சாமியார் நித்யானந்தாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆன்மீகம், மடம் போன்றவற்றின் மீதெல்லாம் மக்களுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் தனது நடவடிக்கைகளினால் காற்றில் பறக்கும்படி செய்து கொண்டிருக்கும் அவர் போன்ற சாமியார்களுக்கு சமுதாய அக்கறையுள்ள முற்போக்காளர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்றே படுகிறது. மேலும் மேலும் அவர் தனது லீலா விநோதங்களைத் தொடர்ந்து திறம்படச் செய்து அத்துடன் அம்பலப்பட்டுக்கொண்டேயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

nithiyanandha_380சுவாமி நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். அவருக்கு வயது 34. திருவண்ணாமலையில் 1978 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் பிறந்த ராஜசேகரன் சின்னஞ்சிறிய வயதிலேயே ஒரு ஆன்மீகவாதி என்று மக்களிடையே தோற்றங்காட்டி, இன்று உலகம் முழுதும் பல கோடிக்கணக்கான சொத்துக்களைக் குவித்துள்ளார். தனது 12 வது வயதில் உடல் தாண்டிய (?) பேரானந்த அனுபவத்தை அடைந்ததாகச் சொல்லிக்கொள்ளும் அவர்  கடந்த 2000 ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தைத் தொடங்கினார். இன்று அது உலகின் 21 நாடுகளில் 800 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளான நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. நித்தியானந்தா முக்காலமும் உணர்ந்த ஞானி என்று வர்ணிக்கப்படுபவர். ஆனால், கர்நாடகத்திலுள்ள  தனது பிடதி ஆசிரமத்தில் தனது படுக்கையறையில் அவர் நடத்திவந்த காம லீலைகளைப் படம்பிடிக்க ரகசியக் காமிரா வைக்கப்பட்டுள்ளதென்று மட்டும் அவரின் ஞானதிருஷ்டி அவருக்குச் சொல்லாமல் போனதுதான் பக்தர்களுக்கு வியப்பான செய்தி.

அவரது பெயர் இந்தப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில்தான் நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானப் பதவியைத் தூக்கித் தந்துவிட்டார் ஏற்கனவே உள்ள  292வது மடாதிபதி. இதற்காக சில பல கோடிகள் கை மாறியதாகவும் தகவல்கள் உண்டு.  “பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மதுரை ஆதீன கர்த்தாவாக நியமிக்கலாமா?” என்ற விவாதங்களும், சர்ச்சைகளும், மதுரை ஆதீன மடத்தின் நலம் விரும்பிகளின் போராட்டங்களுமாக இப்போது நாளும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதில் பலரும் மதுரை ஆதீன மடம் என்பது எத்துணை பழம்பெருமை வாய்ந்த மடம், அதன் தலைமைப் பொறுப்பை நித்யானந்தாவிடம் தந்தது மாபெரும் பிழையன்றோ என்று நா தழுதழுக்க வெம்பி வெடிப்பதைப் பார்க்க முடிகிறது.

கேடுகள் நிரம்பிய சாதியத்துக்கும் வர்ணாசிரமக் கொடுங்கோன்மைக்கும் அரணாக நின்ற நிலவுடைமைச் சமுதாயத்தில் கொழுத்தவைதான் இந்த மடங்களும் பெருங்கோயில்களும். அந்த நிலவுடைமையின் கசடுகளை இன்றும் சுமந்துகொண்டு எந்தவிதமான சிதைவுகளும் சேதாரமுமின்றி அப்படியே கோலோச்சிவருகின்றன தமிழ்நாட்டு சைவ - வைணவ -ஸ்மார்த்த - இத்யாதி இத்யாதி மடங்கள். நித்யானந்தா இப்படிப்பட்ட ஒரு மடத்தின் தலைமைக்கு வந்துவிட்டார் என்று பலரும் கூச்சலிடும் இந்த வேளையில் நாம் இந்த மடங்களின் லட்சணங்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்தானே?

வைதீக இந்து மதத்தைக் கட்டியெழுப்பிக் கட்டிக்காகவென்றே உருவாக்கப்பட்ட இந்த மடங்கள் கைக் கொண்டிருக்கும் அதிகாரங்களுக்கெல்லாம் அச்சாணியாக இருப்பது இவை குவித்து வைத்திருக்கும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் என்றால் மிகையில்லை. இந்த நிலங்கள் அத்தனையும் தமிழகத்தை ஆண்ட மன்னர் பெருமக்களால் இந்த மடங்கள் கொழுப்பதற்கென்றே அள்ளிக் கொடுக்கப்பட்டவை. அதாவது பெரும்பாலும் ஆயிரக்கணக்கான ஏழைத் தமிழ் விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொடுக்கப்பட்டவை. சுதந்திர இந்தியாவில் ஜனநாயகச் சூழலில் எந்தத் தன்மானத் தமிழன் ஆட்சியாலும் இன்றளவும் இந்த நிலக் குவியலுக்கு இம்மியளவு ஆபத்துகூட ஏற்பட்டுவிடவில்லை. அதாவது நிலமற்ற விவசாயக் கூலிகள் கோடிக் கணக்கில் வாழும் ஒரு நாட்டில் இந்த நிலக்குவியல் யாருக்குமே ஒரு சமுதாயத் தீங்கு என்று தோன்றாமலேயே இருப்பதுதான் வியப்பு. இந்த லட்சணத்தில்தான் தன் பங்கிற்குப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களைக் குவித்து வைத்திருக்கும் மதுரை மடத்தின் பழம் பெருமை குறித்த அங்கலாய்ப்புகள் வேறு.

அப்படி என்னதான் பழம் பெருமை இந்த மதுரை மடத்திற்கு இருக்கிறதாம்? சீர்காழியைச் சேர்ந்த ஞான சம்பந்தன் மதுரை அரசியர் மங்கையர்க்கரசி, குலச்சிறைநாச்சியார் வேண்டுகோளுக்கிணங்க சமணத்தைப் பின்பற்றிவந்த பாண்டிய மன்னனின் நோய் தீர்த்து அவனை சமணத்திலிருந்து சைவத்திற்கு மதம் மாற்றினாராம்.  இது நடந்தது ஏழாம் நூற்றாண்டில். அதாவது சமண - பௌத்த சமயங்கள் வெகுமக்கள் மதங்களாக இருந்த தமிழகச் சூழலில் தங்களின் இழந்த செல்வாக்கினைத் திரும்பப் பெறும் பொருட்டு சைவ - வைணவ மதங்கள் அரசர்களின் உதவியோடு பெரும் ஊழித்தாண்டவத்தை அரங்கேற்றின. பாண்டிய மன்னனின் அன்பைப் பெற்றுக்கொண்ட ஞானசம்பந்தன் மதுரையில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுமரத்திற்குப் பலிகொடுத்த கொடுமையை அரங்கேற்றினான். மதுரையில் சைவ மடத்தையும் நிறுவினான். சமணர்களின் ரத்தச் சேற்றில் எழுந்த மதுரை ஆதீனமடம் எப்படிப்பட்ட பாரம்பரியமிக்க மடமாக இருக்கமுடியும் என்பது  விளங்குமல்லவா? இதுபோன்ற ரத்த வரலாறுகள் இல்லாத மடத்தைத் தமிழகத்தில் காண்பதரிது. இது ஒருபக்கம் இருக்கட்டும், இன்றைய நமது சமூகப் பொருளாதார, பண்பாட்டு நிலையிலிருந்து பேசுவோம்...

ஒரு பக்கத்தில் எதிர் மதங்களை ஒழித்துக்கட்டியும், மறுபக்கத்தில் ஏழைகளின் நிலங்களைக் கபளீகரம் செய்தும்தான் இன்றும் இந்த மடங்கள் ஜீவித்திருக்கின்றன. எனில், இந்தச் சந்தர்ப்பத்தில் நமது விவாதத்தின் திசையை நாம் எவ்வழியில் தீர்மானித்துக்கொள்வது? இந்த மடங்களின் நிலங்கள் குறித்து நாம் என்றைக்காவது பேசியிருக்கிறோமா? நவீன தொழில் வளர்ச்சியில் நிலச்சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார். மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசு மேற்கொண்ட நிலச்சீர்திருத்தத்தின் பயனாக அங்கே கிராமப்புற மக்களிடம் வாங்கும் சக்தி மேம்பட்டிருக்கிறது என்று உலக வங்கிகூட குறிப்பிட்டதுண்டு. நிலக்குவியல் என்பது நவீனத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிய முட்டுக்கட்டையாகும் என்பதையறிந்தே இடதுசாரிகள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு களையெல்லாம் அச் சீரிய பணிக்குப் பயன்படுத்திக்கொண்டதை இந்த நாடு கண்டது.

இதோ பாருங்களேன்... தமிழகத்தின் பெருங்கோவில்களும், மடங்களும் எத்தகையதொரு நிலக்குவியலை வைத்திருக்கின்றன என்பதை நான் சொல்லவில்லை, தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை தனது இணையத்தில் தரும் தகவலையே இங்கே தருகிறேன்.  தமிழகத்தின் விளைநிலங்களில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 859 ஏக்கர், 58 சென்ட் நிலம் தமிழகக் கோவில்களுக்குச் சொந்தமானவை . 21 ஆயிரத்து 282 ஏக்கர், 5 சென்ட் நிலம் மடங்களுக்குச் சொந்தமானவை. தரிசு நிலங்களில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 517 ஏக்கர், 86 சென்ட் நிலம் கோவில்களுக்கும், 34 ஆயிரத்து 543 ஏக்கர், 15 சென்ட் மடங்களுக்கும் சொந்தமானவை. இதேபோல மானாவாரி நிலத்தில்  20 ஆயிரத்து 754 ஏக்கர், 34 சென்ட் கோவில்களுக்குச் சொந்தமானவை. ஆக, தமிழகத்துப் பெருங்கோவில்களும், மடங்களும் சுருட்டிக் குவித்து வைத்திருக்கும் மொத்த நிலப்பரப்பு 4 லட்சத்து 78 ஆயிரத்து 957 ஏக்கர், 54 சென்ட் ஆகும்.

கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர் நிலத்தை இந்த வகையிலேயே இழந்து நிற்கிறது தமிழகம். இதுபற்றி நாம் இப்போது வாய் திறக்கவில்லையெனில் எப்போது வாய் திறக்கப்போகிறோம்? இந்த நிலங்களில் பரவலாக இதையே நம்பி விவசாயம் செய்துவரும் சுமார் ஒரு லட்சம் குத்தகைதாரர்களுக்கு என்னவிதமான பாதுகாப்பு?  இதுமட்டுமா? அறநிலையத்துறை இணையத்தில் இன்னொரு தகவலும் உள்ளது. 33 ஆயிரத்து 627 கிரவுண்ட் மனையடி நிலமும், 20 ஆயிரத்து 46 கட்டிடங்களும் கோவில்களுக்குச் சொந்தமாக உள்ளதாம். இதையும் வாடகைக்கு விட்டிருக்கிறார்களாம்.

நில உச்சவரம்புச் சட்டம் 1962ல் காமராசர் ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் 2005 ஆம் ஆண்டு முடிய இங்கே ஒரு லட்சத்து 88 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே நில உச்சவரம்புச் சட்டத்தின் அடிப்படையில் மறுவிநியோகம் ஆகியிருக்கிறது. அப்படியென்றால் தமிழகத்தில் இந்த நிலச் சீர்திருத்தம் பெரிய தோல்வியையே சந்தித்திருக்கிறதென்று பொருள். அதாவது, விவசாயக் கூலிகளாக வாழ்க்கை நடத்தும் ஏழைத் தமிழர்களின் கைகளில் சொந்த நிலமில்லாத நிலைமையை, அவர்களின் கைகளில் கொஞ்சமேனும் உபரிப் பணமில்லாத சூழலை நம்மை மாறிமாறி ஆட்சிசெய்த கழக ஆட்சியாளர்களே பரிசளித்திருக்கிறார்கள். இதைச் செய்துவிட்டுத்தான் இலவசங்களுக்குக் கையேந்துபவர்களாகவும் நம்மை ஆக்கியிருக்கிறார்கள். வறுமைக் கோலம் நீடிக்கிற தமிழகத்தில்தான் மடங்களும், கோவில்களும் 5 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில்தான் இந்த நிலை. வர்ணாசிரமத்தை வைரியாக எண்ணிச் சமர்புரிந்த பெரியாரின் பூமியில்தான்  மடங்களின் ராஜியம் தகராத நிலை. 

தமிழகத்தின் முகத்தோற்றத்தை மாற்ற விரும்பும் எல்லோரின் கவனமும் இந்த நிலக்குவியலின் மீது விழட்டும். முறையான நிலச்சீர்திருத்தத்தை இங்கே அமலாக்க மன்னர் மானிய ஒழிப்பைப்போல மடங்களின் சொத்துக்களை அரசு கையகப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமென்று கருத்தொருமித்துக் குரல் கொடுப்போம்! வாருங்கள் தமிழகத்தின் முற்போக்காளர்களே... ஜனநாயக சிந்தனையாளர்களே... மடமெனும் மடமை நீக்கி தமிழ் நிலத்தைத் தமிழக விவசாயிகளின் வசமாக்குவோம்! இக் கருத்தை முதலில் இன்றே பொது விவாதமாக்குவோம்!

- சோழ.நாகராஜன்

Comments

24 comments

24
arun.k
மிக பெரிய போராட்டதை முன்னெடுக்க வேன்டிய சரியான தருனமிது.
இராமியா
நித்யானந்தாவைப் பற்றியும் நிலவுடைமைக் குவிப்பின் கொடுமை பற்றியும் விரிவாக எழுதியுள்ள திரு.சோழ.நாகராஜன், நித்தியானந்தாவை விட அதிக குற்றங்கள் புரிந்துள்ள ஜெயேந்திரரைப் பற்றி ஏன் குறிப்பிடவி்ல்லை? நித்யானந்தா மீது கொலை வழக்கு இல்லை. ஜெயேந்திரர் மீது கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும், இவ்வழக்குகளில் சாதகமான தீர்ப்பைப் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. நித்யானந்தா தன்னிடம் சோரம் போன பெண்களிடம் தவறான உறவை வைத்திருந்தார். ஜெயேந்திரரோ (எழுத்தாளர் அனுராதா ரமணனின் வாக்குமூலப்படி)தன்னிடம் சோரம் போக மறுத்த பெண்ணையும் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இன்றளவும் பார்ப்பனர்கள் ஜெயேந்திரரிடம் சென்று ஆசி வாங்குவது என்ற பெயரில் அரசியல் முடிவுகள் உட்பட அனைத்தையும் செய்கிறார்கள். நித்யானந்தர் போன்ற சாமியார்களை எதிர்க்கும் வேகம் பார்ப்பன எதிர்ப்பில் ஏன் இருப்பதில்லை?
சி.மதிவாணன்
மக்களின் நிலத்தைக் கொள்ளையடிப்பதிலும் அதில் கொழுப்பதிலும், துறவறம் என்ற திரையைப் பயன்படுத்தி பாலியல் குற்றங்கள் செய்வதிலும் எந்த மடத்திற்கும்/மதத்திற்கும் பாகுபாடில்லை. காவிரி தீரத்தில் இன்னமும் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் பாடுபடும் விவசாயிகளின் சோகக் கதையைக் கேட்க நெஞ்சு பதறும். அங்கே நானறிந்த சர்ச் ஒன்று நூற்றுக்கணக்கான ஏக்கரை வைத்துக்கொண்டு டீசல் மாண்யம் போன்றவற்றைப் பெற்று கொழிப்பதையும், சாதி வேற்றுமையைப் பயன்படுத்தி கூலியைக் குறைப்பதையும் கண்டிருக்கிறேன். ஆக, மதம்/மடம் எது யார் நடத்துகிறார்கள் என்பதில் வேறுபாடு இருந்தாலும் அதன் சமூக விளைவுகள் ஒன்றே. சோழ. நாகராஜன் சிறப்பாக இப்பிரச்சனையை வெளிக்கொண்டுவந்துள்ளார்.
சோழ. நாகராஜன்
தோழர் இராமியா இந்தக் கட்டுரையில் ஜெயேந்திரரை குறிப்பிடவில்லையே எனச்சொல்லிவிட்டு அவர் பார்ப்பனர் என்பதால் எனச்சொல்வது மிகவும் தவறு. நான் இங்கே சொல்லவருவது தமிழகத்து மடங்களின் நிலக் குவியல் குறித்தும், அவற்றை அரசு பறிமுதல் செய்து நிலமற்றோருக்குக் கொடுக்கவேண்டும் என்பதையும்தான். இதில் காஞ்சி மடமும் விதிவிலக்கல்ல, வேறு எந்த மடமும் விதிவிலக்கல்ல. எனவே இங்கே பார்ப்பனர் சார்பு எங்கே உள்ளது? மேலும், அரசு அவ்வாறு எடுக்கும் நிலங்களை நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகளுக்கே வழங்கவேண்டும் என்றும் சொல்கிறோம். விவசாயக் கூலிகள் என்றால் பெரும்பகுதி தலித்களும், பிற்படுத்தப்பட்ட மக்களுமே அடங்குவர். நாம் இங்கே ஒன்றை விவாதிக்க, விவாதத்தை வேறொரு திசைக்குத் திருப்ப முயல்வதால் நட்டம் நமக்குத்தான் என்பதறிக தோழர்களே. இதே காஞ்சி மட விவகாரத்தில், ஜெயேந்திரர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டபோதும், வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமில்லாதவர்கள் என்று ஜெயேந்திரர் கூறியபோதும் காஞ்சியிலேயே போய்க் கண்டனம் முழங்கியவர்கள்தான் நாங்கள். அயோக்கியத் தனத்தில் பார்ப்பானாவது, வேறொருவனாவது... இன்று முன்னுக்குவந்துள்ளது மதுரை ஆதீன விவகாரம்தானே? அதையொட்டி பலரும் பலவாறு பேசிக்கொண்டிருக்கையில் எனக்குத் தோன்றிய ஒரு சிந்தனையையே நம் எல்லோரின் பொது விவாததிற்கு வைத்திருக்கிறேன். இதற்குள் நின்று விவாதிப்பதே சரியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.
விவசாயி
மன்னர் பெருமக்கள் விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி கோவில், மடங்களுக்குக் கொடுத்தார்களா, நாட்டிலேயே பெரிய நிலச்சுவாந்தார்களான தங்களின் சொந்த நிலத்தைக் கொடுத்தார்களா?

சர்ச்சுகளின் கைவசம் உள்ள நிலம் எவ்வளவு என்று எங்கே பார்ப்பது?
Asokan
இதற்கெல்லாம் முடிவு கட்ட "உலகு தொகு நேரடிக் குடியரசுக் குழு" உருவாகிக் கொண்டிருக்கிறது. மடத் தலைவர்களும் சாதிப் பாகுபாடின்றிக் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப் படுவர். நிலம் அனைத்தும் உழவர் சமுதாயத்திற்குச் சொந்தமாகிவிடும்.
நெடுதுயிலோன்
அரசர்கள் காலத்தை விடுங்கள் அதற்க்கு பின் வந்த ஆச்சியாளர்கள் என்ன செய்தார்கள்? திராவிடம்,தமிழ்,பகுத்தறிவு,பொதுவுடைமை என்றவர்கள் பூசையத்தான் தமிழில் செய்ய சொன்னார்களே தவிர இவ் சொத்துகளை பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க ஒரு சட்டத்தை கூட உருவாக்கவில்லையே ஏன்?
இராமியா
தோழர் சோழ.நாகராஜன் அவர்களே! நிலக்குவிப்புக்கு எதிரான தங்களுடைய ஆதங்கம் நல்ல விஷயம் தான். ஆனால் அதிகாரக் குவிப்பும் நிச்சயமாக அணுகப்பட்டே தீர வேண்டிய விஷயமே. அனைத்து வகுப்பு மக்களிலும் மிக அதிகமான திறமை கொண்டவர்கள் முதல் மிகக் குறைவான திறமை உள்ளவர்கள் வரையில் அனைத்து நிலை மக்களும் உண்டு. ஆனால் அதிகாரம் உள்ள, குறைந்த ஊதியம் கொண்ட, உடல் உழைப்பு தேவைப்படாத வேலைகளில் 90%க்கும் அதிகமானவற்றை மக்கள் தொகையில் 3%க்கும் குறைவாக உள்ள பார்ப்பனர்களால் சுருட்டிக் கொள்ள முடிகிறது. பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு இல்லாத வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி சொகுசான வேலைகளைப் பெற முடிகிறது. திறமைக் குறைவானவர்கள் உயர்நிலைகளில் இருக்கும் போது நிர்வாகம் சீர்கெடுகிறது. அப்படிப்பட்‌ட திறமைக் குறைவான பார்ப்பனர்களை மற்ற பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் வைத்து அரவணைக்கிறார்கள். இது கொடூரமான தேசத் துரோகம். இவ்வாறு திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நலைக்குச் செல்ல முடிகின்ற ஏற்பாடு இருப்பதைக் குறித்தும் அவர்களை உயர்‌நிலையில் அரவணைக்கும் தேசத் துரோகப் பார்ப்பனர்கள் குறித்தும் மக்களுடையே விழிப்புணர்வையும் இந்த ஏற்பாட்டிற்கு எதிரான பொதுக் கருத்தையும் உருவாக்காமல் இருப்பது (அதிகார மையத்தில் பார்ப்பனர்கள் குவிந்து இருப்பதால்) நிலக் குவிப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறாமல் இருக்கவே வழி வகுக்கும். நித்தியானந்தா என்ற சமூக விரோதிக்கு எதிராகப் போராடுவது உண்மையில் சமூக வி‌ரோதிகளுக்கு எதிரான போராட்டம் என்பதைவிட இம்மாதியான சமூக விரோதச் செயல்‌களைச் செய்ய பார்ப்பனர்களுடைய முற்றுரிமையில் தாங்கள் அனுமதிக்கும் அளவை மற்றவர்கள் மீறுகிறார்களே என்ற பார்ப்பன வயிற்றெரிச்சல் தான் அதன் பின்னணி என்று தோன்றவே இல்லையா? தங்களுடைய நோக்கம் நிலக்குவிப்புக்கு எதிராக மட்டும் தான் என்றால் அதற்கு பார்ப்பன மடங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு இருக்கலாமே? மற்ற மடங்கள் விவசாய நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு இருக்கும் போது காஞ்சி மடம் நகர்ப்புற நிலங்களையும் வளைத்து ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபடுகிறதே? தோழரே! பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுக்காமல் புரட்சிக்கு ஆயத்தம் செய்வது அர‌சமைப்பை மாற்றாமல் புரட்சி செய்து வெகு வேகமாக வீழ்ந்த பாரிஸ் கம்யூனை விட மோசமான நிலைமைக்குத்தான் இட்டுச் செல்லும். ஆகவே பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குப் பின்பாட்டு பாட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தான் கருதுகிறேன். இது சுரண்டலுக்கு எதிரான நம் போராட்டத்தை வலுப்பெற வைக்குமே ஒழிய இழப்பை ஏற்படுத்தாது.
சி.மதிவாணன்
இராமியாவின் உணர்வெழுச்சி எனக்குப் புரிகிறது. அதற்கான நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனால், பார்ப்பனியத்தின் நலனைக் கருதாமல் வர்க்க நலனைக் கருதியே இன்றைய ஆளும் வர்க்கம் செயல்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் நலனை நொறுக்காமல் பார்ப்பனியத்தை நொறுக்க முடியாது. சாதியை வைத்துப் பிழைப்பது பார்ப்பனியம் என்றால், அனைத்து சாதிகளின் முன்னேறிய பிரிவும் சாதியை வைத்தே பிழைக்கிறது! பார்ப்பனிய மடத்திற்குக் காவடி தூக்கும் தலித் நில உடமையாளர்களை இராமையா தலித்துகள் எழுச்சி என்றா அழைப்பார்? எனக்குப் புரியவில்லை!
seyed muhammed
தோழர்:நாகராஜனுக்கு நன்றி!உங்களின் கோபம் நியாயமானது.சமுக சீரழிவிற்கான காரணத்தை தேடி எழுதியுள்ளீர்கள்.நிலவுடைமை கொடுமைகள் நீக்க பட்டால் இங்கு எல்லாம் கிடைக்கும் என்ற உங்களின் எண்ணத்தை நான் குறை காணவில்லை.குறை எல்லாம் உங்களின் இந்தியா பற்றிய பார்வையில் தான்.
நீங்கள் எழுதியது போல் பிறரின் கருத்து சுதந்திரத்தை சிந்தனை சுதந்திரத்தை முடக்க முனைந்த அன்றை சைவ மத அன்பர்கள் அதிகார வர்க்கங்களை தங்களின் கையாட்களாக்கினார்கள்.தாங்கள் நினைத்ததை செய்யும் கைப்பிள்ளையாக்கினார்கள்.பின் நிலவுடைமையாளர்களாக ஆதினங்களாக் மாறினார்கள்.இந்த ஆதினங்களின் ஆணி வேரை தேடினால் அது ஆச்சார்யார்களின் குருதிகளாய் தோல் போர்த்திய மேனிகளாய் மொத்தத்தில் பார்ப்பனர்களாய் காண கிடைக்கும்.
ஆதலால் தான் கம்யூனிஸ்டுகளாக நிலவுடைமை எதிர்ப்பாளர்களாக மாறிய பின்பும் பூனூலை கழற்றாமல் ஜாதிய பற்றை அறுத்துக்கொள்ளாமல் முகத்தில் பொட்டிட்டு கொண்டு உலா வந்தார்கள்;உலா வருகிறார்கள்.
இதன் விளை பலன்:சமுகம் எவ்வித மாற்றமுமின்றி ஆச்சார்யார்களால் ஜீயர்களால் பாபாக்களால் நித்திகளால் காளி சிலையை காட்டி கழுத்தில் பாம்போடும் பல கைகளோடும் தொந்தி வ்யிரோடும் கூடிய சிலைகளை காட்டி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.அறிவை வளர்க்க வேண்டிய கம்ரேடுகளோ தாங்கள் ஆளும் மாநிலங்களில் மின்ச்சரா ஜோதிகளை ஏற்றி மக்களுக்கு அய்யப்ப தரிசனம் கொடுக்கிறார்கள்.இதை எல்லாம் செய்து விட்டு அமிர்தானந்தமாயி ஆசிரமம் அமைக்க கூடாது;பிறர் நிலங்களை அபரிக்க கூடாது;அது நிலவுடைமை கொடுமை என்றால்...........தோழரே!எப்படி சரியாகும்?
கம்யூனிஸ்டுகளின் சாதனையை அம்ர்ரிதா சென் பாராட்டுகிறார்.அந்த மாநிலங்களில் தான் நிலங்கள் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்படுவதாக மாவோயிஸ்டுகள் போராடுகிறார்கள்.ஆட்சிகள் மாறுகின்றன!
ஆக இந்தியாவிற்கு தேவை நிலவுடைமை எதிர்ப்பாளர்கள் அல்ல.நிலவுடைமைக்கு வழி வகுக்கும் சிலை வணக்கம் சிலை வணக்கத்தை போதிக்கும் வேத சாஸ்த்திரம் சாஸ்த்திரங்களுக்கு மூலமாயிருக்கும் மந்திரம் மந்திரங்கள் கட்டுண்டு கிடக்கும் பார்ப்பனியம் பார்ப்பனியத்தை உயர்த்திப்பிடிக்கும் பிராமணர்கள் பிராமண தாசர்கள் ஒழிக்க பாடுபடும் போராளிகளே.
தோழர்:நாகராஜனையும் அழைக்கிறேன்.வாருங்கள் உண்மை உணர்வோம்;உணர்ந்த படி செயல் படுவோம்.மனித கொடுமைகளை வேரறுப்போம்.
rahul dravid
மாமியா...

50 வருசமா நாட்டை ஆளும் அதிகாரம் இருந்த போதும் அதிகார வர்க்கத்தில் இருக்கும் சில நூறு பார்ப்பனர்கள் உங்களை தடுக்காட்டி அப்படியே புரட்ட்ச்சி பண்ணியிருப்போம்ன்னு புளுகுறதுக்கு வெக்கமேயில்லயா ?
இராமியா
தோழர் மதிவாணன் அவர்களே! வர்க்க நலனை நொறுக்காமல் பார்ப்பனியத்தை நொறுக்க முடியாது என்பது பிரச்சினையைத் தலை கீழாகப் பார்ப்பதாகும். //சாதியை வைத்துப் பிழைப்பது பார்ப்பனியம் என்றால், அனைத்து சாதிகளின் முன்னேறிய பிரிவும் சாதியை வைத்தே பிழைக்கிறது!// ஐயா, அதிகார வட்டத்திற்குள் பொருட்படுத்த முடியாத அளவு மிக மிக ... மிகக் குறைவான எண்ணிக்கையில் நுழைந்துள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், மிக மிக .... மிக வலிமை வாய்ந்த பார்ப்பன அதிகாரத்தை எதிர்த்து வெற்றி காண முடியவில்லை என்று குற்றம் சாட்டுவது இயற்கை நியதிக்குச் சற்றும் பொருத்தமற்றது என்று தோன்றவே இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னெடுப்பவரகள் பழி வாங்கப்படுவதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதும் நீங்கள் அறியவே மாட்டீர்களா? அனைவராலும் இதை வெற்றி கொள்ள முடியுமா? நீங்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள முன்னேறியவர்கள் ஒவ்வொருவரும் அம்பேத்கர்கள் என்று அனுமானிக்க வேண்டாம். அம்பேத்கர் போன்ற அறிவும், திறனும், துணிவும்,விடுதலை உணர்வும் அனைவருக்கும் இல்லை என்பது தான் பிரச்சினை. அதிகார வட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை போதுமான அளவிற்கு உயர்ந்தால், அவர்களால் தங்கள் வகுப்பு மக்களின் நலன்களை முன்னெடுக்கும் துணிவு பிறக்கும். பார்ப்பனர்களின் எண்ணிக்கை உயர் நிலைகளில், மக்கள் தொகையில் அவர்களுடைய விகிதத்தைவிட அதிகமாக இடம் பெற முடியாதபடி செய்தால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டிற்கு இடம் இருக்காது. தோழர் ராகுல் திராவிட் அவர்களே! ஐம்பது ஆண்டுகளாக நாட்டை ஆளும் அதிகாரம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருக்கிறதா? இல்லை தோழரே! அதிகாரம் பார்ப்பனர்களின் கையில் தான் இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளதாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் உண்மையில் அதிகாரத்தில் இல்லை. பெரியார், அம்பேத்கர் போன்றோர் மக்களிடம் ஏற்படுத்தி விட்ட விடுதலை உணர்வுகளை ஒழிப்பதற்காகப் பார்ப்பனர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சுகம் அனுபவிப்பவர்கள். அவ்வளவு தான். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வு முற்றிலும் அழிந்தாலோ, அல்லது அவர்களுடைய விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்தாலோ அவர்கள் இப்போதைய சொர்க்கத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். அது அவர்களுக்கும் தெரியும். ஆகவே தான் மக்களின் உணர்வு முற்றிலும் அழிந்து விடக்கூடாது என்றும் அதே வேளையில் அது பீறிட்டு எழுந்துவிடக் கூடாது என்றும் இரண்டிற்கும் இடையில் சர்க்கஸ் விளையாட்டை விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சி.மதிவாணன்
தங்கள் பதிலுரைக்கு நன்றி இராமியா.
1. ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகார மட்டத்தில் போதுமான அளவுக்கு உயர வேண்டும்.
ஆனால், அதிகார மட்டத்திற்கு உயர்ந்தவர்கள் எல்லாம் அம்பேட்கர் போல உறுதியானவர்கள் அல்ல.
2. பார்ப்பனர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதிகார மட்டத்தில் பங்கேற்கும் வகையில் அவர்களின் அதிகாரப் பங்கேற்பைக் குறைக்க வேண்டும்.
இவைதான் நீங்கள் சாரமாக எனக்களித்த பதில் என்று நினைக்கிறேன். உங்கள் விருப்பம் நியாயமானதுதான். சரியானதுதான். ஆனால்,அதனை எப்படி எதார்த்தமாக்குவது என்பதுதான் கேள்வி.
1. ஒடுக்கப்பட்டவர்களி எண்ணிக்கையை அதிகார மட்டத்தில் உயர்வது எப்படி?
2. அவர்கள் அம்பேட்கர் போல உறுதியாவது எப்படி?
3. பார்ப்பனிர்களின் அதிகார மட்ட எண்ணிக்கையைக் குறைப்பது எப்படி?
அதிகாரம் டெல்லியின் அல்லது சென்னையில் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது அப்படியல்ல. அது இரத்த ஓட்டம் போல, நரம்பு மண்டலம் போல தேசமெங்கும் விரவிக் கிடக்கிறது. அது ஒரு கட்டமைப்பு. நபர்கள் அல்ல அதிகாரக் கட்டமைப்பு. அதற்குப் பெயர் அரசு.
கிராமங்களில், ஏன் நகரங்களில் கூட அடித்தட்டு சாதியினர் நொறுக்கப்படுகின்றனர். அதற்கான அதிகாரக் கட்டமைப்பு (அரசு+அங்கம்) அங்கே உள்ளது. அடித்தட்டு சாதிகளை ஒடுக்கும் கட்டமைப்பு வெறுமனே சாதிகளை மட்டும் ஒடுக்குவதில்லை. ஆதிக்கத்தைதைக் கையில் வைத்திருக்கும் நபர்களின் பொருளாதார நலனைக் காக்க யாரையெல்லாம் ஒடுக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் ஒடுக்குகிறார்கள்.
எனவே,சாதி- வர்க்க ஒடுக்குமுறையின் கலப்படமான தன்மையைக் கண்டுணர்ந்து ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரத்திற்கான அரசியல் அமைப்பும் இயக்கமுமே இதற்கான தீர்வு. வேர் துவங்கி தலை வரை இந்த இயக்கத்தைக் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும் வேண்டும்.
இந்திய முதலாளிகளில் மற்றும் சொத்துரிமைப் பிரிவினர் கையில் அரசியல் அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள சாதிச் சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டிக் காக்கின்றனர்.
பார்ப்பனீயச் சிந்தனை இந்திய அதிகார வர்க்கத்தின் சிந்தனையின் அங்கமாக இருப்பதால் மட்டுமே வாழ்கிறது. நீங்கள் சொல்வது போல பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கையூட்டு கொடுப்பதால் அல்ல. இந்தியாவை நடத்திச் செல்லும் பன்னாட்டுக் கம்பெனிகளும் இந்திய முதலாளிகளும் பார்ப்பனர்களை விலைக்கு வாங்கி வேலைக்கமர்தியுள்ளனர்!
திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் பார்ப்பனிய ஜெவுக்கு அல்லது மஞ்சள் துண்டு க வுக்குக் காவடி தூக்குவதற்குக் காரணம் அவர்கள் வலுவற்றவர்கள் என்பதல்ல. மாறாக, க அல்லது ஜெ பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான அரசியலை அவர்கள் கையிலெடுக்க வில்லை என்பதால்தான்.
நல்ல சிந்தனை இருப்பது நல்லதுதான். ஆனால், அது பயந்தராது.
நமது சிந்தனை நமக்கு வெளியே உள்ள உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று புரிந்துகொண்டு அதனை மாற்றியமைப்பதற்காக ஒடுக்கப்பட்டவர்களை அமைப்பாக்கும் அரசியல் அமைப்பாக, சக்தியாக, எதிரிகள் எப்படி அரசாகச் செயல்படுகிறார்களோ அதற்கு எதிரான, அதனை அடித்து நொறுக்குவதற்கான அமைப்பாக வளர வேண்டும்.
இல்லையெனில் நல்ல சிந்தனை, நல்ல மனிதர்களைத் தேடி சிலரை கெட்ட மனிதர்கள் என்று பட்டியலிட்டு தனிமனித தாபமாக, விரக்தியாகச் சரிந்துபோகும்.
இராமியா
ஐயா மதிவாணன் அவர்களே! நான் கூறுவதை நியாயம் என்று ஒப்புக் கொண்ட தாங்கள் அதை நடைமுறையில் கொண்டு வருவதைப் பற்றிய சிந்தனையில் திசை திருப்புகிறீர்கள். //அதிகாரம் டெல்லியின் அல்லது சென்னையில் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது அப்படியல்ல. அது இரத்த ஓட்டம் போல, நரம்பு மண்டலம் போல தேசமெங்கும் விரவிக் கிடக்கிறது.// என்பது வார்த்தை ஜாலம் தவிர வேறல்ல. உயிரினங்களின் நாடி நரம்புகள் அனைத்தும் சேர்ந்து தான் செயல்பட்டாலும் மூளையை முக்கியமாகவும், மூளை தான் முடிவெடுப்பதாகவும் நடைமுறையில் கூறுவது உண்டு. அதற்காக நாடி நரம்புகளையும் இரத்த ஓட்டத்தையும் புறக்கணித்து விட்டதாகப் பொருள் அல்ல. சரி! வார்த்தை ஜாலத்தை விட்டு வெளியே வருவோம். //அதிகாரம் டெல்லியின் அல்லது சென்னையில் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது அப்படியல்ல. அது இரத்த ஓட்டம் போல, நரம்பு மண்டலம் போல தேசமெங்கும் விரவிக் கிடக்கிறது.// என்று நீங்கள் சொல்வதன் ‌மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்? அதிகார மையங்களில் பார்ப்பனர்கள் குவிந்து கொண்டு இருப்பதும், அவர்கள் தங்கள் நலன்களைக் காத்துக் கொள்வதற்காகச் செய்யும் தேசத் துரோகச் செயல்களும் விவாதப் பொருளாகக் கூட ஆகிவிடக் கூடாது என்ற பதைபதைப்பில் அப்படிக் கூறுகிறீர்களா? சரி! அனைத்து நிலை அறிவுத் திறன் கொண்டவர்களும் அனைத்து வகுப்பு மக்களிலும் இருக்கும் போது பணியிடங்களிலும் அப்படியே இருந்தால் என்ன குடி முழுகிப் போய்விடும்? அதைப் பற்றி விவாதம் கூட செய்யப்பட்டு விடக் கூடாது என்று ஏன் துடிதுடித்துப் போகிறீர்கள்? ஐயா! ஒடுக்கப்ட்ட வகுப்பு மக்களின் தலைவர்கள் தவறு செய்வதையே சுட்டிக் காட்டிக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்தைக் கெட்டிப்படுத்த முயல வேண்டாம். //1. ஒடுக்கப்பட்டவர்களி எண்ணிக்கையை அதிகார மட்டத்தில் உயர்வது எப்படி? 2. அவர்கள் அம்பேட்கர் போல உறுதியாவது எப்படி? 3. பார்ப்பனிர்களின் அதிகார மட்ட எண்ணிக்கையைக் குறைப்பது எப்படி?// ஐயா! அனைவரும் அம்பேத்கர் போல உறுதியாவது என்று பேசுவது எல்லாம் ஆசை காட்டும் மோச வலை. அனைவரும் அம்பேத்கர் போல ஆக முடியாது. ஆனாலும் பார்ப்பனர்களை விட மிக மிக .... மிகத் திறமையாக நாட்டை நிர்வகிக்க முடியும். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் அவ்வளவு தான். வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பிக்கத் தான் செய்து இருக்கிறார்கள். ஐயா! அம்பேத்கர் கூறியது போல புரட்சியைச் சந்திக்கும் முன் சாதியைச் சந்திக்க வேண்டும். (சாதியைச் சந்திப்பது என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப் படுத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் பார்ப்பனர்கள் அயோக்கியத்தனமாகச் சுருட்டி வைத்து இருக்கும் வாய்ப்பு‌களைப் பறித்து இரு வகுப்பு மக்களுக்கும் பகிர்ந்து கொடுத்தால் அவர்களிடையே உள்ள முரண்பாடுகள் மறையும். சாதியைச் சந்திப்பது என்பதன் பொருள் அது தான்.) சாதியைச் சந்திக்காமல் புரட்சியைச் சந்திக்க முடியாது. மீறி, புரட்சி திணிக்கப்பட்டால் அது பாரிஸ் கம்யூனை விட ‌மோசமான தோல்வியைச் சந்திக்க நேரிடும்.
சி.மதிவாணன்
நன்றி இராமியா!
உங்கள் விருப்பம்போல அனைத்தும் நிறைவேறட்டும்.
இராமியா
திரு.மதிவாணன் அவர்களே! இது போன்ற அருள் வாக்குகள் எவ்விதமான பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை.
சி.மதிவாணன்
திரு இராமியா, நீங்கள் இப்போது சொல்வதைத்தான் ( (இது போன்ற அருள் வாக்குகள் எவ்விதமான பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை)முந்தைய எனது பதிலிடுகைகளில் நான் விரிவாகச் சொன்னேன்.
இராமியா
திரு.மதிவாணன் அவர்களே! தங்கள் இடுகையில் அருள் வாக்குகள் பலனை ஏற்படுத்தப் போவதில்லை என்ற பொருள் கொடுக்கும் வாசகங்கள் இருப்பதாகத் ‌தெரியவில்லை. அத்துடன் அல்லாமல் //பார்ப்பனீயச் சிந்தனை இந்திய அதிகார வர்க்கத்தின் சிந்தனையின் அங்கமாக இருப்பதால் மட்டுமே வாழ்கிறது. நீங்கள் சொல்வது போல பார்ப்பனர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குக் கையூட்டு கொடுப்பதால் அல்ல. இந்தியாவை நடத்திச் செல்லும் பன்னாட்டுக் கம்பெனிகளும் இந்திய முதலாளிகளும் பார்ப்பனர்களை விலைக்கு வாங்கி வேலைக்கமர்தியுள்ளனர்!// என்ற வாசகங்களைப் பாருங்கள். பார்ப்பனீயச் சிந்தனை இந்திய அதிகார வர்க்கத்தின் சிந்தனையின் அங்கமாக எப்படி இருக்க முடிகிறது? அதிகாரம் மையங்களில் பார்ப்பனர்கள் குவிந்து கிடப்பதனால் தானே? (தயவு செய்து பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தில் பாருங்கள்) பார்ப்பனர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குக் கையூட்டு கொடுப்பதாக நான் கூறவே இல்லையே? பார்ப்பனர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர் போன்றோரின் உழைப்பில் உணர்வு பெற்ற மக்களின் போராட்டத்தினால் அதிகார மையங்களில் நுழைந்து இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வகுப்பு நலன்களை முன்னெடுக்காமல் இருக்க அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர்கள் மிரட்டுதல், கையூட்டு முதலான ஆயுதங்களபை் பயன்படுத்துகின்றனர் என்ற பொருளில் தான் எழுதி இருக்கிறேன். அனைவரும் அம்பேத்கரைப் போல் அறிவும், திறனும், துணிவும், விடுதலை உணர்வும் கொண்டவர்களாக இருக்க முடியாது என்பதனால் பார்ப்பனர்களின் தாக்குதலை எதிர்த்து வெல்லும் வலிமை உடையவர்களாக இருக்க முடியாது என்பதையும் கூறி இருக்கிறேன். அதிகார மையங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் போதுமான அளவு உயர்வதும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை அவர்களுடைய மக்கள் தொகை விகிதத்திற்கு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதும் தான் இதற்கான தீர்வு என்றும் கூறி இருக்கிறேன். //இந்தியாவை நடத்திச் செல்லும் பன்னாட்டுக் கம்பெனிகளும் இந்திய முதலாளிகளும் பார்ப்பனர்களை விலைக்கு வாங்கி வேலைக்கமர்தியுள்ளனர்!// என்று கூறி இருக்கிறீர்களே? அவர்கள் பார்ப்பனர்களை விலைக்கு வாங்காமல் மற்றவர்களை விலைக்கு வாங்கிப் பார்க்கட்டுமே! முடியுமா?
இராமியா
ஐயா/அம்மையீர் அனானிமஸ் அவர்களே! இக்கட்டுரையில் உள்ள பின்னூட்டங்களைப் படித்தால், பார்ப்பனர் அல்லாதவர்கள் புனிதமானவர்கள் என்பதால் விலைக்கு வாங்கப்பட முடியாதவர்கள் என்று சொல்லவில்லை என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்நாட்டில் முதலாளிய ஆதிக்கத்தை விடப் பாரப்பன ஆதிக்கம் தான் ஓங்கி உள்ளது. திரு.மதிவாணன் அவர்கள் பன்னாட்டு முதலாளிகளும் இந்திய முதலாளிகளும் பார்ப்பனர்களை விலைக்கு வாங்குவதாக எழுதி இருக்கிறார். இது தவறான புரிதல் என்பதைச் சுட்டிக் காட்டவே மற்றவர்களை விலைக்கு வாங்கிப் பார்க்கட்டுமே என்று எழுதியிருக்கிறேன். பன்னாட்டு முதலாளிகளும் சரி, இந்திய முதலாளிகளும் சரி, பாரப்பனர்களையும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அடிபணிபவர்களையும் தவிர மற்றவர்களை ‛‛விலைக்கு வாங்க’’ முயன்றாலே நொறுக்கப்பட்டு விடுவார்கள். இது முதலாளிய ஆதிக்கத்தை விட, பார்ப்பன ஆதிக்கம் தான் கொடூரமாகவும் வலுவாகவும் உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்திய சமுதாயத்தில் உள்ள மிகக் கொடூரமான சக்தியான பாரப்பன ஆதிக்கத்தை இல்லை என்று சாதிப்பதும், ஒப்புக் கொண்டே தீர வேண்டிய அவசியம் ஏற்படும் பொழுது அதைக் குறைத்து மதிப்பிட்டுக் காட்டுவதும் பாரப்பனர்களைத் திட்டுவதைப் பார்ப்பன எதிர்ப்பு என்று திருப்தி அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் திரு.மதிவாணன் போன்றார் மட்டுமல்ல; பொதுவுடைமைக் கட்சிகளும் செய்து வருவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
Guest
பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களை விலைக்கு வாங்க முடியாதா? ஏன்? மற்றவர்கள் அனைவரும் அவ்வளவு புனிதமானவர்களா?
தனபாலன்
திரு.இராமியா அவர்களே! மேற்கண்ட அனானிமஸ் இடுகை என்னுடையது தான். ‌அழுத்துவதற்கு முன் பெயர் எழுத மறந்து விட்டது. விஷயத்திற்கு வருவோம். திரு.மதிவாணன் போன்றவர்களும் (என்னையும் சேர்த்து) , பொதுவுடைமைக் கட்சிகளும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக என்ன தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இராமியா
திரு.தனபாலன் அவர்களே! பெரிதாக எதையும் செய்ய வேண்டாம். பார்ப்பன ஆதிக்கம் முதலாளிய ஆதிக்கத்தை விட அதிகமாக மக்களை வதைக்கிறது என்பதையும், பார்ப்பன ஆதிக்கம் தளராமல் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை வேர் பிடிக்க வைக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டாலே போதும்.
கி.பிரபா
உறவுநிலையில் ஊக்கம் காட்டும் துறவிகளுக்குப் பெயர் சாமியார்கள். எனில் உலகம் இப்படித்தான் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் என்பதை முழுமையாக அறிந்த பலரில் ஒருவனே இந்த நித்தியானந்தா எனும் காமக்கோட்டி. மானத்தைக் காக்க ஓர் முழத் துண்டு மட்டுமே அணிவதே பெரும்சுமை எனக் கருதும் துறவிகள் இருந்த காலம் என்பது போய்விட்டது.பன்னீரும் மதுவும் மாதுவும் எனக் கிறங்கிக் கிடைக்கும் ஆசையில் உழலும் நித்தியானந்தா, சங்கராச்சாரியார், இவனுகளைப் போல் வேற்றுசமயச் சாமியார்கள் இருக்கும் வரை உருப்படுமா உலகம்?
கி.பிரபா
விவாதிப்போமே! சொல் அழகாகத் தான் உள்ளது. விவாதிக்கும் முன் இவனுகளை விரட்டுவோமே! மடத்துறவிகள் தான் பல்கிப் பெருகி உள்ளனர். மடத்துத் துறவிகள் இல்லை நாட்டில். இனி இவனுகளின் பெயரில் கல்லறை கட்டி அதையும் குலதெய்வம், சிறுதெய்வம் என வழிபடத் தொடங்கும் முட்டாள்களும் அறக்கட்டளை எனும் பெயரில் பணத்தை முடக்கத் தெளிவாகத் திட்டமிடுவார்கள். சீரடி, புட்டப்பருத்தி, காஞ்சி இவைகளை ஓடஓட விரட்டாமல் ஊடகங்களும் துணை இருந்து விளம்பரம் தருவதனால் உருப்படி என்னவோ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.