அடுத்தவர்களுடைய அறிவுச் சொத்துக்களான (Intellectual Property) சிந்தனைக் கருத்துக்களைத் திருடி தனது சொந்தக் கருத்துக்கள் போலக் காட்டி நான் நூல் வெளியிட்டிருப்பதாக மிகுந்த மனவேதனையுடன் தாங்கள் வெளியிட்டிருந்த செய்தியைப் படித்து மிகுந்த மனத்துயரத்திற்கு ஆட்பட்டேன். பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் நான் அத்தகையத் திருடல்களைச் செய்யும் கீழ்மையானவன் அல்லன். தங்களுடைய மனவேதனைக்குப் பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

karuppadevan bookபேராசிரியர் ச.சீனிவாசன் படைத்துள்ள 'ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்' (காவ்யா, சென்னை, 2008) என்னும் நூலினை நான் ஒப்பிலக்கியம் (2007) என்னும் பொருளில் அமைந்துள்ள எனது நூலில் நான் பயன்படுத்தவில்லை. மாறாக ஒப்பிலக்கியம் என்ற எனது நூல் கருத்துக்களையே ‘ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்’ என்ற நூலில் பேராசிரியர் ச.சீனிவாசன் பயன்படுத்தியுள்ளார். எனது நூலான ‘ஒப்பிலக்கியம்’ (2007) பக்.90-96, மற்றும் 168-179 ஆகியனவற்றில் காணலாகும் செய்திகளை சீனிவாசனது நூலில் எடுத்தாண்டு பயன்கொண்டுள்ளார்.

'இந்தியப் பல்கலைக்கழகங்களில் ஒப்பிலக்கியம்' தோன்றி வளர்ந்த வரலாற்றை, நானும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சேகரித்து வைத்துள்ளேன். தமிழ் இலக்கியக் கல்வியை, உலக இலக்கியப் பார்வையில் வளர்த்தெடுத்து ‘உலக இலக்கியம்' என்னும் கருத்தாக்கத்தை ஏற்படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை என்பதே ஒப்பிலக்கியக் கல்வியின் நோக்கும் போக்குமாகும். அதனை முன்னெடுத்துச் செல்வது பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் கல்விப்பணிகளுள் ஒன்று என்பதை இலக்கிய உலகம் நன்கு அறியும். நான் அப்பணியின் தொடக்கமாக ஒப்பிலக்கிய வரலாற்றைத் தொகுக்கும் தொகுப்புப் பணியையே (Collected Works) ‘ஒப்பிலக்கியம்’ என்ற எனது நூலில் செய்துள்ளேன். இலக்கிய வரலாற்று நூலைப் போன்றே ஒப்பிலக்கிய ஆய்வு வளர்ச்சி குறித்த நூல்களும், பயிலரங்கங்களும், கருத்தரங்கங்களும், அங்கு மேற்கொள்ளப்பெறும் ஒப்பிலக்கிய ஆய்வுப் பணிகளும் எனது நூலினுள் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மற்றபடி ஒப்பிலக்கியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் திருடிவிட்டார் என்று என்னைத் திருடனாக்கிவிட இயலாது. 'இப் பல்கலைக்கழகம் ஒப்பிலக்கிய வளர்ச்சிக்கு இத்தகைய பங்களிப்பைச் செய்து வருகின்றது. இந்தியாவில் எந்தெந்தப் பல்கலைக்கழகங்களில், எந்தெந்த வகையான ஒப்பிலக்கியப் பணிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன' என்ற வரலாற்றை பல நோக்கு நிலைகளில் பதிவு செய்யும் உரிமை பல எழுத்தாளர்களுக்கும் உண்டு. அதில் முன்னோடிகளும் வழித்தோன்றல்களும் இருப்பது இயல்பே. அதில் நானும் ஒருவன்.

1. க. கைலாசபதி, 'ஒப்பியல் இலக்கியம்' சென்னை புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, முதற்பதிப்பு, 1969 இந்நூலில் இடம்பெற்றுள்ள 'ஒப்பியலின் தத்துவங்கள்', 'தமிழில் ஒப்பியல் ஆய்வு' என்னும் இரண்டு கட்டுரைப் பகுதிகளின் சாரங்கள் மற்றும் கருத்துக்கள்.

2. தமிழண்ணல் (இராம.பெரியகருப்பன்), 'ஒப்பிலக்கிய அறிமுகம்', மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, முதற்பதிப்பு, 1973 இந்நூலில் 'ஒப்பிலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும்' என்னும் இயலில் பெயரும் பெருமையும், தமிழில் ஒப்பிலக்கிய வளர்ச்சிநிலை என்னும் பகுதிகளில் இடம்பெற்றுள்ள செய்திகளின் சாரம் (பக். 48 - 80 வரையில்)

3. Amiya Dev, ‘The idea of Comparative Literature in India’ (Papyrus, 1984) என்னும் நூலில் 34ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள 'மேற்கு மயமாக்கல்', 'இந்திய மயமாக்கல்' குறித்த செய்திகள் Westermization & Indianisation idea)

4. இரா.காஞ்சனா, 'ஒப்பிலக்கிய மரபும் திறனும்', பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2001. இந்நூலில் இடம்பெற்றுள்ள 'இந்தியாவும் ஒப்பிலக்கியமும்' 'தமிழும் ஒப்பிலக்கியமும்', என்னும் இரண்டு இயல்களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் மாதிரிகள் (Sampling) கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளின் சாரங்கள். (பக். 35-268 வரையில்)

5. பா.ஆனந்தகுமார், 'இந்திய ஒப்பிலக்கியம்', கியூரி பப்ளிகேஷன்ஸ், மதுரை, 1997. இந்நூலில் இடம்பெற்றுள்ள இந்திய ஒப்பிலக்கிய வரலாறு குறித்த சில செய்திகள்.

6. வை.சச்சிதானந்தன், 'ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம்', ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ், சென்னை, 1985. இந்நூலில்தான் 'ஒப்பிலக்கிய வரலாறு' என்னும் ஒன்பதாம் இயலில் (பக். 292-307) பிரான்சு, ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகியனவற்றில் ஒப்பிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாறு விரிவாகவும் விளக்கமாகவும் தரப்பெற்றுள்ளன.

வை.சச்சிதானந்தன் அவர்கள் 'ஒப்பிலக்கியம் ஓர் அறிமுகம்' (1985) என்னும் இந்நூலில் தந்துள்ள அடிக்குறிப்புக்களும், தேர்ந்தெடுத்த ஒப்பிலக்கிய வல்லுநர்கள் பட்டியலும் (அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, மற்ற ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா, இந்தியாவும் இலங்கையும் முதலான நாடுகளின் ஒப்பிலக்கிய வல்லுநர்கள் பற்றிய குறிப்புகள்), பயன்படுத்திய துணைநூற்பட்டியல்களும், அவை முன்வைக்கும் சிந்தனைகளும் 'ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்' என்னும் எனது நூலுக்கு ஆக்கப்பூர்வமான வழிகாட்டியாக அமைந்தன.

7. ப.மருதநாயகம், கிழக்கும் மேற்கும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1991.

8. மு.கு.ஜகந்நாதராஜா, 'இந்திய மொழிகளில் ஒப்பிலக்கியம்', நர்தா பதிப்பகம், சென்னை, 1994

தமிழில் ஒப்பிலக்கிய ஆய்வாளர்களுக்கு மிகுதியும் அறிமுகம் இல்லாத இந்நூல்களில் இந்திய மொழிகளின் ஒப்பிலக்கிய வரலாறும், இந்தியப் பல்கலைக்கழகங்களின் ஒப்பிலக்கியப் பணிகளும் குறித்த செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன. இதனை கற்றறிந்து நூலாக்கம் செய்கின்ற அளவிற்கு உள்வாங்கி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கின்ற நிலைக்கு உயருகின்ற பொழுது மேற்சுட்டிய நூல்களினுடைய தகுதிபாடும், செய்திகளின் தொகுப்பும், பகுப்பும் என்ற நிலையில் எனது நூலானது உருவாக்கப்பட்டது என்பதனை பேராசிரியர் ச.சீனிவாசன் அவர்களின் சிறப்புக் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

இந்நூல்களின் பயன்பாட்டு வரிசையில் தங்களது 'ஒப்பிலக்கியம் இனவரைவியல் சமூகம்' என்னும் நூலினையும் பயன்படுத்தியுள்ளேன். ஆங்கில நூல்களின் பட்டியலைத் தரத் தேவையில்லை எனக் கருதுகின்றேன்.

ஒப்பிலக்கியத்தில் தடம் பதித்த ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் முன்னோடிகளையும், அவர்களது ஒப்பிலக்கியப் பணிகளையும் எனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் முடிந்த வரையில் தொகுத்துத் தந்துள்ளேன். வரலாற்றுச் செய்திகளைத் தொகுக்கும்போது கால வரிசைப்படியே தொகுக்க முடியும். எனது எந்தப் படைப்பிலும் அறிவுத்திருடல்கள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றேன். இது குறித்துத் தாங்கள் ஐயப்பட வேண்டிய அவசியமில்லை.

நான் எனது இருப்பை நிலைநாட்டிக் கொள்ளவோ, புகழையையும் பெருமையையும் பணத்தையும் விரும்பியோ ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்’ என்ற நூலை எழுதவில்லை. தாங்கள் நூலில் இடம்பெற்றுள்ளதாகக் (பக்.21-52) கூறியுள்ள 32 பக்கச் செய்திகள், தங்களுக்கு முன்னரே நான் எழுதிய ‘ஒப்பிலக்கியம்’ (2007) என்ற நூலில் பக்கங்கள் 90-96 மற்றும் 168-179 களில் இடம்பெற்றவையே.

09.12.2016 அன்று பேராசிரியர் ச.சீனிவாசன் வழக்கறிஞர் வாயிலாக எனக்கு ‘லீகல் நோட்டீஸ்’ (Legal Notice) அனுப்பியிருந்தார். கீற்று இணையதளம் மற்றும் காலச்சுவடு இதழ் மூலமாக பல்வேறு வதந்திகளை, உண்மைத்தன்மையற்ற தவறான பிரச்சாரங்களை அவதூறுகளை பரப்பி வந்த நிலையிலும் பொறுமை காத்த நான் என்னிடம் எந்தவிதமான எழுத்துப்பூர்வமான கேள்விகளும் பதிப்பகத்தின் மூலமாகவோ, பேராசிரியர் ச.சீனிவாசன் வாயிலாகவோ கேட்கவோ கொடுக்கவோ இல்லை. மேலும் தற்பொழுதுதான் வழக்கறிஞர் வாயிலாக நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் அதற்கான வழக்கறிஞர் மூலம் பதிப்புரிமை மற்றும் காப்புரிமை சட்டத்தின்படி ‘பதில் மறுப்பு நோட்டீஸ்’ அனுப்பியும் உள்ளேன். இந்த நிலையில் நூல் தொடர்பாக சட்டப்படி பேராசிரியர் ச.சீனிவாசன் மீது வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

- உ.கருப்பத்தேவன், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

Pin It