"இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..." என்று ‘பாட்ஷா’ திரைப்படப் பாடலில் வரி ஒன்று வந்து போகும். 64வது பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிகாந்த்தின் நீண்ட, நெடிய திரையுலகப் பயணத்தை ஒரு முறை மீள்பார்வை பார்க்கையில், அந்த வரிகளில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்கிறது மனது. இருக்கலாம். இல்லாமலா, ஒரு தெய்வத்தை ஆராதிப்பது போல மாநிலம் முழுக்க டிசம்பர் 12ம் தேதி ரஜினி கட்&அவுட்களுக்கு பாலாபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடக்கும்?

இத்தனைக்கும், தமிழ் சினிமாவை புதிது, புதிதாய் நிறைய இளைஞர்கள் இன்றைக்கு ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். ஒன்றும் உருப்படி இல்லை என்றாலும் கூட, அவர்களுக்குப் பின்னாலும் ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்களை மையமாகக் கொண்டு பல கோடிகள் வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களை விட இரு மடங்கிற்கும் அதிகமான வயதாகியும் கூட, இன்னமும் ‘மவுசு’ குறையாமல் வைத்துக் கொள்வது உண்மையாகவே சாகசம்தான். பேருக்குள்ளே காந்தம் இருக்கத்தான் செய்கிறது.

மக்களை ஆளுமைப்படுத்துகிற திறன், வாய்க்கப்பெறுவது சாதாரண காரியமல்ல. ஆனால், அந்தத் திறன் இருப்பது மட்டுமே போற்றுதலுக்கு உரியதுமல்ல. விகிதாச்சாரப்படி ஏறக்குறைய உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பெரும்பகுதியை தனது ஆளுமையின் கீழ் வைத்திருக்கிறது மது என்பதற்காக, மது போற்றுதலுக்கு உரிய, ஆராதிப்பதற்கான பொருளாகி விடாது. ரஜினி விஷயமும் அப்படியே. அவருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கலாம். அது மட்டுமே தகுதி ஆகி விடமுடியாது.

ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களின் ஆதரவுக்கு அப்பால், அந்த மனிதரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதே சரியான ஒரு மதிப்பீட்டை நமக்கு முன்வைக்கும். ரஜினியை அந்தக் கோணத்தில் நாம் அணுகினால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. லட்சக்கணக்கான பேர் அவரது பெயரை தாங்கிப் பிடித்துக் கொண்டு பின்னால் வருகிறார்கள் என்றால், சினிமாவில் அவர் காட்டிய பொய்யான பிம்பங்களின் வெற்றி அது. ரஜினி என்ற மனிதனின் நிஜத்துக்காக குவிந்த கூட்டமல்ல அது.
 
தொழிலாளர்களின் உரிமைக்குப் போராட, தானும் ஒரு சக தொழிலாளியாக... படு விலையுயர்ந்த காலணி, ஆடைகள் அணிந்தபடி வசனங்கள் பேசுவது, கெட்டவர்களை ஒழித்துக் கட்ட தாவிக் குதித்தும், எகிறிப் பாய்ந்தும் தாக்குவது எல்லாமே, சினிமாவுக்கான பொய் பிம்பங்கள்தானே? நிஜத்தில் ரஜினி யார்? அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் கேள்விக்குறியாக்குகிற விலை உயர்வுகளின்போது, பன்னாட்டு நிறுவனப் படையெடுப்புகளால் சிறுதொழில் செய்பவர்கள் நிலைகுலைந்து நின்றபோது, பக்கத்து மண்ணில் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டபோது, மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மனிதர்கள் மோதிக் கொண்டபோது.... சினிமா திரைக்கு வெளியே இருக்கும் ரஜினியால் என்ன சாகசங்கள் செய்யமுடிந்தது?

சிகரெட்டை மேலே விட்டெறிந்து, திரும்பி வரும்போது உதட்டால் ‘கேட்ச்’ பிடிக்கும் சாகசம், நியூட்டன் அரும்பாடு பட்டுக் கண்டறிந்த புவியீர்ப்புக் கொள்கைகளை பொய்யாக்குகிற அளவுக்கு தரையில் கால் படாமல் தாவித் தாவி வானத்தில் சர்க்கஸ் நடத்தும் செயல்கள்தான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறதே தவிர... நிஜ வாழ்க்கையில் அவரது ஒரு சிறு துரும்பளவு செயல் கூட இதுவரை போற்றப்பட்டதாகவோ, பின்பற்றப்படுவதாகவோ தகவல் இல்லை.

ரஜினி என்கிற மனிதரின் பொய் பிம்பங்கள் மட்டுமே காலம் கடந்தும் நிற்கிறது என்றால், அதில் பெருமைப்பட்டுக் கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உலகம் கொண்டாடக்கூடிய தலைவர்களின் வாழ்வை புரட்டிப் பார்க்கையில், அவர்களது நிஜங்களே, புகழுக்குக் காரணமாய் நிற்பதைப் புரிந்து கொள்ளமுடியும். ‘ஒரு சொட்டு வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?’ என்று சினிமாவில் பாடியவர் அவர். ஒழுங்காக இருக்கும் தலையை, அடிக்கடி கலைத்து விட்டுக் கொள்வதும், சிகரெட்டை புதுப்புது விதமாய் பிடிப்பதும் மட்டுமே, தங்கக்காசுகளைக் கொடுத்த மக்களுக்கு அவர் திருப்பித் தருகிற விஷயங்கள் என்றால், அது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக இல்லை.

சினிமாத்திரைக்கு வெளியேயும் அவர் செய்யவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பொய்களைப் புறந்தள்ளி நிஜத்தின் பக்கம் கவனம் திருப்புவாரா ரஜினி?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

17 comments

17
க.சிவஞானம்
சிகரெட்டை தூக்கி எறிந்து பிடிக்கும் சாகசத்தை எப்பவோ பாட்டாளி மக்கள் கட்சி போட்டுத் தாக்கி விட்டது. அந்த மட்டோடு ரஜினி சிகரெட்டை விட்டு விட்டார். இன்னும் அதைப் போய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே.
அடுத்து ரஜினிக்கு தொழிலே பொய்பிம்பம் காட்டுவதுதான். அது உண்மை என்று அவர் ஒரு போதும் சொன்னதில்லையே. (பொய் என்றும் அவர் சொன்னதில்லை. அவரிடம் யாரும் அது பொய்யா உண்மையா என்று கேட்கவில்லையே)
மற்றொன்று திரைக்கு வெளியே அவர் சாதிக்க வேண்டியது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்
விலை வாசி உயர்வுக்காகப் போராட வேண்டும் என்று நினைக்கிறீர்களா
இது என்ன பைத்தியக்காரத்தனம். ரஜினி என்ன கடவுளா அவர் வந்து போராடி விட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா
பாலாபிஷேகம் செய்பவர்கள்தான் ரஜினியைக் கடவுளாகக் கருதுகிறார்கள் என்றால், நீங்களும் அவரை ஏதோ ஒரு போராளி போல நினைத்து சில பொறுப்புகளை அவரிடம் ஒப்படைக்கப் பார்க்கிறீர்கள்.
அவர் ஒரு சாதாரண நடிகர் பாவம் அவரை விட்டு விடுங்கள்.
Naga
ரஜினி எதற்கு சினிமாவிற்கு வெளியெ சாதிக்கவேண்டும்...ஏன் நாம் ஒரு நடிகன் மட்டும் தன் தொழிலை செய்துகொண்டு சமுகத்திரற்கும் சேவை செய்ய வேண்டும் எலக்ன்று நினைக்கிறோம்....அவர் வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே...சமுதாயத்தை திருத்துவது அல்ல...இப்படி நாம் நடிகர்கள், சமுகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேட்டு கேட்டு தான் அவர்களை அரசியலுக்குள் இழுத்துவிட்டு விடுகிறொம்...சில நடிகர்கள் சினிமாவில் நடித்துவிட்டு விளம்பர படங்களில் நடிப்பார்கள்...அங்கே தன் இமேஜையும் பிராண்டையும் விற்கிறார்கள்...அதெப்பொல் அரசியலிலும்...இவ்வளவு புகழ் கிடைத்தும் தன் இமேஜை வைத்து அரசியல் பண்ணாமல் இருபதற்கே அவரை பாரட்டலம்...
jesudoss
நல்ல விமர்சனம.........
swami
ரஜினியின் தொழில் நடிப்படவே இருக்கட்டும். அதை மட்டும் அவர் செய்தால், அவரை யாரும் ஏதும் கேட்கப்போவதில்லை.
ஆனால் தமிழ் மண்ணின் அரசியலில் தலையிடுவது, நாட்டை ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது என்று சொல்வது, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது என்று உதார் விடுவது ,அவரை மக்கள் போராளியாக பார்க்கும்படி வைக்கிறது. இமயமலைக்கி கூட ஒருத்தர் கேமரா மற்றும் குழுவோடு செல்கிறார் என்றால் மக்கள் அவரை ,அவர் பப்ளிசிட்டி உத்திகளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.ரஜினி மகா, மெகா நடிகர் மட்டுமே.
Nagarajan
உலகத்துல ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவன் இருப்பான்... இந்த ரஜினியும் அப்படித்தான்...தன் இமேஜை வைத்து அரசியல் செய்யாததற்கு காரணம், அரசியல் முதலீட்டில் நட்டமாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் தான்..தோழர் கிருஷ்ணகுமாரின் வரிகள் அருமை...வாழ்த்துக்கள்..நம் தோழர் மக்கள் மீது கொண்ட அன்பில் ரஜினியை விட மேலானவர்
சுகுமாரன்
திரைப் பிம்பங்களாலும் ஊடக மயக்கங்களாலும்,சினிமாவியாபாரிகளாலும் கட்டப்பட்ட ஒரு அழகிய மண்குதிரைதான் ரஜினி என்ற நடிகன். இவர் வெறும் விளம்பர வெளிச்சத்திலும், ஜால்ராக்கள் ,ரசிகர்களாலும் உயர்த்தப்பட்ட பலுன் ரஜினி சினிமா நடிப்பிலும் சரி.சமுக அமைப்பிலும் ஒரு சிறு தூசியைகூட நகர்த்தியவர் அல்ல.செய்யப்பட்ட சில தர்மங்களும்[?]அவரின் ரசிகர்கள் கைக்காசுதான். அந்த மனிதர் தனது சொத்துக்கணக்கைஉ உயர்த்தியிருக்கிறாரே தவிர ஒன்றும் மக்களுக்காக செய்ததில்லை. எல்லோரையும் அனுசரித்து, பாவ்லா பாசம் காட்டியே பேரை செர்த்துக்கொண்டிருக்கிறார். அவரை இன்னும் ஆ.வி,ஜீவி போன்ற பத்திரிக்கைகள்தான் அடுத்து என்ன செய்யப்போகிறார் ரஜினி என முதல்பக்கக் கட்டுரை எழுதி பம்மாத்து செய்கிறது. இதுவரையும் ஒன்றுமே செய்யாத ஒருவரை அடுத்து என்ன செய்யப்போகிறார் எக்ஸ்குளுசிவ் என்று ஜல்லி அடிக்கிறது ஊடகங்கள்
nandini
Rajni as a actor is best at his profession you guys can not comment on his professionalism... just criticize the sense less followers who go behind him all his way and more over his job is just to act in films n not to give his voice for all people sufferings... I wonder how u all except a celebrity(especially from film world) to give voice for all public problem !!!
muthukumar
please change the site name as loosu
Ravi
ரஜினி வாழ்க. ரஜினி 1996 ஆண்டு அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தல் இந்னேரம் முதல்வர் ஆகி இருப்பார். ரஜினி வாழ்க. கடவுள் ரஜினி வாழ்க.
ஞானமூர்த்தி
ரஜினி தன் தொழிலை செவ்வனே செய்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் உழைப்பிற்கும், திறமைக்கும் அதிகமாகவே உயர்ந்திருக்கிறார் அதற்கு காரணம் கடவுள்தான் என்று நினைக்கிறார். தமிழன் என்று சொல்லவில்லை சொன்னாலும் நம்மை ஏமாற்றவே..... ரஜினி தமிழர்களுக்கு எதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த உயர்ந்த அந்தஸ்த்திற்கு காரணம் தமிழ் நாடு என்பதே நிச்சயமான உண்மை என்பதால் ஏதாவது செய்யவேண்டும் என்பது என் பொதுவான கருத்து. அது ஏனைய நடிகர்களுக்கும் பாடமாகவும் பாதையாகவும் அமையும்... நடிப்பில் கூட பெரிதாக சாதிக்கா விட்டாலும் ஒரு சராசரி தமிழனை எப்படி ஜெயிக்கலாம் என்ற வித்தையை கற்றுள்ளார். தமிழ் நாட்டில் திறமையான நடிகனுக்கு தமிழனுக்கு உரிய இடம் கிடைத்ததாக தெரியவில்லை அந்த நிலை இனியும் தொடரும் என்பதே யதார்த்த உண்மை.
Siva Somasuntharam
ரஜினிகாந்த், தான் ஒர் நடிகன் என்பதை தவிர தனது ரசிகர்களின் கடவுளாகவும் ஏன் ஒட்டுமொத்த தமிழ்னின் இரட்சகராகவும் இருப்பது போன்ற மாயையை தனது திரைப்படங்களில் வரும் காட்சிகளிலும்,பாடல் வரிகளாலும் காண்பித்தவண்ணம் தனது சொந்த நலனை முன்னிருத்தி காரியங்களை கச்சிதமாக நகர்த்துவது தெளிவு. முல்லைபெரியாறு விவகாரத்தில் தமிழ் திரைபடத்துறையினரின் பொராட்டத்துக்கு ஆதரவு தெரிவைக்காது தான் தனியெ உண்ணாவிரதம் இருந்ததும் தனது நலனை முன்னிறுத்தியே.இவரை போன்றே கர்னாடகாவில் இருந்துவந்த இன்னொருவரும் இவரது பாணியை அடியொற்றி தமிழ் சமூகத்தின் உழைப்பை சுரன்டுவதை மாத்திரம் குறிக்கோளாக கொன்டுள்ளார்.
balaaji
tamilnadu than enaku theyvam endru solkirar thukkvita tamilnatu makkaluku oru velay vaipay seylam
Gnana sekaran
ரஜினியின் பெயரில் காந்தம் இருப்பது உண்மைதான் ஆனால் அவரை ஒரு நடிகர் என்ற பார்வையில் மட்டும் தான் நாம் பார்க்கணும் அதை விட்டுவிட்டு அவரை தமிழ் நாட்டிற்க்கு நல்லது செய்ய வந்த ஒரு மஹான் என்ற விதத்தில் பார்ப்பது உங்கள் தவறு தான்.........
Gnana sekaran
ரஜினிகாந்த், தான் ஒர் நடிகன் என்பதை தவிர தனது ரசிகர்களின் கடவுளாகவும் ஏன் ஒட்டுமொத்த தமிழ்னின் இரட்சகராகவும் இருப்பது போன்ற மாயையை தனது திரைப்படங்களில் வரும் காட்சிகளிலும்,பாடல் வரிகளாலும் காண்பித்தவண்ணம் தனது சொந்த நலனை முன்னிருத்தி காரியங்களை கச்சிதமாக நகர்த்துவது தெளிவு. முல்லைபெரியாறு விவகாரத்தில் தமிழ் திரைபடத்துறையினரின் பொராட்டத்துக்கு ஆதரவு தெரிவைக்காது தான் தனியெ உண்ணாவிரதம் இருந்ததும் தனது நலனை முன்னிறுத்தியே.இவரை போன்றே கர்னாடகாவில் இருந்துவந்த இன்னொருவரும் இவரது பாணியை அடியொற்றி தமிழ் சமூகத்தின் உழைப்பை சுரன்டுவதை மாத்திரம் குறிக்கோளாக கொன்டுள்ளார்.
[email protected]
எல்லோராலும் எம்.ஜி.ர் ஆக முடியாது...
jegadheeswaran
ரஜினி ஒனும் தன்னை கடவுல்னு சொல்லல நாமதான் சொன்னொம் இபொ அவர தப்பு சொன்னா எப்படி நாம நம்ம நாட்டுகு என்ன பன்னோம் ரஜினி ரஜினிதான் நாம நாமதான் rajini is a one of the wonderfulman
c.venkatasubramanian
Actor Rajini has done nothing to Tamil nadu where he earned a lot.
His investments r in Karnataka.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.