கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மயிலாப்பூரிலுள்ள அம்மாமி ஒருவர் தம் பக்கத்து வீட்டுக்காரத் திராவிடர் ஒருவர் மீது விபரீதமான வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றுவிட்டார்!

பக்கத்து வீட்டுக்காரர் புலால் உணவு உண்பவராம்! அதனால் ஶ்ரீலஶ்ரீ அம்மாமிக்கு துர்நாற்றம் பொறுக்க முடியவில்லையாம்! தாம் ஒரு வைதீக பிராமண ஸ்திரீயாம்! ஆதனால் பக்கத்து வீட்டிலிருப்பவரைக் காலி செய்ய வைத்து, மரக்கறி உண்கின்ற ஒருவரைக் குடி வைக்க வேண்டுமென்று வழக்குத் தொடர்ந்தார்.

அப்படியே செய்தாக வேண்டும் என்று நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் உத்தரவு பிறப்பித்துவிட்டார்!

நானும் ஒரு மரக்கறிப் பேர்வழிதான்! இருந்தாலும் மேற்படி அம்மாமியைப் போல் மூக்கிற்கு அடிமையான ஆசாமியல்ல!

ஒருவர் சாப்பிடுகின்ற உணவைப் போலவே மற்றொருவர் சாப்பிட முடியுமா? புலால் உணவு சாப்பிடுகிறவர்களில் 100-க்கு 90 பேர் பன்றிக்கறியோ, தவளையோ, புழுவோ, பாம்போ சாப்பிட மாட்டார்கள்! சில ஏழைகள் ஈசல்களைப் பிடித்துச் சாப்பிடுகின்றார்கள். பல புலால் உணவுக்காரர்கள் இதைப் பார்க்கும் போதே வாந்தியெடுத்துவிடுகிறார்கள்! சிலர் பச்சைப் புலாலைச் சாப்பிடுகிறார்கள்! பலருக்கு இதைக் கண்டாலே அருவருப்பாக இருக்கிறது!

ஆனால் இதற்காக ஒருவர் மற்றொருவரை வெறுப்பதோ, விரட்டியடிப்பதோ சரியா?

மேற்படி அம்மாமியின் பக்கத்து வீட்டுக்காரர் வாடகைக்குக் குடியிருப்பவராயிருப்பதனால்தான் வீட்டைக் காலிசெய்ய சொல்லிவிட்டார், நீதிபதி? சொந்த வீட்டுக்காரராகவேயிருந்தால் என்ன செய்வது?

யாராவது ஒரு பார்ப்பானுக்கு அல்ல 'சைவனுக்கு' வாடகைக்கி விட்டுவிட்டு இவன் முச்சந்தியில் நிற்க வேண்டியதுதானே!

சட்டம் போகின்ற போக்கைப் பார்த்தீர்களா?

இதையெல்லாம் பார்க்கப் பார்க்க காந்தியாரின் சட்ட மறுப்பு இயக்கம் தவிர வேறு எதிலுமே எனக்கு நம்பிக்கையில்லாது போய்விட்டது! சட்டசபை, நகரசபை - எல்லாம் நஞ்சு போலாகிவிட்டன!

இந்தத் தீர்ப்பில் தொக்கியிருப்பது என்ன தெரியுமா?

சேரியில் வசிக்கும் ஆதிதிராவிடத் தோழனோ, மற்றத் திராவிடத் தொழிலாளித் தோழனோ இனிமேல் அக்கிரகாரத்தில் (ஆரியச்சேரியில்) குடியிருக்கவும் முடியாது; வீடு வாங்கவும் முடியாது. இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு இனி எல்லா நீதிபதிகளும் இது போல் தீர்ப்பளிக்கத் தொடங்கிவிடுவார்கள்!

"அய்யா! அடுத்த வீட்டு அய்யர் அடுப்பங்கரையில் சதா வெங்காய சாம்பார் வைக்கிறார்கள்! நாற்றம் என் மூக்கைத் துளைக்கிறது! அவரை வெளியேற்ற வேண்டுமாகத் தீர்ப்பளிக்க வெண்டும்", என்று புலால் உண்ணும் பேர்வழி ஒருவர் இதே ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்வதாக வைத்துக் கொள்வோம்!

என்ன தீர்ப்பு கிடைக்கும்? படித்துப் பாருங்கள் :-

"ஒருவருக்கு ருசியாயிருக்கும் உணவு மற்றொருவருக்கு நஞ்சாயிருக்கும்" என்பது இங்கிலீஷ் பழமொழி ! பஞ்சாப கேசய்யர் வீட்டு வெங்காய சாம்பார் பஷீர் அஹ்மத்தின் மூக்கைத் துளைப்பது சரிதான்! சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம் என்பதற்காக நீதிபதி நாற்காலியில் ஹைகோர்ட் டபேதார் உட்கார முடியுமா? பெண்கள் கல்லூரிக்குள் ஆண் மாணவர்கள் பலாத்காரமாக நுழைந்து உட்கார முடியுமா? சைவர்களோடு பழகாத பஷீர் அஹ்மத்துக்கு வெங்காய சாம்பாரின் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு அடுத்த வீட்டில் அவர் எப்படி வசிக்க முடியும்? ஆதலால் பஞ்சாபகேசய்யர் தம் சொந்த வீட்டைக் காலி செய்து ஒரு முஸ்லிம் அல்லது ஆதித்திராவிடருக்கு வாடகைக்கு விட்டு விட்டு, அவர் வேறெங்காவது குடியேறுமாறு தீர்ப்பளிக்கிறேன்".

இந்த மாதிரித் தானிருக்கும் மேற்கண்ட நீதிபதிகளின் தீர்ப்பு!

ஏப்ரல் 10-ந் தேதியிலிருந்தே அக்கிரகாரத்துக்கு ஒரு "லக்"தான்! அதாவது, சோதிட பரிபாஷையில் கூற வேண்டுமானால், அக்கிரகாரத்துக்கு ராஜ திசை (அல்லது ராஜாஜி திசை) என்றுதான் கூற வேண்டும்!

ஒரு பூனைக்குட்டிக்குப் பூணூலை மாட்டிப் பாருங்கள்! அது உடனே புலி போல பாயுமே!

அது வேண்டாம்! ஒரு பூணூலை வாங்கிச் சுற்றி மேஜை மீது வைத்துப்பாருங்கள்! அது ஒரு முழத்துக்கு எழும்பிக் குதிக்குமே! ஒரு அங்குலத் தர்ப்பையைக் கிள்ளிக் கீழே போட்டுப் பாருங்கள்! அது 'டேய்' என்று கூப்பிடுமே!

"அடேயப்பா! புளியோதரை நாற்றம் பொறுக்க முடியவில்லையே! வாரத்துக்கு 5 நாளைக்கு இந்தப் பாழும் புளியோதரைச் சமைத்துப் பிராணனை வாங்குகிறானே, இந்த வரதாச்சாரி! இவன் எப்போதுதான் பக்கத்து வீட்டைக் காலி செய்வானோ?"

என்று சபித்துக் கொண்டிருப்பார்கள் எத்தனையோ பேர்! ஆனால் துணிந்து வழக்குத் தொடர வேண்டுமே! அதற்கேற்ற நீதிபதியும் கிடைக்க வேண்டும்!

- குத்தூசி குருசாமி (16-7-1952)