வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் உள்பட 15 நபர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து நேற்று (ஜனவரி 21) உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.

மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர் காலதாமதம் செய்தால் மரண தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி மனநோயாளியாக இருப்பவர்களுக்கும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கும் மரணத் தண்டனை அளிக்கப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளாதால் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் பாராட்டிற்குரியதாகவும் அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2013ல் நீதியரசர்கள் சிங்கிவி மற்றும் முக்கோபாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேவேந்தர் சிங் புல்லார் வழக்கில் கருணை மனுவை பரிசீலிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்பதினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டயை ரத்து செய்ய முடியாது என்றும் இதே போல் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்களின் மேல்முறையீடு மனுவைப் பரிசீலிக்க இயலாது என்றும் தீர்ப்பளித்தார்கள். இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் தான் நேற்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

அப்ஸல் குரு விவகாரத்தில் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் கள்ளத்தனமாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதை மறைமுகமாகச் சாடும் வகையில் தலைமை நீதியரசர் சதாசிவம் அளித்த தீர்ப்பு அமைந்துள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு கைதியின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் தான் விரும்பும் உணவை சாப்பிடுவதற்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள கைதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த தீர்ப்பின் அடிப்படையில் அப்ஸல் குருவின் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவசர கதியில் அப்சல் குரு தூக்கிலிடப்படுவதற்கு காரணமாக இருந்த உள்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவதுடன் சட்டவிரோதமாக அப்சல் குருவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றிய அமைச்சர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்கள் மரண தண்டனை அளிக்கப்பட்டு அவர்கள் கருணை மனு 11 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள நேர்மையான தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

- பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர்

Comments

4 comments

4
ஜோ.தமிழ்ச்செல்வன்
அப்சல் குருவை கள்ளத்தனமாக தூக்கிலிட்டவர்கள் காங்கிரஸ்காரர்களே. அதனால் (1) தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பிடித்தால் ம.ம.க. அக்கூட்டணியிலிருந்து வெளியேறி விடுமென அறிக்கையிடுவாரா? (2) மரணத்தண்டனையை ரத்து செய்தது வரலாற்று சிறப்புமிக்கதாகச் சொல்லும் இவர் மரணத்தண்டனை இனிமேல் கூடாது. இனிமேல் இஸ்லாமிய நாடுகள் எதுவும் மனிதனுக்கு மரணத்தண்டனை வழங்கக்கூடாது. இது காட்டுமிராண்டித்தனமான செயல். திருக்குறானில் மரணத்தண்டனை வழங்கச் சொல்லப்பட்டிருக்கும் வசனங்களை நீர்த்துப்போன வசனங்களாக மாற்ற வேண்டும். இல்லையென்றால் நானும் எனது ம.ம.க. சகாக்களும் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவோம் என அறிக்கை இடுவாரா? இதற்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தயாராக இருக்கிறாரா? இதற்கு அவர் தயார் என்றால் ஜவஹருல்லாஹை வீரமிக்க தமிழராக பறைசாற்றலாம். அவர் தயாரா?
Munirathinam,Advocate
அம்பேத்கர் சொன்னதைப்போல் இந்த அரச கட்டமைப்பை மக்கள் அடித்து நொறுக்கி தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
தேனி காமராஜ்
மரணதண்டணை காட்டுமிராண்டித்தனமானது!
குற்றவாளிகளை திருத்தவேண்டும் கொலை செய்வது குற்றத்துக்கு சமம்!
mansur
மனநோயாளியாக இருப்பவர்களுக்கும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டவர் களுக்கும் மரணத் தண்டனை அளிக்கப்படக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளாதால் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் பாராட்டிற்குரியதாகவும் அமைந்துள்ளது.-திரு .தமிழ் செல்வன் நன்ராக படித்து பிரகு யெழுதவும்.

மன்சூர்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.