சமத்துவமற்ற இந்திய சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தில் சமத்துவத்தைப் பேணுவோம் என்கிற தந்திரமான சூழ்ச்சியை அதிகார வர்க்கம் கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலமாக செய்து வருகிறது. இடஒதுக்கீடு என்பது எந்தப் பிரிவினருக்கும் கொடுக்கும் சலுகை கிடையாது. நிர்வாக அடிப்படையில் ஒரு நாட்டிலுள்ள அனைவரும் அனைத்து தளங்களிலும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது ஆகும். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு விகிதச்சாரா அடிப்படையில் இடஒதுக்கீடு வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. அய்ரோப்பிவில் பல நாடுகளில் வெள்ளையர்களுக்கு இடையிலேயே குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தேவை என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. நிறம், வர்க்கம் என்கிற பேதங்களைத் தாண்டி பிறவி அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பாகுபாடுகள் இல்லாத மேற்கத்திய நாடுகளிலிலேயே இடஒதுக்கீட்டின் தேவை இருப்பதை நாம் உணர வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், சாதி, மத, பூகோள, மொழி அடிப்படையில் வேறுபட்டிருக்கும் பல்வேறு வகைப்பட்ட மக்களை ஒரே நாட்டின் மக்கள் எனப் பிரச்சாரம் செய்து ஒரே குடையின் கீழ் அடைக்க முயலும் இந்த இந்திய துணைக்கண்டத்தில் இடஒதுக்கீடு எந்த அளவிற்கு அத்தியாவசியத்தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த துணைக் கண்டத்தில் சாதி அடிப்படையில் பிரிந்து இருக்கும் மக்கள் அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். 

சமஸ்தானங்களில் இடஒதுக்கீடு

இந்தியாவின் நிர்வாகத்துறை, காவல்துறை, நீதித்துறை என அனைத்துத் தளங்களிலும் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கையை இந்திய காங்கிரசு 1861ம் ஆண்டு கோரிக்கையாக வைத்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் இடஒதுக்கீடு கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்த தூண்டுகோலாய் இருந்தது காங்கிரசிலுள்ள பார்ப்பன வர்க்கமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க ஆரம்பித்தபோது அனைத்து மட்டங்களிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். இதனைக் கண்டு பார்ப்பனரல்லாதோர் வெகுண்டு எழுந்தனர். மைசூர் சமஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதாரின் கிளர்ச்சி உச்சம் கண்டது. இதனால் 1895ம் ஆண்டு, மைசூர் அரசர் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் சமஸ்தான வேலைகளில் இடஒதுக்கீடு என்பதை ஆணையாகப் பிறப்பித்தார். இதுவே நமக்கு இங்கு கிடைத்திருக்கும் இடஒதுக்கீட்டிற்கு மூலவித்து எனலாம். ஆனால், 1921 ம் ஆண்டு வரை அந்த இடஒதுக்கீட்டை நமது பார்ப்பன நண்பர்கள் அமல்படுத்த தடைக்கல்லாக இருந்தனர். இதே போல் மகாராஸ்டிரத்தில் கோல்கபூர் சமஸ்தானத்தில் சாகு மகாராசா வேலை வாய்ப்பில் வகுப்பு வாரி இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். சாகு மகராஜா என்கிற பெருந்தகையால் புனரமைக்கப்பட்டவர்தான் சமூக நீதிப் போராளி பாபாசாகாப் அம்பேத்கர். ஆக மைசூர் சமஸ்தானமும், மகராஸ்டிரா கோல்கபூர் சமஸ்தானமும் இடஒதுக்கீட்டிற்கு முன்னோடி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

1913 ம் ஆண்டு நடேச முதலியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் சங்கமும், 1916ம் ஆண்டு தென்னிந்திய நலஉரிமைச் சங்கமும் கல்வி வேலை வாய்ப்பில் பார்ப்பனரல்லாதார், ஆதிதிராவிடர், இசுலாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கு விகிதச்சாரா அடிப்படையில் வேலை வாய்ப்பு வேண்டும் என்கிற முழக்கத்தை முதன் முதலாகவும், அழுத்தமாகவும் முன் வைத்து செயல் திட்டங்களை வகுத்தது. 

அரசியல் பிரதிநிதித்துவ வரலாறு

1906ம் ஆண்டு இசுலாமிய தலைவர்கள் முகமதியர்களுக்கென்று தனித் தொகுதி வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தனர். 1909ம் ஆண்டு இசுலாமியர்களுக்கு என்று தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன‌. (பிரிட்டிஸ் அதிகாரம் கைமாறிய பிறகு 1950க்குப் பின்னால் இசுலாமியர்களுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் பறி போனது). 1919ம் ஆண்டு டி.எம்.நாயர் , ஏ.ராமசாமி முதலியார் ஆகியோரின் பெரு முயற்சியால் பார்ப்பனரல்லாதோருக்கு தனித் தொகுதிகள் வழங்கப்பட்டன‌. இதற்கு முகமதியர் அல்லாத தொகுதிகள் என்றும் அழைக்கப்பட்டன. இந்த வாய்ப்பின் அடிப்படையில் 1920ம் ஆண்டு பார்ப்பனரல்லாதாருக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைத்தது. 1920ம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருத்தவரை 1930ம் ஆண்டு பாபாசகாகேப் அவர்களின் பெரு முயற்சியால் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டது. (தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இரட்டை வாக்குரிமையை காந்தியின் துரோகத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் இழந்தனர் என்பது தனிக்கதை) 

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

முதன் முதலில் சென்னை மாகாணத்தில்தான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த காலத்தில், பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள், ஆதிதிராவிடர், முகமதியர், கிறித்தவர் என அனைத்து தரப்பினருக்கும் வகுப்புவாரியாக வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பார்ப்பனர்கள் தொடர்ந்து கொடுத்த இடர்ப்பாடு காரணமாக 1927ம் ஆண்டு வரை இந்த ஆணை அமல்படுத்தப்படவில்லை. 1927ம் ஆண்டு சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. அப்போதுதான் இந்த வகுப்புவாரி ஆணை அமலுக்கு வந்தது. இதில் பார்ப்பனர்களுக்கும் 16 விழுக்காடு வகுப்பு வாரி உரிமை வழங்கப்பட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். பார்ப்பனர்கள் எல்லாக் காலத்திலும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமான இடங்களைப் பெற்றிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதிதிராவிடர்களுக்கு மாகாண அரசில் (தற்பாதைய மாநில அரசு என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்) முதன் முதலில் இடஒதுக்கீடு அளித்தது சென்னை என்பதும், நீதிக்கட்சிதான் அதனை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுப் பணிகளை பொருத்தவரையில் இரயில்வே உட்பட சில துறைகளில் 1936ம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார், ஆதிதிராவிடர், முகமதியர் என அனைத்து தரப்பினருக்கும் வகுப்பு வாரி உரிமை வழங்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளில் ஆதிதிராவிடர்களுக்கு மத்திய அரசில் பணி அப்போது வழங்கப்படவில்லை. 1934ம் ஆண்டு முதல் முகமதியர் உட்பட சிறுபான்மை மக்களுக்கு மட்டும் மத்திய அரசில் பணி வழங்கப்பட்டது. 1943ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஆதிதிராவிடர்களுக்கு 8.5 விழுக்காடு மத்திய அரசுப் பணியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அம்பேத்கர் தொழில் துறை அமைச்சராக இருந்த காரணத்தினால் பார்ப்பனர்களிடம் போராடி இதனை பெற்றுத் தந்தார்.

மத்திய அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர்களுக்கு 12 விழுக்காடு என்கிற அம்பேத்கரின் நியாயமான கோரிக்கையை பார்ப்பனர்கள் நிராகரித்தனர். அதற்குப் பின் 1950ல் மத்திய அரசில் 12 விழுக்காடு உரிமையை ஆதிதிராவிடர்களுக்கு அவர் பெற்றுத் தந்தார். 1950ல்தான் இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது (சென்னை மாகாணத்தில் 1927லிருந்தே 8 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது என்பதை அறிக.) ஆனால் 1947 வரையிலும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற சொல் கூட மாகாண அரசிலும், மாநில அரசிலும் இடம் பெறவில்லை. பெரியார் அவர்கள் 1927லிருந்து 1947 வரை போராடி பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவினை சேர்க்க வைத்தார். 1947 வரை பார்ப்பனரல்லாதர் உரிமை என்கிற பெயரில் சைவ செட்டியார், சைவ முதலியார் போன்ற சமூகங்களே அனைத்து இடங்களையும் இருப்பதை கடுமையாக கண்டித்த அவர், பிற்படுத்தப்பட்டோர் (நாடார், கள்ளர், செங்குந்தர், ரெட்டி, கள்ளர், கோனார், ஆசாரி போன்ற சாதிகள்) என தனியாக வகைப்படுத்தி அவர்களுக்கு தனி இடஒLதுக்கீடு வழங்க வேண்டும் என்றார். 1951ல் அதற்காக முதல் சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தார். சென்னை மாகாணத்தில் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக 90களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவரின் முயற்சியால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் பல வடமாநிலங்களில் மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. 

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் அம்பேத்கரின் பங்கு

 இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 16ல் நான்காம் விதியில் கல்வியிலும், சமூகத்திலும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், அட்டவணை சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் வேலைவாய்ப்பில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறுகிறது. பார்ப்பனர்களின் வஞ்சகத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட மக்களை பாதுகாத்து அவர்களை முன்னேற்றுவதற்காக அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சி இது. அம்பேத்கர் தலையிடாவிட்டால் இந்த சட்ட விதியில், கல்வியிலும், சமூகத்திலும் என்கிற வார்த்தைக்குப் பதிலாக, any other backward class என்கிற வார்த்தையை சேர்த்து இருப்பர். அதாவது, எந்த பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் என்று பொருளாகி இருக்கும். அப்படி இருந்தால் பொருளாதார அளவுகோல் என்கிற பெயரில் பார்ப்பனர்கள் அந்த இடஒதுக்கீட்டை முழுமையாக கைப்பற்றியிருப்பர்.

அம்பேத்கர் செய்த இந்த உதவி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக கிடைக்கக் கூடாது என்பதில் சுதந்திர இந்தியா கவனமாக இன்றளவும் இருக்கிறது. மேலும், பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிற வரையில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் நமது பார்ப்பனத் தோழர்கள் தந்திரமாக சேர்க்க முயற்சித்தனர். அப்படி மட்டும் நடந்திருந்தால், பெண்கள் என்கிற அடிப்படையில் அனைத்து பார்ப்பன பெண்களும் இடஒதுக்கீட்டை அபகரிக்கும் சூழல் உருவாகும். அம்பேத்கரின் தலையீட்டால், பார்ப்பன அறிஞர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அம்பேத்கர் மட்டும் அரசியல் சாசன வரைவுக் குழுவில் இல்லாவிட்டால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகி இருக்கும். தமிழகத்தில் மட்டும் பெரியாரின் முயற்சியால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்திய அளவில் பார்ப்பனரல்லாதார்கள் வேலை வாய்ப்பில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு அம்பேத்கரின் பங்கு கணிசமானது. 

கல்வியில் இட ஒதுக்கீடு 

சென்னை மாகாணத்தில் 1940 முதல் கல்வி நிலையங்களில் அனைத்து வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1921முதல் சென்னை மாகாணத்தில் ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி தராத பள்ளிகளின் உரிமையை இரத்து செய்ய நீதிக்கட்சி ஆணை பிறப்பித்தது. 1950 முதல் இந்தியாவின் பிற மாகாணங்களில், ஆதிதிராவிடர்களுக்கு கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 1951ம் ஆண்டு பெரியாரால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைத்து வகுப்பினருக்கும், கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் இந்த சட்டம் சரியாக அமல்படுத்தப்பட வில்லை. 

பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு

மக்கள் தொகையில் சரி பாதி உள்ள பெண்களுக்கு 50 விழுக்காடு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே மிகச்சரியான சமூக நீதி. பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று வரும் போது தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அவர்களுக்கான 18 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்துவிடும். ஏனென்றால், அரசியலமைப்பு விதி 330ம் மூலம் மக்களவையிலும், 332ம் விதியின் மூலம் மாநிலங்களவையிலும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். இது அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த அரசியல் பிரதிநிதித்துவம். ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்று அரசியல் பிரதிநிதித்துவம் கிடையாது.

பார்ப்பனரல்லாதார்களுக்கு என்று 1919ம் ஆண்டு பிரிட்டிஸார் வழங்கிய அரசியல் பிரதிநிதித்துவம் 1950க்குப் பிறகு பறிக்கப்பட்டு விட்டது. ஆகவே பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் பட்சத்தில் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு. பிற்படுத்தப்பட்ட சமூக ஆண்களின் பிரதிநிதித்துவமும் பார்ப்பனப் பெண்களால் நிரப்பப்படும். ஆகவே பெண்கள் இடஒதுக்கீட்டில் சாதி ஒதுக்கீடு கேட்கும் தோழர்கள் முதலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்ப வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த அடிப்படையான கோரிக்கையை எழுப்புவதில்லை. ஏனென்றால், அவர்களில் பெரும்பாலானோருக்கு மகளிர் இடஒதுக்கீட்டில் உடன்பாடில்லை. சமூக நீதி உணர்வும், பாலியல் சமத்துவ உணர்வும் ஒருங்கே அமையப் பெற்ற பெரியாரிய சிந்தனையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக நமக்கு கிடைக்கும் பட்சத்தில் இந்த கோரிக்கை நிறைவேறும். 

பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீடும், பெரியாரின் போராட்டமும்

1921ம் ஆண்டு பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள், ஆதிதிராவிடர், இசுலாமியர் என அனைவருக்கும் வகுப்புவாரியாக இடஒதுக்கீடு பிறப்பிக்க ஆணை பிறக்கப்பட்டது. ஆனால் இதில் பார்ப்பனரல்லாதார்களுக்கு வழங்கப்பட்ட 44 விழுக்காட்டின் முழுமையான பங்கையும் முற்படுத்தப்பட்ட சாதியினராக உள்ள சைவ வேளாளர், திருநீலிகர், தொண்டை மண்டல முதலியார், காசுக்கடை செட்டியார், லிங்காயத்துக்கள் முதலிய வகுப்பினரே அபகரித்து வந்தனர். இதனைக் கண்டு கொதித்து எழுந்த பெரியார் பார்ப்பனரல்லாதர்களை முற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என இரு வகையாகப் பிரிக்க வேண்டும் என்றார். எவ்வாறு பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களின் பிரதிநிதித்துவத்தை அபகரித்தார்களோ அதை போல் முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவத்தை அபகரிப்பதாக பெரியார் குற்றம் சாட்டினார்.

ஆதிக்க மனநிலையோடு பார்ப்பனர் இருந்தாலும் சரி, திராவிடர் இருந்தாலும் சரி குற்றம் குற்றமே என்று வாதிட்ட சமூக நீதிப் போராளி தந்தை பெரியார் ஆவார். அவரின் பெருமுயற்சியால் 1947ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு 14 விழுக்காடு இடஒதுக்கீடும் அளிக்கப்பட்டது. இதற்கு முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காசுக்கடை செட்டியார், கருநீலிகர், லிங்காயத்துக்கள், சைவ முதலியார் போன்ற சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 1954ம் ஆண்டு பெரியார் பெருந்தொண்டர் காமராசர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை 25 விழுக்காடாக உயர்த்தினார். அதன் பிறகு தான் சாகும் வரை பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்காகப் போராடினார். பெரியார் போன்ற மாமனிதரை கண்டிராத வட மாநிலங்களில் இன்றளவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. பெரியார் திருத்திய அரசியலமைப்புச் சட்டம் 15ல் 4ன் படி மத்திய மாநில அரசுகளில் பிற்படுத்தப்பட்ட‌ மக்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும். ஆனால் 90களில் வி.பி.சிங் என்கிற பெருந்தகை முயற்சி எடுத்து 27 விழுக்காடு பெற்றுத் தரும் வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்றளவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் விகிதச்சாரா அடிப்படையில் இடஒதுக்கீடு மத்தியிலும் இல்லை, மாநிலத்திலும் இல்லை என்பது வேதனையளிக்க கூடியது. 

பறிபோன இசுலாமியர்களின் பிரதிநிதித்துவம்

1906ம் ஆண்டு முதல் போராடி 1909ம் ஆண்டு பிரிட்டிஸ் அரசிடமிருந்து தங்களுக்கு தனித் தொகுதிகள் வாங்கிய வரலாறு இசுலாம் சமூகத்தைச் சாரும். அரசியல் பிரதிநிதித்துவத்தில் எல்லோருக்கும் முன்னோடி நமது இசுலாமியத் தோழர்கள். 1921ம் ஆண்டே சென்னை மாகாணத்தில், வேலைவாய்ப்பில் 16 விழுக்காடு இடங்கள் இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதே போல் 1934ம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளில் இசுலாமியர்கள் உட்பட பிற சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பிரிட்டிஸ் இந்தியாவில் கிடைத்த இந்த உரிமைகள் அனைத்தும் சுதந்திர இந்தியா என்றழைக்கப்படும் தற்போதைய பார்ப்பன இந்தியாவில் இசுலாமியர்களுக்கு கிடைக்கவில்லை. அப்படியானால் இசுலாமியர்கள் அவர்களுக்கான உரிமை பெற்ற நாட்டில்தான் இருக்கிறார்களா அல்லது உரிமைகள் பறிக்கப்பட்ட நாட்டில் இருக்கிறார்களா என்கிற நியாயமான கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

தற்போது இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் 8 விழுக்காடு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1947ல் 14 விழுக்காடும், 1954ல் 16 விழுக்காடும், 1971ல் 18 விழுக்காடும் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட விகிதச்சாரா அடிப்படையில் இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கிறது என்று நாம் மகிழ்ச்சி கொள்ள்லாம். ஆனால் தமிழகத்தில் தேவந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என பூகோளத்தால், சமூக அமைப்பால், மொழியால் வேறுபட்டு வாழும் சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரே பிரிவின் கீழ் வகைப்படுத்தி இட ஒதுக்கீட்டை அளிப்பது சமூக நீதி ஆகாது. அதிலும் அருந்ததிய மக்களில் 40 விழுக்காடு பேர் துப்பரவு தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பிற தாழ்த்தப்பட்ட மக்களை விட மிகவும் தாழ்ந்து இருக்கிறது. ஆகவே அருந்ததிய மக்களுக்கு கடந்த திமுக அரசு 3 விழுக்காடு அளித்தது. இது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு வழங்கிய காரணத்தினால் ஆதிதிராவிடர் மற்றும் தேவந்திர குல வேளாளர்களுக்கு தற்போது 15 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே இருக்கிறது. ஆனால் தற்போது புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அருந்ததிய அமைப்புகள் தங்களுக்கு 6 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை தற்போது எழுப்பி வருகின்றனர். அருந்ததிய மக்களுக்கு அளிக்கப்பட்ட 3 விழுக்காடு இடங்களே இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் போது 6% என்பது தேவையற்ற வாதமாகும். மேலும் இது பிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் பகைமையை வளர்க்கக் கூடிய ஆபத்தை உருவாக்கும். இந்த 6% கோரிக்கையை வலியுறுத்தி பல அருந்ததிய தோழர்கள் தீக்குளித்துக் கொண்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அருந்ததிய அமைப்புகள் உடனே இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தனித்தனியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 6% உள் இடஒதுக்கீடு கோரிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக விகிதச்சாரா இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அருந்ததிய அமைப்புகள் போராட வேண்டும். அதுவே அனைவருக்குமான சரியான சமமான சமூக நீதி. 

பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய நிலை

1921ல் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலிருந்து 1947 காங்கிரசு காலம் வரை பிற்படுத்தப்பட்டோர் என்கிற வகைப்பாடு இல்லை. அதற்குப் பிறகு 14 விழுக்காடு மாகாண அரசில் வழங்கப்பட்டு, 1980லிருந்து 50 விழுக்காடு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசில் 90க்குப் பிறகே 27% வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர்கள் 62க்குப் பிறகே பதவிக்கு செல்வதில் பிரதிநிதித்துவம் பெற ஆரம்பித்தனர். ஆனால் 79லிருந்து பொருளாதார அளவுகோலை முன் வைத்து இவர்களின் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது பார்ப்பன அதிகார வர்க்கம். அரசியலமைப்பு சட்டம் 15ல் 4ம் விதியும், 16ல் 4ம் விதியும் இட ஒதுக்கீட்டிற்கு அரணாக இருந்தும், அதற்கு எதிராகவே அதிகார வர்க்கம் செயல்படத் துடிக்கிறது. திராவிட இயக்கங்கள், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, ராஸ்ட்ரிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வான் ஆகிய அமைப்புகளின் முயற்சியால் பிற்படுத்தப்பட்டோர் நலன் இந்திய அளவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

வன்னியர் சங்க போராட்டத்தின் விளைவுகள்

80களின் இறுதிக் கட்டத்தில் வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வட தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைக்கு வன்னியர் சங்கமாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சிதான் இந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது. அந்தப் போராட்டங்களுக்கு சமூக நீதி அமைப்புகள் ஆதரவு அளித்தன. அந்த வீரிய போராட்டஙகளின் விளைவால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவு தனியாக உருவாக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோரில் இருந்து 20% தனியாகப் பிரித்து MBC என்கிற பிரிவு உருவாக்கப்பட்டது. அதில், வன்னியர், பிரான்மலைக் கள்ளர், கொண்டைய கொட்ட மறவர், வண்ணார், நாவிதர், தேவாங்கர செட்டியார், முத்தரையர், வலையர் உட்பட பல சாதிகள் இணைக்கப்பட்டன. ஆக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தற்போது 30% மட்டுமே. பிற்படுத்தப்பட்டோர் என்று வகைப்படுத்தினாலும், அதிலுள்ள நூற்றுக்கணக்கான சாதிகளையும் ஒரே தட்டில் வைத்து இடஒதுக்கீடு வழங்கமுடியாது. இதனால் குறிப்பிட்ட முன்னேறிய சாதிகளே 30% இடங்களையும் அபகரித்துக் கொள்கின்றன. முற்படுத்த சமூகமாக இருந்த கொங்கு வேளாளர் சமூகங்கள் பிற்படுத்தப்பட்ட சமூங்களாக்கப் பட்டுள்ளது. இதனால் உண்மையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களாக இருக்கிற நாடார், கோனார், ஆசாரி போன்ற சமூகங்கள் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற இயலவில்லை. இந்தப் பிரச்சனை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் என வகைப்படுத்தப்பட்ட பட்டியலிலும் இருக்கிறது. ஆக இதற்கெல்லாம் ஒரே தீர்வு சாதி அடிப்படையில் அந்தந்த மக்கள் தொகைக்கேற்ப விகிதச்சாரா அடிப்படையிலான இடஒதுக்கீடு வழங்குவதே ஆகும். 

நமக்கு கிடைத்தது விடுதலையா? விலங்கா?

 1947க்குப் பிறகு வெள்ளைக்காரனிடமிருந்து அதிகாரம் பார்ப்பன பனியா கும்பலுக்கு மாறுகிறது. ஆகவே ஆகஸ்ட் 15 நமக்கு கறுப்பு தினம் எனறு அறிவித்தார் பெரியார். அது எந்த அளவிற்கு உண்மை என்பதை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 1921ம் ஆண்டு பார்ப்பனர் உட்பட அனைத்து வகுப்பினர்களுக்கும் வகுப்பு வாரி இடஒதுக்கீடு வழங்கியது நீதிக்கட்சி ஆட்சி. தனக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வாங்கித் தந்த நீதிக்கட்சி முன்னோடிகளின் அறிவு நாணயம் இன்றைய தில்லி அரசிற்கும், பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும் உண்டா? நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் 16% இடஓதுக்கீடு பெற்ற நமது இசுலாமியத் தோழர்களுக்கு இந்த டில்லி அரசு செய்தது என்ன? மத்தியில் 10%க்கும், மாநிலத்தில் 3.5%க்கும் அவர்கள் மன்றாட வேண்டிய அவல நிலைதான் உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்காமல் வஞ்சம் செய்தது பிரிட்டிஸ் அரசா அல்லது காந்தியின் பனியா வர்க்கமா? இங்குள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் இசுலாமிய மக்களுக்கு மத்திய அரசில் இதுவரை உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க விடாமல் வஞ்சிப்பது தில்லி அரசா? பிரிட்டிஸ் அரசா? இதையெல்லாம் நாம் சீர்தூக்கிப் பார்த்தால், இந்தியா என்கிற அமைப்பு உருவானதே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற மனுதர்ம அமைப்பை புனரமைக்கும் முயற்சியே என்பது புலனாகும். இந்த துணைக்கண்டம் முழுவதும் விரவி இருக்கின்ற சனநாயக ஆற்றல்கள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், இடதுசாரிகள் என இவர்களின் வீரிய மிகு போராட்டத்தினால்தான் இந்துத்துவ சக்திகளின் ஆதிக்கம் கட்டுபட்டுத்தப்படுகிறது. 

வகுப்புரிமை போராட்டத்தின் முன்னோடிகள்

மைசூர் மகாராஜா, மகாராஸ்டிரத்தில் கால்கபூர் சமஸ்தான மன்னர் பரோடா மன்னர்,  பனகல் அரசர், புருசோத்தம நாயுடு, சுப்பிரமணியம், சரவணப்பிள்ளை, வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், நாராயணசாமி நாயுடு, சி.நடேச முதலியார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர். டி.மாதவன், பெரியார், அம்பேத்கர், லோகியா, இவர்களின் வழியில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கல்வி , வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வழி வகை செய்ய வேண்டும். அதற்கு பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் நமது இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும். சமூக நீதி வெல்லட்டும்! சமத்துவத்திற்கான பயணம் தொடரட்டும்!

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It