“காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா!“ மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா! என்று சித்தர் ஒருவர் பாடியது போல, கூடங்குளம் அணுஉலை இன்னும் ஒரு வெற்றுக்குடுவையாக, வெற்றுக்கூடாரமாகத் தான் இருந்து வருகிறது. கன்று ஈனமுடியாத காளைகளாகவே அவைகள் இருக்கின்றன.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசின் ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகால கனவுத்திட்டம் தான், கூடங்குளம் அணுஉலை. இன்று வரை கூடங்குளம் அணுஉலை காங்கிரசு ஊழல்வாதிகளின் ஒரு கற்பனைத் திட்டமாகவே இருந்து வருகிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இன்று வரை நமது காதில் பூ சுற்றும் வேலையை காங்கிரசு அரசு தெளிவாக செய்துவருகிறது. தரமற்ற, போலியான இயந்திர பாகங்களால் கட்டப்பட்ட கூடங்குளம் அணுஉலைகள் ஆபத்தானவை என்று மக்கள் முடிவு எடுத்து போராடத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து 90 முறைக்கு மேலாக கூடங்குளம் அணுஉலையை இயக்குவதற்கு நாள் குறித்து மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். அது இன்று வரை நடக்காத ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 2013 செப்டம்பர் மாதம் முதல், நாங்கள் கூடங்குளம் முதல் உலையில் இருந்து 400 மெகாவாட் உற்பத்தி செய்து கொடுத்து விட்டோம் என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், தான் ஒரு பொறுப்பான அமைச்சராக இருக்க வேண்டுமே என்ற உணர்வுகூட இல்லாமல் இப்படி ஒரு மகா பெரிய பொய்யை ஊடகங்களுக்கு கட்டவிழ்த்துவிட்டார். இந்த சரடு போதாதென்று, இனி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்து கொடுத்து விடுவோம் என்று வெற்று வாக்குறுதி வேறு கொடுத்திருக்கிறார்.

“கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்” என்று சொல்வது போல, அவர்கள் பல ஆண்டுகளாக முக்கி முக்கி முயற்சி செய்து பார்த்தும் இதுவரை ஒரு மெகாவாட் மின்னுற்பத்தி கூட செய்ய திறனும், திராணியும் இல்லாமல் இருக்கும்போது, வணிகரீதியான மின் உற்பத்தி செய்வதற்கான காலத்தையும் அணுமின்கழக நிர்வாகம் தொடர்ந்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கும் சூழலில், அதை தற்போது 2013 டிசம்பர் மாதத்திற்கு (தற்போது வரை தொடர்ந்து) ஒத்தி வைத்து வருகிறது. முதல் அணுஉலையில் தற்போது எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. அதை இந்திய அணுமின்கழகத்தின் இணையதளமே தெளிவாக சொல்லுகிறது. முதல் அணுஉலையில் ஆண்டுக்கு .01 விழுக்காடு பணிகள் மட்டுமே குறிப்பாக இந்த 2013 ஆண்டு முழுவதும் நடந்துள்ளது. இந்த 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 99.76 % இருந்த பணி நிறைவு விழுக்காடு, தற்போது இந்த 2013 ஆண்டின் இறுதியில் 99.77 %க்கு உயர்ந்துள்ளது.

முதல் அணுஉலை இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையில், இந்திய அணுமின்கழகம் இரண்டாவது அணுஉலையில் அவசர அவசரமாக மாதிரி எரிபொருளை ஏற்றி அங்கே பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இதையும் அவர்களது இணையதளச் செய்தியே தெளிவாக குறிப்பிடுகிறது. இரண்டாம் அலகில் இந்த 2013 ஆண்டின் தொடக்கத்தில் 94.16% விழுக்காடு பணிகள் நிறைவடைந்ததாக அறிவித்த, அவர்களின் பணி குறித்த பட்டியல் தற்போது இந்த 2013 ஆம் ஆண்டின் இறுதியில் தற்போது 96.24% விழுக்காடு பணிகளை எட்டியுள்ளதாக தெரிவிக்கிறது. இந்த பணி நிறைவு குறிப்பில் இருந்து, முதல் அணுஉலையில் .01 விழுக்காடு பணிகளே நடந்துள்ளன. ஆனால், இரண்டாவது அலகில் மட்டுமே 2.08% பணிகள் விரைந்து முடிக்கப் பட்டுள்ளன. முதல் அணுஉலை இயங்க முடியாத சூழ்நிலையில், அந்த உண்மையை மூடி மறைப்பதற்காக, அவசர அவசரமாக, இரண்டாவது அணுஉலைப் பணிகளை விரைந்து முடித்து, அதை இயக்கி, அதில் வரும் மின்சாரத்தை, வைத்து இரண்டு அணுஉலைகளும் சிறப்பாக வேலை செய்கின்றன, மின்சாரம் தயாரிக்கின்றன என்று சொல்லி, ஏதாவது கணக்கு காட்டி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றார்கள். அப்படி அவர்கள் எவ்வளவுதான் விரைந்து வேலைகளைச் செய்தாலும், இரண்டாவது அணு உலையும், முதல் அணுஉலை சந்திக்கின்ற அதே வகையான சிக்கல்களில் மாட்டி சிக்கித் தவித்து வருகிறதென்பது வெள்ளிடைமலை.

அப்படியே அந்த இரண்டாவது அணுஉலையை இயக்க அவர்கள் முயற்சி எடுத்தாலும், அப்படியே அது இயங்கும் சூழ்நிலையில் இருந்தாலும், அதற்கு இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாவது நிச்சயம் எடுக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. எது எப்படியோ, எதிர்வரும் மக்களைவைத் தேர்தல் வரும்வரை, மத்தியில் அடுத்த ஆட்சி உருவாகும் வரை கூடங்குளம் அணு உலையின் இயக்கம் குறித்த வதந்திகள் இன்னும் தேர்தலையும் கடந்து தள்ளிப்போகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இது ஒரு புறம் இருக்க, இந்திய அணுமின் கழகம் திடீரென ஒரு புரளியை கட்டவிழ்த்து விட்டது. அதாவது கூடங்குளத்தின் முதலாவது அணுஉலையில் கடந்த அக்டோபர் மாதம் 22ம் நாள் அதிகாலையில் மின்உற்பத்தி துவங்கியது. அதிகாலை 2.45 மணிக்கு 75 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் துவங்கிய அணுஉலையில் காலை 4.30 மணிக்கு 160 மெகாவாட் ஆக மின்உற்பத்தியானது, உற்பத்தியான அந்த மெகாவாட் மின்சாரத்தை அவர்கள் உடனடியாக தென்மண்டல தொகுப்பிற்கு (திருநெல்வேலியில் அபிசேகப்பட்டியில் இருக்கும் மின்மாற்றி/ மின் பகிர்மான மையத்திற்கு) கொடுத்துவிட்டதாக ஒரு உலக மகா புழுகை கட்டவிழ்த்து, ‘கூடங்குளம் அணு உலை இயங்கிவிட்டது, அதற்கு உயிர்வந்து விட்டது’ என்ற ஒரு மாயையை உருவாக்கி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். மின்சாரம் கரைபுரண்டு ஓடுவது போன்ற தோற்றத்தை நாட்டு மக்களுக்கு கொடுத்து அவர்களை நம்ப வைத்துவிட்டதுபோல கற்பனை செய்து தற்போது தான் ஓய்ந்து போயிருக்கிறார்கள்..

கடந்த அக்டோபர் மாதம் 22ம் நாள் அதிகாலையில் மின் உற்பத்தி தொடங்கியதாக சொல்லப்பட்டு சில மணி நேரங்களில் அதன் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனிடையே ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு மின்உற்பத்தி தொடரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த நாளான அக்டோபர் 23ம் நாளும் அணுஉலை இயங்கவில்லை, அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 24 மாலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியதாக வளாக இயக்குனர் திரு. சுந்தர் அறிவித்தார் ஆனால் 24 அன்று மாலையில் மின்உற்பத்தி துவங்கியதாகவும், மத்திய மின்தொகுப்பில் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. முதல் நாள் அக்டோபர் மாதம் 22ம்நாள் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் மின்சார அளவுகளும், பின்னர் அக்டோபர் மாதம் 25ம்நாள் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் மின்சார அளவு கணக்கீடுகளும் ஒவ்வொரு நாளிதழிலும் வெவ்வேறாக மனம்போன போக்கிலே பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது மிகவும் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது. தினமலர் இதழிலே 125 MW என்றும், தினமணி இதழிலே 160 MW என்றும், தி ஹிந்து (ஆங்கிலம்) 180 MW என்றும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிலே 300 MW என்றும் காயா பழமா என்கிற அடிப்படையில் கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குனர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்னரே, அவரையே மிஞ்சும் அளவிற்கு இவர்களே மின்சாரம் தயாரித்து மின்தொகுப்பிற்கு நேரடியாக வழங்குவது போல கணக்குச் சொல்லி, நாட்டு மக்களை, இந்திய அணுமின்கழகம் ஏமாற்றுவதை விட, அதையும் மிஞ்சும் அளவிற்கு பொய்யையையும், புரட்டையும் சும்மா வாய்க்குவந்தபடி அள்ளித் தெளித்தார்கள். இவர்களுக்கு எந்த அதிகாரப் பூர்வமான, எழுத்துப்பூர்வமான பத்திரிக்கைச் செய்தியும் இதுவரை அணுஉலை வளாக இயக்குனரால் முறைப்படி கொடுக்கப்படாமல், ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம்போல திரு.சுந்தர் அவர்களிடம் தொலைபேசியில் செய்திகேட்டு பதிவு செய்து கொண்டதாக தெரிவித்தார்கள். கூலிக்கு மாரடிப்பவரை விட ரொம்ப விசுவாசமாக இருந்தனர்.

அதில் ஒரு உண்மை என்னவென்றால், தென்மண்டலத் தொகுப்பு இணையதளத்திலே அக்டோபர் 27 ஆம் நாள் காலையில் தான் அவர்கள் கூடங்குளம் என்று பெயரிட்டு, சுமார் 165 MW என்று ஒரு பதிவு இருந்தது. ஆனால், அக்டோபர் 22ம் நாள் அன்றே கூடங்குளம் முதல் அணு உலையில் 160 MW மின்சாரம் தயாரித்துவிட்டதாகவும், அது படிப்படியாக 500 MW, 750 MW, 1000 MW என்று இனி அதிகரிக்கப்படும் என்றும் சில வரிகளில் ஒரு செய்தியை எழுதி அணுமின்கழகத்தின் இணைய தளத்தில் வெளியிட்டு மின்தொகுப்பு மையத்தோடு இணைத்துவிட்டோம் என்று சொல்லி முடித்துக் கொண்டார். அதற்குப் பிறகு எந்த ஒரு தகவலும் அவரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

அதற்கு முன்னர் அக்டோபர் மாதம் 22ம் நாள் முதல் அக்டோபர் மாதம் 25ம் நாள் வரை தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட மின்சார அளவு குறித்த எந்த பதிவும் தென் மண்டல (SOUTHERN REGIONAL LOAD DESPATCH CENTRE) இணையதளத்தில் இல்லை. மாறாக, KKNPP Tripped due to Reverse Power, Secondary System Troubled என்ற சிக்கல் விவரங்களை சொல்லியிருந்தது. விவரம் அறிந்த அறிஞர்கள் மற்றும் வல்லுனர்கள் செகண்டரி சிஸ்டம் சிக்கல் என்றால் நீராவி இயந்திரத்தில் பெரிய பழுது ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார்கள். இவர்கள் ஒரே வாரத்தில் இரண்டு முறை நிறுத்தி வைத்துவிட்டு (SHUT DOWN), மீண்டும் அக்டோபர் 30 நாள் வரை இயக்கியதாக அறிவித்தனர். பிறகு நவம்பர் 3 ஆம் நாள் தீபாவளி விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இயக்குவதாக ஒரே ஒரு ஆங்கிலப் பத்திரிகை மட்டும் வளாக இயக்குனர் சுந்தர் சொன்னதாக குறிப்பிட்டிருந்தது. ஆனால், அவர்கள் சொன்னதுபோல நவம்பர் 3 ஆம் நாள் இயக்காமல் நவம்பர் 5ம் நாள் இயக்கியதாக பின்னர் தெரிவித்தனர். அணுஉலையில் மின்சாரம் தயாரித்துவிட்டோம் என்று சொன்னபிறகு, அதற்கு திறப்பு விழா நடத்தவோ அல்லது அதிகாரப்பூர்வ ஊடகச் சந்திப்போ இதுவரை நடத்தவில்லை. தமிழ்நாடு மின்பகிர்மான இனையதளத்தில் கூட கூடங்குளம் மின்சாரம், தமிழ்நாடு மின்பகிர்மான நிலையத்தை அடைந்ததாக இதுவரை எந்தப் பதிவும் இல்லை. இந்திய அணுசக்தித்துறையைச் சார்ந்த அதிகாரிகள், நாட்டுமக்களுக்கு முறையாக எதுவும் சொல்லாமல், ஆங்காங்கே, பல இடங்களில் அதிகாரப்பூர்வமற்ற பல பொய்களை மட்டும் அள்ளித் தெளித்து நாட்டு மக்களை தொடர்ந்து குழப்பத்தில் வைத்து இருக்கிறார்கள்.

, கங்கேரி நாட்டைச் சார்ந்த அவசர வானொலி மற்றும் தேசிய தகவல் மற்றும் தொடர்பு அமைப்பானது ( Radio Emergency Association and the National Information and Communication), உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து பெரிய பேரிடர்கள் குறித்து உலக மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கக்கூடிய இணையதளம் ஒன்றை நிர்வகித்து வருகிறது. கடந்த அக்டோபர் 30 ம் நாள் தங்களுடைய .அந்த இணையதளத்தில் கூடங்குளத்தில் சிறு விபத்து என்று குறிப்பிட்டிருந்தார்கள். (NUCLEAR EVENT). எதற்காக இப்படி குறிப்பிட்டீர்கள் என்று அவர்களிடம் மின் அஞ்சல் செய்து கேட்டதற்கு, இப்படி ஒரே வாரத்தில் இரு முறை எந்த அணு உலையையும் நிறுத்துவதில்லை. அதனால், எங்களுக்கு அப்படி ஒரு ஐயம் வந்தது ஆகவே தான் நாங்கள் இப்படி எச்சரிக்கை செய்தியை பதிவு செய்தோம் என்று பதில் எழுதி இருந்தார்கள். எங்களுக்கு கூடங்குளம் பகுதியில் இருந்து முறையான தகவல் ஏதும் கிடைக்காத காரணத்தால், விரிவான செய்தி எதுவும் எங்களுக்கு கொடுக்கமுடியவில்லை என்று சொன்னார்கள். அங்கே வேறு எதுவும் சிக்கல்கள் கூட இருக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் இசோல்ட் போஸ்சோர்மேனியி என்பவர் கூடுதல் தகவலாக இந்த செய்தியையும் தெரிவித்துள்ளார். அங்கே என்ன தான் நடக்கிறது என்று எவருக்கும் எந்த உண்மையும் தெரிவதில்லை. விபத்து நடந்தால் கூட எவருக்கும் எதுவும் தெரியாது, அதை சொல்லவும் மாட்டார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 22ம்நாள் முதல் நவம்பர் திங்கள் 25ஆம் நாள் ,ஏறக்குறைய ஒரு மாதம் உருண்டு ஓடிய பிறகும், தென்மண்டல மின் தொகுப்பு / பகிர்மான மையத்திற்கு கூடங்குளம் அணு உலையில் இருந்து ஒரு மெகாவாட் கூட அவர்களால் அனுப்பி வைக்க முடியவில்லை அவர்களால் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. இவர்கள் கூடங்குளத்தில் இருந்து தென்மண்டல தொகுப்பு மையத்திற்கு அனுப்புவதாக சொல்லப்படும் மெகாவாட் பதிவுகள், http://www.srldc.org/var/ftp/reports/psp/2013/Nov13/24-11-2013-psp.pdf இந்த இணையதளத்தில் மத்திய பிரிவின் கீழ் (CENTRAL SECTOR) தொடர்ந்து பதிவாகியுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள மெகாவாட்டுக்கள் கூடங்குளத்தில் இருந்து வருவதாக கணக்கிடப்பட்டாலும், இதிலே அணுமின் நிலையங்களில் இருந்து, அனல்மின் நிலையங்களில் இருந்து, காற்றலையில் இருந்து பெறப்படும் மொத்த மெகாவாட் கணக்கீடுகள் தனித்தனியே கூட்டல் செய்யப்பட்டு ஒவ்வொரு துறையில் இருந்தும் பெறப்படும் மின்உற்பத்தி தனித்தனியே அளவிடப்பட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் அணுமின் நிலையங்களில் இருந்து பெறப்படும் மொத்த அணுமின்னுற்பத்தியில் (NUCLEAR TOTAL) கூடங்குளத்தில் இருந்து பெறப்படும் மின் உற்பத்தி மெகாவாட்டை இது வரை சேர்த்து கணக்கிடவில்லை. அப்படி என்றால் கூடங்குளத்தில் பெறப்படுவதாக சொல்லப்படும் மின் உற்பத்தி எங்கே இருந்து வருகிறது? எங்கே இருந்து பெறப்படுகிறது? என்கிற பெருத்த சந்தேகம் மக்கள் மத்தியிலே ஆழமாக இருக்கிறது. உண்மையிலே, அவர்கள் குறிப்பிடும் அளவுகள் 10.11.2013 அன்று 165MW , 11.11.2013 அன்று 174MW, 24.11.2013 அன்று 251MW என்று கூடங்குளம் அணுஉலையில் இருந்து தயாரித்து இருந்தால், NUCLEAR TOTAL ல் சேர்த்து கணக்கிடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அது அப்படி இதுவரை செய்யப்பட்டதில்லை. உண்மையில் கிடைக்கும் தகவல் என்னவென்றல், கூடங்குளம் அணுஉலைகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை தூத்துக்குடியில் இருக்கும் சங்கநேரி மற்றும் செண்பகராமன்புதூர் என்ற மின்மாற்றி மையங்களில் இருந்து பெற்று வருகின்றன. இதுவரை தாங்கள் வழக்கமாக பெற்ற மின்சார அளவிற்கு, தேவைக்கு கூடுதலாக தற்போது கடந்த ஒரு மாதமாக பெற்று, தாங்களும் மின்சாரம் தயாரிக்கின்றோம் என்கிற செய்தியை அவர்கள் பொய்யாக பரப்புரை செய்கின்றனர். அதனால் தான் இத்தகைய மெகா திட்டமான கூடங்குளம் அணுஉலைக்கு திறப்பு விழா கூட வைக்கவில்லை. இந்தியாவில் அணுமின் நிலையங்களில் இருந்து பெறப்படும் மொத்த அணுமின் உற்பத்தியில் (NUCLEAR TOTAL) கூடங்குளத்தில் இருந்து பெறப்படும் மின் உற்பத்தி மெகாவாட்டை சேர்த்து கணக்கிடவில்லை. இப்படிதான் கல்பாக்கம் அணு மின் நிலையமும், மெட்ராஸ் அணுமின் நிலையமும், தொடக்ககாலத்தில், இன்னும் அவ்வப்பொழுது கூட இப்படி திருட்டுத்தனமான, மக்களை ஏமாற்றும் வேலைகள் செய்து வருகின்றன. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

இந்தப் பொய்பரப்புரை போதாதென்று, கூடங்குளத்தில் தயாரிக்காத மின்சாரத்தை காட்கில் ஒப்பந்தப்படி (GADGIL FORMULA) அவர்கள் உடனடியாக கேரளாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசுக்கு அந்த மின்சாரத்தை அனுப்ப, உம்மன்சாண்டி அரசோடு ஒப்பந்தம் போடப்போகிறார்களாம்! என்னே கேலிக்கூத்து! தமிழகம் இன்னும் இருளில் மூழ்கி கிடக்கிறது. தமிழ்நாடு இன்னும் மின்பகை மாநிலமாக இருந்து வருகிறது தமிழ்நாட்டின் தற்போதைய தேவையை நிறைவேற்றாமல், தமிழகத்தின் நெருக்கடியை சமாளிக்க உதவாமல் கேரளாவிற்கு கொடுக்கப் போகிறார்களாம். கேட்கிறவன் கேனயனாக இருந்தால், எருமைமாடும் ஏரோபிளேன் ஒட்டுமாம்! கர்நாடக மின்துறை பகிர்வு கார்பரேசனின் நிர்வாக இயக்குனர் திரு. குமார் நாயக்கிடம் கூடங்குளம் அணுமின்சாரம் குறித்து கேட்ட போது, தமிழ்நாட்டில் இருந்து வருவதாக சொல்லப்படும் அல்லது எதிர்பார்க்கப்படும் அணுமின்சாரத்தை நம்பி கர்நாடக அரசு இல்லை என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். கூடங்குளம் அணுமின்சாரம் குறித்து டெக்கன் க்ரானிக்கள் என்கிற ஆங்கில நாளிதழ் நிருபர், திரு. குமார் நாயக்கிடம் கேள்வி கேட்டபோது, அவர் இப்படி நெத்தியடியாக பதில் சொல்லிவிட்டார்.

இதற்கிடையில், இந்திய அணுசக்திதுறைத் தலைவர் திரு. ஆர்.கே. சின்கா, கூடங்குளம் முதல் அணுஉலை 310 MW உற்பத்தி செய்துவிட்டதாக, அதாவது கூடங்குளம் அணு உலை தற்போது 40% திறனை அடைந்து விட்டதாகவும், விரைவில் 50% மின் உற்பத்திக்கான உத்தரவை அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடம் இருந்து விரைவில் பெற்று 500 மெகாவாட் மின்னுற்பத்தி இலக்கை அடைந்து விடும் என்று கடந்த நவம்பர் 23 அன்று பிசினெஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard) சஞ்சய் ஜாக் என்ற நிருபரிடம் பதில் சொல்லி இருக்கிறார். இந்த ஐம்பது விழுக்காடு உற்பத்திக்கான சோதனைகள் செய்வதற்கு இந்திய அணுமின்கழகம், அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடமிருந்து வருகிற சனவரி 2014 மாத இறுதிநாள் வரைக்கும் சோதனை செய்வதற்கு ஏற்கெனவே அனுமதி வாங்கியதை ஆர்.கே. சின்கா மறந்து விட்டார் போலும்? அப்படி என்றால் எப்போது ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி? எப்போது வணிக ரீதியான மின் உற்பத்தி கிட்டும்? இதுவும் கடந்து போகும் என்பது போல, இன்னும் பல கட்டங்கள் கடக்க, பொய்கள், பித்தலாட்டங்கள் செய்ய வேண்டியதிருக்கிறதே?

இது போதாதென்று இன்னும் ஒருபடி மேலே சென்று கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு, அணுமின் உற்பத்திற்கான சிறந்த விருது கிடைத்துள்ளது என்று பித்தலாட்டம் வேறு! உலக அளவில் செயல்படும் எனர்சியா பவுண்டேசன் என்ற அமைப்பு மின்சாரத்துறையில் சிறந்த பங்களிப்பை மேற்கொள்ளும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களைப் பாராட்டி ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறதாம் .எனர்சியாவின் ஏழாவது விருது வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் 24.11.2013 அன்று நடந்துள்ளது. இந்த விருதை, எனர்சியா பவுண்டேசன் விருது தேர்வுக் குழுவினரிடம் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் பெற்றுக்கொண்டதாகவும், ஒளிப் படத்துடன் செய்தியையும் பரப்புகிறார்கள். இன்று காசுகொடுத்தல் தான் எவரும் விருது வாங்கலாம் என்ற நிலை இருக்கிறதே! (தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு, தென் மண்டல தாது மணல் கொள்ளையர்களுக்கு ஆண்டுதோறும் பல வகையான விருதுகள் குவிகின்றனவே) அதுவும் இந்தியாவில் இந்திய அணுமின்கழகத்திற்கு போகத்தானே மற்றவர்களுக்கு விருது? ஏனெனில் அப்படிப்பட்ட அபார சாதனையை அவர்கள் அடைந்து விட்டார்கள் தானே? இதில் இன்னும் நீர் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. (FEED Water Problem Still exists).

இப்படி எதுவுமே செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டு, திணறிக்கொண்டு இருக்கும், அணுமின் கழக நிர்வாகம் தன்னை காப்பாற்றிக்கொள்ள, உற்சாகப்படுத்திக்கொள்ள, அவ்வப்பொழுது சில போலியான விழிப்புணர்வு முகாம்களை, சில எச்சில் திட்டங்களை செய்து, சில திசைதிருப்பும் செய்திகளை பேட்டிகளாக கொடுப்பதன் மூலமாகவும், தாங்கள் முங்கிமூழ்கிப் போகாமல் இருப்பதற்கு பல நாடகங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழக, கேரள மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமலும், இலட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் கூடங்குளத்தில் தொடங்கப்பட்டுள்ள அணுஉலைகளில் இதுவரை மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை. பிரதமர் தொடங்கி மத்திய அமைச்சர்கள் உட்பட பல பொறுப்புமிக்க உயர் அதிகாரிகள் பலரும் அணு உலையில் உற்பத்திக்கான தேதியை பலமுறை அறிவித்தும், பல முரண்பட்ட தகவல்களை இன்று வரையும் மனசாட்சி இல்லாமல், நாட்டு மக்களை மதிக்காமல் விதைத்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி அறிவித்தபடி இன்னும் சோதனைகளே முடியவில்லை; இன்னும் உற்பத்தியே தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது, இந்த மக்கள் விரோத அரசு, அதைக் கேட்க மறுக்கும் அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற போக்கை இன்னும் மக்கள் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொள்ளப் போகிறார்களோ? இப்படியாகவா இருக்க வேண்டும், இந்தியர்களின் தலைவிதி?

- ம.புஷ்பராயன், இடிந்தகரை