www.saveperarivalan.com

பேரன்புக்குரியோரே வணக்கம்.

26-08-2011 எமது சாவுக்கான தேதி குறிக்கப்பட்டு ஓலை (Black Warrant ) வழங்கப்பட்ட நாள்.

30-08-2011 சென்னை உயர்நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடையாணை வழங்கிய நாள் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் முன்மொழிவால் தண்டனை குறைப்பிற்கு ஒருமனதாக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்.

இடைப்பட்ட 5 நாட்கள் உணர்சிகரமான போராட்டங்களும், உள்ளம் நெகிழும் வேண்டுதல்களும், வாழ்வில் என்றுமே ஈடு செய்யமுடியாத தியாகங்களும், சொற்களால் விவரிக்கமுடியாத உணர்வுகளும் நிறைந்த வரலாறு, உலக மனித உரிமை வரலாற்றில் ஒப்புவமை இல்லா எனது அன்பு தங்கை செங்கொடியின் ஈகம்.

நீதியின் பக்கமிருந்து காலம் தீர்ப்பு வழங்குமானால் அன்றைய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

கட்சிகள் கடந்து, மதங்கள் கடந்து, சாதிகள் கடந்து தமிழகமே எமக்காக குரல் எழுப்பியது. தமிழகத்திற்கு அப்பாலும் மனித நேயம் போற்றும் அனைவருமே அணிவகுத்து நின்றனர்.

“மரண தண்டனை மனித அறத்திற்கே எதிரானது
ஆகவே இவர்களுக்கு மரண தண்டனை வேண்டாம்”

- என குரல் கொடுப்போர் பலர்.

“போதும். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை  காலத்தை கழித்துவிட்டனர். இதன் பிறகும் மற்றுமொரு தண்டனையா? அதிலும் மரணமா ? ” - என இரக்கம் கொண்டோர் பலர்..

“இவர்கள் எங்கள் தமிழ்தேசிய பிள்ளைகள், தூக்கிலிட அனுமதியோம்” - என சங்கார முழக்கமிட்டோர் பலர்..

இவர்களைத்தாண்டி இன்னும் பலரும்  ஒரு கருத்தை கொண்டிருந்தனர்.

“இவர்கள் நிரபராதிகள் – அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்கும் நாதியற்றவர்கள், பிழையான நீதியால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்வதே நீதியானது” - என்ற அசைக்க முடியாத கருத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் அவர்கள்.

இதனை உறுதி செய்யவே, உண்மையை நிலைநாட்டிடவே கடந்த 22 ஆண்டுகளாக நான் போராடி வருகிறேன். அதனால் தான் எனது வேண்டுகோளை இவ்வாறு வைத்தேன்.

விடுதலை செய் !

கேட்பது உயிர் பிச்சையல்ல; மறுக்கப்பட்ட நீதி !!

ஆயினும் குற்றமே செய்யாமல் நாட்டின் உச்சபட்ச அறமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை – அதிலும் சாவுத் தண்டனையை கேள்வி எழுப்புவது என்பது கற்பனைக்கு எட்டாத உயரம் – காணக்கிடைக்காத தூரம் என்பதை அறிந்தே எனது முயற்சியை தொடர்ந்தேன்.

26-08-2011 அன்று வழங்கப்பட்ட மரண ஓலை எனது இருபது ஆண்டு கால முயற்சிக்கு பெரும் திருப்புமுனையை தந்தது. எமது குற்றமற்ற தன்மையை அதிகளவிலான மக்கள் புரிந்து கொண்டு ஆதரவளிக்க முன்வந்தனர்.

என்றாலும் ஒவ்வொரு மனித உள்ளங்களையும் உண்மையின் பக்கம் வென்றெடுக்க வேண்டும் என்பதே எனது அவா, அதற்கு வழிகோலவே இந்த இணைய வாய்ப்பு வாய்த்துள்ளது. எனவே, இணையம் வழியே உங்கள் இதயம் நுழைகிறேன்

வாசல் திறவுங்கள் !

வழக்கின் புனைவு யாவையும் புரட்ட வருகிறேன்

பக்கத் துணையாய் நில்லுங்கள்!!

நீதி வேண்டும் உங்களன்பு

பேரறிவாளன்

Comments

4 comments

4
seyed muhammed
பேரறிவாளனின் உள்ளக் குமுறல் தமிழகம் தமிழகத்தின் தமிழின் மீது மாறா அன்பு கொண்ட நல்லோர் எல்லோர் உள்ளத்தையும் புரட்டும் உண்மை!
உள்ளம் உள்ள இடத்தில் பெரும் பள்ளம் கொண்டோரால் பேரறிவாளனின் உணர்வை உட் கொள்ள முடியாது.இதில் முதலிடத்தில் இந்தியாவின் உட்ச மன்றங்கள் உள்ளன.உட்ச மன்றங்களில் வீற்றிருப்போருக்கு சாமான்ய மக்களோடு தொடர்பில்லை;தொடர்பை ஏற்ப்படுத்தி கொள்ளவும் விரும்பவில்லை.
தொலைந்து போன கோப்புகளின் வழக்கு பேரறிவாளனின் வழக்கு;
இது பேரறிவாளனைப் போன்று தூக்கில் தொங்க விடப்பட்ட பலரின் நிலையும் இது.
பாராளுமன்ற தாக்குதலின் முக்கிய தடயம் சிசி டிவி கேமரா......பாரளுமன்றமும் அதை பற்றி அல்லட்டி கொள்ள வில்லை;நீதி மன்றங்களுக்கும் அது அவசியமாக படவில்லை.
இது இந்தியாவின் நீதி.புண்ணிய பாரதத்தின் நீதி;மனுவின் நீதி.
இந்த"நீதி"யை எதிர்ப்போர்க்கு உள்ளத்தில் எண்ணத்தில் உறுதி வேண்டும்...நாம் எதிர்ப்பது நீதியல்ல,நீதியாய் போதிக்கப் பட்ட அநீதி,அயோக்கியதனம்.அயோக்கியதனத்தை ஒழிக்க ஆழ்ந்த அறிவும் ஆண்மையும் அவசியம்.இதில் எது ஒன்றில் குறைவிருந்தாலும் அது போராளிகளை பொருக்கிகளாக்கி விடும்.
பேரறிவாளனை வாழ வைக்க ஒன்றினைவோம்;அநீதியாக போக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டாமல் நீதியை காப்பாற்றுவோம்.
குமுரன்
பேரறிவாளன் உங்களுடன் என்றும் நாங்கள் பக்கத் துணையாய்.மறுக்கப்பட்ட நீதி யை வெளி கொணர போராடவும் துணை நிற்போம்.
சாணக்கியன்
////“இவர்கள் நிரபராதிகள் – அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்கும் நாதியற்றவர்கள், பிழையான நீதியால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே இவர்களை விடுதலை செய்வதே நீதியானது” /// ----- சகோதரா, திருக்குரானை கையிலெடு. உனக்கு அணுவளவும் நீதிதவறாத நீதிமான் அல்லாஹ் நீதி வழ்ங்குவான்.
anbumani
உண்மை வெல்லும்......

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.