மதுரை மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் உள்ள 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கக் கூடாது என்று கூறியதுடன், தான் ஆட்சிக்கு வந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீட்டுத் தருவேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், அவருடைய அரசு, அந்த விவசாயிகளுக்குத் தெரியாமல் நிலஎடுப்பு சட்டவிதிகளை மீறி சிப்காட்டிற்காக நிலங்களை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலத்தை எடுக்க முயற்சி

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவரக்கோட்டை, கரிசக்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய கிராமங்களில் உளுந்தம் பயிறு, பாசிப்பயிறு, தட்டாம்பயிறு, மொச்சை பயிறு, கொள்ளுப் பயிறு, சுண்டல்கடலை, மல்லி அவுரி, நித்தியகல்யாணி, துவரை, நிலக்கடலை, கம்பு, எள்ளு, கேப்பை, வரகு, தினை, மக்காச்சோளம், இரும்புச்சோளம், சோள நாத்து, பருத்தி, குதிரைவல்லி என ஏராளமான பயிர்கள் விளையும். 1478.71 ஏக்கர் விவசாய நிலத்தை தரிசு நிலம் எனக்கூறி அங்கு சிப்காட் உருவாக்க கடந்த திமுக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டங்களையும் நடத்தின‌.

தரிசு நிலமென பிடிவாதம்

இந்த ஊர்களுக்கு உட்பட்ட மூன்று கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்கள் நடத்தப்பட்டு சிப்காட் பூங்கா விவசாய நிலத்தில் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கும் அனுப்பி வைத்தன. இந்த மூன்று கிராமங்களில் உள்ள 4542 மனிதர்களையும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆடுகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தன. இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்காக கடந்த அரசின் சார்பின் சார்பில், இந்த நிலங்களில் எந்த விவசாயமும் நடைபெறவில்லை என்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டு சிவரக்கோட்டையில் 24.88, சுவாமி மல்லம்பட்டியில் 82.06, கரிசக்காளம்பட்டியில் 63.58 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுள்ளதையும், 2008 ஆம் ஆண்டு சிவரக்கோட்டையில் 33.30, சுவாமி மல்லம்பட்டியில் 81.82, கரிசக்காளம்பட்டியில் 63.99 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுள்ளதையும், 2009 ஆம் ஆண்டு சிவரக்கோட்டையில் 28.79, சுவாமி மல்லம்பட்டியில் 77.05, கரிசக்காளம்பட்டியில் 61.14 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுள்ளதையும் அரசுப்புள்ளி விபரப்பட்டியலே தெரிவித்ததில் குட்டு வெளிப்பட்டது. அத்துடன் அவுரிச் செடி விவசாயத்திற்காக 3 ஆண்டுகளாக சிவரக்கோட்டை விவசாயக்கடன் வழங்கும் சங்கத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளதும் அரசு அதிகாரிகள் சொன்ன தரிசு என்பது பொய்யாய்ப் போனது.

சிபிஎம் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த கே.பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த என்.நன்மாறன் ஆகியோர் விவசாய நிலங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். திருமங்கலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும் பங்கேற்றனர். சட்டமன்றத்திலும் இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது.

அரசு சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற விவசாய சங்கப் பிரதிநிதிகளும், இப்பகுதி விவசாயிகளும் நிலத்தை தொழிற்சாலைக்கு எடுக்கக்கூடாது. மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர்நீதிமன்றக் கிளையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த உழவர் மன்றத் தலைவர் எம்.ராமலிங்கம் வழக்கும் தொடுத்தார். நிலம் எடுப்பது தொடர்பான ஆட்சேபணை இருக்கிறதா எனக்கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்பப்படுவதாக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண வாக்குமூலத்தில் இந்த மூன்று கிராமங்களில் 96 பேர் மட்டும் விவசாயிகள் என மனு செய்யப்பட்டது. ஆனால், சிப்காட் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்து கடந்த 12.6.2009 அன்று அரசாணை பிறப்பித்தும், 1997 நிலம் கையப்படுத்தும் சட்டம் பிரிவு 3(2) ன் படி சுமார் 2 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளதில் இருந்து 96 பேர் விவசாயிகள் என்ற அரசின் மனு கேலிக்குரியதாய் மாறியது.

இந்த சூழலில் விவசாய நிலத்தை 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதமே நிலத்தைக் கையகப்படுத்தி பதிவு செய்ய திமுக முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11.8.2011 அன்று சட்டமன்றத்தில் பேசிய திருமங்கலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், திமுக ஆட்சியில் சிப்காட்டிற்கு கைப்பற்றப்பட்ட விளைநிலங்கள் மீட்கப்படும் என்று கூறினார். இதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் வேலுமணி, “சிப்காட்டிற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்படும். மு.க.அழகிரி கல்லூரிக்காக எடுக்கப்பட்ட நிலங்களும் மீட்கப்படும்" என்றும் கூறினார். நிலங்களை கையகப்படுத்தும் பணியை சிப்காட் அதிகாரிகள் தற்போதும் செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடா கே.பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். சிப்காட்டிற்கு உரிய உத்தரவு போன பின் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், அந்த நிலங்களை நில எடுப்பு சட்டவிதிகளை மீறி தமிழக அரசு பதிவு செய்து வருகிறது.

நோட்டீசுக்கு முன்பே கையகப்படுத்தல்

ஆனால், இந்த உண்மையை மறைத்து சிவரக்கோட்டையில் நிலம் கையப்படுத்துவது தொடர்பாக 17.9.2012 ம் தேதியில் இருந்து பலருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த ஆணை கிடைத்த 30 நாட்களுக்குள் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று 30.8.2012 அன்று தேதியிட்ட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் திருமங்கலம் சிப்காட் தனி வட்டாட்சியர் 10.9.2012 அன்று கையெழுத்திட்டார். ஆனால், பல நிலங்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே நில எடுப்பு விதிகளுக்கு முரணாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 18.3.2011 தேதியில் வீரபத்திரத்தேவர், சுந்தராஜன் என்பவர்கள் சிப்காட்டிற்கு 89 முதல் 90,94,95,184,178,179,180,181 ஆகிய சர்வே எண்களில் உள்ள 20 பேரின் நிலங்களை விற்றதாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் பரப்பளவு 13.4 ஹெக்டேர் ஆகும். அரசாணை இதழ் எண்; 15 (3.2.2011 ) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி

கடந்த திமுக ஆட்சியின் போது, நிலத்தை எடுக்கவிடமாட்டோம் என்று பேச்சளவில் சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அப்படி எடுத்தாலும் மீட்டுத் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். இப்போது அந்த வாக்குறுதி காற்றில் பறக்கிறது. அதிமுக ஆட்சியே, விளைநிலங்களை சிப்காட்டிற்கு தாரைவார்க்கும் பணியில் ஜரூராக ஈடுபட்டு வருகிறது.

இந்த கிராமங்களுக்கு அருகில் உள்ள கள்ளிக்குடி பிட்1ல் 961.15.00 ஹெக்டேர், பிட்2ல் 589.23.5 ஹெக்டேர், வெள்ளாகுளம் பிட்2-ல் 663.15.0 ஹெக்டேர் என 2213.88.5 ஹெக்டேர் என 5 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலங்களை ஆளுங்கட்சியினர் பினாமி பெயர்களில் வாங்கிச் சுருட்டி வருவதுடன், அதை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்த இடங்களில் சிப்காட் சிட்டி பெயரில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் கடைவிரித்துள்ளனர்.

தங்கள் வாழ்வாதாரமான 1478. 71 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்கும் போராட்டத்திற்கு சிவரக்கோட்டை, கரிசக்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களும், விவசாய சங்கங்களும் தயாராகி வருகின்றன. மதுரை மாவட்டத்தில் அரசிற்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். தொடர் போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர்.

Pin It