இடம்: அஹமதாபாத்தின் பாபு நகரிலுள்ள ஒரு வீடு. அந்த வீட்டில் தனியாக ஒன்பது வயது சிறுமி ராணி அழுது கொண்டிருக்கிறாள். ராணியை தனியே விட்டு விட்டு அவளுடைய தாயார் ஜானகி பட்டேல் வீட்டிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டிருந்தார். அவளுடைய தந்தையுமான அமர் பட்டேலும் உடன் சென்றிருந்தார். மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாததற்காக சிகிச்சை பெற வேண்டும் எனில் எதற்காக தமது ஒரே குழந்தையான ராணியை தனியே விட்டுச் செல்ல வேண்டும்? உண்மையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பெற செல்லவில்லை. அவர்களுக்கு புற்றுநோய்க்கான மருந்து கொடுத்து அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைக்கூட பரிசோதனைகளை மேற்கொள்ளவே அங்கு சென்றிருந்திருந்தனர். இதில் ஒரு முக்கிய விசயம் என்னவென்றால் அவர்களுக்கு புற்றுநோயும் இல்லை; அவர்கள் சென்ற இடம் மருத்துவமனையும் இல்லை. அது ஒப்பந்த அடிப்ப‌டையிலான மருத்துவ ஆராய்ச்சி பரிசோதனைக்கூடம்.

ஒரு பன்னாட்டுக் கம் பெனி புதியதாக தயாரித்துள்ள புற்றுநோய்க்கான மருந்தை பரிசோதித்துப் பார்க்கவே அவர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒரு பரிசோதனைக்கு 5000 ரூபாயிலிருந்து 6000 ரூபாய் வரை கிடைக்கும். அந்த பணத்தை வைத்து ராணியின் பள்ளிக்கூட கட்டணத்தை செலுத்தவும் அந்த மாதம் முழுவதற்குமான இரு வேளை உணவிற்கும் அது போதுமானதாக இருந்தது. இரு ஆண்டுகளில் ஜானகிக்கு நெஞ்சு வலியும் அதனைத் தொடர்ந்து இருதயத்தில் பிரச்சினைகளும் கருப்பை கோளாறுகளும் ஏற்பட்டன. இது வரை மூன்று பரிசோதனைகளை மேற்கொண்ட அவளுடைய கணவர் அமருக்கு முழுமையான நினைவிழப்புகளும் ஏற்பட்டன. இப்போது அவர்கள் இந்தப் பரிசோதனை மூலம் சம்பாதித்த பணத்தை பரிசோதனையினால் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்கான சிகிச்சைகளுக்காக செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.

             இடம்: மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர். அங்குள்ள சூரஜ் மற்றும் ரீனர் யாதவ்வின் நான்கு வயது ஒரே குழந்தையான தீபக்கிற்கு வயிற்று வலிக்கான கடந்த 2009ல் அருகிலுள்ள சாச்சா நேரு பால் சிக்கித்சாலையா என்ற அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அதற்கு பின்னர் தீபக்கின் வளர்ச்சி குன்றத் தொடங்கியது. இது குறித்து அரசு மருத்துவர்களிடம் கேட்டடபோது தீபக்கிற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. தீபக்கை மருத்துவரிடம் அழைத்து வந்து காட்டுவதற்கு அவருடைய தந்தை சூரஜ்ஜிற்கு மாதத்திற்கான போக்குவரத்து செலவாக ரூபாய் 250 அளிக்கப்படும் என்றனர். இதனால் சந்தேகமடைந்த சூரஜ் ஒரு பத்திரிக்கையாளரின் துணையோடு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த பத்திரிக்கையாளர் தீபக்கின் நோய் குறித்து மருத்துவமனை ஆவணங்களைப் பார்த்தபோது அரசு மருத்துவமனையின் குட்டு வெளிப்பட்டது. இந்த ஆவணங்களின்படி தீபக்கிற்கு வயிற்றுப் புண் மருந்தாக ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனியின் ரெபிபிரேசல் என்ற மருந்து கொடுக்கப்பட்டு அவனுக்கு வரும் பாதிப்புகள் குறித்து மருத்துவக்கூட பரிசோதனை நடத்தப்படுவது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து கோபத்துடன் மருத்துவர்களைக் கேட்டபோது தீபக்கின் பெற்றோர்களுக்கு முறைப்படி பல ஆவணங்களை கொடுத்து விட்டோம்; அவர்கள் அவற்றை தொலைத்திருக்கலாம் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.

 மேலே கண்ட இரு நிகழ்வுகளும் மத்தியப் பிரதேசத்திலும் குஜராத்திலும் (அஹமதாபாத்திலும்) மட்டும் நடந்து வருபவை அல்ல. நாடெங்கிலும் பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நடந்து வருபவை. நாட்டின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் டாக்டர் சுரேந்தர் சிங் இது போன்ற மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள 9 பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு எழுதிய கடிதம் மட்டும் வெளியிடப்படாவிட்டால், இந்த விசயம் வெளியே வந்திருக்காது. அவர் அப்படி என்ன கடிதத்தில் எழுதியிருந்தார்? கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களை பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில் 670 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் இழப்பீட்டு தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதே போல் மருந்துகளுக்காக‌ நடந்த இன்னொரு பரிசோதனையில் மரணமடைந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டிருக்கிறது. சுரேந்தர் சிங் எப்போது மற்றவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவீர்கள் என்று கடிதத்தில் கேட்டிருந்தார்.

ஆங்கில மருந்துகளை பரிசோதனைக்கூடங்களில் எலிகள், பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகளுக்கு அளித்து அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்து ஆராய்ச்சிகள் நடத்துவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உலகளவில் தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தில் அடிமைகளிடம் நச்சு மருந்துகள் கொடுத்து பரிசோதிக்கப்பட்டன. அதற்குப் பின்னர் முதலாளிய வளர்ச்சியுடன் ஆங்கில மருத்துவம் உருவானது. இதனைத் தொடர்ந்து ஆங்கில மருத்துவத்துவத்தின் பிரிக்க முடியாத அம்சமாக வேதியல் கலவைகளைக் கொண்ட மருந்து தொழிற்சாலைகள் உருவாகத் தொடங்கின. இந்த மருந்துகள் மனித உடலில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிய முதலில் விலங்குகளைப் பயன்படுத்தினர். அதிலும் காலனியாதிக்க நாடுகள் தம் சொந்த மக்களை பயன்படுத்தாமல் விலங்குகளை பயன்ப‌டுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்நாடுகள் பிடித்து வைத்திருந்த காலனிய அடிமை நாடுகளின் அப்பாவி மக்கள் மீது இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. ஆப்பிரிக்க நாடுகள் ஆசிய நாடுகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக இட்லர் ஜெர்மனியில் இச்சோதனைகளை நடத்த பெரும் விஞ்ஞானிகள் கொண்ட பட்டாளத்தையே வைத்திருந்தான். மருந்துகள் மற்றும் மரபீணி மாற்றம் மூலமாகவும் குறிப்பிட்ட (ஆரிய இனத்தை) இனத்தை உருவாக்க யூஜினிக் என்ற இயக்கமாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட மற்ற காலனியாதிக்க நாடுகளில் விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் அவை கொடூரமாக துன்புறுத்தப்பட்டன. உலகம் முழுவதும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளினால் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இச்சோதனைகளுக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பினால் மனிதர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் ஐ.நா. சபையின் சட்டங்களினால் கடுங்குற்றமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்டன.

விலங்குகள் மீது நடத்தப்படும் சோதனைகளுக்கு பல அனுமதி முறைகள் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டன. புளு கிராஸ் அமைப்பின் கண்காணிப்பினால் விலங்குகள் மீது நடத்தப்படும் சோதனைகள் மிகவும் குறைவாகவும் இரகசியமாகவும் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆயினும், பல்வேறு வேதியல் கலவைகளைப் பயன்படுத்தி இராசயன ஆயுதங்கள் மட்டும் தயாரிக்கப்படவில்லை; பல நாடுகளில் உயிரியல் யுத்தம் நடத்த மனித உடலில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயகரமான மருந்துகள் தொடர்ந்து தயாரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. அதிலும் நெமிசுலைட், மெட்டாசின், புரூபேன் போன்ற ஆயிரக்கணக்கான எத்தனையோ தடை செய்யப்பட்ட, தடை செய்யப்படவேண்டிய ஆங்கில மருந்துகள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எளிமையான முறையில் கிடைத்து வருகின்றன. இதற்கான மருத்துவ பரிசோதனைக்கூட ஆய்வுகள் வளரும் நாடுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஏன் இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டும் மனிதர்களின் மீது இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன? காரணம் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மக்களின் உயிர்கள் மிகவும் மலிவாக இருப்பதுதான்.

இந்த பரிசோதனைகள் எந்த நோக்கத்துடன் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைக் காண்போம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக அடிமை காலனியாக வைத்திருந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் பல தலைமுறைகளுக்கு தொடருகின்றன. அவற்றுள் முக்கியமானது நாட்டின் பாரம்பரிய அறிவுடன் கூடிய தனிச்சிறப்பாக விளங்கிய மருத்துவமுறைகளான சித்த வைத்தியம், ஆரிய வைத்தியம், அக்கு பஞ்சர், யுனானி சிகிச்சை முறை போன்றவற்றை அடியோடு அழித்து ஆங்கில வைத்திய முறைதான் மிகவும் உயர்ந்தது என்று நிறுவியது ஆகும். ஆங்கிலம் தெரிந்தவர்தான், சரளமாக பேசுபவர்தான் அறிவாளி என்ற முட்டாள்த்தனமான ஆங்கில மோகம் இன்று இல்லாத இடமே இல்லை. இந்த மோகம் ஒரு தொற்று நோய் போன்று மேட்டுக்குடி மட்டுமின்றி அடித்தட்டு மக்களிடமும் நீக்கமின்றி எங்கும் விரவிக் கிடக்கின்றது. இதன் பின்னணியில்தான் ஆங்கில வைத்தியமான அலோபதி முறையையும் பார்க்க வேண்டும்.

இந்திய நாட்டிலுள்ள பன்மொழி பேசும் பல்வேறு தேசிய இனங்களின் பூர்வீகத்துடன் சற்றும் சம்பந்தமில்லாத, தாய் மண்ணுடன் பண்பாட்டுடன் எந்த தொடர்புமில்லாத ஆங்கில மருத்துவமுறையை காலனிய ஆதிக்கவாதிகள் 'அதுதான் அறிவியல் அடிப்படையில் ஆனது' என்றும், மண்ணோடும் மக்களின் பண்பாட்டுடன் தொப்புள் கொடியாக தொடர்புகொண்ட மற்ற மருத்துவ முறைகள் அறிவியல் அடிப்படை அற்றவை, உலக முன்னேற்றத்துடன் தொடர்பற்றவை பின்தங்கியவை என்றெல்லாம் திட்டமிட்டு பிரச்சாரம் செய்து நிறுவினர். உலகளாவிய முதலாளித்துவம் ஆங்கில மருத்துவமுறையை திட்டமிட்டு இலாபம் கொழிக்கும் மிகப்பிரம்மாண்டமான தொழிலாக பல நூறு பன்னாட்டுக் கம்பெனிகளாக வளர்த்தெடுத்தது. ஆங்கில மருத்துவமுறை + ஆங்கில மருத்துவ பரிசோதனைகள் + ஆங்கில மருந்துக்கம்பெனிகள் என்ற புனித முக்கூட்டு இன்று கற்பனைக்கெட்டாத அளவில் வளர்ந்து மக்களின் உயிர் வாழ்வையே தீர்மானிப்பதாகி விட்டது. அதிகமான கட்டணம், தரகுப்பணம் மற்றும் அதிகமான பக்க விளைவுகள் என்ற அடிப்படையில்தான் இந்த புனித முக்கூட்டு நீடிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கென எந்த அறம் சார்ந்த நெறிகளோ மக்களின் ஆரோக்கிய வாழ்வின் மீது அக்கறையோ எதுவும் கிடையாது அல்லது இங்கு அனைத்து ஆங்கில மருத்துவர்களையும் குற்றம் சாட்டவில்லை.. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மனசாட்சியுடைய நேர்மையான மருத்துவர்கள் இருக்கலாம். ஆனால் இங்கு ஒரு சில தனிநபர்கள் பிரச்சினையல்ல. இந்த தனிநபர்களால் எந்த மாற்றங்களும் வந்துவிடாது. ஏனெனில் இவர்கள் சார்ந்த மருத்துவமுறை அடிப்படையிலே தவறானது. வளரும் நாடுகளின் தொன்மையான பாரம்பரிய மருத்துவ அறிவை அழித்து உருவானது. இது அடிப்படையிலேயே மக்களிடமிருந்து அந்நியப்பட்டு மேட்டுக்குடிமயமானது; இலாப நோக்கத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது; ஊழல் வயப்பட்டது. இங்கு சாதாரண சிராய்ப்புக் காய்ச்சல் வந்து விட்டால் போதும்; ஸ்கேன், எக்ஸ்ரே என குறைந்தது நான்கு பரிசோதனை முறையிலிருந்து ஆரம்பித்து ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசோதனை முறைகள் மேற்கொள்வது சாதாரணமாகி விட்டது. பக்கவிளைவுகள் குறைவாக இருக்கலாம்; அதன் பாதிப்பு உடனடியாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் எந்த ஆங்கில மருந்தும் பக்க விளைவுகளின்றி இல்லை. இதைத் தெரிந்தும் நன்கு படித்தவர்கள் கூட இம் மருத்துவ முறையை ஏற்றுக்கொண்டு விளைவுகளை அனுபவிக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.

இப்புனித முக்கூட்டின் ஒரு பகுதியான ஆங்கில மருந்து கம்பெனிகள் இன்று வளரும் நாடுகளின் மக்களின் உயிர்களை, பன்றிகள், எலிகளை விட கீழாகவே மதித்து இச்சோதனைகளை மேற்கொள்கின்றன. மருத்துவப் பரிசோதனைகள் நான்கு கட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல்கட்டம் 8லிருந்து 10 வரை எண்ணிக்கையிலான ஆரோக்கியமான தன்னார்வத் தொண்டர்கள் மீது இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் ஒரு புதிய மருந்து பாதுகாப்பு அதனை மனித உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது பரிசோதிக்கப்படுகிறது.

இரண்டாவது கட்டம் 100லிருந்து 200 வரையிலான நோயாளிகள் மீது நடத்தப்படுகிறது. இது மருந்தின் திறனையையும் அதன் பக்க விளைவுகளையும் கண்டறிய நடத்தப்படுகிறது. இதன் மூலம் மூன்றாவது கட்டத்திற்கான பரிசோதனைக்கு எவ்வளவு மருந்து அளிக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

மூன்றாவது கட்டம் 1000லிருந்து 3000 வரையிலான நோயாளிகள் மீது நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனையில் புதிய மருந்தின் மருத்துவப் பயன்பாடு உறுதி செய்யப்படுகிறது. நோயின் பல கட்டங்களில் வேறு சில மருந்துகளுடன் சேர்த்து இது நடத்தப்படுகிறது.

நான்காவது கட்டம் குறைந்த பட்சம் 3 ஆண்டுகளுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதன் பின்னர், நடுவண் அரசின் மருந்து கட்டுப்பாட்டாளரால் மருந்தானது அங்கீகரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருந்து சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறது. மருந்தை பயன்படுத்துபவர்களிடமிருந்து மருந்தின் திறன் குறித்து கருத்து பெறப்பட்டு மருந்தானது மதிப்பிடப்படுகிறது.

இந்த சோதனைகளில் பல இலட்சம் கோடி ரூபாய் செலவழிடப்படுகிறது. உலக அளவில் இப்பரிசோதனையில் ஈடுபடும் பன்னாட்டு மருந்து நிறுவனங்க‌ள் 156870 இலட்சம் கோடியை செலவிடுகின்றன. கடந்த 2008ல் இந்தியாவில் மட்டும் 1345 கோடி ரூபாய்க்கு மருந்து பரிசோதனைகள் நடைபெற்றன. இந்த பரிசோதனைகள் வரும் 2012ல் 8951 கோடி ரூபாயை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் உலகில் நடைபெறும் மொத்த மருந்து பரிசோதனைகளில் 5 விழுக்காடு இந்தியாவில் நடைபெறும் என குரகான் என்ற பகுதியைச் சேர்ந்த மருந்து பரிசோதனை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மருந்து சந்தைக்கு வருவதற்குள் ஆய்வுக்கான செலவில் 70 விழுக்காடு இப்படிப்பட்ட மருந்து பரிசோதனைகளில் செலவிடப்படுகிறது. இதில் மூன்றாவது கட்ட பரிசோதனையானது 1000த்திலிருந்து 3000 நோயாளிகள் மீது நடத்தப்படுகிறது என்பதை முன்னரே கண்டோம். இதில்தான் மிக அதிகமாக‌ செலவாகிறது.

கடந்த 2008ல் மருந்து கம்பெனிகள் மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக 69,022 கோடி ரூபாய் செலவழித்துள்ளன. இதனால் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் மூன்றாம் கட்ட மருந்து பரிசோதனைகளை மிகக்குறைந்த செலவாகும் நாடுகளான லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பியா, இந்தியா, சீனம் மற்றும் ரசியா ஆகிய நாடுகளில் நடத்துகின்றன. ஐரோப்பிய யூனியனிலும், அமெரிக்காவிலும் மருந்துகளுக்கான அனுமதி மனுக்களில் 50 விழுக்காடு மருத்துவ பரிசோதனைகள் இந்நாடுகளில்தான் நடத்தப்படுகின்றன. செலவு குறைவு மட்டுமின்றி மேற்கு ஐரோப்பியா மற்றும் வடக்கு அமெரிக்காவிடன் ஒப்பிடும்போது இந்நாடுகளில் இந்த பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த சட்டங்களும் கிடையாது. இந்நாடுகளிலுள்ள மோசமான சுகாதார அமைப்பு முறை மற்றும் பலவீனமான ஏழை மக்கள் என்பதே இங்கு பரிசோதனைகள் நடத்தப்படுவதற்கு காரணம். சுருக்கமாகச் சொன்னால் ஏழை மக்களின் உயிருக்கு நாதி இல்லை; அவர்களின் உயிரோடு விளையாடும் மருந்து கம்பெனிகளை தட்டிக்கேட்கக்கூட எந்த அரசிற்கும் திராணி இல்லை. இந்த அரசுகளும் மக்களின் உயிரை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதுதான்.

இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னவெனில் இந்த பரிசோதனைகளை முறையான சட்டப்படி பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் நடத்துவதில்லை. இதற்கென ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சி நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன. இதனால் இந்த வியாபார வாய்ப்பபை பயன்படுத்திக்கொண்டு ஒப்பந்த நிறுவனங்கள் காளான்போல் பெருகி விட்டன. இவ்வொப்பந்த நிறுவனங்களில் முதன்மை பரிசோதகராக மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் ஒருநோயாளி மீது பரிசோதனை நடத்துவதற்கு 25000 ரூபாயிலிருந்து 30000 ரூபாய் வரை பெறுகிறார். புற்றுநோய் போன்று நீண்டகால நோயாகவும் கடுமையாகவும் சிக்கலானதாகவும் இருந்தால் 80000 ரூபாயிலிருந்து 90000 ரூபாய் வரை பெறுகிறார். இந்த பரிசோதகர் என்றழைக்கப்படும் மருத்துவர்தான் இந்த மருந்துக்கான பரிசோதனையில் மருந்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதற்கும் பரிசோதனை நடத்தப்படவிருக்கும் நோயாளிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் பொறுப்பாவதால் அவருக்கு மருத்துவ பரிசோதனையில் செலவழிக்கப்படும் மொத்த தொகையில் 50 விழுக்காடு அளிக்கப்படுகிறது.

 இந்தியாவில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் பரிசோதனை நடத்தப்படுவதற்கு ஆகும் செலவை விட 60 விழுக்காடு குறைவாகும். இது மட்டுமின்றி நாட்டில் நீண்டகால நாள்பட்ட வியாதிகள் கொண்ட நோயாளிகள் அதிகம் என்பதால் இங்கு பரிசோதனை நடத்தும்போது பரிசோதனையின் முடிவுகள் மிகச்சரியாக இருக்கின்றன. இந்த காரணங்களினால் இந்நாடுகள் இந்தியாவை பரிசோதனை நடத்த போட்டி போட்டுக் கொண்டு தேர்ந்தெடுக்கின்றன. கடந்த 1995லிருந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பெரிய மருந்து கம்பெனிகளான எலி லில்லி பிபிஷர்சனோபி-அவென்டிஸ், பேயர், நோவர்ட்டிஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் கிளாக்சோஸ்மித்-கிளைன் மற்றும் மெர்க் ஆகியவை இந்தியாவில் பரிசோதனை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த 2005ல் 423 கோடி ரூபாயில் நடைபெற்ற இந்த பரிசோதனைகள் 2010ல் 1611 கோடி ரூபாய் வரை வளர்ந்துள்ளன. இது வரும் 2012ல் 2721 கோடி ரூபாயை தொடும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இந்திய அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. கடந்த 2005ல் 100 பரிசோதனைகள் இந்தியாவில் நடத்தப்பட்டன. இப்போது குறைந்தபட்சம் 1000த்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பரிசோதனைகளில் மரணம் அடைந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர். இப்பரிசோதனைகள் பெரும்பாலும் மக்களின் வறுமையையும் அறியாமையையும் பயன்படுத்தியே நடத்தப்படுகின்றன. இந்த பரிசோதனகள் மூலம் கிடைக்கும் பணம் அவர்களுக்கு இரண்டு வேளை உணவுக்குக் கூட போதுமானதாக இல்லை. அப்படியிருக்கும்போது இந்த மருந்துகளினால் ஏற்படும் கடுமையான பக்க விளைவுகளுக்கும் அவர்களினால் எப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்?

அப்படியே இது குறித்து கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட பரிசோதனையில் ஈடுபடும் மருத்துவர்கள் குறிப்பிட்ட மருந்தினால்தான் நோயாளிக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட்டன என்று அவர்களே நிரூபிக்க வேண்டும் என்று திமிராக மிரட்டி அனுப்பி விடுகின்றனர். ஆந்திராவில் கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்து பரிசோதனையில் ஒரு கட்டமாக 14 ஆயிரம் சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர்களுக்கோ அவர்களின் பெற்றோர்களுக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதே தெரியாது. இந்த குழந்தைகளில் 6 பேர் உயிரிழந்த பின்னரே வெளி உலகிற்கு இப்படிப்பட்ட பரிசோதனைகள் நடப்பது தெரிய வந்தது. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் கடந்த ஆண்டு 49 குழந்தைகள் மரணமடைந்தனர். சோதனைக்குள்ளாக்கப்பட்ட 4142 குழந்தைகளில் 2728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்.

நாட்டு மக்களை பரிசோதனைக்கூட எலிகள் பன்றிகளை விடவும் கேவலமாக பாவித்து அவர்களின் உயிர்களோடு விளையாடும் இப்பன்னாட்டு மருந்து நிறுவனங்களை இன்னும் விட்டு வைக்கலாமா?

- சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It