(கோயம்புத்தூரில் கம்யூனிச கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 'கருத்துப் பரப்பல், அணிதிரட்டலில் சமூக வலைத்தளங்களின் பங்கு' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் விரிவான வடிவம்)
முந்தைய பகுதி: பெருமுதலாளிகளின் அடிமைகளாகிவிட்ட வணிக ஊடகங்களும், அவற்றிற்கான மாற்றும்
சமூக வலைத்தளங்களின் எல்லை
சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களோ, செயற்பாட்டாளர்களோ கிடையாது. 99 சதவீத பொதுமக்களோடு, 1 சதவீதத்திற்கும் குறைவான எழுத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் அதில் இருக்கிறார்கள். பொதுமக்கள் தொலைக்காட்சி, கைபேசி, மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பது போல், பேஸ்புக்கிலும் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள். எனவே பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களை எல்லாம் புரட்சி செய்யக் காத்திருப்பவர்களாக நாம் கருத வேண்டியதில்லை. அவர்கள் தங்களது செல்ஃபி படங்களை பகிர்ந்து கொள்ளவோ, பழைய நண்பர்களுடன் நட்பைப் புதுப்பித்துக் கொள்ளவோ, அரட்டை அடிக்கவோ அங்கு இருக்கிறார்கள்.
காலையில் எழுந்ததும், ‘good morning friends’ என்று ஒரு ஸ்டேட்டஸ்; மதியம் ஒரு ‘good afternoon friends’; இரவு ஒரு ‘sweet dreams’. இந்த மூன்று ஸ்டேட்டஸ்களை தவறாமல் கடமையாகப் போடுபவர்களும் இருக்கிறார்கள். நமது mobile data limit காலியாகும் அளவுக்கு செல்ஃபி படங்களாக போட்டுத் தள்ளுபவர்களும் இருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் கிளுகிளுப்பான செய்திகளைத் தேடித் தேடி ஷேர் செய்பவர்கள்; Fake ID வைத்துக் கொண்டு சண்டை போடுபவர்கள்; சாதி வெறியர்கள்; மத அடிப்படைவாதிகள்; பெண்கள் ‘காலை வணக்கம்’ ஸ்டேட்டஸ் போட்டால் ஓடிப் போய் லைக் செய்யும் ஜொள் பேர்வழிகள் என பல தரப்பினர் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். நம்மூர் டீக்கடை பெஞ்சின் விரிந்த இணைய வடிவம் என்று கூட சமூக வலைத்தளங்களைச் சொல்லலாம்.
நாட்டுநடப்பில் இவர்கள் அனைவருக்கும் சிறிது அக்கறையும், அதுகுறித்தான கருத்தும் இருக்கும். பெரும்பாலும் வெகுஜன புத்தியிலிருந்து மாறுபடாத ஒன்றாகவே அந்தக் கருத்தும் இருக்கும். இளையராஜா, ரஜினி, கலாம், மோடி என கொண்டாடித் தீர்ப்பவர்கள்தான் பெரும்பாலும்.
என்ன எழுதியிருக்கிறார்கள் என்று கூட பெரும்பாலானோர் படிக்க மாட்டார்கள். நண்பர்கள் எல்லோருக்கும் முதலில் ஒரு லைக்; செல்பி படங்களுக்கு ‘சூப்பர்’ என்று ஒரு பின்னூட்டம்; அதன்பின்பு தனது பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ்; அதற்கு யார் யார் லைக் செய்திருக்கிறார்கள் என்று நிமிடத்திற்கு ஒரு முறை பார்ப்பது; பின்னூட்டம் வந்திருந்தால் அதற்கு பதில் சொல்வது; பிரபலங்களின் பதிவுகளைப் படிப்பது; அவற்றில் பிடித்தவற்றை தனது பக்கத்தில் பகிர்ந்து கொள்வது; இவற்றிலேயே தனது நேரம் முழுவதையும் தொலைத்துக் கொள்பவர்கள்தான் பெரும்பாலோனோர்.
மதுபோதை போல் பேஸ்புக், ட்விட்டர் போதையும் பலரைப் பீடித்துள்ளது. ஒரு நிமிட நேரம் கிடைத்தால்கூட, அந்த நேரத்தில் பேஸ்புக்கில் எத்தனை லைக் வந்திருக்கிறது என்பதை கைபேசியில் பார்ப்பவர்களை அதிகம் பார்த்திருக்கிறேன்.
சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் போராளிகளா?
ஒரு கருத்தை ஆயிரம் பேர் லைக் செய்திருப்பார்கள். ஆனால் அதை முழுமையாகப் படித்தவர்கள் 100 பேர்கூட இருக்க மாட்டார்கள். 5 பத்தி அளவுள்ள செய்தியைப் போட்ட அடுத்த நொடியே பத்து பேர் லைக் செய்வார்கள். வெறுமனே தலைப்பைப் பார்த்தே, தனது பக்கத்தில் பகிர்ந்து கொள்பவர்கள் ஏராளம் பேர்.
ஆயிரம் பேர் ஒரு கட்டுரையை பேஸ்புக்கில் share செய்திருந்தால், அதைக் குறைந்தது 5000 பேராவது படித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் 600 பேர்தான் படித்திருப்பார்கள். ஒரு போராட்ட அழைப்பிற்கு 2000 likes, 400 shares இருந்தால், அந்தப் போராட்டத்திற்கு குறைந்தது 500 பேராவது வர வேண்டும் அல்லவா? 10 பேர் கூட வரமாட்டார்கள்.
Like, share இவற்றை மட்டும் கணக்கில் கொண்டு, ‘சமூகப் புரட்சி, அரசியல் புரட்சி தொடங்கி விட்டது’ என்று கருதினால், இந்நேரம் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான புரட்சிகள் நடந்திருக்க வேண்டும்.
அப்படியானால் பேஸ்புக், ட்விட்டரில் இயங்குவது வெட்டி வேலையா என்ற கேள்வி எழலாம். உண்மை அதுவல்ல. ஏழ்மையில் இருக்கும் ஓர் அருந்ததிய மாணவருக்கு கல்வி உதவி தேவை; பொய் வழக்கில் கைதான அரசியல் செயற்பாட்டாளரின் வழக்கை நடத்தவும், துயருறும் அவர் குடும்பத்தைப் பேணவும் நிதி தேவை; இராஜபக்சேவுக்கு எதிராக இணையத்தில் 1 இலட்சம் கையெழுத்து தேவை; விவசாயிகளின் வாழ்வாதரத்தைக் காக்க பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் – இதுமாதிரியான கோரிக்கைகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெறும்.
ஆனால், மலமள்ளும் அருந்ததியர்களின் இழிவு நீக்க இரயில் மறியல் செய்வோம் என்றாலோ, பொய் வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலையத்தை முற்றுகை இடுவோம் என்றாலோ, தடையை மீறி இராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றாலோ Like நிறைய வரலாம்; ஆனால் போராட்டத்திற்கு ஒருவரும் வரமாட்டார்கள்.
அருந்ததிய மாணவருக்கு கல்வி உதவி என்றால் கொடுப்பார்கள். ‘அருந்ததியர்களைத் தாழ்த்தியிருப்பது இந்த இந்து மதம்; அதிலிருந்து வெளியேறுங்கள்’ என்றால் உங்கள் மீது பாய்வார்கள். அதாவது வெகுஜனக் கருத்துக்கு எதிராக ஒரு செய்தியை வெளியிட்டால், இவர்கள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சண்டைக்கு வருவார்கள். தினமலரும், சன் டிவியும் பார்த்து வளர்ந்தவர்கள்; அந்தக் கருத்து மட்டத்திலேயே இருப்பார்கள்.
நிஜ உலகில் என்ன மாதிரியான நடுத்தர வர்க்க மனநிலையில் இருக்கிறார்களோ, அதேபோன்றுதான் இணைய உலகிலும் இருக்கிறார்கள்.
ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எல்லோரும் திருவாளர் பொதுஜனம். பேஸ்புக், ட்விட்டர் வருவதற்கு முன்பாக ஒரு போராட்டம் நடந்தால், அந்த இடத்தில் நாம் கத்திக் கொண்டு இருப்போம். நாம் கொடுக்கும் துண்டறிக்கைகளை வேண்டாவெறுப்பாக வாங்கிக் கொண்டு திருவாளர் பொதுஜனம் நம்மைக் கடந்து செல்வார். அதே பொதுஜனம்தான் இப்போது பேஸ்புக், ட்விட்டரிலும் இருக்கிறார். அவரை உடனே போராட்டக் களத்திற்கு எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. முன்பும் அவர் நம்மைக் கடந்து சென்றார்; இப்போதும் கடந்து செல்கிறார். ஆனால் மிகப் பெரிய வசதி என்னவென்றால், முன்பு ஒரு போராட்டத்தை நடத்தி, ஆயிரம் துண்டறிக்கைகளை விநியோகிப்போம். பிரச்சினை என்ன என்பதை ஒரு நூறுபேரிடம் மட்டுமே கொண்டு போயிருப்போம். இப்போதும் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் பிரச்சினை என்ன என்பதை ஒரு பத்து இலட்சம் பேரிடமாவது நம்மால் பேஸ்புக், ட்விட்டரில் கொண்டு செல்ல முடியும். அதில் எத்தனை பேரை வென்றெடுக்கிறோம் என்பது நமது சாமர்த்தியம் மற்றும் புறச்சூழ்நிலைகள் தீர்மானிக்கக் கூடியவை.
செல்ஃபி போடுபவர்கள், காலை வணக்கம் ஸ்டேட்டஸ் போடுபவர்கள், ஓடி, ஓடி லைக் செய்பவர்களைப் பார்த்து நாம் எரிச்சல் கொள்ள வேண்டியதில்லை. அவர்களுக்கான வெளியில் என்ன காரணத்திற்காக அவர்கள் வந்தார்களோ, அதை அவர்கள் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். நாம்தான் இதை ஒரு ஊடகமாகப் பார்க்கிறோம். அவர்களுடனான உரையாடலைத் தொடங்க வேண்டிய, அவர்களிடம் நமது கருத்தைப் பரப்ப வேண்டிய, அவர்களை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தில் இருப்பது நாம்தான். நாம் தாமதிக்கும் நேரத்தில் அந்த இடத்தை வலதுசாரிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்பதை தோழர்கள் உணர வேண்டும்.
சமூகவலைத்தளங்களில் எழுதுபவர்கள் எல்லோரும் எழுத்தாளர்களா?
தொடர்ந்து வாசிக்கவும், எழுதவும் பழகி, பேஸ்புக்கில் பிரபலமானவர்களும் உண்டு. எப்படி வலைப்பூக்கள் நிறைய பேரை எழுத்தாளர்களாக்கியதோ, அதேபோல் சமூக வலைத்தளங்களும் நிறைய பேரை சுவாரசியமான துணுக்கு எழுத்தாளர்களாக்கி இருக்கிறது.
நாட்டு நடப்புகள் குறித்து கேலியும், கிண்டலுமாய் பலர் போடும் ஸ்டேட்டஸ்கள் மிகவும் சுவாரசியமானவை. ஒரு புத்தகம் எழுதக்கூடிய அளவிற்கான எழுத்தாளர்களாக இல்லாமல், (எல்லோரும் அப்படி எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லைதானே!), ஆனால் நறுக்கென்று நாலு வரி ஸ்டேட்டஸ் போடத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். பேஸ்புக், ட்விட்டரில் இப்படி பிரபலமான துணுக்கு எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. இவர்களைக்கூட நீங்கள் போராட்டக் களங்களில் பார்க்கவே முடியாது.
ஏற்கெனவே நீங்கள் நல்ல எழுத்தாளர்களாக இருக்கிறீர்கள் என்றால், தயவு செய்து சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். பேஸ்புக், ட்விட்டர் உங்கள் நேரத்தைத் தின்றுவிடும். ஃபேஸ்புக் வந்தவுடன் நல்ல பல எழுத்தாளர்கள், ‘எழுத்தாளர்கள்’ என்ற நிலையிலிருந்து இறங்கி ஸ்டேட்டஸ் போடுபவர்களாக மாறிவிட்டார்கள். ஆழமான புரிதலுடன் மாதம் இரண்டு, மூன்று செறிவான கட்டுரை எழுதிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஆண்டுக்கு ஒரு கட்டுரை எழுதுவதே அரிதாகிவிட்டது. இழப்பு, தமிழ் அறிவுலகத்திற்குத்தான். உங்களது வழக்கமான எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒரு கட்டுரையாகவோ, கவிதையாகவோ எழுதத் தேவையற்ற, அன்றாட நிகழ்வுகள் சார்ந்து எழும் உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மட்டுமே பேஸ்புக்கைப் பயன்படுத்துங்கள்.
எழுத்தாளர்கள் கவனங்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான செய்தி, பேஸ்புக்கில் இருப்பவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள் அல்ல. உங்களது ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவிப்பவர்கள் பெரும்பாலானோர் வெகுசனக் கருத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய திருவாளர் பொதுஜனம்தான். அவர்கள் நல்ல வாசகர்களாகக் கூட இல்லாமல் இருக்கலாம்.
இயக்கப் பத்திரிகை ஒன்றில் எழுதுகிறீர்கள். அதுகுறித்து தங்களுக்கு கடிதம் எழுதுபவர், நல்ல எழுத்தாளராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் நல்ல வாசகராக இருப்பார். அவருக்காக நீங்கள் நேரம் ஒதுக்கி, பதில் சொல்லலாம். ஆனால் சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களில் 90 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நல்ல எழுத்தாளர்களாகவோ, நல்ல வாசகர்களாகவோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் தினமலர் மட்டுமோ அல்லது அதுகூட படிக்காதவர்களாக இருக்கக்கூடும். அவர்களும் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து சொல்வார்கள். அவர்களுடன் விவாதிப்பது தங்களது நேரத்தை வீணடிப்பதாகவே முடியும்.
சமூக இணையதளங்களில் சாதிவெறி, மதவெறி, பிற்போக்குத்தனங்கள் நிறைந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் உங்களைத் தொடர்ந்து வம்புக்கு இழுப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது. நீங்கள் ஒன்றை சொல்லிக்கொண்டு இருப்பீர்கள்; அதிலிருந்து நழுவி வேறொரு கேள்வி கேட்பார்கள். அதற்குப் பதில் சொன்னால், அதை அப்படியே விட்டுவிட்டு வேறொன்றுக்குப் போவார்கள். இதோடு அவரது வட்டத்தில் இருக்கும் மேலும் சிலர் வந்து, ‘ங்கோத்தா, ங்கொம்மா’ என்று ஆரம்பிப்பார்கள். உங்களுக்கு நேரவிரயமும், மனவுளைச்சலும் மட்டுமே மிஞ்சும். தோழர்கள் பலர் இந்தமாதிரியான சிக்கல்களில் மாட்டியதைப் பார்த்திருக்கிறேன்.
நேரத்தை விழுங்கும் சமூக வலைத்தளங்கள்
இணையத்தில் ஏதாவது படிக்கலாம் என்று நினைத்து மடிக்கணினியை இயக்குபவர்கள், ஃபேஸ்புக் பக்கம் போய், ‘இரவு முழுக்க ஃபேஸ்புக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எட்டு மணிநேரம் காலியாகி விட்டது’ என்பதாக சொல்கிறார்கள்.
உங்களுடைய நண்பர்கள் பட்டியலில் 5000 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த 5000 பேர் போடுகின்ற ஸ்டேட்டஸ் உங்களது டைம்லைனில் வந்துகொண்டே இருக்கும். 5000 பேரில் ஒரு ஆயிரம் பேர் நல்ல ஸ்டேட்டஸ் போடுபவர்களாக இருப்பார்கள். அதை ஒவ்வொன்றாக வாசிப்பீர்கள். பேஸ்புக் இன்னொரு வகையில் குழாயடிச் சண்டை போலத்தான். ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை வாசிப்பது என்பது சுவாரஸ்யமான விஷயமாகி விடுகிறது. நம்முடைய தெருவில் யாராவது இருவர் சண்டை போட்டுக் கொள்வதை ஜாலியாகப் பார்ப்பது போலத்தான் இதுவும். ஒருவரைப் பற்றி ஒருவர் என்ன சொல்கிறார், யார் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது. இப்படித்தான் நேரம் விரயமாகிறது.
மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களைப் படிக்கத் தொடங்கி அதற்கு லைக் போட ஆரம்பித்தால், அது இன்னொரு வியாதியாக ‘நம்முடைய ஸ்டேட்டசுக்கு யார் லைக் போட்டிருக்கிறார்கள்’ என்று கவனிப்பதில் முடிகிறது. ‘நமக்கு லைக் போடுகிறவர்களுக்கு நாம் பதில் லைக் போடுவது’ – இந்த கடமைக்கு லைக் போடுவது என்பது பெரிய வியாதியாக மாறியிருக்கிறது. எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் இப்படி லைக் போடுவதையே பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள்.
‘நான் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன். அதற்கு அவர் ஏன் லைக் போடலைன்னு தெரியலை’ என்று சொல்வார்கள். இந்த வியாதி சிலருக்கு இன்னும் முத்திப்போய், லைக் போடாதவர்களை நண்பர்கள் பட்டியலிலிருந்து தள்ளி வைப்பதுவரை போய்க் கொண்டிருக்கிறது.
எழுத்தாளர்களின் கவனத்திற்கு:
ஒரு நாளில் ஃபேஸ்புக்குக்கு ஒரு மணி நேரம் செலவழிக்கலாம். அந்தக் கால அளவை நீங்கள் தாண்டுகின்றபோது அதற்கு நீங்கள் அடிமையாகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு மணிநேரத்தில் ஒரு அரைமணி நேரமாவது நீங்கள் எதைச் செய்ய நினைக்கிறீர்களோ அதை செயலூக்கத்துடன் செய்ய வேண்டும்.
உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். யார் யார் லைக் செய்திருக்கிறார்கள், யார் யார் பகிர்ந்து இருக்கிறார்கள், யார் என்ன எதிர்க்கருத்து சொல்லியிருக்கிறார்கள், நாம் என்ன பதில் சொல்லலாம் என்று இறங்காதீர்கள். வாசகர்களாக மதிக்கத்தக்க அளவிலான எதிர்க்கருத்து சொல்லியிருப்பவர்களுக்கு மட்டும், தங்களது பதிலை அடுத்த ஒரு ஸ்டேட்டஸாகப் போடுங்கள். நீங்கள் பதில் சொல்லவில்லை என்று ஒரு கூட்டம் கத்திக் கொண்டிருக்கும். பதில் சொன்னாலும் வேறுவகையில் கத்திக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைப் புறந்தள்ளுங்கள்.
ஃபேஸ்புக்கை நம்முடைய கருத்துகளை கொண்டு சேர்க்கும் ஒரு களமாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, உங்களது முக்கிய இலக்கு ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ போன்ற புத்தகங்களை தமிழுக்க்குத் தருவதாக மட்டுமே இருக்க வேண்டும். அந்தப் புத்தகத்திலிருக்கும் தகவல்களை பேஸ்புக் மூலமாக மற்றவர்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்பது என்பது குறித்து யோசிக்க வேண்டுமே தவிர அதுமட்டுமே ஒரு வேலையாக மாறிவிடுகிறது என்று வைத்துக் கொண்டால், இதுபோன்ற அரிய புத்தகங்கள் தமிழ்ச் சூழலுக்கு கிடைக்காமலேயே போய்விடும்.
ஃபேஸ்புக் என்பது நமக்கு சொந்தவீடு கிடையாது; நூறுபேர் சேர்ந்து உங்களது ஃபேஸ்புக் கணக்கை முடக்கி விட முடியும். 100 ரஜினி ரசிகர்கள் சேர்ந்து, தமிழ் ஸ்டூடியோ அருண் என்பவருடைய ஃபேஸ்புக் கணக்கை முடக்கி விட்டார்கள். காரணம் ரஜினிகாந்தைப் பற்றி விமர்சனம் செய்தார் என்பதால். ரஜினி ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு இவர் ரஜினியைப்பற்றி தவறாக எழுதுகிறார் என்று ஒரு புகார் கொடுத்தால் போதும். ஃபேஸ்புக் நிர்வாகம் நம்முடைய கருத்துகளை முழுமையாக வாசித்துக் கொண்டிருக்காது; 100 பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றவுடன் அதை நிறுத்திவிடும். அதன்பின், நீங்கள் விளக்கம் கொடுத்து போராடித்தான் உங்கள் ஃபேஸ்புக் கணக்கினை மீட்க முடியும். மீட்க முடியவில்லை என்றால் அதுவரை எழுதியது எல்லாம் போய்விடும். எனவே வாரம் ஒரு முறையாவது தங்களது பேஸ்புக் கணக்கை backup எடுத்துக் கொள்ளுங்கள்.
வலதுசாரி எழுத்தாளர்கள் எல்லோரும் கணினியில்தான் எழுதுகிறார்கள். இடதுசாரி எழுத்தாளர்கள் பலர் இன்னும் ‘தாளில் எழுதுவதுதான் வசதியாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலம் கணினிமயமானது. புத்தகங்கள் அச்சிடுவதுகூட வரும் காலங்களில் குறைய ஆரம்பிக்கும். எல்லாம் மின்னூல்களாக இருக்கும் (e-books). எல்லோருக்கும் வசதி அதுதான். காகிதத்திற்காக மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் வராது. ஆயிரம் புத்தகங்களை அச்சிட்டு, அத்தனையையும் விற்றுவிட்டு, ‘600 புத்தகங்கள் போட்டோம்; 400தான் விற்றிருக்கிறது’ என்று எழுத்தாளர்களை பதிப்பாளர்கள் ஏமாற்ற முடியாது. உங்களது எழுத்துக்களைப் பதிப்பிக்க பதிப்பக உரிமையாளர்களைத் தொங்க வேண்டியிருக்காது. நீங்களே எளிதில் மின்னூல் வெளியிடலாம். ஆன்லைன் விற்பனையில் யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. இராயல்டிக்கு சண்டை போட்டு, நான்கு ஆண்டுகள் கழித்து பத்தாயிரம் ரூபாய் வாங்கும் அவலம் இருக்காது. ஒவ்வொரு மாதமும் உங்கள் புத்தக விற்பனைக்கான பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர்களுக்கும் மின்னூல்கள்தான் வசதியானது. உலகின் எந்த மூலையிலிருந்தும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். தபால் செலவுக்காக பெரிய தொகையைக் கட்ட வேண்டியதில்லை. காகிதப் புத்தகத்தில் ஒரு செய்தியைத் தேடுவதற்கு பக்கம் நினைவில் இல்லை என்றால், பக்கம் பக்கமாக, வரி வரியாகச் செல்ல வேண்டும். மின்னூல்களில் மிக எளிதாக ஒரு நொடியில் தேடி எடுத்துவிடலாம். தேவையான அளவுக்கு எழுத்துக்களைப் பெரிதுபடுத்தி படித்துக் கொள்ளலாம். இன்று கொஞ்சம் படித்துவிட்டு, நாளை திறக்கும்போது எந்த இடத்தில் வாசிப்பதை நிறுத்தினோமோ, அதே இடத்திலிருந்து மின்னூல் திறக்கும். புத்தகங்களுக்காக வீட்டில் ஓர் அறையை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புத்தக வடிவிலான ebook reader-லோ அல்லது ஒரு லேப்டாப்பிலோ ஒரு இலட்சம் மின்னூல்களைக்கூட சேமித்துக் கொள்ளலாம். இந்த வசதிகளுக்காக நாளைய வாசகர்கள் அனைவரும் மின்னூல்களைத்தான் விரும்புவார்கள்.
ஆனால் அவர்களுக்கு கிடைக்கப் போவது வலதுசாரிகளின் புத்தகங்களாகத்தான் இருக்கும். நம்மவர்கள் அப்போதும் பின்தங்க வேண்டுமா? காகிதத்தில் எழுதியதை திருத்துவது, அதை சேமித்து வைப்பது எல்லாம் சிரமமான செயல்கள். 300 பக்க நாவலை காகிதத்தில் எழுதினால் அது 700 பக்கங்கள் வரை இருக்கும். அதை DTP கொண்டு சென்று, உங்கள் கையெழுத்து புரியாமல், அவர் தப்பும் தவறுமாக தட்டச்சு செய்து, அதை நீங்கள் சரிபார்த்து, பின்பு அச்சிட்டு, எத்தனை சிரமங்கள், செலவுகள்?
ஒருவாரப் பயிற்சியில் கணினியில் எழுதுவது மிக எளிதாக கைவரப் பெறும். ஒரு முறை கணினியில் எழுத ஆரம்பித்துவிட்டால், அதிலிருக்கும் வசதிக்குப் பின்பு காகிதங்கள் பக்கமே போகமாட்டீர்கள். நான் ஒரு வெள்ளைத் தாளில் முழுப்பக்கம் எழுதி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லாமே கணினியில்தான் எழுதுகிறேன்.
கணினியில் எழுதும் தோழர்கள், அதைப் பாதுகாப்பதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எழுதுவதை எல்லாம் உங்களுடைய ‘hard disk’ல் மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். அங்கேயும் இருக்கட்டும். அதேநேரத்தில் மின்னஞ்சலில் ஒரு copy வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் hard disk எப்போது வேண்டுமானாலும் பழுதாகலாம். அப்படி பழுதானவற்றில் இருந்து மீண்டும் தகவல்களை எடுப்பது பெரும்பாலான நேரங்களில் முடியாமலே போய் விடுகிறது. எனக்குத் தெரிந்த தோழர் ஒருவர், கணினியில் எழுதக் கூடியவர். ஒரு நாவல் எழுத ஆரம்பித்தவர் 150 பக்கம் வரை எழுதிவிட்டார். ஏறக்குறைய பாதி நாவல் முடிந்தது. திடீரென hard disk பழுதாகிவிட்டது. அதிலிருந்து அந்த 150 பக்கத்தை எடுக்கவே முடியவில்லை. எனக்கு hard diskஐ அனுப்பினார். நானும் வெவ்வேறு data retrieving centre-களில் முயற்சித்தும் முடியாமலே போனது. 150 பக்கம் எழுதி, காணாமல் போவதென்பது எவ்வளவு பெரிய மனவுளைச்சலைத் தரும்!
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்றால், கணினியில் எழுதுபவர்கள் குறைந்தது இரண்டு மின்னஞ்சல் கணக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றை yahoo-விலும், மற்றொன்றை gmail-லிலும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு புத்தகம் எழுத ஆரம்பிக்கிறீர்கள் என்றால், முதல் நாளில் பத்து பக்கம் எழுதுவீர்கள். அதை உங்களது yahoo மின்னஞ்சலிலிருந்து உங்களுடைய gmail மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள். ஒவ்வொரு நாள் தட்டச்சு முடிந்ததும் இதேபோல் செய்துவிடுங்கள். முதல் நாள் மின்னஞ்சலில் 10 பக்கம் இருக்கும்; அடுத்த நாள் மின்னஞ்சலில் 20 பக்கம் இருக்கும். இடையில் நீங்கள் வெளியூர் பயணம் செல்கிறீர்கள். உங்களது கணினியைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உலகின் எந்த மூலையிலிருந்தாலும், உங்களுடைய மின்னஞ்சல் கணக்கிலிருந்து நீங்கள் தட்டச்சு செய்ததை எடுத்துக் கொள்ளலாம். அந்த ஊரிலும் எழுத்துப்பணியைத் தொடரலாம். கடைசி நாளில் முழு புத்தகமும் தட்டச்சாகி உங்களது மின்னஞ்சலில் இருக்கும். அப்போது பழைய மின்னஞ்சல்களை எல்லாம் அழித்துவிட்டு, முழுமையான நாவல் அடங்கிய மின்னஞ்சலை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தட்டச்சு செய்தது உங்களது hard disk, yahoo mail, gmail அனைத்திலும் இருக்கும். hard disk பழுதானாலும், மின்னஞ்சலில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். அன்றைய நாளில் yahoo server பழுதாகியிருந்தால் கூட, gmail-லிருந்து எடுத்துக் கொள்ளலாம். gmail-ல் 15GB free space கிடைக்கிறது. நம்முடைய வாழ்நாள் முழுமைக்கும் எழுதினால் கூட 10GB செலவாகாது. அப்படியே ஒரு மின்னஞ்சல் கணக்கு நிறைந்துவிட்டது என்றால்கூட பிறிதொரு மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொள்ளலாம்.
உங்களுடைய முகம் என்பது உங்களுடைய புத்தகங்கள்தான். அதைப் பரப்புகின்ற ஊடகங்கள்தான் சமூக வலைத்தளங்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்துங்கள்.
எகிப்து புரட்சியில் சமூக வலைத்தளங்களின் பங்கு:
வெற்று அரட்டைக்கூடங்களாக மட்டுமே சமூக வலைத்தளங்களைப் பார்க்க வேண்டுமா என்றால் இல்லை. அவை நம் கையருகே இருக்கும் மிகப்பெரிய ஊடகம். அவற்றை ஆக்கப்பூர்வமாக நமது அரசியல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்தியதற்கு நம் கண்முன்னே நிகழ்ந்த சாட்சியங்கள்தான் அரபுநாடுகளில் நடந்த அரசியல் புரட்சிகள். அவற்றில் எகிப்து புரட்சியைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, பொதுமக்களின் கிளர்ச்சி 2011, ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. 18 நாட்கள் நடந்த கிளர்ச்சியின் முடிவில், 30 ஆண்டுகளாக நீடித்த முபாரக்கின் சர்வாதிகாரம் தூக்கியெறியப்பட்டது. கிளர்ச்சியின் வெற்றிக்கு பல்வேறு செயல்பாடுகள், காரணிகள் இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய பங்காற்றின.
முபாரக்கின் ஆட்சியில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. அதிபர் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெளிப்படையற்றத் தன்மை இருந்தது. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து காணப்பட்டது. கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, போராட்டங்கள் தடை செய்யப்பட்டு, மக்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருந்தனர். ஊடகங்கள் தணிக்கைக்கு உட்பட்டிருந்தன. சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டவர்கள் எந்தவித விசாரணையும், குற்றச்சாட்டுமின்றி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய முபாரக் ஆட்சிக்காலம் முழுவதும் எமர்ஜென்ஸி நிலையே நாட்டில் தொடர்ச்சியாக நீடித்துவந்தது.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20% பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்துவந்தனர். ஏழைகள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இருந்த சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன.
2007ம் ஆண்டு தனக்கிருந்த அதிகாரங்களை மேலும் அதிகப்படுத்தும்விதமாக, 34 அரசியல் சட்டத் திருத்தங்களை முபாரக் கொண்டுவந்தார். இதில், பொதுமக்களை இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கும் அதிகாரம், தேர்தல்களில் நீதிமன்றங்களின் மேற்பார்வையை நீக்குவது உள்ளிட்டவையும் அடங்கும்.
அதோடு, நாட்டின் அடுத்த அதிபராக தனது மகனை அமர்த்தும் வேலையையும் முபாரக் செய்து வந்தார். சகிப்புத்தன்மை குறைந்து, ஆட்சியின்மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு அதிகரித்து வந்தவண்ணம் இருந்தது.
இந்நிலையில், 2005ம் ஆண்டு அமைதிக்கான நோபில் பரிசு வென்றவரும், அய்க்கிய நாடுகள் அவையின் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் தலைவருமான முஹம்மது எல்பரடே (Mohamed ElBaradei), மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்தார். முபாரக் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் முதலாமாவராகவும், அரசியல், சமூக மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பவராகவும் இருந்தார். 2009ம் ஆண்டு சர்வதேச அணுசக்திக் கழகப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வேலைகளைத் தொடங்கிய எல்பரடே, எகிப்திய இளைஞர்களை சந்திக்கத் தொடங்கி, அவர்களிடம் அரசியல் மாற்றத்திற்கான நம்பிக்கைகளை விதைக்க ஆரம்பித்தார். தொடர்ந்து முபாரக் அரசை விமர்சித்து, அரசின் முக்கிய எதிரியாக மாறினார். பிப்ரவரி 2010ம் ஆண்டு, அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என ஏறக்குறைய 30 பேருடன் இணைந்து அரசியல் மாற்றத்திற்கான தேசிய அமைப்பை எல்பரடே நிறுவினார்.
விடுதலை சதுக்கத்தில் மக்கள் வெள்ளம்
எகிப்தில் புரட்சி வீரியமடைவதற்கும், வெற்றி பெறுவதற்கும், அந்நாட்டுப் புவியமைப்பும் முக்கியக் காரணமாக இருந்தது. வடக்கு ஆப்பிரிக்காவில் எகிப்தும், டுனீசியாவும் அருகாமை நாடுகள். லிபியா இவ்விரு நாடுகளுக்கும் இடையில் உள்ளது. எகிப்தும், டுனீசியாவும் முஸ்லிம் நாடுகள்; அரபு மொழி பேசுபவை; நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சியில் இருப்பவை. இந்த ஒற்றுமைகள் காரணமாக டுனீசியாவின் அரசியல் நடப்புகளில் இயல்பான ஆர்வம் எகிப்து மக்களிடம் இருந்தது. டுனீசியாவில் கிளர்ச்சி மூலமாக ஏற்பட்ட அரசியல் மாற்றம் எகிப்து மக்களையும் உத்வேகம் கொள்ள வைத்தது. அதோடு, எகிப்து புரட்சியின் மையமாக விளங்கிய விடுதலை சதுக்கத்தின் அமைவிடம், புரட்சியின் வெற்றிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்தது. விடுதலை சதுக்கம் எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் மையத்தில் மிகப்பெரிய திறந்தவெளியுடன் அமைந்திருந்தது. அந்தத் திறந்தவெளி, பத்து லட்சம் பேர் கூடும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. எகிப்தின் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் மெட்ரோ ஸ்டேஷன், விடுதலை சதுக்கத்திற்கு அருகிலேயே இருந்தது. கெய்ரோ நகரில் இருந்த கிளர்ச்சியாளர்கள் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பான இடமாகவும் இச்சதுக்கம் இருந்தது.
விடுதலை சதுக்கத்தில் நடைபெறும் போராட்டத்தினை வெளியுலகம் எளிதில் பார்க்கும் வகையில் அதன் அமைவிடமும், திறந்தவெளியும் அமைந்திருந்தன. புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முபாரக் கூலிப்படையினரால் விடுதலை சதுக்கத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் சதுக்கத்தைச் சுற்றியிருந்த கட்டடங்களில் தங்களது ஒளிபரப்புக் கருவிகளை நிறுவி, தொடந்து செய்திகளை வெளியுலகிற்குத் தெரிவிக்க முடிந்தது.
எகிப்து புரட்சிக்கு பல்வேறு அரசியல் நிகழ்வுகள் காரணமாக இருந்தாலும், மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது, ஜூன் 2010ல் நிகழ்ந்த கலித் சயீத் (Khaled Said) என்ற இளைஞரின் படுகொலை. அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த அந்த இளைஞர், ஒரு இன்டர்நெட் மையத்தில் இருந்தபோது, காவல்துறை அதிகாரிகள் இருவர் அவரை அணுகினர். அந்த அதிகாரிகள் அவரிடம் பணம் கேட்டதாகவும், அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று மறுத்ததாகவும், அதனையடுத்து அதிகாரிகள் அவரை இன்டர்நெட் மையத்திலேயே தாக்கத் தொடங்கியதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் வெளியே இழுத்து வரப்பட்டு, இறக்கும்வரை தெருவில் வைத்துத் தாக்கப்பட்டார். அவரது உடல் காவல் வண்டியில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.
அளவுக்கதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் சயீத் இறந்தார் என அவரது குடும்பத்தினருக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது. போதைமருந்து கடத்தலில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்குப் பணம் கைமாறியது தொடர்பான வீடியோ ஆதாரத்தை சயீத் இணையத்தில் வெளியிட்டதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர். அவரது படுகொலையை அடுத்து, எகிப்து இணையதளங்கள் அனைத்திலும், காவலர்களின் மிருகத்தனமான தாக்குதலினால் கடுமையாக சிதைந்திருந்த சயீத்தின் முகம் நிழற்படங்களாக காட்டுத்தீ எனப் பரவியது. எல்பரடே உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் வீதிக்கு வந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பொதுமக்கள் மீதான காவல் துறையின் அராஜகங்களுக்கு சயீத்தின் மரணம் ஒரு குறியீடாக மாறியது.
கடைசி நிகழ்வாக டுனீசியாவில் 2010, டிசம்பர் 17ல் தொடங்கிய புரட்சி அமைந்தது. 2011, ஜனவரி 15ம் தேதி வரை நடந்த அந்தப் புரட்சியின் முடிவில், அந்நாட்டு அதிபர் சைன் எல் அபிதின் பென் அலியின் (Zine El Abidine Ben Ali) ஆட்சி முடிவுக்கு வந்தது. ஏற்கனவே ஜனவரி 25ம் தேதி (விடுமுறை நாளான எகிப்து இராணுவ தினம்) பெரும் மக்கள் திரள் போராட்டத்திற்கு எகிப்து அரசியல் செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வந்திருந்த வேளையில், டுனீசியாவில் நிகழ்ந்த புரட்சியின் வெற்றி, எகிப்து மக்களை மேலும் உத்வேகமடையச் செய்தது. டுனீசியா புரட்சி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெள்ளமென பரவத் தொடங்கின.
இலவச இணைய வசதி, மலிவு விலை கணினிகள் என தகவல் தொழில் நுட்பத் துறையில் அரசு கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக, 2010ம் ஆண்டு கணக்குப்படி, எகிப்தின் மொத்த மக்கள் தொகையான 8 கோடி பேரில் சுமார் 1.7 கோடிக்கும் அதிகமானோர் இணைய வசதி பெற்றிருந்தனர்; 45 இலட்சம் பேருக்கும் அதிகமானோர் பேஸ்புக் கணக்கு வைத்திருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 70%க்கும் அதிகமானோர் கைபேசி இணைப்பு பெற்றிருந்தனர்.
எகிப்து புரட்சியில் சமூக வலைத்தளங்களின் முக்கியமான பயன் என்னவென்றால், மக்களை அணிதிரட்டும் நடவடிக்கைகளில் அது ஏற்படுத்திய மாற்றம்தான். வழக்கமான அணிதிரட்டும் நடவடிக்கைகளான - துண்டறிக்கைகளை விநியோகிப்பது, சுவரொட்டிகள், தெருக்கூட்டங்கள் ஆகியவற்றில் இருந்த ‘குறைவான வேகம், கலந்துரையாடும் வாய்ப்புகள் அற்ற தன்மை’ ஆகிய குறைபாடுகளைக் களைந்து, மிக வேகமாகத் தொடர்பு கொள்ளவும், செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்துரையாடவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவின. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இருந்த எகிப்தியர்கள், எகிப்தில் நடைபெறும் போராட்ட நிகழ்வுகளை அறிந்துகொள்ள சமூக வலைத்தள குழுமங்களில் இணைந்தனர்; போராட்டம் குறித்து விவாதித்தனர்.
சமூக வலைத்தளங்களில் போதிய அனுபவம் வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக வலைத்தளங்களில் நிறைய குழுமங்களை உருவாக்கியும், வலைப்பூக்களை உருவாக்கியும் எகிப்தின் தற்போதைய நிலை குறித்த விவாதங்களில் பொதுமக்களை பங்குபெறச் செய்தனர். சயீத்தின் படுகொலைக்குப் பின்னர், ‘நாம் எல்லோரும் கலீத் சயீத்’ (We are all Khalid Said) என்ற பெயரில் ஒரு பேஸ்புக் குழுமம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் சயீத்தின் படுகொலை தொடர்பான செய்திகள் மட்டுமே அதில் விவாதிக்கப்பட்டாலும், நாளடைவில் அது எகிப்து அரசின் அராஜக நடவடிக்கைகளை விவாதிக்கும் அரசியல் களமாக மாறியது. ஏராளமான இளைஞர்கள் அந்தக் குழுமத்தில் இணைந்தனர். அதில் நடைபெற்ற விவாதங்கள், விரக்தியில் இருந்த எகிப்தியர்கள் மத்தியில் புதிய தெம்பை அளித்தது.
முக்கிய அரசியல் செயற்பாட்டாளரான எல்பரடே, சமூக வலைத்தளங்களின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தினார். தனது ஆதரவாளர்களிடம் கலந்துரையாடவும், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களைப் பயன்படுத்தினார். அவரைப் பின்பற்றி, பிற செயற்பாட்டாளர்களும் பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக எகிப்து புரட்சிக்கு உதவியவர்களில் மற்றொரு முக்கிய நபர் ஒமர் அபிபி (Omar Afifi). காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியல் செயற்பாட்டாளராக மாறியவர் இவர். காவலர்களின் அராஜகங்களை எப்படித் தவிர்ப்பது என்பது தொடர்பாக 2008ம் ஆண்டு அபிபி ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகம் எகிப்தில் தடை செய்யப்பட்டதோடு, அவரின் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறியது. இதனையடுத்து அவர் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அங்கிருந்தபடியே யூட்யூப், பேஸ்புக், ட்விட்டர் மூலமாக எகிப்தியர்களுடன் உரையாடத் தொடங்கினார். டுனீசியா புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எகிப்தியர்கள் எவ்வாறு தங்களது புரட்சியை நடத்த வேண்டும் என்பது குறித்தான யூட்யூப் வீடியோக்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டார். எந்த நாளில் புரட்சி நடத்தவேண்டும், எந்த இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஒன்று திரள வேண்டும், என்ன மாதிரியான உடைகளை அணிய வேண்டும் உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களையும், ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்துப்படி, டுனீசியப் புரட்சிக்குப் பின், ஜனவரி 14ம் தேதி வெளியிட்ட வீடியோவின் மூலம், அபிபி புரட்சிக்கான முதல் கல்லை எறிந்தார்.
இரண்டாண்டுகளாக, சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான விவாதங்களில் பங்கு கொண்டிருந்த இளைஞர்களும் புரட்சிக்கான வேலைகளில் ஆக்கப்பூர்வமாக உதவினர். டுனீசியப் புரட்சியின் நிகழ்வுகள் குறித்த செய்திகளும், படங்களும் எகிப்து மக்களிடம் பரப்பப்பட்டது. டுனீசிய மக்களுக்கு பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைப்பூக்களில் வாழ்த்து சொன்னார்கள். டுனீசிய மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக எகிப்து நடிகை ஒருவரின் வாழ்த்துச் செய்தியினை அரசியல் செயற்பாட்டாளரும், வலைப்பதிவருமான நவாரா நேக்ம் என்ற பெண் வெளியிட்டார். மேலும், டுனீசியப் புரட்சியாளர்களின் கைபேசி எண்களைக் குறிப்பிட்டு, ஊக்கமளிக்கும் வார்த்தைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பும்படி எகிப்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதோடு, சமூக வலைத்தளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களை ஜனவரி 25ம் தேதி போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். இளம்பெண் ஒருவரை மையமாக வைத்து, யுட்யூப் வீடியோ ஒன்றினை வெளியிட்டார் நேக்ம். அதில் ‘இந்த இளம்பெண்ணைப் பாருங்கள்… இவளும் போராடப் போகிறாள்’ என்று குறிப்பிட்டு, உங்களது நண்பர்களையும், மற்ற எகிப்தியர்களையும் போராட்டத்திற்கு அழைத்து வாருங்கள் என்று வேண்டினார்.
“நடப்போம்… வீதிகளில் நடப்போம்… நடப்போம் நடப்போம் நடப்போம்.. பேசுவோம் பேசுவோம் பேசுவோம்… தேசியப் பாடல்களைப் பாடுவோம்… நம் நாடு நம் நாடு என்று பாடுவோம்” என்று எழுதினார். “போராட்டக்களத்தில் உங்களால புகைப்படம் எடுக்க முடிந்தால், புகைப்படம் எடுங்கள்.. ட்விட்டரைப் பயன்படுத்த முடிந்தால், ட்விட் செய்யுங்கள்.. வலைப்பதிவு செய்ய முடிந்தால், வீதிகளில் இருந்து அதைச் செய்யுங்கள்.. நமக்காக டுனீசியாவிலும், ஜோர்டானிலும் போராடுகிறார்கள். பாரிசிலும் நமக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை இப்போதுதான் பார்த்தேன். அந்த மக்கள் எல்லோரும் நம்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்று எழுதினார்.
‘எல்பரடே அதிபராக’, ‘நாம் எல்லோரும் கலீத் சயீத்’ போன்ற பேஸ்புக் பக்கங்களைப் போலவே ‘ஜனவரி 25: சித்திரவதை, வறுமை, ஊழல் மற்றும் வேலையின்மைக்கு எதிரான புரட்சியின் நாள்’ என்ற பேஸ்புக் பக்கம் மூன்று இளைஞர்களால் ஜனவரி 16ம் நாள் தொடங்கப்பட்டது. இந்த பேஸ்புக் பக்கத்தின் நிர்வாகிகள் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டார்கள். அதில், டுனீசியப் புரட்சி எப்படி தங்களுக்கு உத்வேகம் அளித்தது என்பதையும், அதேபோல் ஒரு வெற்றிகரமான புரட்சியை எகிப்தில் நாம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தையும் வலுவாகப் பதிவு செய்தார்கள்.
இதுபோன்ற பேஸ்புக் பக்கங்களும், குழுமங்களும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை, திட்டங்களை இலட்சக்கணக்கான எகிப்தியர்களிடம் கொண்டு சேர்த்தன. எகிப்தின் பல்வேறு பகுதியிலிருந்த மக்களையும் ஒரே நேரத்தில் இதுதொடர்பாக பேசவும், செயல்படவும் வைத்தன.
தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பது, கலந்துரையாடும் வசதி போன்றவை காரணமாக சமூக வலைத்தளங்களில் குவிந்த மக்கள், புரட்சியின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஆபத்துக் காலங்களில் எப்படி உதவி கோருவது குறித்தும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.
டுனீசியா புரட்சியில் வெற்றியடைந்த கிளர்ச்சியாளர்கள், எகிப்து இளைஞர்களுக்கு தங்களது புரட்சியின் படிப்பினைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக வழங்கினர். இரப்பர் குண்டுகளில் இருந்து எப்படி தப்பிப்பது, தடுப்புகளை எப்படி உடைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர். பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் போராட்டம் நடத்துவது, தற்கொலைக்கு ஒப்பான போராட்டங்களைத் தவிர்ப்பது, வெளியுலக அழுத்தத்தினைப் பெறும் வகையில் ஊடகங்களுக்குத் தொடர்ச்சியாக செய்திகளை அனுப்புவது, பாதுகாப்புப் படை வாகனங்களின் கண்ணாடிகள் மீது பெயிண்ட் ஊற்றுவது, கண்ணீர்ப் புகைக் குண்டுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கு கோக்கோ கோலாவை வைத்து முகம் கழுவுவது உள்ளிட்ட ஆலோசனைகளை எகிப்து மக்களுக்கு டுனீசியப் புரட்சியாளர்கள் வழங்கினர்.
ஜனவரி 25. இலட்சக்கணக்கான மக்கள் விடுதலை சதுக்கத்தில் குழுமினர். போராட்டம் வீரியமடைந்தது. அரசு ஒடுக்குமுறையை ஏவியது. களத்தில் இருந்தபடியே போராட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசின் ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினர். முஹம்மது அப்டெல்பதா என்ற எகிப்து ஊடகவியலாளர், ஜனவரி 25ம் தேதி மாலையில் வெளியிட்ட தொடர்ச்சியான ட்வீட்களை ‘கார்டியன்’ ஆங்கில இதழ் பதிவு செய்துள்ளது.
@mfatta7 : கண்ணீர்ப் புகைக்குண்டு
@mfatta7: எனக்கு மூச்சுத் திணறுகிறது
@mfatta7: நாங்கள் ஒரு கட்டடத்தில் மாட்டிக் கொண்டுள்ளோம்.
@mfatta7: ஆயுதந்தாங்கிய வாகனங்கள் வெளியே…
@mfatta7: உதவுங்கள்.. எங்களுக்கு மூச்சு திணறுகிறது!
@mfatta7: நான் கைது செய்யப்படப் போகிறேன்
@mfatta7: உதவி தேவை!!
@mfatta7 : கைது செய்யப்பட்டேன்.
@mfatta7: நான் அதிகமாக அடித்துத் தாக்கப்பட்டேன்.
பழைய தொலைதொடர்பு முறைகள் என்றால், உதவி கேட்டு ஒருவர் பேக்ஸ் அனுப்ப வேண்டும், அல்லது தொலைபேசியில் பேச வேண்டும். இந்த முறைகளில் உதவி பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை, கைபேசியிலிருந்து உடனுக்குடன் ட்விட் செய்வதன்மூலம் எகிப்தியர்கள் பெருமளவு குறைத்தார்கள். பேஸ்புக், ட்விட்டர் மூலமாக உலக நாடுகளின் கவனத்தை எகிப்து புரட்சியின் பக்கம் திருப்பினார்கள். புரட்சி குறித்த படங்கள், ஒளிப்பதிவுகளோடு, பாதுகாப்புப் படையின் சித்திரவதை குறித்த செய்திகளையும் வெளியுலகிற்குத் தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் இருந்தனர். உலக நாடுகளின் ஊடகங்களுக்கு எகிப்து புரட்சி குறித்து செய்தி வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
விடுதலை சதுக்கத்தில் பத்திரிகையாளர்களை அரசு தடை செய்தபோது, சமூக வலைத்தளங்கள் மூலமாக போராட்டக்காரர்களே மக்கள் பத்திரிகையாளர்களாக மாறி, செய்திகளை உடனுக்குடன் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினர்.
சமூக வலைத்தளங்களின் வலிமையையும், செய்திகளைப் பகிர்ந்துகொள்வதில் அதில் உள்ள வேகத்தையும் புரிந்துகொண்ட முபாரக் அரசு, அவற்றை முடக்கும்விதமாக இணையதள சேவையையும், கைபேசி சேவைகளையும் ஜனவரி 28ம் தேதி எகிப்து முழுக்க நிறுத்தி வைத்தது. இதை முன்கூட்டியே அறிந்த போராட்டக்காரர்கள், உடனடியாக பேஸ்புக், ட்விட்டர், வலைப்பூக்களில் இதுகுறித்து செய்தி வெளியிட்டு, வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினார்கள்.
ஜனவரி 27ம் தேதி மாலை, எல்பரடே பக்கத்தில் ஒருவர் வெளியிட்ட செய்தி: “நாளை காலையிலிருந்து, எகிப்தில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களது தாய்நாட்டுடன் தொடர்பு கொள்ள முடியாது. ஏனென்றால் எகிப்து அதிபர் அனைத்துவிதமான தொலைதொடர்புகளையும் (கைபேசி + இணையம்) துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். தனது சொந்த நாட்டில் தான் என்ன செய்கிறோம் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளக்கூடாது என அவர் விரும்புகிறார். என்னவிதமான அதிபர் இவர்? இந்த செய்தியை அனைவரிடமும் பகிருங்கள்”
இணைய வசதி ஏறக்குறைய ஐந்து நாட்கள் முடக்கப்பட்டது. இருப்பினும், சில செயற்பாட்டாளர்கள் செய்திகளைப் பரப்பும் வழியைக் கண்டுபிடித்தனர். தொலைபேசி இணைப்பு வழியாக இணையவசதி பெறுவதை ஒரு வலைப்பதிவர் குறிப்பிட்டு, அதன்மூலம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தினார். Proxy மூலமாக ட்விட்டரைப் பயன்படுத்தவும் தொடங்கினார்கள். இன்னும் சில எகிப்தியர்கள் தொலைபேசி வாயிலாக வெளிநாடுகளில் வசிக்கும் தங்களது நண்பர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை ட்விட் செய்யச் சொன்னார்கள். தடை நீடித்த அந்த நாளிலும்கூட, நிமிடத்திற்கு 25 ட்விட்கள் ‘The #Jan25’ hash tag-ல் வெளியாகின. அதில் பெரும்பாலானவை எகிப்திலிருந்து ட்விட் செய்யப்பட்டவை.
இணையம் தடை செய்யப்பட்ட பின்பு, சில தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக்கிய ‘speak to tweet’ என்ற வசதி, போராட்டக்காரர்களுக்குப் பெரிதும் உதவியது. இதன்படி, போராட்டக்காரர்கள் தொலைபேசி வழியாக அனுப்பும் குரல் செய்திகள் (voice messages), ட்விட்டர் செய்திகளாக மாறின. தொலைதொடர்பின் ஒரு பாதை அடைக்கப்பட்டால், மற்றொரு பாதையை மக்கள் முயற்சித்தார்கள் என்று பிபிசி செய்தி நிறுவனம் பதிவு செய்தது.
பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வலைப்பூக்களில் பரப்பப்பட்ட செய்திகளும், படங்களும் உலக மக்களிடம் எகிப்தியர்களின் போராட்டத்திற்கு மேலும் ஆதரவை வலுப்படுத்தியது. புரட்சி தொடங்கியபின்பு, வெளிநாடுகளில் வாழும் எகிப்தியர்களால் “Voice of Egypt Abroad”, “Egyptians Abroad in Support of Egypt”, “New United Arab States” உள்ளிட்ட பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் தொடங்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் எகிப்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல இணையவழிப் போராட்டங்களை புலம்பெயர்ந்த எகிப்தியர்கள் நடத்தினர். பிப்ரவரி 1ம் தேதி நடந்த, ‘எகிப்து புரட்சிக்கு ஆதரவாக ஒரு மில்லியன் குரல்களை எழுப்புவது’ என்ற பேஸ்புக் போராட்டமும் அதில் ஒன்று. இத்தகைய போராட்டங்கள் எகிப்தியர்களையும், எகிப்தியர் அல்லாதவர்களையும் புரட்சிக்கு ஆதரவாக ஒன்று சேர்த்தன.
இறுதியில் போராட்டத்திற்குப் பணிந்து, பிப்ரவரி 11ம் நாள் முபாரக் பதவி விலகியபோது, அச்செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, எகிப்தியர்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் கரை புரண்டோடியது. ஆயிரக்கணக்கான வாழ்த்துச் செய்திகள் பேஸ்புக், ட்விட்டரில் பதியப்பட்டன.
சமூக வலைத்தளங்கள் வழங்கிய வசதிகள் அனைத்தையும் எகிப்து புரட்சியாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். தகவல்களைப் பெறுவதிலும், பரப்புவதிலும் உள்ள வேகத்தை சமூக வலைத்தளங்கள் அதிகப்படுத்தின. அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையே உறவுகளை ஏற்படுத்தவும், வலுப்படுத்தவும் சமூக வலைத்தளங்கள் பயன்பட்டன. பழைய பிரச்சார முறைகளின் மீது அரசு மேற்கொள்ளும் தணிக்கை மற்றும் தடைகளைத் தகர்த்து, செயற்பாட்டாளர்கள் மக்களோடு உரையாடவும், வெளியுலகோடு தொடர்பு கொள்ளவும் உதவின. ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தாண்டி, புரட்சியின் நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியுலகம் தெரிந்து கொள்ளவும், உற்சாகமூட்டும் வார்த்தைகளை எகிப்தியர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் உதவின. துண்டறிக்கைகள், தொலைபேசி, பேக்ஸ் என முந்தைய தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் சாத்தியப்படாத பொதுமக்களின் அணிதிரட்டலை, சமூக வலைத்தளங்கள் மூலமாக எகிப்து புரட்சியாளர்கள் சாதித்துக் காட்டினர்.
(தொடரும்...)
- கீற்று நந்தன் (
குறிப்பு: எகிப்து புரட்சி தொடர்பான செய்திகள் “Social Media in the Egyptian Revolution: Reconsidering Resource Mobilization Theory by NAHED ELTANTAWY & JULIE B.WIEST” கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.