வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய இளைஞர்களை எத்திராஜ் கல்லுரியில் சந்திக்க சென்ற இளையராசாவிடம், சத்தியம் தொலைக்காட்சி நிருபர் சிம்புவின் ஆபாச பாடல் தொடர்பாக எழுப்பிய கேள்வி, சர்ச்சையாகியிருக்கிறது (https://www.youtube.com/watch?v=ND0gteQ3Myo). வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய இளைஞர்களின் நிகழ்வில் அது சம்பந்தமாக கேள்வி கேட்டு இருக்க வேண்டும். அங்கிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் அவர்கள் செய்த மீட்பு பணிகளைப் பற்றி கேட்டு இருக்க வேண்டும்.
இந்த வெள்ளப் பேரிடரிலும் நம்மிடம் வாக்கு வாங்கியவர்கள் அதிகாரத்தை அனுபவித்தபடியே, வயதை, உடல் நிலையை காரணம் காட்டி குற்ற உணர்ச்சியின்றி ஓய்வு எடுக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் நிலையில், தானாக முன்வந்து வயதைப்பொருட்படுத்தாமல் மக்களுக்கு நேரடியாக உதவும் இளையராசவிடம் அது தொடர்பாகவே கேள்விகள் கேட்டிருக்க வேண்டும், அல்லது செயல்படாத இந்த அரசாங்கம் உருவாக்கிய பேரிடரை பற்றிக்கேள்விக்கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து யாரோ இரண்டு பேர் செய்த வக்கிரப்பாடலுக்கு விளக்கம் ஏன் கேட்க வேண்டும். அதைக்கேட்ட நிருபரின் உள் நோக்கம் என்னவாக இருந்திருக்க வேண்டும்?
அந்த நிருபர் தெரியாமல் ஆர்வக்கோளாரில் கேட்டிருந்தால் இளையராசா கேட்ட அறிவிருக்கா? என்ற கேள்வியே போதுமானது, ஒரு வேளை சிந்திக்கும் அளவு அந்த நிருபருக்கு திறனிருந்து இருந்தால், வெள்ளப்பாதிப்பில் உதவிய இளைஞர்களை பற்றிய செய்தி வெளிவராமல் சிம்பு,அனிருத் பாடல் பற்றிய செய்தி மட்டுமே வெளிவரவேண்டும். வெள்ளப்பேரிடரை மக்கள் மறக்க வேண்டும். என்ற அயோக்கியத்தம்தானே நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அந்த அயோக்கியத்தனதிற்கு எதிராக இளையராசவால் கேட்கப்பட்ட “உனக்கு அறிவிருக்கா?” என்ற கேள்வியே குறைவானது.
அதற்கு முதல் நாள்தான் மாற்றுத்திறனாளிகளை சந்திக்க வந்த இடத்தில் இளையராசவிடம் இது தொடர்பான கேள்விக்கேட்கப்பட்டிருக்கிறது. அவர் அதைப்பற்றிய கேள்வி வேண்டாமே என நழுவிச்சென்றிருக்கிறார். திரும்ப மறு நாளும் அதே கேள்வி அவரிடம் கேட்கப்படுவதின் உள் நோக்கம் என்ன? வெள்ளப்பேரிடரிலிருந்து மக்களை திசைத்திருப்பும் குயூ யுக்திதானே?
ஒருவேளை இளையராசா அந்த ஆபாச பாடலை கண்டித்திருந்தால் அதை வைத்து சிண்டு முடிவதும், அவர் இசையமைத்த பாடல்களில் ஏதாவது வரிகளை(வேறு யாரவது எழுதியது) மேற்கோள்காட்டி அவரைத்திட்டுவது. அல்லது கண்டிக்காமல் போனால் இதுபோன்ற பாடல்களை இளையராசா ஆதரிக்கிறார் என செய்தி வெளியிடுவது, இப்படி செய்திகளை மடைமாற்றி விடுவதன் மூலம் வெள்ளச்செய்திகளை பின்தள்ளுவதுதானே செய்தியாளரின் நோக்கம்.
அந்த நிருபரின் தவறான கேள்வியை அறச்சீற்றத்துடன் இளையராசா எதிர்கொண்டதாலேயே, இன்று கேள்வி கேட்டது தவறு என்ற விவதமாவது வந்தது, அந்த அளவில் இளையராச அந்த கேள்வியை சரியாகவே எதிர் கொண்டார்.
இணையத்திலும், எழுத்திலும் அறிவு ஜீவிகளாக காட்டிக்கொள்ளும் சிலரும் இளையராசாவின் முந்தைய அரசியல், ஆன்மீக செயல்பாடுகளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இளையராசா ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர் அல்ல, விமர்சிக்கலாம், ஆனால் இந்த தருணத்தில் அதைப்பேச வேண்டிய அவசியமென்ன? அது இப்போது யாருக்கு பயன்படும்?
நிருபர்தான் பொறுப்பில்லாமல் கேட்கிறார் என்றால், அவருக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர் சங்கமும் இளையராசாவை வருத்தம் கேட்கச்சொல்கிறார்கள், இல்லையெனில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மிரட்டுகிறார்கள், இவர்கள் எதன் அடிப்படையில் இணைகிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சரை, அமைச்சர்களை எத்தனை முறை இதுபோல் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர், அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை என ஒரு மொக்கைக்காரணத்தை கூறுகின்றனர். இன்று இளையராசாவிடம் வார்த்தையைப்பிடுங்குவதில் காட்டிய வேகத்தை ஏன் அவர்களிடம் காட்டவில்லை? இல்லை அவர்கள் பதில்சொல்லவில்லை எனில் அவர்களை அம்பலப்படுத்திக் கட்டுரை ஏன் எழுதவில்லை, பயமா?
அரிதான காட்சியாக வட இந்திய ஊடகங்கள் தமிழக வெள்ளத்தைப்பற்றி பேசுகின்றன, வட இந்திய ஊடகங்கள் ஏரியை ஏன் தாமதமாக திறந்தீர்கள் எனக்கேள்வியை எழுப்பும் வரை , தமிழக ஊடகங்கள் ஏன் அந்தக்கேள்வியை எழுப்பவில்லை, வெள்ளப்பேரிடரை உருவாக்கிய செயல்படாத அரசு, ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே கவனமாக இருப்பதாக கடுமையாக இணையத்தில் விமர்சிக்கப்பட்ட பின்புதானே பத்திரிக்கைகள் வாயைத்திறக்கின்றன, ஆட்சியாளர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடினார்கள், இப்படி எத்தனைப்பத்திரிக்கையாளர்கள் ஆள்பவர்களை எதிர்கொண்டீர்கள்? இன்று இளையராசாவை சங்கமாக சேர்ந்து எதிர்கொள்வதில் மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?
செயல்படாமல் வெள்ளப்பேரிடரை உருவாக்கிய அரசு, நிவாரணப்பணிகளையும் செய்யாமல் தலைநகர் மூழ்கிக்கிடந்த போது, ஆட்சியாளர்களுக்கு எதிராக வராத கோபம் இன்று வருகிறது. தன் வாழ் நாள் சேமிப்பை எல்லாம் வெள்ளத்திடம் வாரிக்கொடுத்துவிட்டு நிற்கும் மக்களிடம், ஆபாசப்பாடலை பற்றி திரும்ப திரும்ப பேசி ஆட்சியாளர்களைக்காப்பாற்றுகின்றீர்கள். சிம்பு கூட தனது ஆபாசப்பாடல் மக்கள் இந்த துயரத்தில் இருக்கும்போது, வேறொருவர் திருடி வெளியிட்டதற்காக வருந்துவதாக கூறுகிறார், ஆனால் அந்தப்பாடலைப்பற்றி திரும்ப திரும்ப பேச வேண்டும் கேட்க வேண்டும் என நினைக்கும் உங்கள் வக்கிரம்தான் இன்னும் வருத்தம் தெரியவிக்கவில்லை.
இப்படி மக்களின் பேரிடர் துயரை பின்தள்ளி ஒரு ஆபாச சர்ச்சைப்பாடலை முன்னிருத்தி திரும்ப திரும்ப பேசும், இளையராசவுக்கு எதிராக அறிக்கைவிடும் பத்திரிக்கையாளர்களை பார்த்து கேட்க வேண்டியிருக்கிறது, மக்களைத்திசைத்திருப்பி யாருக்காக வேலை செய்கிறீர்கள் பத்திரிக்கையாளர்களே?
- வெ.தனஞ்செயன்