அம்மாவின் பேரன்பில்
வளர்க்கப்படும் குழந்தைகள்
இவ்வுலகை
அம்மாவைப்போலவே
நம்பிக்கையோடு பார்க்கிறார்கள்

ஆனால்
இவ்வுலகம்
ஒரு தகப்பனின்
கடுமையோடு
கரிசனங்கள்
ஏதுமற்று இருக்கிறது..!

அம்மாவிடம்
சொல்லப்படும் பொய்களை
அவள் நம்புவதைப்போல
அவ்வளவு சீக்கிரம்
இவ்வுலகம்
நம்பி விடுவதில்லை..!

பதின்பருவத்தில்
வானவில்லைப் போல
வண்ணங்கள் காட்டி மறையும்
பெண்களுக்கு மத்தியில்
வானம் போன்ற
பெண்களின் வருகைக்காக
வாழ்க்கை காத்திருக்கிறது..!

அம்மாவைப்போன்று
அன்பில் நிலைத்திருக்கும்
பெண்ணைக் காண
அழகில் நிறைந்திருக்கும்
குளத்தங்கரையில்
தங்க நேர்ந்து விட்ட
பிள்ளையாரைப்போல
பிள்ளைகள் யாவர்க்கும்
அம்மாவைப் போன்ற
அபூர்வமான பெண்களின் துணை
அதிஷ்டவசமாகக் கூட
வாய்ப்பதேயில்லை..!

வேறு வழியின்றி..
சமரசங்களுக்கு உட்பட்டு
நிகழும் திருமண வாழ்வின்
பின்னாளில் -
அம்மாவைப் போன்ற
பேரழகான பெண்
மகளாய் பிறந்து விடுகிற
ஆச்சர்யம்
நிகழும் போது மட்டும்
வாழ்க்கை
தன் அர்த்தத்தை
இழந்து விடாமல்
பெருமழை
பெய்த பின்னும்
தன் வண்ணத்தை
இழந்து விடாத
அழகிய வனங்களைப்போல
பிரியங்களின் காடு
அவளின்
மென்விரல்களைப் போன்ற
பூக்களால் அடர்ந்திருக்கிறது..!

Pin It