கீற்றில் தேட...

மனிதன் விசித்திரமானவன். அவனது விசித்திரமே  கூட்டத்துக்கும் தனிமைக்குமான காரணமாகிவிடுகிறது. பொதுமையற்ற சமிஞைகளை வெளிப்படுத்துகிற மனிதன் மகத்தானவன் என்று கருதச்செய்யும் எத்தனங்களில் ஈடுபடுவதும் அதில் வென்று தோற்பதுவும் கூட நிகழ்ந்து நகர்கிற நிகழ்வே. செயல்பாடுகளை உற்றுநோக்குகையில் சாதாரணங்களோடு ஒளிந்து கொண்டு சிற்சில சமயங்களில் அபூர்வமும் கலந்து நிற்கும். எந்தவகையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் கிஞ்சித்தும் காணப்படாத, தான் தோன்றி வாழ்க்கையை மேற்கொண்டு திரிகிற நாடோடி ஒருவன் பற்றி வேறென்ன செய்தி இருக்க முடியும், பகிர்ந்து கொள்வதற்கு...?

vargeese_300போளி வர்கீஸ்... 41.. பிறப்பால் கேரளத்தை சேர்ந்தவர் என்று இக்கட்டுரையை ஆரம்பிப்பதற்குள்ளாகவே சின்னதொரு சிரிப்பை படரவிடுகிறார் வர்கீஸ்... நான் உலகத்தின் மனிதன். உலகம் என் ஊர். என்னையும் உங்களையும்  பிரிக்கிற எந்த வாக்கியமும் அர்த்தமற்றவை என்கிறார். தனது எட்டாவது வயதில் இருந்து சங்கீதத்துக்குள் சுழல்கிற தக்கையாக அன்றி சங்கீதத்துக்குள் தன்னை ஒப்புவித்துக்கொண்ட மகா கலைஞன் போளி வர்கீஸ் என்று சொல்வது பொருத்தமானதே.

ஒரு நாடோடியாய் தன் வாழ்வியலை தானே வெளியில் நின்று கவனித்தபடி எப்போதும் எங்கேயும் பயணித்துக்கொண்டே இருந்த வர்கீஸ் அனுபவங்களுக்காக பயணங்களை மேற்கொள்கிற பிரயாணிகளிடத்தில் இருந்து அனேக விஷயங்களில் மாறுபடுகிறார். சாலை மார்க்கமாகப் பயணிக்கிற எந்த ஒரு நிலத்திலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களை தன் இசையால் ஒன்றுபடுத்தியதை மட்டுமே தான் செய்த செயலாய் கூச்சத்தோடு பகிர்கிற வர்கீஸ், ஒடுக்கப்பட்டவர்களுக்காக தன் வாழ்க்கை காலமெங்கும் தன் உணர்வை குரலை அழுத்தம் திருத்தமாக பதிந்துகொண்டே இருப்பதை தன் ஆதார கடமையாகவே கொண்டிருக்கிறார். "இந்த உலகில் வசிக்கக் கூடிய ஒவ்வொரு மனிதனுடைய வலியும் வேதனையும் என்னுடைய வலியும் வேதனையும் தான்" என்று உறுதியோடு கூறுகிற வர்கீஸ், "இது தன் கடமையும் கூட" என்கிறார்.

கர்னாடிக் ம்யூசிக் எனப்படுகிற கர்நாடக சங்கீதம் முறையாய்க் கற்றுத் தேர்ந்த வர்கீஸ் அதிலிருந்து கடந்து நகர்ந்து ஹிந்துஸ்தானி இசையிலும் பண்டிதம் பெற்று தற்போது இந்துஸ்தானி இசைக்கலைஞராக விளங்குகிறார். ஒரு நபர் மட்டுமே பங்கேற்கிற வீதி நாடகங்கள் பலவற்றில் பங்கேற்று உள்ள வர்கீஸ் நாடகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பாதல் சர்க்காரின் குழுவில் பங்கேற்று நடித்திருக்கிற வர்கீஸ் தன்னை பற்றி சொல்கையில் இப்படி ஆரம்பிக்கிறார்.. "எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. எனக்குள் இருக்கிற கடவுளைத் தேடுவதோ கண்டடைவதோ என் நோக்கமல்ல. மாறாய் நான் மக்களின் குழந்தை. எனக்கு முன் கூடுகிற மக்கள் என் நடிப்பை, என் இசையை நிரப்புகின்றனர். அவர்களுக்காக நான் இயங்குவதும் அவர்கள் எனக்குக் கொடுத்த ஆதரவுமே என்னை செலுத்திக்கொண்டிருக்கிறவை"

வர்கீசின் தந்தை மலையாள மனோரமா பத்திரிக்கையில் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணிபுரிந்தவரும், கேரள அரசியல் நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவருமான வர்கீஸ் மேச்சேரி. ஆனால் சிறுவயதிலேயே தனக்கும் தன் குடும்ப மொத்தத்துக்குமான உறவிழைகளை மொத்தமாய் அறுத்தெறிந்து விட்டதாகக் கூறும் போளிவர்கீஸ் தன்னால் ஒருபோதும் குடும்பம் சொந்தபந்தம் என்று குறுகி வாழவே முடியாது என்கிறார். அவரது வார்த்தைகளின் படி அவரொரு மகா குடும்பன்.

இந்தியா முழுமையுமாய் கிட்டத்தட்ட சுற்றி வந்திருக்கிற வர்கீஸ் காஷ்மீர், வங்காளம், மேகாலயா, நாகலாந்து, குஜராத், சட்டீஸ்கர், ஆந்திரா, மிசோரம் என அனேக பகுதிகளில் சுற்றிவந்தவர். சாலை மார்க்கமாய் ஐந்து முதல் பதினைந்து கிலோமீட்டர்கள் பயணித்து அங்கே தன் இசையை தன் ஓரங்க நாடகத்தை நிகழ்த்தி அந்த நிலத்தின் மக்களோடு உறவாடி அதன் பின் தன் பயணத்தை மேற்செலுத்துகிற நில மாலுமியாகவே வாழ்ந்திருக்கும் போளி வர்கீஸ் அமைப்பின் மீதான  கடுங்கோபத்தை கொண்டவராக இருக்கிறார்.

அரசபயங்கரவாதம், தனி மனிதர் மீதான அதிகார வன்முறை, பெரும்பான்மை மதமான இந்துமத அடிப்படைவாதிகள் வடக்கே முயல்கிற ஏக இந்துத்துவக்கொள்கைக்கு எதிரான உறுதியான தன் நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்துவரும் வர்கீஸ் ஒருபோதும் திராவிட நிலமான தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மத அடிப்படைவாதிகள் தங்கள் வாலாட்டத்தை நிகழ்த்திவிடமுடியாது என்று குதூகலிக்கிறார்.

உருது, ஆங்கிலம், இந்தி, மராத்தி, ஒரியா, கன்னடம், வங்காளம், நேபாளி மற்றும் சந்தாலி எனப்படுகிற பழங்குடியின மொழி வரை 9 மொழிகளில் சரளம் கொண்ட வர்கீஸ் பத்தாவதாகத் தற்போது தமிழிலும் ஓரளவுக்கு சரளமாய்ப் பேசுகிறார். தமிழில் நாடகத்துறை சார்ந்து இயங்குகிற நடிகரும் நாடக இயக்கங்களில் முக்கியஸ்தருமான நடிகர் நாசர், நடிகர் ச‌ண்முகராஜா ஆகியோருடன் தாம் கொண்ட நட்பை சிலாகிக்கிற வர்கீஸ் கூத்துப்பட்டறை முத்துச்சாமி எழுதிய அப்பாவும் பிள்ளையும் எனும் நாடகத்தில் வர்கீஸ் நடித்ததை பலரும் பாராட்டியதை குழந்தையாய் கொண்டாடி மகிழ்கிறார்.

நானா படேகருடன் பங்குகொண்டு தாம் நடித்த நாடக தினங்கள் மகத்தானவை என்று பகிரும் வர்கீஸ், அபர்ணா சென் இயக்கத்தில் வெளியான 'பர்மிதா ஏக் அ தின்' எனும் வங்கமொழிப்படத்தில் நாயகனாக பரிமளித்ததை இன்னுமொரு முக்கிய நிகழ்வாக சொல்லமுடியும்.

vargeese_350வங்காளம், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் பல கவிதைகளை எழுதியிருக்கிற போளி வர்கீஸ், தன்னுடைய நாடோடி வாழ்க்கையில் தற்காலிகமாய் விளம்பர இடைவேளை ஒன்றை ஏற்படுத்தினாற்போல் சென்னையில் தமிழ்ப்பெண்ணான சபீனாவை திருமணம் செய்து கொண்டு மித்ரா என்னும் ஒரு வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

தமிழில் வெளியான ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிற போளி வர்கீஸ் நடிக்கிறதை தனக்குப் பிரியமான பிடித்தமாய்க் குறிப்பிடுகிறார் என்று சொல்லுகையில், 41 வயதான ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒரு குறிப்பாக படிக்க நேர்கையில் எழுகிற சின்னச்சின்ன சுவாரஸ்யங்களைத் தாண்டி போளி வர்கீஸ் என்னும் மனிதனைப் பற்றி சொல்ல இன்னும் ஏதாவது ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா...?

போளி வர்கீஸ்... உலகத்தில் இருக்கிற கோடானுகோடி மனிதர்களில் MOHAN-VEENA மோஹன வீணை என்னும் இசைக்கருவியை வாசிக்கத் தெரிந்த நான்கே நான்கு பேர்களில் ஒருவர். தன்னைப் பற்றிப் பேசத் தெரியாத குழந்தையை ஒத்த மனிதர். அவரொரு மேதை. அறியப்பட வேண்டிய ஆளுமை போளி வர்கீஸ்.