photo-11_copyஉலகத் தமிழர் மாணவர் ஒன்றியம், தனது வரலாற்றுக் கடமையை  உணர்ந்துகொண்டு, பிரான்சில் புதிதாக உதயமாகியிருக்கும் மாணவர் அமைப்பு. 2009ம் ஆண்டு, இனப்பேரழிப்பை எதிர்கொண்ட எம்தமிழ் இனத்தின், விடுதலைக்கான செயற்பாட்டிற்கு பாடுபடுவது எமது தலையாய கடமை என்ற கடமை உந்துதலே இந்த அமைப்பின் தோற்றத்திற்கான அடிப்படை. இளைய சந்ததி, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லவேண்டும் என்ற யதார்த்தம் எம்மை நிர்ப்பந்தித்தது.பல மாணவர்கள், ஒன்றுகூடி கலந்துரையாடி, இதற்கான ஒரு அடிப்படையை வரைந்தோம்.

உலகப்பரப்பில் செயற்பட்டுவரும் தமிழ் மாணவர் அமைப்புக்களை, ஒரு நேர்கோட்டில் இணைத்து, ஒண்றிணைந்த செயற்பாட்டுக்கு வழிவகை செய்வது எமது நோக்கம்.

சிந்தனைகளைப் பரிமாறி, செயற்பாடுகளை நெறிப்படுத்தி, வலுவான பங்களிப்பை எமது இனத்திற்கு வழங்கமுடியும் என நாம் நம்புகின்றோம். அதேவேளை, தாயகத்தில் உள்ள மாணவர் சமூகத்துடன் தொடர்புகளைப் பேணி, அங்குள்ள மாணவர் சமூகத்திற்கு முடியுமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க எண்ணியுள்ளோம்.

இனத்தின் காப்பரணாக ஒன்றாக எழுந்துநிற்க உலகத் தமிழ் மாணவர்களை அணிதிரட்டுவதுடன், எமது தாயகத்தின் உண்மை நிலைமைகளை, எடுத்துவிளக்கி, எமது மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு, சர்வதேச சமூகத்தின் குறிப்பாக மாணவர் சமூகத்தின் ஆதரவை வென்றெடுப்பதும் எமது கடமையாக வரித்துக்கொண்டுள்ளோம். 

இந்த அடிப்படையில், புதிதாக உதயமாகியிருக்கும் எமது அமைப்பின் முதலாவது பரப்புரைப் பணியை பிரான்ஸ் கான் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்தோம்.

பெடராசியோன் சின்டிக்கா எத்திதியோ என்ற பிரெஞ்சு மாணவர் அமைப்பு மற்றும் சொலிடாரித்தே தமிழீழம் என்ற பிரெஞ்சு அமைப்பு ஆகியவற்றின் முழுமையான ஒத்துழைப்புடன், கான் பல்கலைக்கழகத்தில், கலந்துரையாடலும், சனல் போர் காணொளி காட்சிப்படுத்தலும் இடம்பெற்றது.

பெடராசியோன் சின்டிக்கா எத்திதியோ என்ற பிரெஞ்சு மாணவர் அமைப்பின் இணைப்பாளர் செபஸ்டியான் நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றினார்.

பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சனல்போர் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

சொலிடாரித்தே தமிழீழம் என்ற அமைப்பின் இணைப்பாளர் வள்ளுவன் பாக்கியசோதி, மற்றும் உலகத் தமிழ் மாணவர் ஒன்றிய இணைப்பாளர் பாவரசன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், சிங்கள இனவெறி அரசால் தமிழ்மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் விரிவாக எடுத்துவிளக்கினர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பிரெஞ்சு அரசு அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

கேள்வி பதில் வடிவில், அங்கு திரண்டிருந்த மாணவர்களின் கேள்விகளுக்கு பாவரசன் அவர்கள், தெளிவான விளக்கங்களை வழங்கினார். உலகத்தமிழர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தீபா மற்றும் துஸ்சியந்தன் ஆகியோர், தாயக நிலைமைகளை எடுத்துவிளக்கினர்.  போரின் இறுதிக்காலத்தில், அங்கிருந்து ஒருவாறு உயிர்தப்பி, பிரான்ஸ் மண்ணில் தற்போது வசித்துவரும் தீபா, தான் நேரில் கண்ட கொடிய துயர்நிறைந்த காட்சிகளை எடுத்துக்கூறினார்.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலையே என்பதை ஏற்றுக்கொண்டு, அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை பிரான்ஸ் அரசு அங்கீகரிக்கக்கோரும் கோரிக்கை மனு ஒன்றின்மீதான கையொப்பம் சேகரிக்கும் போராட்டம் இங்கு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்தப்பணியை, ஏனைய பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர் அமைப்புக்களுக்கும் எடுத்துச் செல்வதென இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாணவர் பேரெழுச்சியை, வாழ்த்தியும் ஆதரித்தும், அங்கு அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாணவர் எழுச்சியை, அங்கு கலந்துகொண்ட பலரும் வியந்து பாராட்டியதுடன், அவர்களின் பேரெழுச்சி பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதையும், தொடர்ந்து காத்திரமான மாற்றங்களை ஏற்படுத்த வல்லன எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அம்மாணவர்களுடன், சாத்தியமான தளங்களில் இணைந்து செயற்படமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக, பரப்புரைப் பணிகளை பரந்துபட்ட முறையில் முன்னெடுப்பது என்ற உறுதியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

ஏடெடுத்துப் படிப்பதும், எம் இனத்தின் துயர் துடைப்பதும் எங்கள் பணி.