இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன், என்னை... நேற்று இரவா, அதற்கு முன் தினமா, எப்போது என்று நினைவில் இல்லை...

man face 206ஆனால் இதற்கு முன் சில முறை பார்த்து இருக்கிறேன்...

கண்ணாடிக்குள் எட்டிப் பார்த்தேன்... என் பிம்பத்தில், வேறு முகங்களின் சாயல்கள்...

அதுவா, ஏன், எப்படி, என்றைக்குள், யார்... விளக்கங்களுக்கு நடுவே தொலைந்து போய், மீண்டு வந்து மீண்டும் அடுத்த விளக்கத்திற்குள் தொலைந்து போவதற்கு இடைப்பட்ட இரண்டோ மூன்றோ நொடிகளில் பார்த்து இருக்கிறேன் என்னை...

நீண்டு வளைந்த சாலை ஒன்றில், தொலைந்து போய் மீண்டு வந்த சில நிமிடங்களில் பார்த்தேன் என்னை...

பெருத்த தனிமையும் கனத்த மௌனமும் ஒன்று சேர்ந்த ஏதோ ஒரு புள்ளியில் பார்த்ததாய் நினைவு...

என் அறையில் என்னைத் தனியே விட்டு விட்டு நான் மட்டும் சென்று விட்ட பொழுதுகளில், பல முறை பார்த்திருக்கிறேன், தனியே தவித்துக் கொண்டிருந்த என்னை...

இன்னும் சில முறை பார்த்து இருக்கிறேன், வேறு சிலரின் பிம்பங்களில்...

முதன்முதலாய் இன்று சிறகு விரிக்கிறேன்... நிலவில் சற்று இடிக்கிறது... இனி என் சிறகுகளை மடித்துக் கொள்ள வேண்டி இருக்கும்...

கூரிய வெளிச்சத்தில் , சிறிதும் பெரிதுமாய்ப் பறந்து கொண்டிருந்த தூசிகளினூடே பல முறை பறந்து கொண்டு இருந்திருக்கிறேன்...

பறவைகளோடு பேசிப் பேசித் தீர்ந்து விட்டது... இன்றிலிருந்து பூக்களின் மொழியைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்...

நதி நீரில் கல்லெறிய முயன்று, அதில் தெரிந்த என் உருவத்தைக் குலைத்து விட மனமில்லாமல், கல்லைக் கையிலேயே வைத்திருந்தேன்...

ஒரு பூனையைப் பார்த்து பயந்து கொண்டு இருந்தேன்... அது என்னைப் பார்த்து நடுங்கிக் கொண்டு இருந்தது...

என் வீட்டின் உள்ளே வர அனுமதி கேட்ட ஒரு பறவையிடம், அதனோடு சேர்ந்து நானும் பறந்து போய் விட அனுமதி கேட்டேன்...

குறுகிய சாலை வளைவு ஒன்றில் அமர்ந்து கொள்ள ஆசை எனக்கு... அதற்காக என்னைச் சுற்றி வீடு கட்டிக் கொள்ள வேண்டி இருந்தது...

வேகமாய்ப் போய்க் கொண்டிருந்த இந்த உலகத்தை விசித்திரமாய்ப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன் நான்...

நின்று கொண்டே இருந்த என்னை இந்த உலகம் பார்க்கவே இல்லை...

எனக்கு முன் இருந்த இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன... யாரும் வந்து அமரவே இல்லை... நான் எழுந்துகொண்ட போது, என் இருக்கையில் யாரோ ஒருவர் வந்து அமர்ந்து கொண்டார்...

நீண்டு பெருத்திருந்த பாறை ஒன்றில் அமர்ந்து, நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்துக் கண்டுபிடித்தே விட்டேன்...கடலுக்கும் வானத்துக்கும் நடுவில் இடைவெளியே இல்லை...

மழை நிற்கும் வரையில் காத்திருக்கட்டுமா, இல்லை இப்போதே வீட்டிற்குப் போய் விடலாமா என்று மழை நிற்கும் வரையில் யோசித்துக் கொண்டே இருந்தேன்...

நான் மீனாய் இருந்ததால் தூண்டிலில் இருந்து தப்பித்து விட்டேன்... ஒருவேளை புழுவாய் இருந்திருந்தால் மாட்டியிருப்பேன்...

என்னைத் துரத்திக் கொண்டே இருக்கப் பிடித்திருக்கிறது எனக்கு, கைக்கு எட்டாத ஒரு இடைவெளியை விட்டுக் கொண்டே...

யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருக்கிறேன் நான்... அப்படி இருந்தும், சமயங்களில் நான் கண்டுபிடித்து விடுகிறேன் என்னை, யாருக்குமே தெரியாமல்...!!!!!

- கிருத்திகா தாஸ்

Pin It