‘தமிழ் மையம்’ துணையுடன் ‘நாம்’ அமைப்பு நடத்தும் சங்கம்-4 மார்கழித் திருவிழாவில் ஜனவரி 3, 2013 அன்று ஆற்றிய கருத்தரங்க உரை

அனைவருக்கும் வணக்கம்.

கூர்மையாகத் திட்டமிடப்பட்டு, தொடர் நிகழ்ச்சிகளாக, மிகச் சிறப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கும் மார்கழித் தமிழ் விழாவின் கருத்தரங்கில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கியமைக்காக தமிழ்மையம் நாம் ஆகிய அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், குறிப்பாக இவ்விரு அமைப்புகளின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த கருத்தரங்கில் கடப்பாரையால் முட்டை உடைக்கும் ஊடகங்கள் என்கிற, நான் விரும்பிய தலைப்பிலேயே உரையாற்ற இடம் அளித்தமைக்காகவும் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

உலக ஊடகங்கள், இந்திய ஊடகங்கள், தமிழக ஊடகங்கள் என்கிற மேலோட்டமான மூன்று பிரிவுகளி; தமிழக ஊடகங்களைக் குறித்துப் பேச வேண்டியவனாக நான் இருக்கிறேன். தமிழ்நாட்டின் ஊடகங்களோடு புழங்கிக் கொண்டிருப்பவன். அவற்றின் வினைகளால் புழுங்கிக் கொண்டிருப்பவன். என் தாய்மொழியான தமிழில் நடத்தப்பட்டு வரும் ஊடகங்கள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவன். இன்றளவும் ஓர் ஊடகவியலாளனாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் எனும் கூறுகளில் இந்த உரை நான் ஆற்ற வேண்டிய என் ஊடகக் கடமையாகிறது. நான் இங்கே பதிவு செய்ய விரும்பும் கருத்துகள் அனைத்தும் தமிழ்ச் சமூக மேன்மையை விரும்பும் என் விருப்பங்கள்தானே தவிர, எதுவொன்றையும் எவர் ஒருவரையும் காயப்படுத்த விழைபவை அல்ல. இன்றைய தமிழ்நாடு பல்வேறு வகையான ஊடகங்களால் நிரம்பிவழிகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. நாளிதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், வார இதழ்கள், மாதமிருமுறை இதழ்கள், மாத இதழ்கள், காலாண்டிதழ்கள், காலக் கணக்கினைப் பற்றிக் கவலைப்டாமல் காசு கிடைக்கும் போதெல்லாம் வெளிவருகின்ற இதழ்கள் என்று நூற்றுக் கணக்கான அச்சிதழ்களை - நாம் அச்சு ஊடகங்களாகப் பெற்றிருக்கிறோம்.

திரைப்படங்கள், செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள், உள்ளுர்த் தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், அலைபேசிகள் என்று நூற்றுக்கணக்கான ஒளியும் - ஒலியும் இணைந்த ஊடகங்களை காட்சி ஊடகங்களாக நாம் பெற்றிருக்கிறோம். அரசு வானொலிகள், தனியார்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தும் பண்பலை வானொலிகள் என்று நூற்றுக்கணக்கான ஓசை ஊடகங்களை நாம் ஒலி ஊடகங்களாகப் பெற்றிருக்கிறோம்.

LASZLO_JAVOR_340இவ்வாறாகப் படிப்பதற்கான ஊடகங்களையும், காண்பதற்கும் கேட்பதற்குமான ஊடகங்களையும், கேட்பதற்கு மட்டுமேயான ஊடகங்களையும் ஆயிரக்கணக்கில் பெற்றிருக்கும் நமது தமிழ்ச் சமூகம் அவற்றின் வாயிலாக எந்த அளவுக்கு மேன்மைகளைப் பெற்றிருக்கிறது? என்கிற கேள்விக்குறி நம்முன் எழுந்து நெடுவடிவமெடுத்து வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அரசாங்கம் நடத்துகிற வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு எதையெதையெல்லாம் சொல்லக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்விலேயெ எந்த நேரமும் செயல்படுவதால், எதையெதைச் சொல்லவேண்டும் என்பதும் அவற்றுக்குத் தெரியாமல் போய்விட்டன. எல்லாவற்றையும் சொல்லும் கருத்துச் சுதந்திரத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்களோ தங்களது பெருங்கடனாகவும், பிறவிக் கடனாகவும் திரைப்படங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, அத்திப்பூத்தாற்போல, அரங்கேற்றப்படுகிற சமூக அலசல்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும் கூட, அவை போதுமானவை அல்ல என்பதோடு, அவ்வகையான அலசல்கள் உள்ளடக்க வீரியம் கொண்டவையும் அல்ல என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். கூட்டம் கூட்டமாக மக்களை அமரவைத்துக் கொண்டு, நீட்டி முழக்கிப் பேசி மேம்போக்கான நியாயங்களை அள்ளி அள்ளி வீசுகிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, அறிவுசார்ந்த சமூக அலசலாகச் சித்தரிக்கிற போக்கு தலைதூக்கியிருக்கிறது. நமது ஊடகங்கள் எதையெதை நீட்டி முழக்கிப் பேசி நியாயம் சொல்கின்றன என்பதைவைத்து மட்டுமல்ல, எதை எதைப் பேசாமல் தவிர்த்துக் கள்ளமௌனம் சாதிக்கின்றன என்பதை வைத்தும் இன்றைய நமது தமிழக ஊடகங்களைக் கணித்துக் கணக்கிட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

கடந்த அறுபதாண்டுகளுக்கு முன்பாக திரைப்படம் எனும் ஊடகம் நமது தமிழக மக்களின்மீது ஒரு பெருமழையெனப் பொழிய ஆரம்பித்து, இன்னமும் அவ்வாறே பொழிந்து கொண்டிருக்கிறது. திரைப்படப் பெருமழையிலிருந்து விலகி, தங்களை உலர்த்திக் கொள்வதற்கு நமது மக்களால் முடியவில்லை. பாமரத்தனங்களும், தாழ்வு மனப்பான்மைகளும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் பல்கிப் பெருகிய நிலையில், கோடிக்கணக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டிருக்கும் கல்வி அறிவு கிடைக்கப் பெறாத நமது மக்கள் அதாவது படிக்கத் தெரியாத நமது மக்கள், தங்களது கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு சேரக் கிடைக்கும் விருந்தாகத் திரைப் படங்களைப் பார்க்கத் தொடங்கினார்கள். அதாவது படிக்கத் தெரியாத நமது மக்களை பேசியவர்களும், பாடியவர்களும், நடித்தவர்களும் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். இன்னமும் அவ்வாறே சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகம் எத்தகையது என்பதை நமது மக்கள் கடுகளவும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், திரையுலகை நம்புகிற நமது மக்கள் எத்தகையவர்கள் என்பதைத் திரையுலகினர் மிகத் துல்லியமாகப் புரிந்து கொண்டனர். எனவேதான் அரசியலில், ஆட்சியதிகாரங்களில் ஆடைகளில், ஆடல்பாடல்களில், பெயர்களில் என்று தமிழர் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் திரையுலகம் நீக்கமற நிறைந்து கலந்து, பின்னிப் பிணைந்து கொண்டது.

இந்தப் போக்கினை நன்கு உணர்ந்துகொண்ட அனைத்துவகைத் தமிழ் ஊடகங்களும் அதே மக்களைக் கைப்பற்றித் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டன. ஆக, இன்றைய நிலையில் நமது தமிழ் ஊடகங்கள், அறுபது விழுக்காடு திரையுலகச் சார்புச் செய்திகளையும், முப்பது விழுக்காடு அக்கப்போர் செய்திகளையும், பத்து விழுக்காடு ஆக்கப்பூர்வச் செய்திகளையும் வெளியிட்டுத் தங்களது ஊடகக் கடமையினை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றன. திரைப்பட மோகம் என்பது நமது சராசரித் தமிழர்களுக்கு மட்டுமின்றி, நமது தமிழ் ஊடகங்களுக்கும் இருக்கின்றன. அதன் விளைவாகவும் அவை திரையுலகைச் சார்ந்து இயங்குகின்றன. சின்னத் திரைகளுக்கு, பெரிய திரைகளின் மீது ஏற்பட்டுள்ள மோகம் மிகவும் விந்தையானது.

கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் நாள் ஒரு பிறந்தநாள் வந்தது. அந்த நாளை நமது பெருவணிக ஊடகங்கள் தங்கள் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடின. அந்த பிறந்தநாளின் வாயிலாக ஒரு பெருங்கூட்டத்தை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்கிற சராசரி வணிக நோக்கமே அதற்கான காரணமாகும். ஆனால் அந்த நாளுக்கு ஒரு நாள் முந்தைய டிசம்பர் 11-ஆம் நாள் மலர்ந்த மகாகவி பாரதியின் பிறந்தநாளை, நமது ஊடகங்கள் எந்தெந்த வகையில் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடின என்பதை இந்த அரங்கின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

திரையுலகிற்கு வாழ்த்து சொல்வதும், திரைப்பாடல்களுக்குப் பொழிப்புரை அளிப்பதும், திரையுலகை வழிமொழிவதும், திரையுலகிற்கு விளக்கம் சொல்வதும், திரையலகிற்கு விருதுகளை அளிப்பதும்தான் நமது ஊடக அறமா? என்கிற கேள்வியை இந்த அரங்கின் வாயிலாக நான் சமூகத்தின் முன் வைக்கிறேன். இன்றைய தமிழ்நாட்டின் ஊடகங்களில் பெரும்பான்மையானவற்றை வாழவைத்துக் கொண்டிருக்கிற கொடையுலகமாகத் தமிழ்த் திரையுலகம் மாறியிருக்கிறது. ஆக, தமிழ் மக்களை மட்டுமல்ல, தமிழ் ஊடகங்களையும் வழி நடத்திச் செல்லுகிற விபரீத வலிமையைத் தமிழ்த் திரையுலகம் பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் வளர்ந்து செழிக்கிற ‘ஒற்றை| ஊடகமாக, கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாகக் கோலோச்சி வரும் தமிழ்த் திரையுலகம், தமிழ்ச் சமூகத்தின் மீதான தன்பிடியை சிறிதளவும் தளரவிடவில்லை. திரையுலகத் திரையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, வேறுவேறு வகையான தனித் தன்மைகளைக் கொண்டு, கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்கிப் பெருகிய அச்சிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையங்கள் போன்ற ஊடகங்கள், திரைத்துறையின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவித்து அறிவுசார்ந்த தளத்திற்கு, அவர்களை உயர்த்த முயற்சி செய்திருக்கலாம். திரையுலகம் பேசத் துணியாத, திரையுலகத்தால் பேசமுடியாத பல விஷயங்களை மேற்குறிப்பிட்ட ஊடகங்களும் தம் பங்கிற்கு மக்களின் பாமரத்தன்மை மிகுந்த அறியாமைகளுக்குப் பாதுகாப்புச் சுவர்களாக மாறியிருக்கின்றன.

வெள்ளித்திரை என்று அழைக்கப்படுகின்ற பெரிய திரையும், சின்னத்திரை என்றழைக்கப்படுகின்ற தொலைக்காட்சித் திரையும், அறியாமை மிகுந்த நம் மக்களுக்குச் செய்த, இன்னமும் செய்து வருகின்ற, பின்னிழுப்பு வேலைகளும், இரண்டகச் செயல்களும் கொஞ்சநஞ்சமல்ல. எப்பாடு பட்டேனும், எத்தகைய இழிநிலையைப் பின்பற்றியேனும் கூட்டம் கூட்டமாக மக்களைப் பார்க்க வைத்துவிட வேண்டும் என்பதைத் தவிர, இந்த இரண்டு திரைகளுக்கும் வேறு நோக்கம் ஏதுமில்லை. அந்த அடிப்படையில்தான் பெரிய திரைகளில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அந்தக் காட்சிகள் யாவும் சின்னத்திரைகளால் வழிமொழியப் படுகின்றன. பல்வேறு வகைகளில் பெரியதிரையை வழிமொழிந்தது போக, எஞ்சியிருக்கும் நேரங்களில் சின்னத்திரைகள் அரங்கேற்றுகிற அவலங்களில் பெரும்பான்மையானவை, வேதனைக்குரியவையாகும்.

இன்றைய தமிழ்நாட்டில் இயங்கிவரும் செயற்கைகோள் தொலைக்காட்சிகள் யாவும், அரசியல் கட்சிகளின் சார்புடையவைகளே. எனவே இவற்றில் இருந்து பெறப்படும் செய்திகளில், அவரவர் நிலை சார்ந்து மறைப்புகளும் மௌனங்களுமே மேலோங்கியிருக்கின்றன. குறை கூறல், தப்பித்தல், விடையளித்தல் எனும் மூன்று கோணங்களில்தான் இவற்றின் பெரும்பான்மைச் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. அதுபோக, முதன்மையான நிகழ்ச்சிகளாக இடம்பெறுபவை மெகாத் தொடர்கள் என்றழைக்கப்படுகிற நெடுந்தொடர்கள், வாத விவாதங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றில், மெகாத் தொடர்களும், குழந்தைகளையும், இளம் பெண்களையும், திரைப்பாடல்களுக்கு நடனமாடச் செய்யும் நடன நிகழ்ச்சிகளும், உடனடியாகத் தடை செய்வதற்கு உரிய அடிப்படைகளைக் கொண்டவை.

எதற்கெடுத்தாலும், எந்த நிலையிலும், எப்போதும் அழுதுவடிகின்ற கதாபாத்திரங்களைக் கொண்டு கட்டமைக்கப்படுகிற மெகாத் தொடர்கள், லட்சக்கணக்கான குடும்பப் பெண்களை, ஒவ்வொரு நாளும் சகதியில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றன. வணிக நோக்கம் கொண்ட ஒரு சிறு குழுவினர், சிந்தித்துத் திட்டமிட்டு அரங்கேற்றும் சகிக்க முடியாத கற்பனைக் கதைகளுக்கு நம்முடைய லட்சக்கணக்கான பெண்கள் உளவியல் ரீதியில் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். கற்பனையான, செயற்கைத்தனங்கள் மிகுந்த, சிந்திக்கும் மனம் கொண்டவர்களுக்கு அலுப்பையும் வெறுப்பையும் உண்டாக்குகின்ற, மனம்போன போக்கில் ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகின்ற, பெண் இனத்திற்குக் கடுகளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தாத, பொறுமை பேராசை எனும் இரண்டே நிலைகளில் பெண்களை நிறுவுகிற, இவற்றுக்கெல்லாம் மேலாக பெண்களே பெண்களுக்கு எதிரி என்கிற புழுத்துப்போன பழைய ஆணாதிக்கக் கருத்தை வெட்கக் கேடான முறையில் ஒவ்வொரு நாளும் உயர்த்திப் பிடிக்கிற மெகாத் தொடர்கள், தடை செய்யப்பட வேண்டிய அடிப்படைகளைக் கொண்டவை என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன். இப்படிக் கோருவதற்கு சமூக ஆர்வலர்களுக்கும், காட்சி ஊடக நுகர்வியல் மேன்மைகளை விரும்புவோருக்கும் முழு உரிமை இருக்கிறது. ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கே குறிப்பிட நினைக்கிறேன்.

ஹங்கேரி நாட்டில், 1933-ஆம் ஆண்டு GLOOMY SUNDAY அதாவது இருண்ட ஞாயிறு எனும் பெயரில் லெஸ்ஸோ ஜவோர் (LASZLO JAVOR) என்பவர், கேட்பவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகிற ஒரு தற்கொலைப் பாடலை எழுதினார். அந்தப் பாடலுக்கு ரெஸோசெரஸ் - (REZSOERESS) என்பவர் மிகவும் கொடூரமாகவும் கேட்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்படியும் இசை அமைத்தார். இதில் என்ன வேதனை என்றால், தான் இசையமைத்த பாடலைத் தானே கேட்ட ரெஸோசெரஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அவரோடு சேர்ந்து அந்த பாடலைக் கேட்ட அவரது மனைவியும் தானே தன் உணவில் விஷத்தைக் கலந்து அதை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அந்தப் பாடலைக் கேட்டு ஹங்கேரியில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். ஹங்கேரியில் அந்தப் பாடல் தடைசெய்யப்பட்ட நிலையில் “ஹங்கேரியின் சூசைட் சாங்” என்ற பெயரில் அமெரிக்காவில் ஒலிபரப்பு செய்யப்பட்ட அந்த பாடல், அங்கேயும் சிலரைத் தற்கொலை செய்து கொள்ள வைத்தது. எனவே GLOOMY SUNDAY என்கிற அந்தப் பாடல் அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. ஆர்வக் கோளாறு காரணமாக கணிப்பொறி ஒலிபெருக்கியில் அந்த பாடலைக் கேட்ட நான், இசைக்கு இருக்கும் இன்னொரு முகத்தை உணர்ந்து அதிர்ந்துபோனேன்.

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் - GLOOMY SUNDAY தடை செய்யப்பட்டதற்கான அதே காரணங்கள், இன்று ஒவ்வொரு நாளும் நமது பெண்களை தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகின்ற மெகாத் தொடர்களுக்கும் பொருந்துகின்றன என்பதற்காகத்தான். நல்ல நல்ல திரைப்படங்களைத் திரையிட்டு, மக்களின் ரசனையை மேம்பாடடையச் செய்து வருகின்ற திரைப்பட இயக்கங்களைப் போல, தொலைக்காட்சிகளின் மெகாத்தொடர்களுக்கும், பண்பாட்டுச் சீரழிவைப் பரப்பி வருகின்ற குத்துப்பாட்டு நடனங்களுக்கும், எதிராக நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகின்ற இயக்கங்களும் தோற்றுவிக்கப்பட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. ஊடகச் சுதந்திரம் என்பது எவராலும் கேள்வி கேட்க முடியாத, வானளாவிய அதிகாரம் படைத்த ஒன்றல்ல என்பதை, ஊடக நுகர்வாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

பல்வேறு அறங்களில் உன்னதங்கள் நிறைந்தது ஊடக அறமாகும். “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் அய்யோவென்று போவான்” என்று மகாகவி பாரதி சொன்னது, ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்ளுக்கும் கூடப் பொருந்தும். ஊடகங்கள், மக்களை மேம்படுத்திக் கொண்டே பாதுகாக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. அதே வேளையில், ஊடகங்களிடம் இருந்தும், அவற்றின் வெளிப்பாடுகளில் இருந்தும், மக்களைப் பாதுகாக்க வேண்டியதும், நமது முதன்மையான கடமையாக இருக்கிறது.

தற்போதைய தமிழகத்தின் திரைப்படம், தொலைக்காட்சி ஆகிய இரண்டு மாபெரும் காட்சி ஊடகங்கள், 90% விழுக்காட்டளவிற்கு மேம்போக்கானவர்களால், மேம்போக்கிகளை உருவாக்கி வளர்க்கும் பணியினைச் செய்து வருகின்றன. அடுத்ததாக இப்போது நான் மேற்கோள் காட்டப் போவது, இந்திய அளவில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவரின் ஆதங்கமாகும். அந்த ஆதங்கம் இதுதான்.

“இந்தியாவில் வறட்சி வறுமை காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்காமல், வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றன. கிரிக்கெட், சினிமா, பேஷன் ஷோ போன்ற பொழுதுபோக்குச் செய்திகள்தான் 90% சதவீதம் ஒளிபரப்பப் படுகின்றன. விவசாயிகள் தற்கொலை, ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகள், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை போன்ற செய்திகள் வெறும் 10% சதவீதம்தான் ஊடகங்களில் இடம்பிடிக்கின்றன. டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முன்னிலைபெற வேண்டும் என்பதற்காக ஜோதிடம், அரைகுறை ஆடையுடன் பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பேய்க் கதைகள் மற்றும் தொடர் கதைகள் ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகள் சுயக் கட்டுப்பாடுடன் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றன. சுயக்கட்டுப்பாடு என்பது கட்டுப்பாடே அல்ல. எந்தவொரு சுதந்திரமும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதுதான். எனவே காட்சி ஊடகங்களையும் பத்திரிகைக் கவுன்சிலின் கீழ் கொண்டு வரவேண்டும். சமூகக் கொடுமைகளான ஜாதிப் பிரச்சனைகள், மூடநம்பிக்கைகள், ஏழ்மை போன்றவற்றிற்கு எதிராக ஊடகங்கள் போராட வேண்டும். மக்களை அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்ட வேண்டும். மக்களின் மூடநம்பிக்கைகளைக் காட்டி அவர்களை ஏமாற்றக்கூடாது.”

ஆதங்கம் மிகுந்த இத்தகையக் கருத்துருக்களைத் தெரிவித்திருப்பவர், இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேயகட்ஜ் அவர்கள். நமது ஊடகங்களைப் பற்றிய இதே நிலை ஆதங்கம் நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான சமூக ஆர்வலர்களுக்கு மேலோங்கியிருக்கிறது. ரஷ்யாவில் பெஸ்லான் பள்ளியில் குண்டு வெடித்து பள்ளிக் குழந்தைகள் பலர் இறந்து விட்டனர். குண்டுவெடிப்பில் குழந்தைகள் இறந்து கிடக்கும் காட்சிகளை இஸ்வெஸ்தியா என்கிற நாளிதழில் வெளியிட்டார்கள். இதுபோன்ற காட்சிகளை வெளியிட்டால்தான் பத்திரிகை பெருமளவில் விற்று லாபம் கிடைக்கும் என்று அதற்குக் காரணமும் சொன்னார்கள். ஆனலும் கூட அந்தப் பத்திரிகையின் பங்குதாரர்களே ஒன்று சேர்ந்து பொங்கியெழுந்து, தனி நபர் துயரங்களை பணவரவாக மாற்றும் ஊடக உத்தி இழிவானது என்று சொல்லி ‘இஸ்வெஸ்தா| நாளிதழின் ஆசிரியர் ராஃப்ஷாகிரோவ் என்பவரை இரண்டே நாளில் பணிநீக்கம் செய்தார்கள். உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் கோரமான உயிர்ப்பலிக் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிடவில்லை. நமது மண்ணில்தான், “பதிமூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரம்” என்று தலைப்பிட்டு – பாதிப்பிற்குள்ளான சிறுமியின் படத்தையும் வெளியிட்டு, பக்கம் பக்கமாக விவரித்து எழுதுகிறார்கள். அண்மையில் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய இன்னொரு செய்தியையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

jacintha_saldanha_371தாய்மையடைந்துள்ள பிரிட்டிஷ் இளவரசி கேத் மிடில்டன், லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் பரிசோதனைக்காகச் சேர்ந்திருந்தார். இதையறிந்த ஆஸ்திரேலிய வானொலியின் நிகழ்ச்சி நடத்துனர்களான மெல் கிரிஜ் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் அந்த மருத்துவமனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரிட்டிஷ் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் என்று போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, இளவரசி கேத் மிடில்டன் உடல்நலம் பற்றி விசாரிக்க, அப்போது வரவேற்பறையில் இருந்த செவிலியரும், இந்திய மரபு வழியைச் சேர்ந்தவருமான ஜெசிந்தா, அந்த அழைப்பை மருத்துவமனையின் தலைமைச் செவிலியருக்கு மாற்றினார். அந்தத் தலைமைச் செவிலியரும் இளவரசி கேத் மிடில்டன் உடல்நலம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க, அது அந்த வானொலியிலும் செய்தியாக ஒலிபரப்பானது. என்ன நடந்தது என்பது பிறகு தெரியவர செவிலியர் ஜெசிந்தா மன உளைச்சல் காரணமாக இறந்து போனார். பின்னர் அந்தச் செய்தி உலகச் செய்தியாக மாறியது.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வானொலியின் நிகழ்ச்சி நடத்துனர்களான மெல்கிரிஜ், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகிய இருவரும் தங்களது வானொலியின் வாயிலாகவே, தங்களது தவறான செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கதறி அழுதனர். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி வானொலி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய வானொலியின் நிகழ்ச்சி நடத்துனர்கள் செய்தது தரக்குறைவான, பொறுப்பற்ற, ஊடக நெறிகளுக்கு முரணான, விளையாட்டுத்தனமானதொரு செயல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதே நேரத்தில் ஒரு ஊடகத்தின், அந்த ஊடகப் பணியாளர்களின், செயல் போதுமான அளவுக்கு அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். நமது ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வகையில் நமது ஜெசிந்தாக்களைப் புண்படுத்தி வருகின்றன. ஒரு திரைப்பட நடிகைக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவரை, அது குறித்து கேலிபேசி எழுதும் உரிமையை நமது சில ஊடகங்கள் கையிலெடுத்துக் கொள்கின்றன.

ஏழு கோடிக்கும் மேல் மக்கள் தொகையும், பல்லாயிரக்கணக்கில் பிரச்சனைகளும், தோன்றிக் கொண்டேயிருக்கிற நமது மண்ணில் விவாதிப்பதற்கும், வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களையும் நிர்வாகத் துறையையும் வழிநடத்துவதற்குமான செய்திகள் ஏராளமாக மண்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், பெரும்பான்மையான அச்சு ஊடகங்களில் வெளியாகும் சமூகம் பற்றியதான செய்திகளே நமக்கு ஆறுதலாகவும், நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களாகவும், சிந்திக்கத் தூண்டுவதுமாக இருக்கின்றன. இது வரவேற்கத் தக்க ஒன்றாகும். அனைத்து வகை ஊடகங்களுக்குமான தாய் ஊடகமாக நாம் நமது அச்சு ஊடகங்களைக் குறிப்பிடலாம். நமது தமிழ் மண்ணில் அச்சு ஊடகம் மட்டும்தான் சமூக ஆர்வலர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான சரணாலயங்களாக விளங்குகின்றன.

நாம் முன்னமே குறிப்பிட்டதைப் போல காட்சி ஊடகங்களாகி, படிப்பறிவற்ற நமது மக்களை, கோடி கோடியாகச் சுரண்டிச் சூறையாடிக் கொண்டிருக்கும் திரைப்படம், தொலைக்காட்சி ஆகிய இருபெரும் ஊடகங்கள் முப்பது விழுக்காட்டளவிற்குக் கூட தமக்கிருக்கும் பொறுப்பை உணரவில்லை என்பதோடு, அப்படியொரு பொறுப்புணர்வு தேவையற்றது என்றும் அவை கருதுகின்றன. “இது பிசினஸ்… இங்கே எங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்” என்றுகூட வெளிப்படையாக வெட்கமின்றிச் சொல்லவும் செய்கின்றனர். பிசினஸ் என்று சொல்லிக் கொண்டு நீ எதைவேண்டுமானாலும் காட்டிக் கொண்டிருப்பாயா? என்று சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்க வேண்டியவர்களாக, அவற்றின் நுகர்வோர்களாகிய நாம் மாறியாக வேண்டிய கட்டாயத் தேவை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. “நாயா பேயா?” “குரங்கா சிரங்கா?” என்றெல்லாம் தலைப்பு வைத்துக் கொண்டு, நீட்டி முழக்கி நியாயம் பேசுவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி, விவாத அரங்குகளை அடிக்கடி விளம்பரதாரர்களின் பெயரைச் சொல்லியே நடத்திக் கொண்டிருக்கும் காட்சி ஊடகங்களும் அவற்றின் ஊடகர்களும், மேனா மினுக்கித்தனம் நிறைந்த தங்களது மேம்போக்கான பார்வைகளை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் நூலகத்துறை கடந்த நான்கு ஆண்டுகளாகப் புத்தகங்களையே வாங்கவில்லையே ஏன்?

ஆண்டுக்குப் 18,000 கோடி எனும் கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மது, தமிழர்களை எப்படியெல்லாம் உயர்த்தியிருக்கிறது?

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான ஆறுகள் வறண்டது ஏன்? அவற்றின் மணலைச் சுரண்டுவது ஏன்?

தமிழ்நாட்டில் வேளாண்மைத் தொழிலின் இடுப்பு, யாரால் எப்படி ஒடிக்கப்பட்டது?

இந்திய அளவில் ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 12,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்களே ஏன்?

தமிழகத்தின் விளை நிலங்களில் எல்லாம் வேலிக்காகத்தான் மரங்கள் மண்டிவிட்டதே எப்படி?

துணிச்சல்மிக்க ஊடகப் பெண்மணி வீரமங்கை மேரிகால்வின் எப்படிக் கொல்லப்பட்டார்?

அஸாமில் ஒரு தனிமனிதன் 550 ஹெக்டேர் காடு வளர்த்திருக்கிறானே அது எப்படி?

சத்துணவில் மட்டும் அடிக்கடி பல்லி விழுந்து அவ்வப்போது குழந்தைகள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்குப் போகிறார்களே ஏன்?

இந்தியாவில் 48% விழுக்காட்டுப் பெண்களுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடத்தப்பட்டுவிட்டதாக யுனிசெஃப் அமைப்பு சொல்கிறதே, அது உண்மைதானா?

பான்பராக் இளைஞர்கள் தமிழ்நாட்டில் பெருகுவது ஏன்? பக்கத்து மாநிலமான கேரளாவில் துப்ப முடியாத பான்பராக் எச்சிலை, தமிழ்நாட்டில் எங்குவேண்டுமானாலும் துப்ப முடிகிறதே அது எப்படி?

தமிழ்த் திரைப்படங்களில் மட்டும் ஒரு விபத்தில் நினைவு தவறி, இன்னொரு விபத்தில நினைவு திரும்புகிறதே, அது எப்படி?

சாலை விபத்துகளிலும், தற்கொலைகளிலும் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிப்பது ஏன்?

ஒரு ஆண்டுக்குச் சராசரியாகப் 15,000 பேர் எனும் கணக்கில் தமிழ் மக்கள் சாலை விபத்துகளில் செத்து மடிவதைத் தவிர்க்கவே முடியாதா?

முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட பொறியாளர் கர்னல் பென்னிகுக் எப்படியெல்லாம் பாடுபட்டார்?

இந்தியாவில் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களே அது ஏன்? இந்த நிலையில் வால்மார்ட் வகையறாக்கள் நுழைந்தால் தற்கொலைகளின் எண்ணிக்கை குறையுமா?

என்றெல்லாம் நீண்டு கொண்டேயிருக்கின்ற நூற்றுக்கணக்கான பிரச்சனைகளின் பக்கமும், சாதக பாதகம் நிறைந்த சமூக நிகழ்வுகளின் பக்கமும் காட்சி ஊடகங்கள் தங்களது கவனத்தைத் திருப்ப வேண்டும். பேசாப் பொருளைப் பேசத் துணிய வேண்டும். பெரிதினும் பெரிது கேட்டுப் பழக வேண்டும். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் சொன்னதைப் போல – “சூழ்வன மீறி சுடர்வன செய்ய வேண்டும்!”

முட்டைகளை உடைப்பதற்கு கடப்பாரைகளைப் பயன்படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது கடப்பாரை – முட்டை ஆகிய இரண்டு தரப்பையுமே கொச்சைப்படுத்துவது போல அமையும் என்று தெரிவித்து விடைபெறுகிறேன்.

- ஜெயபாஸ்கரன்

Comments

4 comments

4
pugazhendhi
Excellent.
நெல்லை பாலாஜி
நல்ல அருமையான அலசல்..பல நூறு வருடங்களாக, படிப்பறிவில்லாமல் ,அறியாமையில் துள்ளி திரிந்த இந்த மாக்களுக்கு, பகுத்தறிவு புகட்ட வந்த எங்கள் பெரியார், மீண்டும் வந்தால் ஒழிய, இந்த கூட்டத்தை திருத்துவது சற்று கடினமே...எந்த ஊடகங்கள் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்..இதில் நாம் எப்படி அவர்களை , இது தவறு இது சரி என்று ,சரி தவறு எது என்று தெரியாமலே வளரும் இந்த கூட்டத்தினை திருத்தமுடியும்..

நமக்கு தேவை அடிப்படை மாற்றம் ...அது மேலிருந்து திணிக்கப்படுவது அல்ல ...மாறாக கீழே இருந்து வருவது..ஒவ்வொரு வீட்டிலும் ,ஒவ்வொரு தெருவில் இருந்தும் அந்த மாற்றம் வர வேண்டும்..அதற்கு கட்சிகள் எப்படி வீடு வீடாக சென்று, வாக்கு கேட்கிறார்களோ, அவ்வாறு நாமும் ஓவ்வரு வீட்டிற்கும் சென்று , மீண்டும் மீண்டும் சென்று , மக்களுக்கு சொல்ல வேண்டும்.

இதற்கு நல்ல ஒரு அமைப்பு வேண்டும் ..சும்மா ஒரு நாள் பேரணி நடத்தினால் மட்டும் போதாது..படை வேண்டும்..பிறர்நலன் அக்கறை காட்டும் படை வேண்டும்...வயது ஒரு தடை அல்ல..மாறாக அக்கறை வேண்டும்..இவற்றை நாம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்..பல தடைகளை விதிக்கும் , இப்போது கூடங்குளம் போராட்டத்திற்கு எப்படி தடை செய்கிறதோ அதை விட நூறு மடங்கு தடை வரும்...

தயாரா நாம் ???????
அமீர் அப்பாஸ்
மிகச்சிறந்த கட்டுரை.ஊடக அறம் குறித்து, யாரும் வாய் திறப்பதில்லை. இந்திய அளவில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவிற்கு பின்பு, இது குறித்து யாரும் பெரிய அளவில் பேசவில்லை. தமிழ் மண்ணில் எழுந்த முதல் குரல். நன்றி ஜெயபாஸ்கரன் அய்யா.
Janarthanan
Eye opening article Problem is no proper forum forexpressing our views Not only middle class even those who are poor platform people are also lurehd by this satanic grip.Better way at present is talk to atleast 5. To 10 people about this and ask them to ponder and request them to speak another 5to 10people daiily
Y

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.