ramleela at jnu

இந்தியாவில் எவ்வளவோ பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் பல லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். ஆனால் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அதில் பயிலும் மாணவர்களும் வரலாற்றில் இடம் பெற்றுவிடுவது கிடையாது. ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே அப்படியான சிறப்புக்கு உரியவையாய் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், காவி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாகட்டும் முதன் நிலையில் நிற்பது அந்த மாணவர்களாய்த் தான் இருக்கின்றார்கள். மீதி உள்ள பல்கலைக்கழகங்களும் அதில் படிக்கும் மாணவர்களும் அப்படி இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருக்கின்றார்கள். ஆனால் ஒப்பீட்டு விகிதத்தில் பார்க்கும் போது மிகக் குறைவாய் தான் இருக்கின்றார்கள்.

சமீபத்தில் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ராம்லீலா கொண்டாடப்பட்டபோது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அமித்ஷா, ராம்தேவ், பிராய்ச்சி, ஆதித்யநாத், ஆசாரம்பாபு, நாதுராம் கோட்சே, சாக்ஷி, ஜான்தேவ் அகுஜா, பிரவின்தொகாடியா, அசோக்சர்மா என மொத்தம் பத்துபோரின் உருவத்தை வைத்துக் கொளுத்தி தங்களது இந்துத்துவத்திற்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றார்கள். இந்தியாவில் வேறு எந்தப் பல்கலைக்கழக மாணவர்களும் செய்யாதது இது. இதுதான் நம்மை பெருமைப்பட வைக்கின்றது. கொஞ்சம் பொறாமையும் பட வைக்கின்றது. ஏன் என்று கேட்கின்றீர்களா?. நாமெல்லாம் இதை பெரியார் பிறந்த மண், பெரியார் பிறந்த மண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கின்றோம் ஆனால் இந்த மண்ணில் இருந்து அதுபோன்ற ஒரு மாணவர் போராட்டத்தை நம்மால் நடத்த முடியவில்லையே என்று.

இந்தத் தடவை தந்தை பெரியார் திராவிட கழகத் தோழர்கள் சென்னையில் ராமனை எரித்து இராவணலீலாவை கொண்டாடினார்கள். இது பெருமையான செய்திதான் என்றாலும் பார்ப்பனியத்திற்கு எதிரான எதிர்ப்பு என்ற அடிப்படையில் பார்த்தால் இது சிறியதுதான். ஒரு இயக்கம் சார்ந்த நிகழ்வாகவே இது முடிந்துவிட்டது. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்ளும் பல பேர் டெல்லியில் அவன் ராம்லீலாவை நடத்தும் போது இங்கே ராவணலீலாவை நடத்தி ராமனைக் கொளுத்தி அவர்களுக்கு பதிலடி கொடுக்கத் திராணியற்றுக் கிடக்கின்றார்கள். அதனால் தான் பெரியார் திராவிட கழகத் தோழர்கள் ராவணனை கொளுத்தியபோது பார்ப்பனியத்தை நக்கிப் பிழைக்கும் இந்து மக்கள் கட்சி பொறுக்கிகள் மயிலாப்பூரில் பெரியாரின் படத்தை கொளுத்தி இருக்கின்றார்கள். ஆனால் பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் கழிசடைகள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக கூட எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. சரி ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் தான் இப்படி இருக்கின்றார்கள் என்றால் தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்களும் இதற்கு எதிர்வினை ஆற்றியதாகத் தெரியவில்லை. ராமனை கொளுத்துவது என்பது பார்ப்பனியத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகும். பார்ப்பனிய கருத்தியலின் மனித வடிவம் தான் ராமன். ராவணனுக்காக அல்ல என்றாலும் சாம்புகனுக்காக அவனை நாம் கண்டிப்பாகக் கொளுத்த வேண்டும்.

இது போன்ற போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போதுதான் தமிழக மக்களிடமும் குறிப்பாக மாணவர்கள் மத்தியிலும் பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனை மரபை நாம் உருவாக்க முடியும். இங்கே எல்லா அரசியல் கட்சிகளுமே மாணவர் அமைப்புகளை வைத்திருக்கின்றன. ஆனால் என்ன பயன்?. ஏற்கெனவே கேடுகெட்ட கல்விமுறையாலும், மொக்கை போராசிரியர்களாலும் அறிவு ரீதியாக காயடிக்கப்பட்ட அந்த மாணவர்களை இந்தக் கழிசடை கட்சிகள் மேலும் சீரழிக்கின்றன. பொறுக்கித் தின்பதுதான் அரசியல் என்று அந்த மாணவர்களுக்கு அவை கற்றுக் கொடுக்கின்றன. இதுபோன்ற மாணவர்கள் மத்தியில் இருந்து நாம் எங்கே பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களை எதிர்ப்பார்ப்பது?

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான மாணவர்கள் பார்ப்பன அடிமைகளாகத்தான் இருக்கின்றார்கள். இடதுசாரிகள் வைத்திருக்கும் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூட கோயிலுக்குப் போவது, கூழைக் கும்பிடு போடுவதுவரை அனைத்தையும் செய்கின்றார்கள். அவர்கள் சித்தாந்த ரீதியாக வளர்த்தெடுக்கப்படுவது கிடையாது. பல மார்க்சிய அமைப்புகளும், பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளும் மாணவர் அமைப்புகளை வைத்திருக்கின்றன. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மிகவும் குறைவுதான். காரணம் பெரும்பாலான மாணவர்கள் ஏதாவது அரசியல் ஆதாயம் கருதியே மாணவர் அமைப்புகளில் சேர்கின்றார்கள். இது போன்ற தீவிரமாக மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசும் அமைப்புகளை அவர்கள் வேண்டுமென்றே தவிர்க்கின்றார்கள். முற்போக்கு கருத்துக்களுக்குச் செவிமடுப்பதை ஒரு பெரிய சுமையாக கருதும் போக்கு தமிழக மாணவர்கள் மத்தியில் வளர்ந்திருக்கின்றது.

அதனால் தான் நம்மால் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்று இங்கே சிறந்த மாணவர் அமைப்புகளை உருவாக்க முடியாமல் இருக்கின்றது. ஒருபக்கம் முற்போக்கு அரசியல் இயக்கங்கள் மாணவர்களை பெரிய அளவில் வென்றெடுத்து அவர்களை சித்தாந்த ரீதியாக பயிற்றுவிப்பதில் திணறிக் கொண்டு இருக்கின்றன. மறுபக்கம் மாணவர்களை தம்மைப் போலவே அரசியலற்ற மொக்கைகளாக போராசிரியர்கள் மாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். பாடங்களை தவிர்த்து வேறு எதைப் பற்றியும் மாணவர்களுக்கு போதிக்க வக்கற்ற கூமுட்டைகளாக அவர்கள் உள்ளனர். இட ஒதுக்கீட்டை நாம் எப்படி பெற்றோம் என்பது பற்றியோ, அதை ஒழித்துக்கட்ட பார்ப்பன மேல்சாதி கூட்டம் செய்யும் சதிகளைப் பற்றியோ, புதிய கல்விக்கொள்கை மூலம் மனுதர்மத்தை திணிப்பதைப் பற்றியோ, பெரும்பாலான அரசு பதவிகளை பார்ப்பன கூட்டமே அபகரித்து வைத்திருப்பது பற்றியோ , தனியார் துறையில் இட ஒதுக்கீடு பெறுவது பற்றியோ அந்தப் பேராசிரியர்களுக்கு எந்தக் கண்ணோட்டமும் கிடையாது. பின்பு எங்கே அவர்கள் மாணவர்களுக்கு சுயமரியாதையைப் பற்றி போதிப்பார்கள்? முதலாளித்துவத்திற்கு ஏற்ற அடிமைகளைத்தான் உற்பத்தி செய்து கொடுப்பார்கள்.

இப்படி சுயநலவாதிகளாக, அற்பவாதிகளாக, அரசியல் தெரியாத அடிமைகளாக கல்லூரிகளில் இருந்து வெளிவரும் இந்த அடிமைகள் வேலை கிடைக்காமல் அடுத்து என்ன செய்துவது எனத் தெரியாமல் தெருத்தெருவாக சுற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். எவன் அரசியலை புரிந்து கொண்டு இருக்கின்றா,னோ , எவன் தன்னலம் பார்க்காமல் ஒட்டுமொத்த சமூக மாற்றமே தனக்குத் தேவையானதைக் கூட பெற்றுத் தரும் என்று புரிந்து வைத்திருக்கின்றானோ அவன் தான் பிரச்சினையைக் கூட எதிர்த்து நிற்கும் தன்னம்பிக்கையைப் பெற்றவனாக இருக்கின்றான். அதனால் அதுபோன்ற மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பேராசிரியர்கள், முற்போக்கு அரசியல் இயக்கங்கள் என அனைவரும் இதில் பங்களிப்பு செலுத்த வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்குவதை தங்களுடைய கடமையாகக் கருத வேண்டும். அப்போதுதான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்று சிந்தனை வளம் நிறைந்த, ஆளும்வர்க்கத்தை எதிர்த்துத் துணிவுடன் கேள்விகேட்கும் மாணவர்களை நாம் உருவாக்க முடியும். இல்லை என்றால் ராம்லீலாவையும், பிள்ளையார் சதுர்த்தியையும் கொண்டாடும் சாதிவெறியும், மதவெறியும் நிறைந்த பிற்போக்கு போக்கிரிகளைத்தான் நாம் உருவாக்க முடியும்.

- செ.கார்கி

Pin It