[ஆகஸ்ட் 13, 2013 அன்று பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த பேராசிரியர் தேவேந்திரபால் சிங் புல்லரின் மறுஆய்வு மனு நிராகரிகிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் தாக்கம் இராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசைக்கார மாதையன் உள்ளிட்ட ஏழு தமிழரின் வழக்குகளில் நேரடி பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. காட்டுமிராண்டித்தனமான, அரசின் கொலையான தூக்குத் தண்டனையை தூக்கி எறிய, ஏழு தமிழர் உயிர்காக்க ஏதாவது செய்யுங்கள் தயவு செய்து.]
வீரப்பன் அவர்களின் கூட்டாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கர்நாடக மாநிலம், பெல்காம் சிறையில் உள்ள நான்கு தமிழர்கள், சைமன் (46), ஞானப்பிரகாசம் (56), பிலவேந்திரன் (62), மீசைக்கார மாதையன் (66), ஆகியோரின் கதை இது.
வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் அப்பாவி பழங்குடி மக்களையும், வீரப்பனின் சாதிக்காரன், சொந்தக்காரன், உணவுப்பொருள் கொடுத்தவன் என்ற பெயரில் அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை தமிழக, கர்நாடக மாநில அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்தனர். பல மனித உரிமை அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக சதாசிவம் கமிசன் விசாரணை செய்து இந்தக் கொலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநில சிறைகளில் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்களை கைது செய்து தடா வழக்கின் கீழ் சிறையில் அடைத்தனர்.
1985 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழ்நாடு-கர்நாடக STF (Special Task Force) படையினால் அப்பாவி மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளானார்கள். விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை அழைத்துச் சென்று சட்டவிரோதமாக ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைத்து வைத்தனர். எஸ்.டி.எஃப். தனது தேவைக்கு ஏற்ப போலி மோதல்களை உருவாக்கி, பல அப்பாவிகளை 'என்கவுன்டர்' செய்தது. மற்றவர்களை வனப் பகுதியில் கைது செய்ததாக வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது.
இந்தச் சூழலில் 1993ஆம் ஆண்டு கர்நாடக எல்லையான பாலார், சொரக்கா மடுவு என்ற இடத்தில் வீரப்பனால் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் அதிரடிப்படையினர், வனத்துறையினர், சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் என மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டனர். அதிரடிப்படை அதிகாரியான திரு. கோபாலகிருஷ்ணன் என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் மூன்று பெயர் தெரிந்த நபர்கள் மற்றும் பத்து பெயர் தெரியாத நபர்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் மொத்தம் 163 பேர் கைது செய்யப்பட்டனர்; 12 பெண்கள் உட்பட 124 பேர் மீது தடா சட்டம் ஏவப்பட்டது. எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் சுமார் ஏழு ஆண்டுகள் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் விவசாயக் கூலிகள். அவர்களின் வழக்கை நடத்த வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ளமுடியாத பரம ஏழைகள். இந்த வழக்கை நடத்த விசாரணை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதற்காகவே பல மனித உரிமை அமைப்புக்கள் போராட வேண்டியிருந்தது. அதன் பிறகுதான் தடா நீதிமன்றமே அமைக்கப்பட்டது.
தடா சட்டப்படி கைது செய்யப்பட்டவர்களிடம் கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட வாக்குமூலத்தையே அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி தண்டனை வழங்க முடியும். இந்நிலையில் கல்குவாரி முதலாளி ஒருவரும் அவரது உறவினரும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை நியமித்து விடுதலைப் பெற்றுக் கொண்டார்கள். எஞ்சியிருந்த 120 பேருக்கு நான்கு வழக்கறிஞர்கள் மட்டுமே வாதாடினர். அதாவது 30 கைதிகளுக்கு ஒரு வக்கீல் என்ற நிலையில் வழக்கு நடத்தப்பட்டது. அனைவர் மீதான குற்றப்பத்திரிகைகளைப் படித்து முறையாக வாதாடக்கூடிய வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த மைசூர் தடா நீதிமன்ற நீதிபதி திரு. டி. சி. கிருஷ்ணப்பா 14 பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து 12 பெண்கள் உட்பட 109 நபர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
தண்டிக்கப்பட்ட 14 பேரில் ஏழு பேர் ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை தண்டனைக் காலமாகக் கருதி விடுதலை செய்யப்பட்டார்கள். மற்ற ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள் ஏழு பேரும் தாங்கள் நிரபராதிகள், எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது, எனவே ஆயுள் தண்டனையை இரத்து செய்து எங்களை விடுதலை செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஏழு பேரில் மூவரை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துவிட்டு, மற்ற நான்கு பேரான சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசைக்கார மாதையன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ அல்லது அரசு தரப்போக் கோராமலே, ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது மிக ஆச்சரியமான நிகழ்வு.
பாலார் குண்டுவெடிப்பில் கண்ணிவெடிகளை புதைத்துவைத்தது தூக்குத் தண்டனை பெற்றிருக்கும் நால்வர்தான் என்பதற்கு ஒரே சாட்சி அந்த தாக்குதலில் உயிர் தப்பிய அதிகாரி திரு. கோபாலகிருஷ்ணன் மட்டும்தான். இங்கே சில விடயங்களைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.
[1] கண்ணிவெடியை புதைத்து வைத்துவிட்டு யாராவது அதன் அருகிலேயே நிற்பார்களா?
[2] கண்ணிவெடி வெடித்து புகையும், தூசியுமாக பரவிக் கிடக்கும் குழப்பமானச் சூழலில், பரபரப்பான நிலையில், அதிகாரி கோபாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரை எப்படி அவ்வளவு தெளிவாகப் பார்த்தார்?
[3] கண்ணிவெடித் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அதிகாரி, வெடி வெடித்த இடத்தில் இந்த நால்வரும் ஓடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்று சாட்சியம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
[4] இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்காத உச்சநீதிமன்றம், அதிகாரியின் சாட்சியத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்கியிருக்கிறது. கண்ணிவெடி தாக்குதலில் காயம் அடைந்த அதிகாரி இயல்புநிலைக்கு வரவே பல மாதங்கள் ஆன நிலையில், இவரின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை கொடுத்தது எப்படி?
இந்த வழக்கின் உண்மை நிலை என்னவென்றால், எப்படியாவது ஒரு சிலரை முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காட்டி, தண்டனை வழங்கியேத் தீர வேண்டும் என்ற முடிவினை எடுத்துவிட்டு, விசாரணை அதிகாரிகளால் மேம்போக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் மேற்கண்ட நான்கு தமிழரும். தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன் ஆகிய மூவரும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டம், மார்டெள்ளி, சந்தனப்பாளையம், ஒட்டரதொட்டி கிராமத்தைச் சார்ந்தவர்கள். மீசைக்கார மாதையன் தமிழ்நாடு சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவர்.
இந்த நான்கு தமிழருக்கும் கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்றி 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு, தங்களுக்கு கருணை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கடந்த பிப்ரவரி 11, 2013 அன்று இவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று தடை கோரியும் மார்ச் 16, 2013 அன்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர்கள் திரு. காலின் கன்சால்வஸ் மற்றும் சமிக் நாராயணன் ஆகியோர் அவசரம் கருதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்ட்மாஸ் கபீர் அவர்களின் இல்லத்திற்கே சென்று தடை கோரிய மனுவை சமர்ப்பித்தார்கள்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான காரணம் இதுதான். நான்கு தமிழர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரித்து தீர்ப்பு சொல்ல நம் நீதிமன்றங்களும், குடியரசுத் தலைவர்களும் எடுத்துக் கொண்ட கால அளவு 20 ஆண்டுகள். செய்யாதக் குற்றத்திற்காக அவர்கள் 21-வது ஆண்டை சிறையில் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாதத்துக்காக இவர்கள் குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு தவறுக்கு மூன்று தண்டனைகள் – இரண்டு ஆயுள் தண்டனைகள், ஒரு மரண தண்டனை - கொடுக்க முடியுமா? இதனை அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்கிறதா எனக் கேட்டுத்தான் தடை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி அல்ட்மாஸ் கபீர் இதே போன்ற தன்மையுள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த பேராசிரியர் தேவேந்திரபால் சிங் புல்லர் வழக்கு வேறு ஒரு பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வருவதால், அதன் தீர்ப்பு வந்த பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார். இதே அடிப்படையில்தான் தமிழகத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 12, 2013 அன்று புல்லரின் மரண தண்டனையைக் குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது நீதிபதி திரு. ஜி. எஸ். சிங்வி தலைமையிலான பெஞ்ச். அதாவது புல்லர் வழக்கில் கொடுக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம், கைதிக்கு உயிர்வாழும் உரிமையை கொடுத்துவிட்டதாக கூற முடியாது என்று ஓர் அரசியல் சாசன விரோத தீர்ப்பை அறிவித்தனர். ஆகஸ்ட் 13, 2013 அன்று புல்லரின் மறுஆய்வு மனுவை நிராகரித்திருக்கிறார் நீதிபதி திரு. ஜி. எஸ். சிங்வி.
இந்தத் தீர்ப்பின் தாக்கம் இராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் வீரப்பன் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், மீசைக்கார மாதையன் உள்ளிட்ட ஏழு தமிழரின் வழக்குகளில் நேரடி பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
மூன்று தமிழர் பிரச்சினையில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. காரணம் கடந்த காலத்தில் மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும் தோழர்கள் திரு. கலியபெருமாள், திரு. தியாகு போன்றோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை தமிழக அரசு அமைச்சரவை தீர்மானம் இயற்றி, ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அவர்களின் விடுதலைக்கு வழிவகை செய்தது. தற்போதைய தமிழக அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுத்து மூன்று தமிழர் உயிர்களைக் காக்கும் வாய்ப்பு உள்ளது; அதற்காக தமிழர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
ஆனால் கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் நான்கு தமிழர் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் உச்சநீதிமன்ற மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், தமிழர்-கன்னடர் வெறுப்பும், கோபமும் மிகுந்து நிற்கின்ற இந்த காலகட்டத்தில், இந்த நால்வரையும் நம்மால் காப்பாற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அப்சல் குரு தூக்கு விவகாரத்தில் காஷ்மீர மக்களிடையே வெறுப்பை சம்பாதித்திருக்கிற ஆளும் வர்க்கம், தமிழர் நால்வரையும் தூக்கிலிட்டு அவர்களை சமாதானப்படுத்த முயலுமோ என்ற அச்சமும் மனதில் எழுகிறது.
சகோதரர் ஞானப்பிரகாசம் மனைவியார் திரு. செல்வமேரியோடும், சகோதரர் பிலவேந்திரன் மகள் திரு. பாஸ்கரமேரியோடும், திருமணமாகாத சகோதரர் சைமனின் உடன்பிறப்பு திரு. ஜெயமேரியோடும், சகோதரர் மீசைக்கார மாதையன் மனைவியார் திரு தங்கம்மாள் அவர்களோடும், ஒரு சில குடும்ப உறுப்பினர்களோடும் தொலைபேசியில் பேசினேன். அறிமுகமில்லாதவர்களோடும் சரளமாகப் பேசும் இயல்பு கொண்ட என்னால், அவர்களிடம் என்ன பேசுவது, அவர்களை எப்படித் தேற்றுவது, அவர்களுக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று தெரியாமல் திணறிப் போனேன். எனது ஊரோ, பேரோ, முகமோ, முகவரியோ அறியாத நிலையிலும் அவர்களில் பலர் என்னிடம் அழுதார்கள். என்னால் அமைதியாகக் கேட்க மட்டுமே முடிந்தது. நான் இப்போது உங்களிடம் அழுகிறேன். ஏதாவது செய்யுங்கள் தயவு செய்து.
[1] கர்நாடக அரசு கருணை அடிப்படையில் ஓர் அமைச்சரவை தீர்மானம் இயற்றி இந்த நான்கு தமிழர் உயிர்களை காக்க வேண்டும் என்று ஒரு விண்ணப்பத்தை கர்நாடக அரசுக்கு நாம் சமர்பிப்போம். கர்நாடக முதல்வருக்கு பணிவான கடிதம் ஒன்றை உடனே எழுதுங்கள்.
[2] தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து (பஞ்சாபில் புல்லர் உயிரைக் காக்க அங்குள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் முயல்வதைப் போல) இந்தப் பிரச்சினையில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துவோம். உங்களுக்குத் தெரிந்த கட்சித் தலைவர்கள், முன்னணி செயல்பாட்டாளர்களிடம் உடனே பேசுங்கள்.
[3] தமிழக முதல்வர் அவர்கள் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம். அவருக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் கடிதம் எழுதுங்கள், விண்ணப்பம் கொடுங்கள்.
[4] தமிழ்க் குடிமை சமூகத்தில் மாநிலமெங்கும் மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்களை உயிர்ப்பித்து அல்லது உருவாக்கி இந்தக் காட்டுமிராண்டித்தனமான, அரசின் கொலையான மரண தண்டனைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்போம்.
[5] ஏழு தமிழர் உயிர் காக்கும் ஓர் அபாரமான அலையை தமிழ் மக்கள் வாழும் மூலை முடுக்குகளில் எல்லாம் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், தெருவோர கூட்டங்கள் போன்ற நடவடிக்கைகள் மூலம் நாம் உடனடியாக எழுப்பியாக வேண்டும்.
பின் குறிப்பு: வீரப்பன் அவர்களுக்கு உதவி செய்ததாக தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக மைசூர் மத்திய சிறையில் சிக்குண்டு கிடக்கும் சகோதரர் அன்புராசு அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில்தான், அவரது வார்த்தைகளை பயன்படுத்தியே இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறேன். அவர் அளவுக்கு என்னால் சக்தியோடும், தேர்ச்சியோடும் எழுத முடியாது என்று உணர்கிறேன். “குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்பட்ட நிரபராதிகள் அனுபவிக்கும் துயரம் யாராலும் புரிந்து கொள்ள முடியாத கொடுமையான அனுபவம்” என்று அவர் எழுதியிருக்கும் வாசகம் என்னை நீண்ட நேரம் சிந்திக்க வைத்தது. வெளிநாட்டு கைக்கூலி, தேசத்துரோகி, தீவிரவாதி என்றெல்லாம் குற்றச்சாட்டுக்களை சுமந்து சுமார் இரண்டு ஆண்டுகள் இடிந்தகரை திறந்தவெளி சிறைச்சாலையில் சிக்கிக் கிடப்பதால் நமது ஏழு தமிழ் சகோதரர்களும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வரும் கொடுமையை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது என்னால். அந்த ஆதங்கத்தால்தான் இதனை எழுதியிருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள் தயவு செய்து.
- சுப.உதயகுமார், இடிந்தகரை