மன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவான சதயத்திருவிழா ஒவ்வோராண்டும் தஞ்சையில் கொண்டாடப்படுவது வழக்கம். கோயிலின் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகமும், ராஜராஜனின் புகழைப் பரப்பும் பட்டிமன்றமும் வழக்கமானது. வழக்கமற்ற மரபுகள் சமீபத்தில் முளைத்திருக்கின்றன. சாதிக்கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் சதயத் திருவிழாவுக்காகத் திரளுகிறார்கள். ராஜராஜ சோழனோடு தங்கள் தங்கள் சாதிகளின் பெயர்களை இணைத்துக்கொண்டு அம்மன்னனை உரிமை கொண்டாடுகிறார்கள்; ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்; ஊர்வலம் செல்கிறார்கள். வரலாறு புதுப்புதுப் பரிமாணங்களை எடுக்கிறது.

rajaraja_chozhan_640

சாதிகள் ராஜராஜனைக் கொண்டாடுவதன் மர்மம் என்ன? அவர்கள் அவ்வாறு கொண்டாடுவதற்கான தார்மீக பலம் எங்கிருந்து கிடைத்தது? தார்மீகபலம் இல்லாமல் தொண்டர்பலம் மட்டும் போதுமா? நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தின் மிகப்பெரும் சாபக்கேடு சாதி. தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும். நம்முடைய பேசுபொருள் தஞ்சை ராஜராஜ சோழன் என்பதால் தமிழ்நாட்டிற்குள் நம்மை, நமது பேசுபொருள் எல்லையை வைத்துக் கொள்வோம். ராஜராஜ சோழத் தேவர், வீர வன்னியன் ராஜராஜ சோழன், ராஜராஜ சோழ தேவேந்திரன், மாமள்ளன் ராஜராஜ சோழன் என்று அடையாளப்படுத்துவதற்குள் ஏராளமான சமூகக் காரண‌ங்கள் உள்ளன. பார்ப்பன‌ரல்லாத உயர்சாதி இந்துக்களைப் பொருத்தவரை தங்களுடைய ஆதிக்கத்தை ராஜராஜ சோழன் மற்றும் சோழமன்னர்களின் ஆதிக்கத்தோடு இணைத்துப் பார்ப்பதில் அவர்களுக்கு ஒருவித போதைவெறி.

தங்கள் சாதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், இன்றையக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சமூகக் கலாச்சாரத்தில் தங்களது ஆதிக்கம் தொடரவும் அவர்களுக்கு ராஜராஜ சோழன் முக்கியம். ராஜராஜ சோழனின் கலை அவர்களுக்கு முக்கியமில்லை; அவனது வீரம் முக்கியம். பக்கத்து நாடுகளை அடிமைப்படுத்தியவிதம் முக்கியம். அதாவது ராஜராஜனுக்குள் அடங்கியுள்ள ஆதிக்கவாதிதான் இவர்களுக்கு முக்கியம். மற்றொரு பக்கம் பரமக்குடி சம்பவத்திற்குப் பின்னர் தங்களது நிலையை வலுப்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு துருப்புச்சீட்டு அவசியம். அதனால் தங்களது துருப்பாக ராஜராஜ சோழனைக் கள‌மிறக்கிவிட்டார்கள். சாதி இந்துக்களுக்கு எதிராக எதிர்வினை புரியவேண்டுமல்லவா. தமிழ்நாட்டின் சாபக்கேடாக விளங்கும் சாதியை வளர்த்துவிட்டதில் மிகப்பெரும் பங்காற்றிய ராஜராஜ சோழனுக்கும் அவனது குலத்தோன்றல்களுக்கும் பலநூறு வருடங்கள் கழித்து தங்களது நன்றிக்கடனை சாதிக்கட்சிகள் வருடாவருடம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 அவ்வாறு சோழ மன்னர்களைக் கொண்டாடுவதற்கு மிகப்பெரும் முகாந்திரங்கள் ஏதும் உண்டா? வரலாற்றைத்தான் நாம் தேடிப் போகவேண்டும். பிற்காலச் சோழர்கள்தான் சிறந்த மன்னர்களாகப் போற்றப்படுகின்றனர் (கரிகாலன் முந்தைய சோழர்களைச் சேர்ந்தவன்). இன்றைக்கும் நீடித்து நிற்கக்கூடிய மிகப்பெரும் கட்டுமானங்கள்தான் இவர்களது ஆட்சியின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் தளங்கள். புகழ்மிக்கக் கட்டுமானங்கள் மட்டுமே ஆட்சியாளர்களின் புகழைப் பறைசாற்றப் போதுமானதா? புதுதில்லியின் ராஷ்டிரபதி மாளிகை உட்பட பலக் கட்டுமானங்கள் ஆங்கிலக் காலனியாதிக்கத்தில் உருவானவை. புகழ்மிக்க ரயில்வே ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தின் விரிவுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. அப்படியானால் டல்ஹௌசி முதல் மௌண்ட்பேட்டன் வரை அனைத்து காலனிய ஆட்சியாளர்களும் சிறந்தவர்களா? ஆங்கிலேய ஆதிக்கத்தின் நிலச்சட்டங்கள், வரிவிதிப்புகள், பஞ்சங்கள் பற்றியெல்லாம் பேசுகிறோமா இல்லையா?

அந்நிய ஆங்கிலேயர்களையும், தமிழ் மன்னர்களையும் இப்படி ஒப்பிடலாமா? என்னும் கேள்விக்கு நம்மிடம் உள்ள ஒரே பதில் இதுதான்: " அரசியின் பெயரால் ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து பஞ்சத்தை நமக்குக் கொடுத்தார்கள். சோழ மன்னர்கள் கோயிலின் பெயரால் கொள்ளையடித்து சாதியை, வர்ணத்தை பன்மடங்கு வளர்த்து நமக்குக் கொடுத்தார்கள்". தஞ்சைப் பெரிய கோவில் மிகச்சிறந்த கட்டுமானம் என்பதில் சந்தேகமில்லை. தமிழர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், கலாச்சார, பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப் பெரும் கடமையாற்றியிருக்கிறது என்னும் வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் சமீபகாலம் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கலாச்சாரக் குறியீடாக விளங்கும் பறையாட்டத்திற்கு பெரிய கோவிலில் இடமில்லை. அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழர்கள் இல்லையா? தமிழர்களின் கலாச்சாரம் வளர பெரியகோவில் இடமளித்தது. சரி. சாதாரண விவசாயக் குடியானவனை அது பிழிந்து எடுத்ததா இல்லையா? மீண்டும் நாம் சரித்திரச் சான்றுகளுக்குள்தான் செல்லவேண்டும்.

 சோழமன்னர்களின் ஆதிக்க மையம் தஞ்சை பெரியகோவில். தமிழர்களை ஒன்றுபடவிடாமல் தடுத்து நிறுத்தும் ஒரே சக்தியான சாதிகளைப் பெரிதும் பேணிக்காத்து வளர்த்தது சோழர்களின் அரசு; அவர்களின் கோவில். சாதிய உருவாக்கத்திற்கு பார்ப்பன‌ர்கள் காரணமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதைப் போற்றி வளர்த்து, நிலைபெறச் செய்ததில் பார்ப்பனிய‌த்திற்கு மிகப்பெரும் பங்குண்டு. பார்ப்பன‌ர்கள்தான் சாதிக்கு, வர்ணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை மனுதர்மத்தின் மூலமும், வேதங்களின் மூலமும் வழங்கினர். சோழமன்னர்கள் அதை மென்மேலும் கடைப்பிடித்து ஒழுகினர். வேள்வியில் இட்ட தீ போல சாதியும் வள‌ர்க்கப்பட்டது.

வட இந்தியாவிலிருந்து மிகப்பெரும் என்ணிக்கையில் பார்ப்பன‌ர்கள் குடியமர்த்தப்பட்டனர். வளமான நிலங்கள் கிராமம் கிராமமாக வேள்வி செய்யும் அந்தணருக்கு வழங்கப்பட்டன. நிலத்தில் வியர்வை சிந்தாதப் பிரிவினருக்கு நிலங்கள். இப்படியாகத்தான் தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளர்ந்தது. கோவில்களுக்கும் தானமாக நிலங்கள் வழங்கப்பட்டன. இவ்விரு பிரிவினரும் (பார்ப்பன‌ரும், கோவிலும்) அரசுக்கு வரிசெலுத்த வேண்டியதில்லை. இப்படியாக வரி இல்லா நிலங்கள் பெருகப்பெருக சாதாரணக் குடியானவர் நிலங்களின் வரிச்சுமை மிகப்பெருமளவில் அதிகரித்தது. அதோடு அவர்களின் துன்பமும் அதிகரித்தது. ஆனால் அரசவையும், கோவில்களும் செல்வத்தில் பிரகாசித்தன. கூடவே பார்ப்பன‌ர்களும், அரசில் தனிப்பட்ட செல்வாக்கு செலுத்திய வேளாளர்களும் ஜொலித்தனர். வேளாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் 'வேளான் வாகை' என வழங்கப்பட்டன. கோவிலில் பணிபுரிந்த நாட்டிய மகளிர்க்கும், அரசின் அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் கூட நிலம் இலவசமாக அளிக்கப்பட்டது. இவ்வகை நிலங்கள் ஜீவிதங்கள் என்றழைக்கப்பட்டன. சிற்சில ஜீவித நிலங்களும் வரியில்லா நிலங்களாயின. இப்படியாக இலவச நிலங்கள் பெருகப் பெருக சாமானியக் குடியானவர்களின் சிறு, குறு நிலங்கள் மட்டும் நாட்டின் ஒட்டு மொத்த நிலவருவாயைத் தரவேண்டிய சுமையைப் பெற்றன. விளைவு. அம்மக்களின் மீது கொடிய வரிச்சுமை. முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் (1070-1120) பசுக்களுக்கும், எருதுகளுக்கும்கூட வரி போடப்பட்டது.

 இக்கடுமையான வரிவிதிப்பைக் கண்டு சாமன்ய மக்கள் சும்மா இருந்துவிடவில்லை. கடுமையானப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல்வேறு வடிவங்களை இப்போராட்டங்கள் அடைந்தது. அரசு நிர்ணயித்த வரியைச் செலுத்த குடியானவர்கள் மறுத்தனர். வரியைக் குறைக்க இயக்கங்கள் மேற்கொண்டனர். வரி குறைக்கப்படும்வரை நிலத்தில் விதையிடாமல் விவசாயம் செய்ய மறுத்தனர். சில நேரங்களில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் வசிக்கும் கிராமங்களை ஒட்டுமொத்தமாகக் காலிசெய்துவிட்டு வேறிடங்களுக்குக் குடி பெயர்ந்தனர். சில நேரங்களில் தாங்களாகவே ஒன்றுகூடி வரி நிர்ணயம் செய்தனர். மிகப்பெரும் ஆச்சரியம் என்னவென்றால் சோழ சாம்ராஜ்யத்தின் வலிமைமிகு இரு சாதிக்குழுக்களான வலங்கை, இடங்கைப் பிரிவுகள் கூட மன்னனின் வரிவிதிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மன்னனின் வரிவிதிப்புகள் மிகக்கடுமையாக இருந்தபோது இவ்விரு எதிரெதிர் பிரிவுகளும் ஒன்றுகூடி, அசாத்திய ஒற்றுமையை வெளிப்படுத்தி மன்னனுக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக வரிநிர்ணயம் செய்தனர் (தஞ்சையின் கொருக்கை செப்பேடுகள்).

அரசனின் அவையில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பன‌ர்கள், வேளாளர்களை இடங்கை, வலங்கைப் பிரிவினர் எதிர்த்தனர். பார்ப்பன‌ரும், வேளாளரும் நிலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டைகள். இவ்விருவரும் தங்கள் தங்கள் நிலங்களை நிர்வாகம் செய்வதற்கு குடிமக்கள் யாரும் உதவிகள் செய்யக்கூடாது என தங்கள் சாதிப்பிரிவினருக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு உதவி செய்பவர்களைக் கொல்வதற்கும் அவர்கள் தயங்கவில்லை.

 பார்ப்பன‌ர்களும், வேளாளர்களும் ம‌ட்டுமே பங்குபெற்ற ஊர், சபை போன்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இடமும் இருப்பதில்லை. அவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பவர்களும் எவரும் இல்லை. அரசனைத் தவிர, அவனது ஆளுநர்களைத் தவிர நிலவரியை நிர்ணயம் செய்வதற்கு ஊர், சபை அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. மிகக் கடுமையான நிலவரியை எதிர்த்து மட்டும் மக்கள் திரளவில்லை. தங்களுக்கு நல்ல ஊதியம் தரப்படவேண்டும் என்றும் மக்கள் போராடினர். பாகனேரி உள்ளிட்ட 24 கிராமங்களில் பறையர் இன மக்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) தங்களின் உழைப்புக்கு ஏற்ற கூலிவேண்டும் எனப் போராடினர். ஊர், சபையைச் சேர்ந்த ஆதிக்கவாதிகள் அவர்களை மிகக் கடுமையாக ஒடுக்கினர். அம்மக்கள் ரத்தம் சிந்திப் போராடியதைத் தொடர்ந்து சில உரிமைகளைத் தர ஆதிக்கவாதிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அதன்படி திருவிழாக்காலங்களிலும், இறப்பு நிகழ்வுகளிலும் நெல்தானியம் வழங்குவது என ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது (Annual Report on Indian Epigraphy - 69, 1924). இதைப் பொறுக்கமாட்டாத பார்ப்பன‌ர்களும், வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது மேலும், மேலும் ஒடுக்குமுறைகளைத் தொடுத்தனர்.

tanjore_temple_640

ஆதிக்கவாதிகளை எதிர்த்து சாதாரணக் குடியானவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்தியப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மன்னனின் கோபம் அப்பாவி மக்களின் மீது, சாதாரணக் குடியானவர்களின்மீது, தாழ்த்தப்பட்டவர்களின்மீது திரும்பியது. பொறுமையிழந்த மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218) பார்ப்பன‌ர்களுக்கும், வேளாளர்களுக்கும் எதிரானப் போராட்டங்களையும், கலகங்களையும் தடை செய்தான். மீறி கலகம் செய்பவர்களுக்கு 20000 காசுகள் அபராதம் விதிக்கப்படும் என தண்டனையையும் அறிவித்தான் (கீழையூர் செப்பேடுகள்). பார்ப்பனிய‌, வேளாள நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து தன்னெழுச்சியாக நடைபெற்ற குடியானவர்களின் போராட்டங்களை நசுக்க சோழ மன்னர்கள் கடும் ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டார்கள் என்றால் சோழ அரசும், சோழ சாம்ராஜ்யமும், சோழமன்னர்களும் யாருக்காகப் பணிபுரிந்தார்கள்? என்ற வினா தொக்கி நிற்கிறது.

சோழப்பேரரசில் எளிய மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான வன்முறைகள் பற்றியக் குறிப்புகள் வரலாற்றின் பக்கங்களில் விரவிக் கிடக்கின்றன. கோவில் பணியாளர்கள் நால்வர் தாங்கள் விவசாயம் செய்த நிலங்கள் கோவில் சொத்தாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மாண்டதை தஞ்சையின் புஞ்சை செப்பேடுகள் தெரிவிக்கின்றன. சாதுரி மாணிக்கம் என்னும் நாட்டிய மங்கை தனக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் தனது உறவினர்களும் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்னும் தனது உரிமையை வலியுறுத்தி கோவிலின் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆய்வாளர் நா.வானமாமலை குறிப்பிடுகிறார் (Introduction to South Indian Temple Inscriptions, cited by N. Vanamamalai).

பார்ப்பன‌ர்களுக்கும், கோவில்களுக்கும் நிலங்கள் பிரம்மதேயமாக, தேவதானங்களாக அரசனால் கொடுக்கப்பட்டபோது குடியான மக்கள் ஏன் எதிர்த்தார்கள்? முதலாவதாக தங்களின் சொற்ப நிலங்களின் மீதான வரிச்சுமை கடுமையாக அதிகரிக்கும். இரண்டாவதாக ஒரு கிராமம் முழுவதும் பிரம்மதேயமாக மாற்றப்படுமானால் அந்நிலங்களில் அதுவரை வியர்வை சிந்தி உழைத்த மக்கள் அந்நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். மூன்றாவதாக பார்ப்பன‌க் கிராமங்களில் மீதமிருக்கும் பார்ப்பன‌ரல்லாதவர்கள் தங்களின் நிலங்களை பார்ப்பன‌ர்க்கு விற்றுவிடவேண்டும்.

இப்படியாக குடிமக்களின் வாழ்க்கை மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல்களை குடியானவர்கள், ஏழை விவசாயிகள் அசுர பலத்துடன் எதிர்கொண்டதையும் பல செப்பேடுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக நிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆணைகளும் (மன்னர்களின், கவர்னர்களின், ஊர், சபை போன்ற அமைப்புகளின் ஆணைகள்) கோவில் சுர்றுச்சுவர்களிலும், கோவில் சுவர்களிலும், கோவிலின் உட்பக்கமும் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டிருக்கும். மன்னனின் ஆணைகளுக்கு எதிராக திரண்டெழும் மக்கள் கோவிலின் சுற்றுச்சுவர்களை, கோவிலின் சுவர்களை, கோவில்களை நாசப்படுத்திய சம்பவங்களும் உண்டு. முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியில் ராஜமஹேந்திர சதுர்வேதிமங்கலம் என்னும் முழு கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டது. சதுர்வேதிமங்கலம் என்பது முழுமையான பார்ப்பனிய‌ கிராமமாகும். மிகப்பெரும் கலகமாக உருவெடுத்த இக்கலவரத்தில் முழுக்கோவிலுமே சேதமாக்கப்பட்டது. மக்களின் கோபம் கடவுளின்மீது அல்ல. தங்களின் துன்பத்திற்குக் காரணமான அரசாணை கோவிலின் சுவர்களில் உள்ளதால் அந்த ஆணையை மக்கள் தரைமட்டமாக்கினர்.

ஒடுக்கும் அரசும் சும்மா விடுமா என்ன? கோவிலைப் பாதுகாக்க, அங்கிருக்கும் ஆணைகளை (கல்வெட்டுகளை) காக்க 'மூன்றுகை மகாசேனை', 'மதிற்சேவகற்படை' போன்ற சிறப்புக் காவல் படைகளை (தற்போதைய கோப்ரா, பசுமை வேட்டைப்படைகள் போல) மன்னர்கள் ஏற்படுத்துகிறார்கள். மக்களின் எழுச்சிகள் ஒடுக்கப்படுகின்றன (Annual Report on Indian Epigraphy - 189, 1895).

சங்ககாலம் இறுதி தொட்டே பார்ப்பன‌ர்களுக்கும், வெள்ளாளர்களுக்கும் இடையேயான கூட்டை உற்று நோக்க வேண்டும். சோழப் பேரரசின் அதிகார மையமாக இவர்கள்தான் விளங்கினர். சோழப் பேரரசின் அடிப்படையும் இவர்கள்தான். ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பிடிக்கும்வரை இவ்விருவரின் கூட்டு நீடித்தது. தமிழகத்தின் மிகப்பெரும் நிலப்பிரபுக்களாக இவ்விருவரும்தான் விளங்கினர். பார்ப்பன‌ரல்லாத, வெள்ளாளரல்லாத பிறசாதி மக்கள் ஒடுக்கப்பட்டனர். தலித்துகள் இன்னும் கூடுதலாக ஒடுக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களின் மேலைநாட்டுக் கல்வியும், அரசதிகாரமும் பார்ப்பன‌ர்களை ஆதிக்கத் தட்டில் வெள்ளாளரைவிட ஒருபடி மேலே ஏற்றியது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பார்ப்பன‌ர், வெள்ளாளர் முரண்பாடு கூர்மையடைந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியதிகார இறுதியில் பார்ப்பன‌ரல்லாதார் ஆட்சியதிகாரம் பெற்றபோது பார்ப்பன‌ர்களின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கிட்டத்தட்ட பார்ப்பன‌ர்கள் நிலங்களை விட்டு முழுமையாக வெளியேறியிருந்தனர். இக்கட்டத்தில் உள்ளுக்குள் மறைக்கப்பட்டிருந்த தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களுக்குமான முரண்பாடு பார்ப்பன‌ரல்லாத உயர்சாதியினருக்கும் தலித்துகளுக்குமான முரண்பாடாக மாறியது.

மத்திய காலம் தொட்டே தலித்துகளின் போராட்டத்தை (சமூக, அரசியல், பண்பாட்டுத்தளங்களில்) பார்ப்பன‌ர்களோ, பார்ப்பன‌ரல்லாத உயர்சாதிக்காரர்களோ ஒரு பொருட்டாகக் கருதவில்லை. கீழ்வெண்மணியில் வெளிப்படையாகத் தெரிந்த பார்ப்பன‌ரல்லாத உயர்சாதி - தலித் முரண்பாடு இன்றைக்கு தர்மபுரி வரைக்கும் தொடர்கிறது. விழுப்புரத்தையும், புளியங்குடியையும், பரமக்குடியையும் அது கடந்து வந்திருக்கிறது. திராவிடம் ஆட்சியைப் பிடித்த பின்னர்தான் கீழ்வெண்மணி அரங்கேறியது. அன்றைக்கே பார்ப்பன‌ரல்லாத உயர்சாதிகளின் ஆதிக்கத்தை திராவிட அரசுகள் அகற்றியிருக்க வேண்டும். இன்றைக்கு இம்முரண்பாடு தமிழ்நாட்டை, தமிழ்ச்சமூகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இம்முரண்பாட்டைத் தீர்க்க ஒரே வழி தலித்துகளின் போராட்டத்தை தலித்அல்லாத மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்களது நூற்றாண்டுகள் வலியை பார்ப்பன‌ரல்லாத உயர்சாதிமக்கள் உணர முயற்சிக்க வேண்டும். அவர்களது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.

"பார்ப்பன‌ர் மற்றும் பார்ப்பன‌ரல்லாதார் போராட்டம் ஒரு கட்டம். வரலாற்றுத் தேவை. ஆனால் தலித் போராட்டத்தை மறைக்கக்கூடாது. அப்படி ஒரு பிரிவினர் இருப்பதையும், அவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதையும் மறைப்பது வரலாற்றைக் கரிபூசி மறைக்கும் காரியமாகும். அதுபோல் தமிழகத்தில் இனி நடக்கப் போகும் போராட்டம் உயர்சாதி பார்ப்பனரல்லாதாருக்கும் தலித்துகள் உள்ளிட்ட எல்லா சாதி முற்போக்காளர்களுக்குமாக இருக்கும்" (தமிழவன், தினமணிசுடர், பிப்ரவரி-1992).

மீண்டும் சதயத் திருவிழாவிற்கு வருவோம். தமிழ்த் தேசியவாதிகள் கூறிக்கொள்வதுபோல அம்மன்னன் தமிழர்களைப் பிணைக்கும் சக்தி அல்ல. தமிழர்களை எழுச்சிபெற வைக்கும் சக்தியும் அவனுக்கு இல்லை. தமிழர்களைப் பிரிக்கும் சக்தியான சாதியைப் போற்றி வளர்த்த மன்னன் எவ்வாறு தமிழர்களைப் பிணைக்கும் சக்தியாக மாறமுடியும்? அவன் ஒரு வரலாறு. அவ்வளவுதான். இக்கால ஆட்சியாளர்களுக்கு இருக்கும் சாதிப் பாசங்கள் அவனுக்கும் இருந்திருக்கும். வரலாறு அவனைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளையும் அம்பலப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். நான்கில் ஒரு பங்கு செப்பேடுகள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில், வருங்காலங்களில் சோழ மன்னர்களின் பராக்கிரமங்கள் இன்னும் என்னென்ன வெளிவரப் போகின்றனவோ? !

சங்ககாலம் இறுதித் தொடங்கி தற்கால திராவிட அரசுகள் வரை சாதியை, வர்ணத்தை அதன் இறுக்கம் தளராமல் கடைப்பிடித்தும், ஒழுகியும் வந்திருக்கின்றன. ஒருகாலத்தில் தொழில்பிரிவினை கூர்மையடையாமல் இருந்தபோது சாதியின் பிடியும் தள‌ர்ந்திருந்தது. தொழிற்பிரிவினையைக் கூர்மையடையச் செய்து, சாதிகளின் படிநிலைகளை உறுதியாக்கி, தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அப் படிநிலையின் ஆகக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றதில் மிகப்பெரும் பங்கு வகித்த ராஜராஜ சோழனும் இன்னும் பிற மன்னர்களும் இன்றைக்கு தலித் கட்சிகளின் தலைவர்களால், தொண்டர்களால் போற்றப்படுகிறார்கள் என்றால் அதையும் சாதியத்தின் சாதனையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சுதந்திரம் அடைந்து ஜனநாயக முறைமைகள் பின்பற்றப்பட்டுவரும் இக்காலத்திலும்கூட மன்னர்கள் மீதும், கோவில்களின் அதிகாரங்கள் மீதும், பழம் சாம்ராஜ்யங்கள்மீதும் மக்களுக்கு, சாதிக்கட்சியின் தலைவர்களுக்கு, அதன் தொண்டர்களுக்கு மதிப்பும், ஈர்ப்பும் இருக்குமானால் நம்முடைய சுயமரியாதையை மீண்டும் ஒருமுறை மறுவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

- செ.சண்முகசுந்தரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

17 comments

17
vijay
திராவிடன், பிராமணன் எதிர்ப்புனு சொல்லி போர் அடிகதிர்கள் திராவிட நண்பர்களே

இந்து மதம் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது அரங்கேற்றப்பட்ட தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. ஆனால், அந்தக் கொடுமைகள் இப்போது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்படுவது இல்லை. பார்ப்பனர் தனித் தீவாக ஒதுங்கி விட்டனர். இன்று 'சாதி இந்துக்கள்’ என்ற பட்டயத்தைச் சுமப்பவர்கள் பார்ப்பனர் அல்லாதோரே! தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்’ எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகளையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் 'பார்ப்பன ஆதிக்கம்’ என்ற பழைய பஞ்சாங் கத்தையே புரட்டுகின்றனர். பிராமணர் அல்லாதார் இயக்கங்களால் சாதி ஆதிக்கம் வேறு வடிவங்களில் வளர்ந்திருக்கின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
gunashekaran.r
இதை படிக்கும்பொது சதிய ரஜ் அமைதி படையில் சொல்லும் வசனம் நபகம் வருகிரது.
durai ilamurugu
இந்த ஆண்டு சதயத் திருவியழவை ஒட்டி தஞ்சை அருகில் உள்ள திருக்காட்டுப் பள்ளியில் இரு சாதியினர் ராசராசசோழனைதங்கள் சாதியைஸ் சேர்ந்தவன் என்றூ உரிமை கொண்டாடி சுவரொட்டிகள் ஒட்டினர் அதன்
பின் விளைவாக இரு சாதியினர் இடையே மோதல் நடை பெற்றது குருதி சிந்தப் பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் சாதிய உணவுர்களைத் தூண்டக் கூடிய ராசராசசோழனை தங்ககள் இன அடையாளாமாக தமிழ்த் தே சியர்கள் கொண்டாடுவதுஅவர்கள் சாதியப்,பற்றையே காட்டுகிறது
nacchinaarkkiniyan
Mr.Vijay,never in the history,Brahmins fought with others openly.They will instigate the offenders with moral support in the form of Manu Dharma.They are the people who steadfastedly safeguarding the superstitions by probagating the Puranas.Violence need not be physical.How do you analyse their act of obtaining SC"S stay against the TN Govt"s ordinance enabling people from all castes becoming archagars ?How do you justify their closing the South Gate of Thillai temple permanantly?How you can justify their act of discrimination even while distributing prasadams in some Kanchi temples?After 62 years of existence of Indian Constitution,an article has been written in Bhavan"s Journal praising the Ghatika Stanas of Ancient India which imparted specialised education exclusively for the three higher castes for two thousand years.By occupying key positions in all types of media,these people write distorted versions of every day happenings.Are you aware that even the speech of the President of India has been edited by these people recently?
Guest
Hi I am not brahmin and I am writing this here for not supporting brahmin or vellalar

1.You can not blame the RAJA RAJA CHOLAN for this issue and in this article there is no such proof for he is the one who is the base for castisim and what ever you mentioned is based on your exaggerated imagination

2.And you have to blast those who uses the great king name not the king,I strongly condemn this view.
nacchinaarkiniyan
MrAnonymous, Rajaraja cholan should be blamed for giving so many villages as gift to Brahmins.He was the king responsible for bringing so many dancing girls to his country who later became Devadasis.His son Rajendra Chola,after conquering north indian kings again gave lavish gifts not to the soldiers who fought the war but to Brahmins.
Pandian
இது வரலாட்ருப் புரிதல் இல்லாத கட்டுரை. ராஜராஜன் தமிழினம் காத்தவன்.
Guest
I agree he gifted lot of villages to good peoples or who did good for the kingdom but I hope its not only to brahmins. If so,please publish the proof...

Secondly As per my search Rajaraja cholan was a true art lover and I agree he is the one who encourged and developed the traditional arts. But Devadasis system was started in 15 century and it was brought up by brahmins who are literally week in sex and had more knowledge in kamasutra.Rajaraja cholan was lived in 10 century
Guest
Mr nacchinaarkiniyan,
please read below lines:

The popularity of devadasis seems to have reached its pinnacle around 10th and 11th century AD. The rise and fall in the status of devadasis can be seen to be running parallel to the rise and fall of Hindu temples. Invaders from West Asia attained their first victory in India at the beginning of the second millennium CE. The destruction of temples by invaders started from the northwestern borders of the country and spread through the whole of the country. Thereafter the status of the temples fell very quickly in North India and slowly in South India. As the temples became poorer and lost their patron kings, and in some cases were destroyed, the devadasis were forced into a life of poverty, misery, and, in some cases, prostitution.

Source Wikipeda
nacchinaarkkiniyan
Mr Anonymous,only the villages given to Brahmins were called as Brahmadeyams.Could you come across any other term used for villages given to other "good"people?Dr Muthulakshmi Reddy faced stiff resistence from Brahmins when she took steps for elimination of the Devadasi system.They said that these Devadasis were doing service to God and will get instant Motcham.DrReddy had to use very strong words to them to overcome their opposition.
அன்புள்ள அநாமதேயனுக்கு,

கி.பி.1012,அக்டோபர் திங்கள் 24 -ம் தேதி இன்ன கிழமையன்று ராஜராஜசோழன் சாதிக்கு அடிக்கல் நாட்டினான் என்று நிரூபணங்களை அளிப்பது மிகவும் கடினம்.ராஜராஜசோழனுக்கும் முன்னமேயே சாதி இருந்தது.ஆரம்பத்தில் தொழிலை அடிப்படையாகக் கொண்டு இருந்த சாதிப்பிரிவுகள் காலப்போக்கில் இறுகி பிறப்பின் அடிப்படையில் ஒன்றாக மாறிப்போனதைத்தான் சமூகவியலும்,வரலாறும் மெய்ப்பிக்கும்.அவ்வாறு இறுகிப் போனதற்கு யார் யார் பங்களிப்புகளைச் செய்தார்கள் எனப் பார்க்கும்போது அதிகாரவர்க்கத்தினரே அதிகப் பங்களிப்பைச் செய்யமுடியும்.செய்திருக்கவும் முடியும்."வேளாண்மை மயமாக்கல் மிகவிரைந்தும்,அதிகமாகவும் பரவிய இடங்களில் நிலவுரிமை சாதிகளுக்கும்,தீண்டத்தகார் சாதிகளுக்கும் இடையிலான சமூக வேறுபாடும் தீண்டாமைப்பாகுபாடும் பொருண்மை ஆதாரமிக்குள்ளவையாக இருந்தன"(சாதியம்,கோ.கேசவன்,பக்கம்௮5).ராஜராஜசோழனின் காலத்தில் வேளாண்மைமயமாக்கல் மிகத்தீவிரமாக இருந்தது.இல்லையென்றால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கோயில்களுக்கு சொந்தமாக்கப்பட்டிருக்காது. ராஜராஜசோழனின் காலத்திலும் விளைநிலங்கள் பிராமணர்களுக்கும்,வேளாளர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கவேண்டும். வேளாண்மை மயமாக்கல் நடக்கும்போது அங்கு தீண்டத்தக்க,தீண்டத்தகாத சாதிகளுக்கிடையேயான சமூக வேறுபாடுகளும் நிலவியிருக்கும் என்பதுதான் கோ.கேசவனின் ஆய்வு முடிவும்கூட.சாதிய படிம நிலைகள் இருந்தாலும்,கொடுமையான சாதீய வேறுபாடுகள் நிலவினாலும் தங்களது ஆட்சிக்காலத்தில் அவற்றை வீரியமிழக்கச்செய்யவேண்டும் என்பதையே சாதாரண குடிமக்கள் மன்னனிடம்,ஆட்சியாளனிடம் எதிர்பார்க்கிறார்கள்.ராஜராஜசோழன் தொடங்கி அவனது வம்ச இறுதி மன்னன் வரை கோயிலை,பிராமணரை,வேளாளரைப் போற்றியும்,ஆதரித்தும் வந்திருக்கிறார்கள் என்றால் இன்றைக்கும் நிலவும் வலுவான சாதியக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டியது ராஜராஜசோழமன்னனைத்தானே சாரும்.

பிறிதொரு சான்றையும் வைக்க விரும்புகிறேன்.

" பிற்காலச் சோழர்கள் காலத்தில் பிரம்மதேயம்,ஊர் ஆகிய பார்ப்பனர்,வேளாளர் கிராமங்களில் காணப்பட்ட சபா,ஊரவை ஆகியவை அந்தந்தப் பகுதியின் நிர்வாக மன்றங்களாகவும் இருந்தன.அதோடு பார்ப்பனரை மட்டுமே கொண்டிருந்த சபா,வேளாளரை மட்டுமே கொண்டிருந்த ஊரவை ஆகியவை முறையே பார்ப்பனர்,வேளாளர் சாதிகளின் அமைப்புகளாகவும் இருந்தன என்பது தெளிவு.இவை கிராமத்தின் பொதுச்சிக்கல்களைத் தம் சாதிய நோக்கில் கூடி முடிவெடுத்தன"

"சோழர்கள் காலத்தில் பார்ப்பனர்,வேளாளர் ஆகியோரின் சாதிய அதிகார அமைப்புகளைப் பேரரசு ஆதரித்தது.நெருக்கடி காலங்களில் அவற்றுக்கு உறுதுணையாக நின்றது.இன்னும் சொல்லப்போனால் பேரரசு, இத்தகைய சாதிய அதிகார அமைப்புகளால் நிலைநிறுத்தப்பட்டது".
(- சாதியம்,கோ.கேசவன்.பக்கங்கள்௨06,207)
ராஜராஜசோழனின் ஆட்சியில் சபா,ஊரவை என்ற உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பம்சங்களைப் பற்றி நாம் பாடப்புத்தகங்களில் படித்திருப்போம்!!!

இக்கட்டுரையின் நோக்கம் ராஜராஜசோழ மன்னனை வசை பாடுவது அல்ல.இம்மன்னனின் பெயரை தங்களது சாதிக்கட்சிகளின்,சங்கங்களின் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை விமர்சிப்பதே.அப்படி விமர்சிக்கும்போது அம்மன்னனின் ஆட்சித்திறத்தையும் விமர்சிப்பது தவிர்க்க இயலாதது.தர்மபுரி சம்பவங்களுக்குப் பின்னர் தமிழ்ச்சமூகம் சாதி ரீதியாக மிக மோசமாகப் பிளவு பட்டுக் கொண்டிருப்பதையும்,கலப்புத் திருமணங்கள் தடை செய்யப்படவேண்டும் என்ற விவாதம் முன்னெடுத்துச் செல்லப்படுவதையும் மிகவும் கவலையுடனும்,கோபத்துடனும்,ஆதங்கத்துடனும் நோக்கவேண்டிய நேரமிது.
pandyan
அய்யா விஜய் மற்றும் அனானி........... அவர்களே !உண்மை எப்போதும் நம் விருப்பபடி இருப்பதில்லை ஒரு மாபெரும் சாம்ராஜிய கனவு உள்ளவர் எவராயினும் அவர் ஆதிக்கம் செய்தே அதை அடைய முடியும்...................... ஏன் என்றால் ஒரு இடத்தை வென்று விடலாம் ஆனால் அதை கட்டி காப்பாற்றுவது என்பது நிர்வாகவியல் சம்ந்தபட்டது ராஜராஜனின் வடக்கு படையெடுப்பிற்கு பிறகு அவன் அங்கு நிலவிய நிர்வாக முறையை கனிஷ்கர்களாலும் குப்தார்களாலும் உருவாக்கப்பட்ட (system of revenue ) தான்தமிழகத்தில் அறிமுக படுத்தினான் பின்பற்றினான் (படிக்க ராம் சரண் சர்மா எழுதிய :இந்திய நிலமானிய முறை)............................ மேலும் இதை மெய்பிபதர்கான சான்றுகள் தமிழகம் முழுவதும் விரவி கிடக்கின்றன குறிப்பாக சேர்மாதேவி பக்தவசல்சாமிகொவில் கல்வெட்டு அம்பசமுதரம் பிரமதேசம் கிராமம் அயன் திருவாலீச்வரம் கல்வெட்டு முதலியவை இகல்வெட்டுகளில் பார்பனர்களுக்கும் கோயில்களுக்கும் உழைக்கும் மக்களின் நிலம் பிடுங்கப்பட்டு கொடுக்கப்பட்டதையும் அதை எதிர்த்து உழைக்கும் மக்கள் தீக்குளித்தும் அரசன் கட்டிய கோவிலின் மேல் இருந்து குதித்தும் தற்கொலை செய்து போராடியதையும் குறிபிடுகின்றன எப்போதும் ஆளும் அரசுகளின் பார்வையில் இருந்து வரலாற்றை பார்க்காமல் உழைக்கும் மக்களின் பக்கம் நின்று பார்க்கவும்
நீரோடை
திராவிடர் கழகம் நடத்தும் குற்றாலம் பயிற்சி முகாமில் பேரா.இராசதுரை அவர்கள் ஒன்றை அடிக்கடி சொல்வார்கள். மாணவர்களே, மாணவிகளே, தஞ்சாவூர் சென்றால் ஒன்றை தவறாமல் செய்யுங்கள், இறங்கி இராஜ இராஜ சோழன் சிலையைப் பார்த்து காறி துப்பி விட்டுச்செல்லுங்கள், ஏனென்றால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு முழு ஆதரவு கொடுத்து மன்னன் அவன் என்று . அவனால்தான் பார்ப்பனர் ஆதிக்கம் தமிழ் மண்ணில் வளர்ந்தது என்று பல்வேறு ஆதாரஙளைக் கூறுவார்.தமிழர்களின் மிகப்பெரிய துரோகி அவன் என்பதனை ஆதாரங்கள் மூலம் நிறுவுவார். அவன் பரம்பரை நாம் என்று சொல்ல வெட்கத்தான் படவேண்டும், இராஜ இராஜ சோழன் பரம்பரை என்பது, நான் எட்டப்பன் பரம்பரை என்று சொல்வது போலத்தான்.
suvanappiriyan
பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது இந்த கட்டுரை.
Thavasankar
இராசராச சோழர் உன்மையன வரலாரு அதரதுடன்

http://kaattchi.blogspot.in/2010/10/blog-post_31.html#more
kadavul
சோழ பெரரசும், பெரூடையார் கோயிலும், உர்பத்தி சக்திஹலின் வலர்ச்ஷி, பொது மக்கலின் அரிவு திரமையின் எடுதுகாட்டு, வியபார வர்கத்தின் வலர்ஷி, பார்ப்பனியத்தினுடய உயர் வல்ர்சி. மாராக ராச ராச சோழனின் தனிப்பட்ட கெட்ட குனமாக எழுதுவது ஒருவகை சாய்வு கன்னொட்டமே, ஒரு வேலை நந்தனரின் வரலாரக இருந்தால் இந்த பர்வை மருபட்டிருக்கலாம்.
பெருமாள் தேவன்
இவர்கள் என்னவோ சாதியை ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பவர்கள் போல எழுதுகிறார்கள். தலித்களே தங்கள் சாதியை விட்டு வெளியேறத் தயாராக இல்லாதபோது மற்றவர்கள் எப்படி தங்கள் சாதியை விட்டு வெளியேறுவார்களாம்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.