவியலாளர்
குங் : சீனர்
மத்தேயு : கத்தோலிக்கர்
பவுல் : புரோட்டஸ்டன்ட்
பிலிப் : வரலாற்றியலாளர்
சித்தா : இந்து
தியோடர் : கிரேக்கர்
வில்லியம் : உளவியலாளர்

சர். ஜே: மாயமந்திரம்! உலகம் ஆவிகளால் நிரம்பியது என்று கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்த இயலாமல் - தற்கால விஞ்ஞானம் முயல்வது போல் - தொடக்க கால மனிதன் அவற்றைத் திருப்திப்படுத்தவும், அவற்றிடம் உதவி கோரவும் தொடங்கினான். ‘மாயமந்திரம் என்பது ஆவி வழிபாடான ஆன்மீகத்தின் சூழ்ச்சிமுறையே’ என்று ரெய்னாச் கூறுகிறார். இரக்கத்தை நோக்கமாகக் கொண்டு கருத்துத் தோற்றத்தின் மீதமைந்ததே இத்தகைய மாய மந்திரம் ஆகும். மழைபெய்ய வைப்பதற்காகப் பழங்காலப் பூசாரி அல்லது அவரால் அமர்த்தப்பட்ட மந்திரவாதி பூமியின் மேல் முக்கியமான ஒரு மரத்தின் மேலிருந்து நீரை ஊற்றுவார். இன்றும் கூட ஜெர்மனியில் பால்கன் சிலும் ஜெர்மனியின் மற்ற சில பகுதிகளிலும் மழை தாமதப்படும்பொழுது, ஓர் இளம்பெண் துகிலுரியப் பட்டு, சமயச் சடங்குகளோடு அவள்மீது நீரை ஊற்றும் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. ஆப்பிரிக்க நாட்டு காப்ரியர்கள் வறட்சி தங்களை அச்சுறுத்தும்பொழுது சமயப் பிரச்சாரகரை அவரது குடையைப் பிடித்துக் கொண்டு வயல்களின் வழியாக நடக்கும்படி வேண்டுவார்கள்.

Vivekanandaசுமத்திராவில் மலட்டுப் பெண்கள் மரத்தாலான குழந்தையின் பொம்மையை மடியில் ஏந்திக் கொள்வதால் அவளுடைய மலட்டுத் தன்மை நீங்கும் என்று நம்பினார்கள். பேபர் ஆர்க்கி பெலகோவில் மலட்டுத் தன்மை வாய்ந்த பெண் செம்பஞ்சு பொம்மை ஒன்று செய்து, அதற்குப் பால் கொடுப்பது போலப் பாவனை செய்து ஒரு மந்திர சூத்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவாள். அவள் குழந்தையுடன் இருப்பதாகக் கிராமத்தில் செய்தி பரப்பப்பட்டு அவளுடைய தோழிகள் அனைவரும் அவளுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வருவார்கள். போர்னியோவில் வாழும் டயக்குகள் மத்தியில் ஒரு பெண் பேறு கால வலியால் அவதியுறும்போது மந்திரவாதி அழைக்கப்படுவான். அவன் அவளுடைய வலியைக் குறைப்பதற்கும், குழந்தை விரைவாகப் பிறப்பதற்கும் முயற்சி செய்வான். தானே பிரசவ வேதனையை அனுபவிப்பது போன்று நெளிந்து துடிப்பான். வேதனைப்படுவது போன்ற சில நிமிட நடிப்பிற்குப் பிறகு தன் இடுப்பிலிருந்து ஒரு கல்லை விழச் செய்து, மந்திரங்களைச் சொல்லி அக்கல்லைக் குழந்தையின் கருப்போன்று பாவிப்பான்.

வரலாற்றில் பெரும்பாலான புகழ்பெற்ற நம்பிக்கைகள், நோய் நீக்கும் முறைகள் ஆகிய அனைத்தும் மந்திர முறைகளே. கற்றறிவாளரான டாக்டர் ஜேம்ஸ் ஜே. வால்ஸ் இவையனைத்தையும் ஓர் அழகான நூலில் பதிப்பித்துள்ளார். முகப்பருவால் நீங்கள் அவதிப்பட்டால் எரி நட்சத்திரத்தைப் பாருங்கள். சரியாக, அது விழும்பொழுது உங்கள் முகத்தைக் கழுவுங்கள். எல்லாப் பருக்களும் அழிந்து விடும். அவ்வாறு அவை போகவில்லை என்றால் அதற்குக் காரணம் நீங்கள் போதிய அளவிற்கு விரைவாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். அல்டா மிரா மற்றும் பல இடங்களில் உள்ள குகைகளின் சுவர்களில் காணப்படும் அம்புகள் துளைத்துச் செல்லும் விலங்குகளின் படங்கள் மந்திரக் கற்பிதங்களை நோக்கமாகக் கொண்டவையே. மத்தியக் காலங்களில் வாழ்ந்த மக்கள் தங்கள் பகைவனின் மெழுகாலான உருவத்தை ஊசிகளால் துளைப்பதன் மூலம் அவன் மீது மந்திரசக்தியை ஏவ முயற்சிப்பார்கள். இன்றும் கூட நாமும் ஒருவரின் கொடும் பாவியைக் கொளுத்துகிறோம், பெரூனியா நாட்டு மக்கள் இச்செயலைச் செய்யும்பொழுது அதை அவர்கள் ‘ஆன்மாவை எரித்தல்’ என்று அழைப்பார்கள்.

ஆண்: மந்திரமே அறிவியலின் தந்தை என்பது உங்கள் விருப்பமான கோட்பாடுகளில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.

சர்.ஜே: ஆன்மீகம் எப்படி கவிதைக்குத் தந்தையானதோ, நம்பச் செய்வதன் மூலம் மந்திரம் எப்படி நாடகக் காட்சிகளின் தந்தையானதோ அப்படியே இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்த விழைந்ததன் மூலம் அந்த மந்திரம் அறிவியலின் தந்தையுமாயிற்று. பல மந்திரச் சடங்குகளின் தோல்வியை விட ஒரு மந்திரச் சடங்கின் வெற்றியைத்தான் மக்கள் மிக முனைப்புடன் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்றாலும், சில சமயங்களில் மந்திரச் சடங்குகள் பயனற்றுப்போகும்போது மந்திரவாதிகள் தொல்லைகளை அனுபவிப்பதுண்டு, காரண காரியங்களை ஆராயவும் சாதகமான முடிவுகளைக் கொண்டு வருகிற இயற்கை வழிவகைகளைக் காணவுமான செயல்கள் மந்திரவாதியின் பொறுப்பில் இருக்கின்றன. மந்திரச் சடங்குகளைப் பயன்படுத்தி வெற்றிகளைக் குவிக்கவும் மக்களிடத்தில் கடவுளின் அருளைப் பெற்றவர் என்ற நற்பெயரைப் பெறவும் அவனுக்கு வாய்ப்பாக இருந்தன. எனவே, பழங்கால மந்திரவாதிகள், அற்புதங்கள் செய்வோர், அல்லது மதபோதகர்கள் ஆகியவர்களிலிருந்தே மருத்துவர், நோய் நீக்கும் வைத்தியர், சோதிடர், வானியலாளர், இரசவாதிகள், வேதியியலாளர் ஆகியோர் உருவாயினர். ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சித் துறையிலும் உள்ள நம் விஞ்ஞானிகள் அனைவரும் அந்தப் பழங்கால மந்திரவாதிகளின் நேரடி வாரிசுகளே ஆவர். இந்த ஒன்றின் ஊற்றிலிருந்தே மதமும் - அறிவியலும், நுண்பொருள் கோட்பாட்டியலும், மருத்துவமும் தோன்றின. இவைகள் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான இரு வேறுபட்ட நீரோட்டங்களாய் மனிதகுல வரலாறு முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

சில இடங்களில் மந்திரவாதிகளின் திறமையும், மந்திர சூத்திரங்களின் பெருமையும் எந்த அளவிற்கு மகத்தானதாகக் கருதப்பட்டனவென்றால் கடவுளிடம் வேண்டியது விளையாத போது அவைகள் சடங்குகளின் குறைபாடாக எண்ணப்படாமல் கடவுளின் பிடிவாதமாகக் கருதப்பட்டன. கிரேக்க நாட்டில் இளைஞர்கள் சில நேரங்களில் தங்கள் நாட்டுப்புற தேவதையாகிய ‘பான்’ நல்ல வேட்டையைத் தரவில்லை என்று அதன் சிலைக்குக் கசையடி கொடுப்பார்கள். இத்தாலிய மீனவர்கள் தங்களின் பிரார்த்தனைக்கு மாறாகக் குறைவான மீன்கள் கிடைக்க நேர்ந்தால் அவர்கள் தங்களின் ‘வர்ஜின்’ என்ற கன்னித் தேவதை உருவத்தைக் கடலில் தூக்கியெறிந்து விடுவார்கள். சீனர்கள் தங்களுடைய வேண்டுதல் தோல்வியடையும் போது கடவுளின் உருவத்தைத் தெருவில் இழுத்துச் சென்று அவமதித்து, வசை பாடி இழிவுசெய்து அடிப்பார்கள். ‘நாயே! உனக்குக் குடியிருக்க உயர்வான கோயில் தந்தோம்; உன்னைத் தங்கமுலாம் பூசி அழகுபடுத்தினோம்; செம்மையாக உணவு படைத்தோம்; உயிர்ப் பலி கொடுத்தோம்; எல்லாம் அனுபவித்துவிட்டு நீ நன்றி கெட்டவளாய் இருக்கிறாயே’ என்று வசை கூறுவார்கள். இத்தகைய விந்தையான முறைகளினால் பண்டைய மனிதர்கள் தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் மேலான சக்தியாக மொயிரா அல்லது விதி என்ற ஒன்று உண்டு என்ற கோட்பாட்டை நெருங்கி வந்து கிரேக்க மதமாக வேறுபடுத்தி, ஒரு சாராரை ஒரு கடவுட் கோட்பாட்டை நோக்கியும், மற்றொரு சாராரை விஞ்ஞானத்தை நோக்கியும் இட்டுச் சென்றனர்.

ஏரி: இந்தச் செய்திகள் அனைத்தும் எந்த முடிவை நோக்கிக் கொண்டு செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவையனைத்தும், தேவையென்றே கருதுகிறேன்.

சர்.ஜே: இவ்வளவு விரைவில் நீங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிடக் கூடாதம்மா. விஞ்ஞானமாகட்டும் வரலாறாகட்டும் - எந்தவொரு துறையை ஆராய்ந்தாலும் முதலில் அதற்கான வாத ஆதாரச் செய்திகளில் உங்களை மூழ்கடித்துக் கொள்வதே அறிவுப்பூர்வமானதாகும். விரைவில் நீங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டீர்களானால் சில செய்திகளை அது உங்களுக்கு அளித்து விட்டு மற்றவைகளைப் பரிசீலிப்பதிலிருந்து உங்களை விலக்கி வைத்துவிடும்.

ஏரி: நீங்கள் சொல்வது சரி! உங்கள் கண்டனத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். மேலே செல்லுங்கள். இன்னும் நிறையச் சொல்லுங்கள்.

சர்.ஜே: நன்று. மந்திரம் விஞ்ஞானத்திற்கும் நாடகத்துக்கும் மட்டும் கொண்டு செல்வதில்லை. மதச் சடங்குகளுக்கும், நரபலிக்கும், வழிபாட்டிற்கும்கூட இட்டுச் செல்கின்றது. இன்றும் கூடப் பல வழிபாடுகள் விளம்பரதாரர்களைப் போல மீண்டும் மீண்டும் சொல்வதில் நம்பிக்கை கொண்டு முணுமுணுப்பதின் மூலம் அவைகள் மந்திர சூத்திரங்களின் தன்மையுடையனவாகவே இருக்கின்றன. தாயத்துகள் கொடுத்தல், சாபம் கொடுத்தல், ஆசிவழங்குதல் போன்றவை மாய மந்திரங்களின் வளர்ச்சி நிலைகளே. மிக விவரமாகவும், மிகப்பரவலாகவும் வளர்ச்சியுற்ற நிலையே தாவர வழிபாட்டுச் சடங்குகளாகும். பண்டைய மனிதன் வளர்ச்சிச் சக்தியை ஆண், பெண் என்று வகைப்படுத்தினான். மேட்டர் என்ற சொல் ‘மேடர்’ மதர், தாய் என்று பொருள்படும் சொல்லிலிருந்து வந்ததாகத் தோன்றுகிறது. ஆவி வழிபாடான ஆன்மீகம் இயல் கடந்த ஆராய்ச்சிக்கு இட்டுச் செல்வது போல், சுய நோக்கு அல்லது பொருள்களைப் பற்றிய சிந்தனை, இயற்கையாக அரூபமான அல்லது மறைபொருளுக்கு இட்டுச் செல்லும். பிரார்த்தனை செய்யும் ஒரு குழந்தையின் கடவுள், கடவுள் கருத்தில் மூழ்கிப்போன தத்துவ ஞானி ஸ்பினோசாவின் கடவுளைவிட ஆயிரம் மடங்கு உறுதியாகவும், உருபொருளாகவும் உள்ளது. புற நிலையில் குறிப்பிட்ட வெளி பொருள்களுக்கு பதில் பொதுமைபடுத்தப் பட்ட மறைபொருள்களை வைப்பது மெய்ப்பொருளியலின் குறைபாடுகளில் ஒன்றாகும். நம் சிறு பிராயத்தில் நம்மிடமிருந்த அன்னியோன்யமான மனித உருவாலான தெய்வங்களுக்குப் பதிலாக, மனித உருவில் உருவகிக்க இயலாத பரம்பொருளாகக் கடவுளை மெய்ப்பொரு ளியல் சித்திரிக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டிலும் ஒவ்வொரு தலைமுறையிலும் மனிதனுக்குள்ள மகத்தான பிரச்சினை என்னவென்றால் எவ்வாறு உணவுப் பொருள்களில் நல்ல விளைச்சலைப் பெறுவது என்பதுதான். பண்டைய மனிதன் இந்தப் பிரச்சினைகளில் பயிர்சுழற்சிமுறை பற்றியோ, வேறு எந்த விஞ்ஞான முறைபற்றியோ சிந்திக்கவேயில்லை. இவற்றை அவன் மாய மந்திரங்களின் மூலமாகவே அணுகினான். மிகப்பெருமளவில் உணவுப் பொருள்களை அளிக்கும்படி அவன் பூமாதேவியை வேண்டிக் கொண்டான். அதற்காக அவன் விதைக்கும் காலத்தில் படைப்பாற்றல் குறி வழிபாட்டு விழாக்களைக் கொண்டாடினான். அதன்மூலம் அவன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தான். ஒன்று, பயிர்களுக்குக் கால இடைவெளி விடுவதின் மூலம் நிலத்தைப் பண்படச் செய்வது: இரண்டு, அந்த நாளில் தனக்கும் உழைப்பிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வது. இன்னும் சில நாடுகளில் மக்கள் மே மாதத்திற்கான அரசனையும், அரசியையும் தேர்ந்தெடுத்து அல்லது மணமகனையும், மண மகளையும் தேர்ந்தெடுத்து மண்ணைச் செழுமைப்படுத்தி வளப்படுத்துவதற்காக அவர்களுக்குச் சடங்குகளோடு திருமணம் செய்வார்கள். நிலம் நல்ல விளைச்சலைத் தரவேண்டும் என்பதை அந்த இயற்கை பிழையின்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் திருமணச் சடங்கை முழு நிறைவாகச் செய்து கொண்டாடுவார்கள். இதன் மூலம் தன்னிடமிருந்து இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று இயற்கை நன்கு புரிந்துகொள்ளும் என்று நம்புகிறார்கள்.

Peopleஇவைகளுக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் மீண்டும் ஆச்சரியப் படலாம். சற்றுப் பொறுமையாக இருங்கள்! நீங்கள் மதங்களை ஒப்பிட்டு ஆராயும்பொழுது உங்கள் சொந்த மதத்தைப் பற்றிய தெளிவின்மையைச் சரி செய்து கொள்ளலாம். பண்டைய மனிதன் நம்மைவிட மிக முழுமையாக நல்ல விளைச்சலை மட்டுமே நம்பி வாழ்ந்திருந்தான். பஞ்சத்திலும், வெள்ளத்திலும் இழப்பதற்குக்கூட அவன் ஏதுமில்லாதவனாக இருந்தான். எனவே, நல்ல விளைச்சலுக்கு அவன் எதைச் செய்யவும் தயாராயிருந்தான்.

இக்காரணத்தினால்தான் எல்லா மதங்களிலும் உயிர்ப் பலி கொடுக்கும் எண்ணம் தோன்றியது. முதலில் மனிதனையும் பிறகு சற்று அறிவு வளர்ந்த காலத்தில் மிருகத்தையும், பூமியின் ஆன்மாவிற்குப் பலிகொடுத்தான். நிலத்தில் வழிந்தோடும் இந்த இரத்தம் பூமாதேவியை அபிஷேகம் செய்து மண்ணைச் செழிப்பாக்கும் என்று நம்பினான். ஈக்வெடாரில் உள்ள இந்தியர்கள், விதைக்கும் காலத்தில் மனித இரத்தத்தையும், இதயத்தையும் பலி கொடுத்தார்கள். பானீ இந்தியர்களும் இதேபோன்று செய்தார்கள். இவற்றில் வங்காள மலைச் சாதியினர் செய்யும் சடங்குகள் விவரிக்க முடியாத அளவிற்குக் கொடுமையானவையாகும். சில சமயங்களில் ஒரு குற்றவாளி பலியிடப்படுவான். ஏதன்ஸ் நாட்டில் எந்தவொரு அவசரத்திற்கும் கடவுளுக்கு உடனடியாகக் கழுவாய் செய்யும்பொருட்டு பலிகொடுக்க ஏராளமான ஒடுக்கப்பட்ட மக்களைத் தயாராக வைத்திருந்தார்கள். பிளேக் நோய் வந்தாலும் அல்லது பஞ்சம் வந்தாலும் இரண்டு குற்றவாளிகளைப் பலி கொடுத்தார்கள், ஒன்று ஆண் வர்க்கத்திற்காகவும் ஒன்று பெண் வர்க்கத்திற்காகவும் கொடுத்தார்கள். இவைகள்தான் இயேசுபெருமானின் ‘‘பொதுநல தற்பலியீடு’’ என்ற கோட்பாட்டின் தொடக்கம் ஆகும்.

ஏரி: என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? கிறித்துவ சமயக் கோட்பாட்டின் மூல தத்துவம் இத்தகைய முட்டாள் தனமான, பிற்போக்குத் தனமான சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது என்றா சொல்கிறீர்கள்?

சர். ஜே: அது அப்படித் தான் தோன்றும் என்றாலும் இதையே நான் கிறித்துவ சமயத்தின் மூல தத்துவம் என்று கூறிவிட மாட்டேன். அமெரிக்காவில் தேவையற்ற இரண்டாந்தரத் தத்துவங்களை மதத்தில் சேர்த்து வைத்திருப்பவர்கள் ஓர் இனத்திலிருந்து இன்னொரு இனத்தைப் பிரிக்கும் தத்துவத்தை வைத்திருப்பவர்கள் தங்களை மாறா மரபுக் கோட்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்வதைப் பார்க்கும்பொழுது திகைப்பாக இருக்கிறது. நீங்கள் சற்றுத் தாராளமாக என்னைப் பேசவிட்டீர்களானால் இவர்கள் நுனிப்புல் மேய்பவர்கள் என்றே சொல்வேன். நான் மேலே தொடரவா?

ஏரி: இது எங்கே கொண்டு சென்றாலும் சரியே.

சர். ஜே: அதுதான் ஆன்மா. ஏதென்சில் ஒவ்வொரு ஆண்டும் ‘தார்ஜெலியா’ விழாவின் போது மக்கள் செய்த பாவத்திற்குக் கழுவாயாக இரண்டு பலியாடுகள் கற்களால் அடிக்கப்பட்டு, கடவுளுக்குப் பலி கொடுக்கப்படும். பெரும்பாலும் அந்தப் பலியுயிர்கள் ஓராண்டிற்கு முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும். பன்னிரண்டு மாதங்களுக்கு அவைகள் மிகவும் நேசமாக வளர்க்கப்பட்டு, ஓர் அரசனைப் போன்று, கடவுளைப் போன்று வழிபடப்படும். வசந்த காலத்தில் அவைகள் பல சமயங்களில் சாட்டையடிகளுக்குப் பிறகு கொல்லப்படும். இத்தகைய சமயச் சடங்குகளின் வாயிலாக மக்களிடத்தில் காணப்பட்ட கொடுமை விரும்பும் பண்புக்கு ஒரு வடிகால் அமைந்தது என்பதில் ஐயமில்லை. பண்டைய சமயச் சடங்குகளின் பிற்கால வடிவங்களில் அடுத்த ஆண்டு பலி கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படும் பலியுயிர் மீட்டெழுச்சிபெறும் பலியுயிராகக் கருதப்பட்டு வழிபடப்படும். இது எதைப் போலென்றால் பூமிக்கடவுள் வீழ்ச்சிக்குப் பின் வசந்தத்தில் மீண்டும் உயிர்ப்பதைப்போல மனித வடிவில் கடவுளின் பிறப்பு, இறப்பு போன்ற கட்டுக்கதைகள் பிற்காலத்தில் மேற்கு ஆசிய நாடுகளிலும் வடகிழக்கு ஆப்பிரிக்காவிலும் ஏறத்தாழ எல்லா மதங்களிலும் ஒரு முக்கிய அம்சமாக இடம்பெற்றுவிட்டன.

வழிபடப்படும் பலியுயிர்களான கடவுளைக் கொல்லுவதிலிருந்து வளர்ச்சி பெற்று அவைகளை உண்ணுகிற நிலைக்கு வந்தது இயல்பான முன்னேற்றமே. ஏனென்றால், காட்டு மிராண்டி மனிதன் அவன் என்ன சாப்பிடுகிறானோ அவற்றின் சக்தியைத் தான் பெறுவதாக நம்பினான். முதலில் மக்கள் பலியுயிர்களின் இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தத்தைக் குடித்தார்கள். ஆனால், சிறிது பண்பட்டபிறகு அவைகளின் இறைச்சிக்கும் இரத்தத்திற்கும் பதிலாக அவற்றைப் போன்று மாவால் செய்யப்பட்ட உருவங்களைச் சாப்பிட்டார்கள். பழங்கால மெக்ஸிகோ நாட்டில் மக்கள் நோன்புக்குப் பிறகு தானியங்கள், விதைகள், காய்கறிகள், பிசைந்த மாவுப் பண்டங்கள் ஆகியவற்றைப் பலியிடப்பட்ட சிறுவர்களின் இரத்தத்தில் கலந்து கடவுளின் உருவத்தைச் செய்து விரதத்திற்குப் பின் சாப்பிடுவார்கள். இந்த மதச்சடங்கிற்குக் ‘கடவுளைச் சாப்பிடுதல்’ என்று பெயர். மதகுருமார்கள் மந்திர சூத்திரங்களைச் சொல்லி அந்த உருவங்களை வெறும் பொம்மைகளிலிருந்து தெய்வங்களாக மாற்றுவார்கள்.

மத்: ஏதோ ஒன்று மட்டும் பண்டைய மக்களின் செயல் முறையோடு ஒத்துப் போகிறது என்பதாலேயே கழுவாய் செய்வது, இயேசுநாதரின் இறுதி விருந்துச் சடங்கு ஆகிய இவற்றின் தத்துவங்களில் குறையிருக்கிறது என்று நீங்கள் சொல்லிவிட முடியாது.

சர். ஜே: இல்லை நிச்சயமாக இல்லை: அந்தத் தத்துவங்களெல்லாம் உண்மை என்பது இன்றளவும் கருத்தளவில் இருக்கின்றன. அந்தக் கருத்தில் நான் பிடிவாதமாக இல்லை; காலத்தால் அச் சமயச் சடங்குகளெல்லாம் பண்பட்டுவிட்டன. பழங்கால அமைப்பு தன்னின உயிருண்ணும் சமூகத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அச்சமூகத் தலைவனின் விருப்பு வெறுப்புக்கள் அனைத்தும் கடவுளின் குணங்களாக ஆக்கப்பட்டன. அந்த வேள்வியில் மனிதனை மனிதன் உண்ணும் வழக்கம் அழிந்தவுடன் மனிதர்களுக்குப் பதிலாக மிருகங்கள் ஆட்பட்டன. இந்த மாற்றங்கள் ஆப்பிரகாமும், ஐசாக்கும் ஆடுகளும் என்ற கதையில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், பண்டைய பூசாரிகள் கடவுள்களைப் போன்றே இறைச்சியை விரும்புபவர்களாக இருந்தார்கள். விரைவில் அவர்கள் பலியிடப்பட்ட மிருகங்களின் பாகங்களில் நல்ல பகுதிகளைத் தங்களுக்காக எடுத்துக்கொண்டு கடவுளுக்காகக் கொழுப்புப் பொருட்களால் மூடப்பட்ட குடல்களையும் எலும்புகளையும் மட்டுமே விட்டு வைக்க வழிதெரிந்து கொண்டார்கள்.

ஆண்: இன்னமும் கடவுள் எல்லாம் அறிந்த பரம்பொருள் என்ற கருத்து நிலையை அடையவில்லை. 

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)

-வாசுகி பெரியார்தாசன்

Pin It