அரசியல் நிகழ்வுகளில், கோத்தபய ஆதரவு நிலைப்பாடுகளோடு, அவ்வப்போது தவணை முறையில் ஒருபக்கப் பேட்டி தட்டுவது இந்து ராமின் பழக்கம். கடந்த 1ம் தேதி இந்து தமிழில் 'சாத்தியம் இல்லாதது தமிழீழம்' என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் இந்து ராமின் பேட்டி வெளிவந்தது. தனது அரசியல் ஆர்வம், பத்திரிகைப் பணி, ஃபோர்போஸ்,மோடி, பிரபாகரன், தமிழீழம், திராவிட நாடு என்று எட்டுத் திக்கும் பாய்ந்து தனது கருத்தை கக்கியிருக்கிறார் இந்த கருத்து கந்தசாமி.

சிங்கள இனவாத கூட்டாளிகளின் குறிப்பறிந்து செயல்படுவதில், இந்து ராமின் ஒரு பக்க கட்டுரைகள் அல்லது நேர்காணல்கள் தங்களுக்கான பணியை மிகச் சிறப்பாகவே செய்துவருகிறது. ஈழப் போரின்போது கோத்தபய ராஜபட்சேவின் ஊது குழலாகவே மாறியிருந்த ராமின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் கண்கூடாகவே பார்த்திருக்கிறோம். அப்படி இருக்க... பிரபாகரன், தமிழீழம் போன்ற அல்வா சாப்பிடும் தலைப்புகளில் பேசுவது என்றால் இந்து ராமுவிற்கு கசக்கவா போகிறது?.

"தொடக்கம் முதலே 'தி இந்து' தனித் தமிழீம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்துதான் வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.

இறுதி போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து ராஜபட்சே தயக்கமின்றிச் செயல்படவேண்டும்" என்று தனது நுண்ணிய அரசியல் அறிவை இப்பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ராம்.

போரில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜபட்சேவிற்கு என்ன தயக்கம் இருந்துவிட போகிறது? கொலை செய்தவனையே, கொலை சம்பதமாக விசாரிக்கச் சொல்லி தீர்ப்பு சொல்லவேண்டும் என்றால் அவன் என்ன ஜகா வாங்கவா போகிறான்? இறுதிப் போரின் போது புலிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று கூறிக் கொண்டு ஃபிரி சோனில் இருந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களிடமே விசாரணை செய்யக் கோருவது என்பது எத்தகைய அபத்தமானது?. இதைத்தானே இவர்கள் விரும்புகின்றனர்.

போர் மும்முரமாக நடைபெற்றபோது, தமிழகத்தில் சில ஊடகங்களுக்கு பணமும் ஏக்கரா கணக்கில் தேயிலைத் தோட்டங்களும் பரிசாகத் தரப்பட்டது என்ற வதந்தி இன்றும் உயிர்ப்புடன் நிலவி வருகிறது. தங்களது இலங்கை தேயிலைத் தோட்டங்களில் தேயிலை முனை கிள்ளுவது போல், இவர்கள் இலங்கைப் பிரச்சனையை கிள்ளி பலன் அடைந்து வருகின்றனர். அதன் தொடர் பராமரிப்புக்காகவே இங்கே இத்தகையதொரு ஒப்பந்த புதிப்பிப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றனவோ என்ற அய்யம் எழத்தான் செய்கிறது?

அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவாத அரசு கொன்று குவித்த அந்த இறுதிப் போரின் போது பல நேர்காணல்கள் இந்துவில் வெளிவந்திருக்கிறது. ராஜபட்சேவை நேரடியாக சந்தித்து, பேட்டியும் புகைப்படமும் எடுத்து, ஒரு பக்க அளவில் வெளியிடுவார் இந்து ராம். 'ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள்' என்பதுபோல், அந்த ரிஸ்க்கான நேரத்தில் வெளிவந்த பல நேர்காணல்களுக்கு நல்லதொரு ரஸ்க் கிடைத்திருக்கும்தானே...?!.

இதில் காங்கிரஸ் அரசின் ஆதரவோடுதான், இத்தகைய ராஜபட்சே நேர்காணல்கள் இந்தியாவில் வெளிவந்தன. அதே கூட்டணி கண்டினியுட்டிதான் இந்து ராமை, நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு பக்க கட்டுரைகளை இரு முறை எழுதச் செய்தது. கூட்டி கழித்துப் பார்த்தால் ஒரு கணக்கு புரியும். சிங்கள அரசு, காங்கிரஸ் அரசு பிளஸ் இந்து ராம் இவை மூன்றுமே தமிழர்களுக்கு எதிரான தீய சக்தி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

இப் பேட்டியில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனை போல்பாடிஸ்ட் என்று வர்ணித்திருக்கிறார் இந்து ராம். கம்போடிய கொடுங்கோலனான போல்பார்ட் லட்சக் கணக்கில் தனது நாட்டு மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவன், உலக கொடுங்கோலர்களில் அவனும் ஒருவன். அத்தகைய போல்பார்டோடு பிரபாகரனை ஒப்பிட்டு பேசி இருப்பது, ராஜபட்சேவின் உப்பைத் தின்றவனால்தான் முடியும். உலக தமிழர்களிடையே இச்செய்தி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய சுபாஷ் சந்திர போஸ், சீனா விவசாயிகளுக்காக போராடிய மாசேதுங், ஜார் மன்னனை வீழ்த்தி ரஷ்யப் புரட்சியை தோற்றுவித்த லெனின், பிரஞ்சு ஆதிக்கத்தையும் அதற்குத் துணை வந்த அமெரிக்க ஏகாதிபத்தியப் படைகளை தோல்வியுறச் செய்து வியட்நாமை காப்பாற்றிய ஹோ-சி- மின், பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய யாசர் அராபத், 27ஆண்டுகால இருட்டறையில் இருந்து, தனது கருப்பின மக்களை இருட்டறையில் இருந்து மீட்ட நெல்சன் மண்டேலா, உலகப் புரட்சியளர்களின் உன்னத அடையாளமான சேகுவேரா என்று இந்த உலகை உய்வித்த உத்தமர்கள் மிகச் சொற்பமே. அந்த வரிசையில் வரக்கூடிய மாபெரும் புரட்சியாளர் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்.

20ம் நூற்றாண்டில் இறுதியில்தான் ஈழ விடுதலைப் போரானது உக்கிரம் பெற்றது எனலாம். முன் சொன்ன பத்தியில், ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கும் ஏதோ ஒரு நாடு ஆதரவு தெரிவிக்க... தமிழ ஈழப் போராட்டம் மட்டுமே எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாமல், புலம் பெயர்ந்த தாய் வழி உறவுகளின் ஆதரவால் நடைபெற்றது. நான்காம் கட்ட இறுதிப் போரின் போது கிட்டதட்ட 12 நாடுகளின் கூட்டு ராணுவ ஆயுத உதவியோடு போரிட்ட, சிங்களப் படையினரை புலிகள் எதிர் கொண்டனர். தனது தாய் மண்ணை மீட்டெடுக்க நடைபெற்ற போரில் இறுதிவரை களமாடினர்.

ஈழ விடுதலைப் போராட்டம் என்பது முன்பு அறவழிப் போராட்டமாகத்தான் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அறவழி என்பது அறமற்ற மனிதர்களின் காதுகளை எட்டாது என்பதை புரிந்து கொண்ட பின்னரே அறவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. தனது 16 வயதில் ஈழப் போராட்டக் களத்தில் குதித்தவர் பிரபாகரன். கிட்டதட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது குடும்பத்தின‌ரை விட்டுப் பிரிந்து காட்டில் வாழ்ந்து கொரில்லா போர் முறையில் தனது மக்களுக்காகப் போராடிய மாவீரன் பிரபாகரன்.

கையில் இருக்கும் இரண்டு லிட்டர் தண்ணீரைக் கொண்டு ஒரு வாரம் வரை தாக்குப் பிடித்து தாக்கும் திறன் கொண்ட படையினரை தம்பிகளாகக் கொண்டவர் பிரபாகரன். திட்டமிடுதல், எதிர்பாராத தாக்குதல், அடர்ந்த காடுகளில் மரங்களில் பரண் அமைத்து தங்கி தாக்குதலைத் தொடர்தல் என்று சிங்கள இனவாத அரசை எதிர்த்து தனது மக்களுக்காகப் போராடியவர் பிரபாகரன்.

1984ல் சண்டே இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுத்தபோது, "நீங்கள் போராட்டக் களத்தில் ஈடுபட தனிப்பட்ட முறையில் ஏதேனும் காரணம் இருக்கிறதா?. சிங்கள அரசால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா...?" என்ற கேள்வியை கேட்டார். "1958களில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, சிங்கள இனவாத அரசு தமிழர்களின் வீடுகளைக் கொளுத்துவதும், ஆண்களை கொலைச் செய்தும் பெண்களை வன்புணர்வு செய்தும் பெரும் துயரங்களை எமது மக்கள் மீது திணித்தது. சிறு குழந்தைகளை கொதிக்கும் தார்களில் வீசிக் கொன்றனர். இத்தகைய நெஞ்சை உலுக்கும் பல துயரக் கதைகளை நான் கேட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் நான் கேட்கும்போது, என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி மிருகங்களிடமிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் உந்துதல் ஏற்பட்டது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுகெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை, ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்" என்றார். அத்தகைய மேன்மை கொண்டவர் பிரபாகரன். இதெல்லாம் இந்தப் பதர்களுக்கு எப்படித் தெரியும்?

தாய் மொழி , தாயினம், தாய் நாடு இவை மூன்றும் பிறப்பு வழியில் நாம் பெற்றுள்ள உரிமைகள் ஆகும். இந்தப் பிறப்புரிமைகளை காப்பதும், உரிமைகளைப் பறிக்கப்படுமானால் போராடி மீட்பதும் இயல்பான மாந்தர் கடமை. இத்தகைய கடமை உணர்வுகள் இல்லாதவர்கள் 'மக்கட் பதடிகள்' என்பார்கள். ஈழ விடுதலைப் போர் என்பதும் தமிழீழம் என்பதும் எள்ளி நகையாடுவதற்கும், தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த பிரட் பட்டர் ஜாம் என்றும் இந்து ராம் போன்றோர் நினைத்து விடுகிறார்கள். நாற்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டம் என்பது நேரம் போகாமல் பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களது விடுதலைக்காக, களப்பணியாற்றி உயிர் உடமை இழந்து, காடுகளை இழந்து, வாழ்விழந்து, உறவிழந்து போனவர்களின் ஜீவ மரணப் போராட்டம் என்பதை இத்தகைய ஊடகவியலாளர்கள் உணரவேண்டும்.

- தோழன் மபா, சென்னை-109 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

3 comments

3
kumarasamy
இந்திரா காந்தி போராளிகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளித்த காலத்திலேயே பார்த்தசாரதி இந்தியாவின் வெளியிறவு கொள்கைஎன அறியத்தந்தது இந்தியாவில் உள்ளது போன்றொரு மாநில சுயாட்சி முறையைத்தான். அது தான் இன்று வரையும் எல்லா அரசுகளாலும் கடை பிடிக்கப்படுகிறது. அதனால்தான் வாஜ்பாய் காலத்தில் 20,000 சிங்களப்படையினர் சுற்றி வளைக்கப்பட்டபோது இந்திய அரசுப் படைகள் தலையிடும் என்று கூறியபோது தமிழ் நாட்டு அரசியல் உலகம் அமைதியாகத்தான் இருந்தது. முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தமிழ் மக்கள், அரசியல் தரகர்கள் பிடியில் இல்லாத தமிழ் மக்கள் மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்து தங்களால் ஆன எதிர்ப்பை தெரிவித்தனர். மற்றவர்கள் கனத்த மௌனமே? விடுதலைப்புலிகள் இரண்டு எதிரிகளுடன் போரிட்டனர் ஒன்று சிங்கள ராணுவம், இன்னொன்று இந்திய பிராமணத்துவம். சிங்கள ராணுவம் மட்டம் என்றால் என்றோ வெற்றி கிடைத்திருக்கும். இந்திய பிராமணத்துவம் என்பதால்தான் இந்த நிலை. பிராமணத்துவம் இன்று வரையும் கூறுகிறது விடுதலை புலிகளும் சிங்கள ராணுவமும் போரு குற்றம் புரிந்துள்ளனர் என்று சரவ சர்வதேச அமைப்புகள் தெளிவு படுத்திய பின்னாலும் கங்காணிகளும் இந்திய ஊடங்களும் இன்றும் இதையேதான் சொல்லி வருகிறது. நாளையும் சொல்லும் அப்படிச் செல்வபவர்களுடன் இங்குள்ள கங்காணிகள் கூச்சமில்லாமல் கூட்டும் வைப்பார்கள் வெற்றியும் பெறுவார்கள்
manoharan
Ram is running The Hindu Tamil issue only as a timepass.Both Ram and Cho will never understand what is known as revolution.We can add Subramaniyam Swamy in this list.He was one who was smiling in the TV debate about the killing of Balachandran.All the three do not have heart .
Salanan
இந்திய அரசியல் சட்டத்தின் படி வடக்கே தில்லியில் நிலை கொண்டு இருக்கும் மத்திய அரசு தான் சர்வ வல்லமையும் பொருந்தியது. அதன் ஆட்சியாளர்களும் அதிகாரவர்க்கத்தினரும் தான் முக்கிய மற்றும் பெரும்பாலான அதிகாரங்களை வைத்துள்ளனர். மாநில அரசுகளிடம் குறிப்பாக முதலமைச்சர்களிடம் மிகக்குறைந்த அதிகாரங்களே உண்டு. இந்த அதிகாரங்களிலும் பல எமெர்ஜென்சியின் போது பொதுப்பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டு பிடுங்கப்பட்டு விட்டன. ஆகையால் மத்திய ஆட்சியாளர்களால் நியமிக்கப்படும் ஆளுனரின் கீழ் செயல்படும் மாநில முதலமைச்சர்கள் கிட்டத்தட்ட ’டம்மி பீஸ்கள்’ என்பதில் சந்தேகமே இல்லை. நம் தமிழ்நாட்டின் ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் கூடுதலாக ’காமெடி பீஸ்’கள் என்பது தான் வேதனையான வேடிக்கை. இதை புரிந்து கொள்ளாமல் கட்சிக்காரர்கள் என்னும் பெயரில் ஆளுக்கு ஒரு ஜால்ரா கும்பலை வைத்துக்கொண்டு இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறையும் வெட்டி பந்தாவும் அளவிட முடியாதது. ஜெயலலிதா தன்னை ’புரட்சி தலைவி’ என சொல்லிக்கொள்கிறார். பலரை தன் காலில் விழவைத்து ரசிக்கிறார். யாராவது தனக்கு ஆகாதவர்கள் என்றால் அவர்களை சிறையில் தள்ளி தன்னை பெரிய ஆள் என்றும் காட்டிக்கொள்கிறார் (இவரால் இவ்வளவு தான் செய்ய முடியும்). ஆனால் தில்லியில் இவருடைய நிலை என்ன தெரியுமா?. மணியடித்தால் பேசுவதை இவர் நிப்பாட்டிக்கொள்ள வேண்டும். இஷ்டமில்லை எனில் வெளியே வந்து விடலாம். யாருக்கும் பிரச்சினை இல்லை. அவ்வளவு தான். தமிழகத்துக்கு வெளியே கருணாநிதிக்கு இருக்கும் மரியாதையை பற்றி சொல்லவே நா கூசும். தமிழக அரசியல்வாதிகளுக்கு, தமிழ்நாட்டுக்கு வெளியே, குறிப்பாக தில்லியில், ஒரு மரியாதையும் கிடையாது. மத்திய அரசில் இருப்பவர்கள் (அதிகாரிகள் உட்பட) இவர்களின் பேச்சுக்களையும் செயல்களையும் கடிதங்களையும் ஒரு பொருட்டாக கருதுவதே கிடையாது. இந்த லட்சணத்தில் இந்த பந்தா கேஸ்களில் யார் பெரியவர், அசகாய சூரர் என குழாயடிச்சண்டையும் நாய்சண்டையும் திராவிட கட்சியினரிடையே தினந்தோறும் தமிழக வீதிகளில் நடக்கிறது. ஐந்து காசுக்கு பிரயோசனமில்லாத ஒரு விசயத்துக்கு “சூடு சொரணை இருந்தால்.........” என்னும் வாசகம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உதிர்க்கப்பட்டது ஒரு உதாரணம். இம்மாதிரியான சண்டைகளுக்கு தான் இவர்கள் லாயக்கு. மத்திய அரசில் இருப்பவர்கள் சரியாகவே இருக்கிறார்கள். வளைந்து கொடுப்பது மாதிரி அவ்வப்போது காட்டிக்கொண்டாலும் தெளிவான கொள்கைகளோடு தான் அவர்கள் செயல்பட்டுவருகிறார்கள். ஒரு பக்கம் சென்னை வந்தால் நமுட்டு சிரிப்போடு தமிழர்களுக்காக பரிந்து பேசுவது, இன்னொரு பக்கம் தமிழர்களை ஒழிக்கும் சிங்கள அரசுக்கு கூட்டுப்பயிற்சி, ஆயுத உதவி, போர் விமானங்கள், சர்வதேச ரீதியில் அரசியல் அனுசரணை ஆகியவற்றை வழங்குவது என நன்றாகவே அவர்கள் செயல்படுகிறார்கள். தமிழக அரசியல்வாதிகளோ தங்களின் கேவலமான நிலையை உணராமல் தங்களை வானளாவிய அதிகாரமும் புகழும் உள்ள கடவுளர்களாக கருதிக்கொண்டு தங்களுக்கிடையே குழாயடிச்சண்டையும் நாய்ச்சண்டையும் நடத்தி காலங்கழிக்கிறார்கள். உலகத்தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவில் தள்ளி வருகிறார்கள். தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சியினரின் நிலையை விட ஈழத்தின் தமிழ் தேசிய கூட்டணியினரின் நிலை மோசம். அங்கு மக்களால் முழு ஆதரவோடு விக்னேசஸ்வரன் போன்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு இங்கிருப்பவர்களுக்கு இருக்கும் அதிகாரம் கூட இல்லை. இதை புரிந்து கொண்டதால் தான் அவர்கள் அலப்பறை செய்வதில்லை. தமிழகத்தின் டம்மி பீஸ்களுக்கு தான் தங்களின் உண்மை நிலை தெரியவில்லை.
இப்போது ஈழத்தில் இருக்கும் எஞ்சிய தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிறார்கள். அங்கு வாழும் மக்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார்கள். இளம்பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது. தமிழர்களின் நிலம் சிங்கள இராணுவத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளது. தமிழ் மக்களுக்கு போட்டியாக விவசாயம் போன்ற தொழில்களை செய்து குறைந்த விலைக்கு தமிழர்களுக்கே அவர்கள் விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் தொழில் வளர்ச்சி முடங்கியுள்ளது. சிங்கள குடியேற்றவாசிகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. வளர்ச்சி திட்டங்கள், சுற்றுலா வளையம், இராணுவ முகாம் என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் தந்திரமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ஈழத்தின் கிழக்கு மாகாணத்தை பற்றி இப்போது யாரும் மூச்சுவிடுவதில்லை. அங்கு நடக்கும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு மறைமுகமாக அங்கீகாரமே கொடுக்கப்பட்டு விட்டது. வட மாகாணத்தையாவது விட்டுவையுங்கள் என்று தான் குய்யோமுறையோ என கூக்குரலிடுகிறார்கள். இன்று உலகத்துக்கு நாட்டாமை செய்யும் அமெரிக்கா என்னும் நாட்டுக்கு வெறும் முன்னூறு ஆண்டுகள் வரலாறே உண்டு. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள் இல்லை. இன்றைய உலகின் பெரும்பாலான நாடுகளின் வரலாற்றை நோக்கினால் அவை ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மிகாதவை. ஆனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாண ராச்சியத்தை நிறுவி அரசாண்ட ஈழ மக்கள் இன்று சொந்த மண்ணிலேயே அந்நியர்களாகவும் அடிமைகளாகவும் உழன்று அழியவேண்டிய நிலை!.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.