கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

modi 375

கருப்புப் பணத்தை ஒழிக்கவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் அலாவுதினீன் அற்புத விளக்கு ஒன்றை ஓவர் நைட்டில் களம் இறக்கியிருக்கிறது ஆளும் வர்க்கம். அந்த அற்புத விளக்கு புழக்கத்தில் இருக்கும் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை முடக்கிவிட்டு, அந்த இடத்தில் புதிய ஐந்நூறு மற்றும் இரண்டாயிரம் நோட்டுக்களைக் கொண்டுவர இருக்கிறது.

வழமை போல சிலர் (இந்த முறை பலர்) கருப்புப் பணம் ஒழிந்து நாடு சுபிட்சமாகிவிடும் என்று அவசர அவசரமாக உணர்ச்சி வசப்பட்டுக் கிடக்கிறார்கள். மேம்போக்கான உணர்ச்சி வசப்படலும், பிற்பாடு அடப்பாவிகளா இப்படி ஏமாத்திப்புட்டிங்களேடா என்று புலம்பலும் நமக்கு என்ன புதிய விசயமா? சரி விசயத்திற்கு வருவோம். இந்தக் கட்டுரையை இரண்டு பிரிவாக பிரித்துக் கொள்ளலாம். முதலில் HDN (High Denomination Notes)-ன் பாதிப்புக்கள், அடுத்து FDI.

HDN என்பது அதிக மதிப்பு கொண்ட பணத்தை அச்சடிப்பதைக் குறிக்கும். உதாரணமாக இனி புழக்கத்தில் வர இருக்கும் இரண்டாயிரம் நோட்டு. பழைய ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மாத்திரமே கருப்புப் பணப் பதுக்கலுக்குக் காரணமாக இருப்பதைப் போலவும், அதை ஒழிக்கவே அவைகள் முடக்கப்படுகின்றன என்பதுவுமே இப்போது சொல்லப்பட்டிருக்கும் காரணம். இது உண்மையா என்றால் மிக உண்மை. காரணம் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் HDN-ல் வரக் கூடியது. HDN-ல் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு கருப்புப் பண பதுக்கலுக்கு பெரிதும் உதவும் என்றால், இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கருப்புப் பண பதுக்கலுக்கு மேலும் உதவும்தானே. அது எப்படி என்று இனி பார்ப்போம்.

பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் HDN அச்சடிப்பதை நிறுத்திவிட்டார்கள். சில நாடுகளில் HDN-க்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. ஏன் HDN-களுக்கு எதிர்ப்பு? இதற்கு சொல்லப்படும் காரணம் HDN பொருளாதாரக் குற்றங்களுக்கு பெரிதும் துணை செய்கிறது என்பதுதான். பொருளாதாரக் குற்றங்கள் என்றால் வரி ஏய்ப்பு, கருப்புப் பண பதுக்கல், போதைப் பொருள் வியாபாரம், ஆதாயக் கொலைகள், பணம் விளையாடும் அனைத்து விதமான சட்ட விரோத தொழில்கள் மற்றும் பரிமாற்றங்கள், தீவிரவாத செயல்பாடுகள்.

பொருளாதாரக் குற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது சந்தேகமே இல்லாமல் பணம்தான். பணம் என்றால் இங்கே பொருள்படுவது physical paper அதாவது நோட்டு. இந்த பணம் எவ்வளவிற்குக் குறைந்த மதிப்பு கொண்டதாக (Small Denomination Notes) இருக்கிறதோ, அவ்வளவிற்கு பொருளாதாரக் குற்றங்களை கட்டுப்படுத்த முடியும். நன்றாக கவனியுங்கள்... பொருளாதாரக் குற்றங்களை முற்றிலும் ஒழித்துவிட முடியாது; கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அந்த வகையில் குறைந்த மதிப்பு கொண்ட பண நோட்டுக்கள் பொருளாதாரக் குற்றங்களை பெரிதும் தடுக்கக் கூடியவைகள். அதேபோல் HDN-கள் பொருளாதாரக் குற்றங்களை அதிகரிக்கக் கூடியவைகள். HDN-களை பெரும் அளவில் புழக்கத்தில் விட்டால் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரிப்பதுடன் அவைகளை டிராக் செய்வதும் கடினம்.

அது எப்படி HDN-கள் பொருளாதாரக் குற்றங்களை அதிகரிக்கும் என்றால் HDN-கள் நோட்டுக்களின் பிசிக்கல் அளவைக் குறைத்துவிடும் (பிசிக்கல் அளவு என்றால் உதாரணமாக ஒரு இலட்சம் ரூபாயை நூறு ரூபாய் நோட்டுக்களாக மட்டுமே வைத்திருந்தால் அதை ஓர் இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு எடுத்துச் செல்ல கண்டிப்பாக பல பைகள் தேவை. ஆனால் இரண்டாயிரம் நோட்டுக்களாக இருந்தால் சட்டைப் பாக்கெட்டில் போட்டு எடுத்துப் போய்விடலாம்). இதன் காரணமாக HDN நோட்டுக்களை (உதாரணமாக இரண்டாயிரம் நோட்டு) பதுக்குவது எளிது. பொருளாதாரக் குற்றங்கள் அனைத்தும் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு பணம் நேரடியாக டெலிவரி செய்யும் முறைகளிலேயே நடைபெறுகிறது.

உதாரணமாக கருப்புப் பண முதலைகள் இருவர், தங்களிடம் இருக்கும் பணத்தைப் பரிமாறிக்கொள்ள அந்தப் பணத்தை கையில் (hot cast) எடுத்துச் சென்றுதான் (சூட்கேஸ் அல்லது பைகள்) கைமாற்றிக் கொள்வார்கள். இதன் காரணமாக இந்தப் பணத்தைக் குறித்த எத்தகைய ரிகார்டும் இருக்காது. அது தேவையும் இல்லை. பணத்திற்கான ரிகார்ட் இல்லை என்றால் அரசாங்கத்தால் அந்தப் பணத்தை டிராக் செய்ய முடியாது. இப்படி hot cash-ஆக பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டுமானால் எவ்வளவிற்கு நோட்டு கட்டுக்கள் குறைவாக இருக்கிறதோ, அவ்வளவிற்கு கருப்புப் பண பதுக்கல்காரர்களுக்கு வசதி. அதாவது அதிக மதிப்பு கொண்ட நோட்டுக்கள் எவ்வளவிற்கு இருக்கிறதோ அவ்வளவிற்கு அவர்களுக்கு வசதி. காரணம் அதிக மதிப்பு கொண்ட நோட்டுக்கள் பெரிய பெரிய தொகைகளையும் குறைந்த அளவு கொண்ட நோட்டுக்களில் அடக்கி விடுவதால், அவைகளை hot cash-களாக handle செய்வது மிக எளிது. ஆக HDN-கள் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் வரப் பிராசதம் போன்றது. இப்போது சொல்லுங்கள் இப்போது புழக்கத்தில் வர இருக்கும் இரண்டாயிரம் நோட்டு கருப்புப் பணத்தை ஒழிக்குமா அல்லது அதை மேலும் மேலும் அதிகப்படுத்துமா என்று.

மேற்கில் இந்த HDN-கள் பெரும் தலைவலியாக இருக்கின்றன, அரசாங்கங்களுக்கு. காரணம் இவைகள் பொருளாதர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு வசதியாக இருப்பதால்தான். அமெரிக்காவில் இது மிக அதிகம். முக்கியமாக நூறு ரூபாய் டாலர் நோட்டை புழக்கத்திற்குக் கொண்டு வந்த பிறகு அந்த நாட்டில் நடைபெற்று வந்த பொருளாதாரக் குற்றங்கள் அனைத்திற்கும் மிக வசதியாகப் போய்விட்டது. HDN-ஆன நூறு ரூபாய் டாலர் அமெரிக்காவில் மாத்திரமல்ல, உலகம் முழுவதிலும் பொருளாதாரக் குற்றங்களை அதிகப்படுத்தி விட்டுவிட்டது. இதன் காரணமாக இப்போது அமெரிக்காவில் நூறு ரூபாய் டாலர் நோட்டுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஐம்பது ரூபாய் டாலர் நோட்டிற்கு மேல் அச்சடிக்க வேண்டாம் என்று அங்கே வலியுறுத்தப்படுகிறது. ஐரோப்பாவிலும் HDN-களால் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரித்திருப்பது கண் கூடாகத் தெரிந்திருக்கிறது. உதாரணமாக ஐந்நூறு ஈரோ நோட்டு வந்த பிறகு பொருளாதாரக் குற்றங்களை செய்யும் அனைத்து தரப்பிற்கும் பெரும் வசதியாக போய்விட்டது. இந்த வகையில் இப்போது நம்முடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்திருக்கிறது.

இனி பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடும் அனைத்துத் தரப்பிற்கும் கொண்டாட்டம்தான். என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க என்றால் உள்ளதைத் தானே சொல்ல வேண்டியிருக்கிறது. Hot cash-ஆக கருப்புப் பணங்களை வைத்திருப்பவர்கள் அல்லது சந்தையில் புழக்கத்தில் விடுபவர்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வரப் பிரசாதம். காரணம் பெரும் தொகையை குறைந்த நோட்டுக்களில் அக்குளுக்குள் மறைத்துக்கொள்ளும் வசதியை HDN-ஆன இரண்டாயிரம் நோட்டு தர இருக்கிறது என்பதால்தான். இனி வரி ஏய்ப்பு செய்து கொண்டிருக்கும் பகாசுர நிறுவனங்கள் அதிக வசதியாக வரி ஏய்ப்பு செய்யும். அது எப்படியாம் என்கிறீர்களா? அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாத அனைத்துப் பணத்தையும் கையில் கேஷாகவே அவர்களால் handle செய்ய முடியும். இப்படி வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தை store செய்யவும் அதிக இட வசதியை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

நூறு ரூபாய் நோட்டு மாத்திரமே புழக்கத்தில் இருக்கிறது என்றால் வரி ஏய்ப்பு செய்த பணத்தை store செய்வது மிக மிக கடினம். ஆனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இந்தப் பிரச்சனையை பகாசுர வரி ஏய்ப்பு நிறுவனங்களுக்கு இல்லாமல் ஆக்கப் போகிறது. டப்பா காரின் சீட்டின் அடியில் கூட கோடிக் கணக்கிலான hot cash-யை வைத்து ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வெகு எளிதாக இடம் மாற்றிவிட முடியும். மேலும் எந்த ஒரு கருப்புப் பண வரி ஏய்ப்பு ஆசாமியும் பெரும் தொகையை - அதாவது கோடிக் கணக்கிலான பணத்தை - நோட்டுக்கட்டுகளாக வீடுகளிலோ அல்லது வீட்டுத் தண்ணீர் தொட்டிக்களிலோ பதுக்கி வைத்திருப்பதில்லை. பெரும்பாலும் அவைகள் அசையா சொத்து முதலீடுகளாகத்தான் இருக்கும். அப்படித்தான் இருக்கவும் முடியும். (நம் தமிழ் சினிமாக்கள் வேண்டுமானால் நம்மை ஏய்க்க கருப்புப் பண முதலைகள் கருப்புப் பணத்தை வீட்டிற்குள் பதுக்கி வைத்திருப்பதைப் போல காட்டலாம்).

ஒரு சில கோடிகளை மாத்திரமே கருப்புப் பண முதலைகள் hot cash-ஆக வீட்டில் வைத்திருப்பது வழக்கம். இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டு அதையும் இனி அவர்களுக்கு வசதியாக்கி கொடுக்கப் போகிறது. இனி இப்படியான கருப்புப் பண முதலைகள் கையில் இருக்கும் ஒரு சில கோடிகளையும் தலையணைக்கு அடியிலும் (தமிழ் சினிமாவில் காட்டுவதைப் போலவே கொண்டாலும்) தண்ணீர் தொட்டியிலும் பதுக்குவதை விட்டுவிட்டு அவைகளை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களாக தங்களின் பீரோவிற்குள்ளேயே அடைத்து வைத்துக்கொள்ள முடியும்.

ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் முடக்கம் கருப்புப் பணத்தை கள்ள நோட்டை ஒழித்துவிடும் என்று மாத்திரமே சொல்லப்படுகிறதே தவிர இனி வரும் காலங்களிலும் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? நாம் எப்போது இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்கப் போகிறோம்? கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று மொட்டையாக சொல்லப்பட்டு பரப்பப்படுகிறது. மிக எளிய கேள்வி - ஏற்கனவே புழக்கத்தில் விட்ட ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய்கள் கருப்புப் பணத்தை பதுக்க வசதியாக இருந்தது என்றால் இப்போது புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் ஐந்நூறு ரூபாயும் இரண்டாயிரம் ரூபாய் மாத்திரம் எப்படி கருப்புப் பணப் பதுக்கலை இல்லாமல் ஆக்கும். சொல்லப் போனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இன்னும் அதிகமாகத்தானே கருப்புப் பணத்தை பதுக்க வசதி செய்யப் போகிறது.

ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கருப்புப் பண பதுக்கலுக்கு வசதியாக இருக்கிறது என்றால், கருப்புப் பணத்தை ஒழிக்க முடிவு செய்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை முடக்கிவிட்டு வெறும் நூறு ரூபாய் நோட்டுக்களை மாத்திரம்தானே புழக்கத்தில் விட்டிருக்க வேண்டும்? அவர்களின் கூற்றுப்படியே அதுதானே கருப்புப் பண நடமாட்டத்தை குறைக்க வழியுமாகும். ஆனால் நடந்திருப்பது என்ன? எது கருப்புப் பண பதுக்கலுக்கு வசதியாக இருப்பதாக சொல்லப்பட்டதோ அதை இரண்டு மடங்காக்கி இப்போது புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். அதாவது ஆயிரம் ரூபாய் நோட்டை இரண்டாயிரம் ரூபாய் நோட்டாக மாற்றி.

இப்போது இரண்டாம் பகுதியான FDI-க்கு வருவோம். குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் (உதாரணமாக ஐந்து, பத்து, இருபது, ஐம்பது மற்றும் நூறு ரூபாய் நோட்டு) சில்லரை வர்த்தகத்திற்கு பெரிதும் உதவக் கூடியவைகள். மேலும் சேமிப்புக்கும் மிக வசதி செய்யக் கூடியது. சில்லரை வர்த்தகமும் சேமிப்பும் நம் நாட்டின் முதுகெலும்பு. நம்மூரில் நூறு வீடுகள் கொண்ட குக்கிராமமாக இருந்தாலும் அங்கே ஒரு சில்லரைக் கடை இருப்பது வழக்கம். அந்தக் கடையில் அந்த குக்கிராமத்க்ச் சேர்ந்தவர்கள் வணிகம் செய்வதும் வழக்கம். அப்படி வணிகப் பரிவர்த்தனை செய்ய குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களே பெரும் வசதியானவைகள். இப்படியான குக்கிராமங்கள் இன்றைக்கும் நம் நாட்டில் ஏராளமாக தாராளமாக இருக்கின்றன.

குக்கிராமங்கள் என்றில்லை சென்னை போன்ற நகரப் பகுதிகளில் கூட சில்லரை வணிக நிறுவனங்கள் ஏராளம். இவைகளிலும் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களே அன்றாட பணப் பரிவர்த்தனையில் இருப்பவைகள். இதற்கும் FDI-க்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? தொடர்பு இல்லாமலா... அது எப்படி என்று பார்ப்போம். சேமிப்புப் பழக்கமும், சந்து பொந்து மளிகைக் கடைகளும் கொண்ட இந்திய நாட்டில் சில்லரை வணிக பகாசுர பன்னாட்டு கம்பெனிகளால் (Retailers) குப்பை கொட்ட முடியாது (உதாரணமாக வால்மார்ட்). காரணம் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதால் மக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய தேவை பொருட்களை cash வடிவிலான பணத்திலேயே தங்கள் பகுதிகளிலேயே இருக்கும் சில்லரை மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில் பெற்றுக்கொள்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளை cash வடிவிலான பணத்திலேயே மேற்கொள்வது பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் கம்பெனிகளுக்கு ஆப்பு அடிக்கும் வேலை. பேப்பர்லெஸ் (paper less or plastic money) பணப் பரிவர்த்தனையே பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் கம்பெனிகளுக்குத் தேவையானது.

பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் கம்பெனிகளுக்குத் தேவையான இந்த பிளாஸ்டிக் மணியை (டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட்களைத்தான் பிளாஸ்டிக் மணி என்பார்கள்) புழக்கத்திற்கு கொண்டுவர வேண்டுமானால் ஒரு நாட்டின் மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு இருந்தே ஆகவேண்டும். அந்த குடிமகன்/மகள் அன்றாடம் காய்ச்சியாக இருந்தாலும் சரி தினக் கூலியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு வங்கி கணக்கு இருந்தே ஆகவேண்டும். இருந்தால்தான் அவர்களால் பால்பாக்கெட் கூட வாங்க முடியும். பிளாஸ்டிக் மணியை பொருத்தவரை. என்ன என்ன இது எங்கேயோ இடிக்குதே என்கிறீர்களா. இடிக்கும்தான், இடிக்க வேண்டும்தானே. சரி ஒரு நாட்டின் பிச்சைக்காரர்களைக் கூட வங்கிக் கணக்கு தொடங்க வைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவர்களை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டுபோய் வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்றெல்லாம் நாம் காமெடி செய்ய முடியாது. இதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தை முடக்கிவிட்டு (அதாவது பத்து, இருபது, ஐம்பது மற்றம் நூறு ரூபாய் நோட்டுக்கள்), ஐந்நூறு, ஆயிரம் மற்றும் இரண்டாயிரம் பண நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது. இப்போது உங்களின் கைகளில் இருக்கும் ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்ற வங்கிக் கணக்கு அவசியம் என்று போகிற போக்கில் அசால்டாக ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இதோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி செய்வதின் மூலம் மக்களின் கைகளில், சில்லரை hot cash புழக்கம் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிடும். அனைவரின் கைகளிலும் ஐந்நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளே இருக்கும். சரி இருந்துட்டுப் போகட்டுமே என்கிறீர்களா? அருமை இருந்துவிட்டுப் போகலாம்தான். ஆனால் முப்பது ரூபாய் மதிப்பு கொண்ட பால் பாக்கெட்டை இப்போது போல சர்வ சாதாரணமாக தெரு முக்கில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு போய் நம்மால் வாங்கிவிட முடியாது. ஏனென்றால் முக்குக்கடை அண்ணாச்சியிடமும் நம்மை போல ஐந்நூறு மற்றும் இரண்டாயிரம் நோட்டுக்கள்தான் இருக்கும். பிறகு எங்கிருந்து அவர் உங்களிடமிருக்கும் ஐந்நூறோ அல்லது இரண்டாயிரம் ரூபாய் நோட்டையோ வாங்கிக்கொண்டு பால் பாக்கெட்டைக் கொடுத்து, மீதி சில்லரையும் கொடுக்க? அடக் கொடுமையே என்கிறீர்களா. நமக்கு வேண்டுமானால் இது கொடுமை; ஆனால் பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இது வரப்பிரசாதம். காரணம் அவர்கள் பிளாஸ்டிக் மணியை வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதால்.

இப்போது இப்படி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஐந்நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கைகளில் வைத்திருப்பதிற்குப் பதிலாக உங்களின் வங்கிக் கணக்கில் வைத்திருக்கிறீர்கள். உங்களின் பணத்தை செலவு செய்ய வங்கி உங்களுக்கு டெபிட் கார்ட் கொடுத்திருக்கும். தெரு முக்கு அண்ணாச்சிக் கடைக்கு அருகிலேயே பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் நிறுவனத்தின் பளபளா சூப்பர் மார்க்கெட்டும் வந்துவிட்டிருக்கும். உங்கள் கைகளில் இப்போது இருப்பது பிளாஸ்டிக் மணியான டெபிட் கார்ட். இந்த பிளாஸிடிக் மணியை தெருமுக்கு கடையால் வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் பளபளா சூப்பர் மார்கெட் வாங்கி தேய்த்துக்கொண்டு, உங்களுக்கு பால் பாக்கெட்டைத் தரும். அப்ப தெரு முக்கு அண்ணாச்சி கடை அண்ணாச்சி? அது அந்த அண்ணாச்சியின் குல தெய்வத்திற்கே வெளிச்சம். ஏன் அந்த டெபிட் கார்ட் சுவைப்பிங் மெசினை அந்த தெரு முக்கு அண்ணாச்சியும் பயன்படுத்த மாட்டாரா என்று கேட்கலாம். அற்புதமான கேள்விதான்.

ஆனால், பாருங்கள்... பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் கம்பெனியின் பளபளா சூப்பர் ஸ்டோர்களின் கவர்ச்சிக்கு முன்னால் தெரு முக்கு அண்ணாச்சி கடையால் போட்டி போட முடியாது. போதாக்குறைக்கு தெரு முக்கு அண்ணாச்சி கடைகளில் எடை அடிப்பும், தரம் குறைந்த பொருட்களுமே கிடைப்பதாக பெய்டு பிரச்சாரங்கள் (paid propagandas) கட்டவிழ்த்து விடப்படும். படித்த கூமுட்டைகளான நாமும் கண்ணைக் கவரும் பளபளா சூப்பர் ஸ்டோர்களின் கவர்ச்சியிலும், பெய்டு பொய்களிலும் மனதை பறிகொடுப்போம். தெரு முக்குக் கடைகள் வாழ்வைப் பறி கொடுக்கவேண்டியதுதான். ஆக இப்படி பல வசதிகளைக் கொண்ட (யாருக்கு வசதி என்று எதிர்க்கேள்வி கேட்பீர்களானால் உங்களின் மீது தேசத் துரோக வழக்கு பாய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருக்கின்றன என்பதை மனத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறோம்). பிளாஸ்டிக் மணியை நோக்கி மக்களைத் தள்ள வேண்டுமென்றால் முதலில் HDN நோட்டுகளை புழக்கத்தில் கொண்டுவரவேண்டும். பிறகு படிப்படியாக குறைந்த மதிப்பு கொண்ட நோட்டுக்களை முடக்க வேண்டும். அடுத்து FDI மூலம் பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் நிறுவனங்களை உள்ளே கொண்டுவர வேண்டும். இதில் முதல் படி இப்போது நடந்துவிட்டது. அடுத்தடுத்த படிகளுக்கு இனி நாம் படிப்படியாக பழக்கப்படுத்தப் படுவோம். அதன் காரணமாக பன்னாட்டு பகாசுர ரீடெய்ல் நிறுவனங்களின் கல்லா இலாபக்கணக்கில் கரை புரண்டு ஓடும்.

இறுதியாக சில படித்த அறிவாளிகள் இப்படி கேட்கிறார்கள், நோட்டு முடக்கத்தை முன்னாலேயே சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தி இருக்கக் கூடாதா என்று. கால அவகாசம் கொடுத்தால் சனநாயக வாதிகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் புல்லுருவிகள் மக்களை விழிப்படையச் செய்துவிட மாட்டார்களா? மக்கள் விழித்துக்கொண்டால் எதிர்க்க மாட்டார்களா? ஆமா அதானே என்கிறீர்களா? அதேதான். அப்படியானால் மக்களை எதிர்க்கேள்வியே இல்லாமல், இதை நோக்கித் தள்ள வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? சிம்பிள். உங்கள் கைகளில் இருக்கும் பணம் ஓவர் நைட்டில் செல்லாது என்று ஒரு டிசாஸ்டர் பீதியைக் கிளப்பவேண்டும். முடிந்தது. அய்யய்யோ என்னாது என் பணம் செல்லாதா என்று அலறிப் புடைப்பீர்களே தவிர, சனநாயகவாதிகளின் நொன்னை எதிர்க்கேள்விகளைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். கூடவே கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று அர்த்த ஜாம குடுகுடுப்பை அடித்தால் போதும். சகலமும் ஷேமமாக முடிந்துவிடாதா?

- நவீனா அலெக்சாண்டர்