காமன்வெல்த் - 4                        

காமன்வெல்த்தின் அடிப்படை விதிகளை ஒன்றுவிடாமல் சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசு மீறியுள்ளது அப்பட்டமாக தெரிந்தும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால் காமன்வெல்த்தின் நம்பகத்தன்மைக்கே களங்கம் ஏற்படும் என்று பல நாடுகளும், மனித உரிமையில் ஆர்வலர்களும் எச்சரித்துள்ள நிலையிலும் இனப்படுகொலைக்கு துணைப்போன இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் காமன்வெல்த்தை இலங்கையில் நடத்த துடிக்கின்றன.

காமன்வெல்த் கூட்டமைப்பின் அடிப்படை விதிகளாக கருத்தப்படுவது 1971 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட்ட சிங்கப்பூர் தீர்மானமும்(Singapore Declaration), 1991 ஆம் ஆண்டு சிம்பாவேயில் நிறைவேற்றப்பட்ட கராரே தீர்மானமும்(Harare Declaration) தான். இதில் கூறப்பட்டுள்ள விதிகள் தான் காமன்வெல்த்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. வெறும் வணிகத்திற்காக மட்டும் இயங்கினால் வரக்கூடிய விமர்சனங்களை தவிர்க்கவும், அந்தந்த நாடுகளிலுள்ள மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றவும் மனித உரிமை சம்பந்தமான விடயங்கள் விதிகளாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

மேற்கண்ட தீர்மானங்களில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி உறுப்பு நாடுகளில் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதாவது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் போன்றவை நடைப்பெற்றிருந்தால் அதனை கூட்டமைப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் காமன்வெல்த்திற்கு உண்டு. அதனை காமன்வெல்த் அமைப்பின் அமைச்சர்களை உள்ளடக்கிய நடவடிக்கை குழு முடிவெடுக்கும்.

அயர்லாந்தில் செயற்படும் உலகப்புகழ்ப் பெற்ற “டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்” இலங்கை அரசின் போர்க்குற்றத்தை உறுதிப்படுத்தி, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரியது.

அய். நா பொதுச்செயலாளர் பான்கிமூன் நியமித்த மூவர் குழுவும், போர்க்குற்றங்கள் நடந்தது உண்மை தான் என்று அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மெய்ப்பித்துவிட்டது. http://www.tamilguardian.com/article.asp?articleid=6308

ஆம்னஸ்டி இண்டர் நேஷனல் அய். நா அவையில் தாக்கல் செய்த அறிக்கை“ இனஅழிப்பு போர் முடிந்ததற்கு பிறகும் ஆள் கடத்தல், சட்டவிரோதப் படுகொலைகள் தொடருகின்றன” என்கின்ற உண்மையை உலகிற்கு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு தந்த போலி வாக்குறுதியை நம்பி பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற 1, 46, 679 தமிழர்கள் காணாமல் போனதை(கொல்லப்பட்டுள்ளதை) மன்னார் அருட் தந்தை (பிஷப்) டாக்டர் ராயப்பா ஜோசப், அரசு பதிவேடுகளையே ஆதாரமாக காட்டி நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.tamilnet.com/img/publish/2011/01/LLRCsubmission_by_MannaarDiocese.pdf

2002ல் இராபர்ட் முகாபே அரசின் மக்கள் விரோத கொள்கையினால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை கணக்கில் கொண்டு சிம்பாவே அரசை கூட்டமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்த காமன்வெல்த் கூட்டமைப்பு உலகில் மிக மோசமான இனப்படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை கணக்கில் கொண்டு இலங்கை அரசை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க மறுப்பது ஏன்?

1977 காமன்வெல்த் கூட்டமைப்பு தனது குறிக்கோள்களாக அறிவித்தவற்றில் உறுப்பு நாடுகளில் சட்டத்தின்படி ஆட்சி, சுதந்திரமான நிதித்துறை, பெண்களுக்கு சமத்துவம் இனம், மொழி, கல்வி, நிறம், மதம் அடிப்படையில் மக்களை பாகுபாடின்றி சமஉரிமையோடு நடத்துதல் வேண்டும். இதனை கடைப்பிடிக்காமல் சனநாயகத்துக்கு எதிரான மக்கள் விரோத போக்கினை கடைபிடித்துவரும் நாடுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படும் என்கிறது காமன்வெல்த்தின் விதி.

இலங்கையின் அரசிலமைப்புச் சட்டம் சிங்களவர்களுக்கான தனிப்பெரும் சட்டமாகவே உள்ளது. இலங்கையின் அரசியல் சட்டத்தின்படி சிங்கள பெளத்த இனத்தவரே அதிபராக முடியும், பெளத்த மதம் மட்டுமே அரசு மதமாக இருக்கும். இலங்கை இரணுவத்தில் 100 சதவிதம் சிங்களர்களே,

காமன்வெல்த் விதிகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக தமிழர்கள் உட்பட்ட சிறுபாண்மை இனங்களுக்கு உரிமைகளை மறுக்கும் அரசியலமைப்பை கொண்டு ஆட்சி நடத்தும் இலங்கை அரசை ஏன் இன்னும் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து ஏன் நீக்கவில்லை?

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சீரானி பண்டார நாயக்கா அரசியல் சட்டப்படி நீதித்துறை ஆணையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். அவரோடு அந்த ஆணையத்தில் குடியரசு தலைவரால் நியமிக்கபட்ட மேலும் இருவரும் இணைந்து ஒரு மூத்த நீதிபதியை அந்த ஆணையத்தில் செயலாளராக தேந்தெடுத்ததை இராசபட்சே விரும்பவில்லை.

செப்-13 அன்று இராசபட்சே தன்னை சந்திக்க வருமாறு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் அந்த செயலாளர். அவரோடு அந்த ஆணையத்தில் இருந்த மேலும் இரு நீதிபதிகளும் இராசபட்சேவை சந்திக்க மறுத்துவிட்டனர்

இதன் பின் அந்த நீதித்துறை செயலாளர் மீது பாலியல் புகார் கூறப்பட்டு அவரது வீடு தாக்கப்படுகிறது. இதனை கண்டித்து நாடெங்கிலும் உள்ள நீதிபதிகள் வேலை நிறுத்தம் செய்தனர்

மேலும் 2012 செப்டம்பரில் இலங்கை அரசு கொண்டு வந்த சட்டமொன்றை செல்லாது என்று தலைமை நீதிபதியான சீராணி பண்டாரநாயக்கா தீர்ப்பளித்தார். இதனால் கோபமடைந்த இராசபட்சே கடந்த 2013 சனவரியில் இலங்கை நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எஞ்சியிருந்த 7 அமைச்சர்கள் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் வாக்களித்து தீர்மானத்தை நீறைவேற்றிய சம்பவம் இலங்கை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலேயே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தலைமை நீதிபதி பதவியிலிருந்து சீரானி பண்டாரநாயக்கா நீக்கப்பட்டார்.

இது குறித்து ஆராய வந்த சர்வதேச சட்ட அமைப்பின் “உண்மை அறியும்” குழுவிற்கு விசா மறுக்கப்பட்டது. இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா இதற்கு தலைமையேற்றிருந்தார்.

சிங்கள அரசின் இந்த சனநாயக விரோத செயலுக்கு உலகநாடுகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. காமன்வெல்த் அமைப்பின் செயலாளரான கமலேசு சர்மாவும் இலங்கையின் இந்த நடவடிக்கை தனக்கு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். 

 ஒரு நாட்டின் தலைமை நீதிபதிக்கே இந்த நிலையென்றால் அந்நாட்டில் வாழும் மக்களின் நிலை எப்படியிருக்கும்? பெரும்பாண்மையான சிங்களவர்கள் நிலையே இப்படியென்றால். சிறுபாண்மையினமாக அங்கே வாழக்கூடியவர்களின் நிலை என்ன? அதைவிட தாங்கள் வாழ்ந்த தேசத்தை, தங்கள் காணிகளை ஆக்கிரமித்துக்கொண்டு ஈவு இரக்கமில்லாமல் தினம் தினம் சுட்டுக்கொல்லப்படும் தமிழர்களின் நிலையை என்ன?

”காமன்வெல்த்தின் விதிகளுக்கு எதிராக செயற்பட்டு சுதந்திராக இயங்க வேண்டிய நீதித்துறையை முடக்கிய சிங்கள அரசை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்ற காமன்வெல்த் சட்ட வல்லூநர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏன் மதிக்கப்படவில்லை ?

காமன்வெல்த் கூறும் சனநாயகத்தின் அடிப்படை கூறுகளான பத்திரிக்கை சுதந்திரம் இலங்கையில் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. சிங்கள அரசின் நடவடிக்கைகளோடு முரண்படும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். பத்திரிக்கையாளர்களுக்கு நேரும் இந்த கொடூர முடிவுகள் பத்திரிக்கை சுதந்திரத்தின் அச்சாணியை அசைத்துப்பார்க்கின்றன. கருத்து சுதந்திரம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 60க்கு மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை காணவில்லை. இவர்கள் அனைவரும் சிங்கள அரசோடு முரண்பட்டு நின்றவர்கள் (அ) தமிழர்களின் உண்மை நிலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட துணிந்தவர்கள்.

அதில் முக்கியாமானவர் இலங்கையிலிருந்து வெளிவரும் SUNDAY LEADER என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கரமசிங்கே. அரசின் மீதான தனது விமர்சனங்களை தனது பத்திரிக்கையில் துணிச்சலோடு எழுதிக்கொண்டிருந்தார். போர் நடக்கும் போது சிங்கள அரசை சாடி இவர் எழுதியது இவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்தது. 2009 சனவரியில் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி, உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 2013 ஏப்ரல் 13 அன்று அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ. கே. 47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கியவர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36220

2010ல் பிரகீத் ஏகநெல்லிக் கொடா என்ற சிங்கள கார்ட்டூனிஸ்டை கடந்த 2010 சனவரி 24 அன்றிலிருந்து காணவில்லை. இவர் 2010 தேர்தலில் இராசபட்சேவுக்கு எதிராக போட்டியிட்ட மற்றொரு கூட்டுக்குற்றவாளியான சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் இவர் மாயமானார். http://blog.cartoonmovement.com/2013/06/politicians-shrug-shoulders-about-fate-sri-lankan-cartoonist.html

நைசிரியாவில் மக்களுக்காக போராடிய கென் சாரோ வைவா என்ற பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டை இடைநீக்கம் செய்த காமன்வெல்த் கூட்டமைப்பு, பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளையும், கொலை வெறித் தாக்குதல்களையும் கட்டவிழ்த்துவிடும், கொல்லும் சிங்கள அரசை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து ஏன் நீக்க வில்லை?

கல்வியிலும் தொடர்ந்து சிங்கள திணிப்பு நடைப்பெற்று வருகிறது.

89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல்,

மத ரீதியான பாகுபாடு இலங்கையில் தொடர்ந்து நிலவுகிறது. 367 இந்து கோவில்கள் இதுவரை சிங்கள இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளது. கோயில்களை இடித்துவிட்டு அந்த இடங்களில் பெளத்த விகார்களை நிறுவுகிறது சிங்கள அரசு . பல இந்துக்கோயில்களில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டும், திருடப்பட்டும் இருக்கின்றன.

கடந்த 20 ஏப்ரல் 2012, டம்புலாவில் உள்ள சம்மா மசூதி வெள்ளிக்கிழமை பிராத்தனையின் போது பெளத்த அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டது. காவல்துறையினர் இருந்த போதும் மசூதிக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். இசுலாமியர்களின் புனித நூலான குரான் புத்தகங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதையொட்டி 22 ஏப்ரல் 2012 அன்று இராசபட்சேவிடமிருந்து வந்த அறிக்கை அதைவிட பயங்கரமானது. மசூதி அமைந்திருந்த இடம் பெளத்த மதம் பரவியிருக்கும் இடத்தில் அமைந்திருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என்ற உத்தரவு சிங்கள அரசுக்கு ஆதரவாக இருந்த சில இசுலாமிய தலைவர்களையும் எதிர்க்குரல் எழுப்ப வைத்துள்ளது. திரும்பும் திசையெல்லாம் புத்தவிகார்கள் தென்படுகின்றன. கிறிஸ்துவ மதமும் இந்த மதவெறி தாக்குதலிலிருந்து தப்பவில்லை.

தொடர்ச்சியாக மதி ரீதியான ஒடுக்குமுறை சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளால் அரசின் முழு ஆதரவோடு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. காமன்வெல்த்தின் அடிப்படை விதிகளுக்கு எதிராக மத அடிப்படையிலான பாகுபாட்டை மக்களிடைய கடைபிடித்து வரும், மற்ற மதத்தினரை ஒடுக்கி வரும் இலங்கை அரசை காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து ஏன் நீக்கவில்லை?

போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் வன்புணர்ச்சி கொல்லப்பட்டது பல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது. இன்றும் தமிழ்ப்பெண்கள் பலர் சிங்கள இராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றனர். சிங்கள இராணுவ வீரர்கள் தமிழ்ப்பெண்களை திருமணம் செய்தால் அதிக சம்பளம் பெறலாம் என்ற சிங்கள இராணுவத்தின் அறிவிப்புக்கு ஏராளமான பெண்கள் பலியாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 60, 000 மேற்பட்ட கைம்பெண்கள் ஈழப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இனம், நிறம், மொழி பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சமஉரிமை, பெண்களுக்கு சமத்துவம் என்ற கொள்கைகளை தாங்கி நிற்கும் காமன்வெல்த் கூட்டமைப்பு. அத்தனை விதிகளை மீறியிருக்கும் அதனை இன்றும் தொடர்ந்து மீறிக்கொண்டிருக்கும் இலங்கை அரசை ஏன் நீக்கவில்லை?

விதிகளை அப்பட்டமாக மீறியிருக்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் போன்ற அமைப்புகளின் கூட்டமே நடத்தப்படக்கூடாது, அந்த நாடு கூட்டமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படவேண்டும் என்பதே உலகின் பார்வையாக இருக்கிறது.

இனப்படுகொலை செய்த நாட்டில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாட்டை நடத்துவதன் மூலம் அதன் நம்பகத்தன்மையே சிதைந்து விடக்கூடிய சூழலிலும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த துடிப்பது எதனால்?

அது எதனால் என்பது அடுத்த கட்டுரையில் காணலாம்.

- த.ஆனந்த், ஒருங்கிணைப்பாளர், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், சென்னை  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., +91-9677226318)

Pin It