ஆங்கிலத்தில்: பி.சாய்நாத்
தமிழில்: வெண்மணி அரிநரன்

ஏர் இந்தியா நாம் விரும்பும் அளவுக்கு நல்ல முறையில் செயல்படாமல் இருக்கலாம். ஆனால் அதை பெரும் நட்டத்தில் அச்சமின்றி நடத்திவரும் துணிச்சல்காரர்களுக்கு அது நன்றாகவே நடந்து வருகிறது. பிரபுல் படேல் (இப்போது வான்வெளிப் போக்குவரத்துத் துறை அவரிடம் இல்லை) 2009 மே மாதத்திற்கும் 2011 ஆகஸ்டுக்கும் இடையில் தனது சொத்துக்களில் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய்களை 28 மாதங்களாகச் சேர்த்துவந்துள்ளார். இது குறைவான மதிப்பீடாக இருக்கலாம், ஏனென்றால் இது அவரே சொல்லியதாகும். அமைச்சர்கள் இந்த விடயங்களில் அடக்கமாக இருக்கிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தை எடுத்துக் கொண்டால், கணக்கு தப்புவதில்லை.

பிரபுல் படேல் தனது 2009 ஆம் ஆண்டு தேர்தல் உறுதிமொழி ஆவணத்தில் தனக்கு ரூ.79 கோடி சொத்து இருந்தாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சேர்த்த சொத்துக்களைக் கணக்கில் காட்டியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. இந்த ஆண்டு இணைய தளத்தில் அவருடைய பெயரில் ரூ.122 கோடி சொத்து உள்ளதாக பிரதமரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதை முந்தைய கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் என்னுடைய கணக்குப்படி 28 மாதங்களில் அவருடைய சொத்து நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வீதம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் ஏர் இந்தியா அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அந்த விமானக் கழகத்தின் ஊழியர்கள் ஆண்டு ஒன்றுக்கு பெறுகிற ஊதியத்தில் 40 விழுக்காட்டை நாள் ஒன்றுக்கு பிரபுல் படேல் தனது சொத்துக்களில் கூடுதலாகச் சேர்த்துள்ளார். ஆக விமானக் கழகம் கீழே இறங்க இறங்க அவர் மேலே மேலே உயர்ந்துள்ளார். தொழில்துறை மற்றும் நிதி மறு கட்டமைப்பு (BIFR) கழகத்தின் முன்னாள் தலைவர் (நலிவுற்று வரும் தனியார் நிறுவனங்கள் பற்றி) கூறியதாவது:

நலிவுற்ற நிறுவனங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உடைமையாளர்கள் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே போனார்கள். இது இந்திய அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது இந்திய ஏழை மக்களின் நிலைமைக்கு நன்கு பொருந்திப் போகிறது. அவர்கள் மோசமாக மோசமாக, மத்திய அமைச்சரவை மிகவும் வளமடைகிறது. (கார்பரேட் நிறுவனங்களின் தலைவர்களை இதில் இழுத்துவிட்டால் அந்த விகிதாசாரம் இன்னும் வியக்கவைப்பதாக இருக்கிறது. ஆனால் அது இன்னொரு கதை) படேல் அவர் அளித்த சேவைகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டார். அவர் கனரகத் தொழில்துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சராக காபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கமும்(ADR) தேசியத் தேர்தல் கண்காணிப்பகமும் (NEW) முழுமையாகச் செய்துள்ள மத்திய அமைச்சரவையின் சொத்துக்கள் பற்றிய பகுப்பாய்வைப் படித்தால் வியப்பாக இருக்கிறது. அது மேல் நோக்கிய பாய்ச்சலில் செல்கிறது. ஒரு மத்திய அமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு அந்த 28 மாதங்களில் ரூ.7.3 கோடியிலிருந்து 10.6 கோடி வரை உயர்ந்துள்ளது. அந்த 28 மாதங்களில் மாதம் ஒன்றுக்கு பத்துலட்சம் சேர்ந்துள்ளது.

பிரபுல் படேல் தான் மத்திய அமைச்சர்களிலேயே இதுவரை ஆகப்பெரிய பணக்காரர். ஆனால் தி.மு.க.வின் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் துணிச்சலுக்குப் பெயர் பெற்றவராக இருக்கிறார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சரான அவர் படேலின் 53 விழுக்காட்டை விஞ்சி 1092 விழுக்காடு சொத்துக்களை கூடுதலாகச் சேர்த்துள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் பகுப்பாய்வின் படி 2009 ல் ரூ 5.9 கோடியாக இருந்த அவருடைய சொத்து மதிப்பு இந்த ஆண்டு ரூ.70 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் படேல் 122ல் இருக்கும்போதும் அவர்தான் மத்திய அமைச்சரவையில் முதலிடத்தில் இருக்கிறார். படேல் நின்று நிதானமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது தி.மு.க.காரர் விளாசித் தள்ளியிருக்கிறார்.

இதற்கிடையில், அதிரடி இளம் அணியும் மோசமாக விளையாடியுள்ளதாகக் கூறமுடியாது. தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சரான இளைஞர் மிலிந்த் தியோரா 2009க்கும் 2011க்கும் இடையில் தனது சொத்துக்களை ஏறத்தாழ இரண்டு மடங்கு ஆக்கியிருக்கிறார். ரூ.17 கோடியிலிருந்து அவர் ரூ. 33 கோடிக்கு சென்றிருக்கிறார். 2004ல் அவருடைய தேர்தல் உறுதிமொழி ஆவணத்தில் ரூ.8.8 கோடி என்று அவர் குறிப்பிட்டிருப்பதுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். ஏழு ஆண்டுகளுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்பதும் அந்தக் காலக் கட்டத்திற்குள் சொத்தை நான்கு மடங்காக ஆக்கியிருப்பதும் அப்படி ஒன்றும் மோசமில்லையே.
 
அதேநேரத்தில், தியோரா விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரை விஞ்சியுள்ளார். அவர்களுடைய அறிக்கையின்படி தியோரா பலம்வாய்ந்த அந்த மராட்டியரை விட இரண்டரை மடங்கு மிகுதியான பணக்காரர் ஆகியிருக்கிறார். அவர் 2009ல் கூட தியோராவை விடப் பணக்காரராக இருந்தார். ஆனால் தியோரா அப்போதிருந்து அவருடைய சொத்துக்களை ஏறத்தாழ 90 விழுக்காடு அதிகரித்துக் கொண்டுள்ளார். அதே
காலக்கட்டத்தில் பவார் ரூ.4 கோடி கூட அதிகரித்துக் கொள்ளவில்லை. அதன் பொருள் அவர் அதை ரூ. 12.5 கோடிக்கும் கீழாகப் பதிவு செய்துகொண்டுள்ளார் என்பதாகும். அவரது தாயக மாநிலத்தில் பவார் சாகிப்பின் அந்த அறிவிப்பு மொத்த சொத்துக்குமா அல்லது மாதவருமானத்துக்கு மட்டுமா என சிறிது குழப்பிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது என்று பேசப்படுகிறது.

இன்னொரு மிதமான சம்பாத்தியக்காரர் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆவார். அவர் 2009லிருந்து வெறும் ரூ.1.73 கோடி தான் சேர்த்துள்ளார். திரு தேஷ்முக் புவி அறிவியல் அமைச்சரும் கூட. (மராட்டிய மாநிலத்தில் இதற்கு ரியல் எஸ்டேட் நிபுணர் என்று மாற்றுப் பொருள் உண்டு.)

மற்றபடி கிரிக்கெட் அரசியல் குழுத் தலைவர் டாக்டர் மன்மோகன்சிங்கின் அணி நன்றாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்ற விவகாரங்கள் குழு அமைச்சரும் புதிய ஐ.பி.எல். தலைவருமான ராஜீவ் சுக்லா அந்த 28 மாதங்களில் அவருடைய மொத்த சொத்தில் ரூ. 22 கோடி சேர்த்துள்ளார். 2009ல் அது ரூ.7 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு ரூ. 30 கோடிக்கும் கூடுதலாக ஆகியுள்ளது.

பணியிலிருக்கும் அமைச்சர்கள் தாம் வளமை பெற்று வருகிறார்கள் என்பதில்லை அல்லது உயர்வு மத்தியிலோடு நின்று விடவும் இல்லை. எப்போதும் போல, கின்னஸ் புத்தக சாதனை எனது இரண்டு ‘தாயக மாநிலங்களிலிருந்து’ மராட்டியம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து வருகிறது (எனக்கு மூன்றாவதாக ஒரு தாயகமும் உண்டு: தமிழ்நாடு – ஜெகத்ரட்சகன் இங்கிருந்து தான் வருகிறார், எனவே சொந்த மண் பற்றிய பெருமிதத்திற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.) நாம் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருவோம். ஓய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி அதிகாரத்தில் இல்லை. இது அவரது தொழில்முனைவுப் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இல்லை. இந்த ஆண்டு ஏப்ரல் வரை 24 மாதங்களில் அவர் தனது சொத்துக்களில் ரூ.357 கோடிக்கும் மேல் சேர்த்துள்ளார். இது 2009 ஏப்ரலில் வெறும் ரூ.72 கோடிக்கும் கீழ் தான் இருந்தது. இதன் பொருள் அவர் இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளிலும் ரூ.50 லட்சம் சேர்த்துள்ளார் என்பதாகும். அனைத்து முனைகளிலும் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதைக் கருத்தில் கொள்ளும்போது இது ஒன்றும் சிறிய சாதனை அல்ல. அடுத்த தலைமுறை இயக்க ஆற்றல் குறித்து பண்டிதர்கள் பேசும்போது அதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு இப்பொழுது தெரிகிறதா?

சந்திரபாபு நாயுடு மட்டும் தான் அந்தோ ஏழையாக ஆகியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அவர் அன்னா ஹசாரே ஏற்படுத்தியுள்ள ‘சூழலைக்’ கருத்தில் கொண்டு தனது சொத்துக்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார். திரு. நாயுடுவிடம் ரூ. 40 லட்சம் மதிப்புக்குக் கூட சொத்துக்கள் இல்லை. இருந்தாலும் அவருக்கு உடனடியாகவெல்லாம் சோற்றுக்குப் பஞ்சம் வந்துவிடாது. அவரது மனைவியிடம் ரூ.40 கோடி சொத்து இருக்கிறது. இருந்தாலும் இந்த ஒப்பீட்டுச் சித்திரம் ஆந்திர அரசியலை ஒரு நுண் அளவில் காட்டுகிறது. ஜகன்மோகன் உயர்ந்து வருகிறார், நாயுடு வீழ்ந்து வருகிறார். ஆனால் விதி நாயடுவுக்கு இரக்கம் காட்டாதபோது அவரது கணக்காளர்கள் மிகவும் பெருந்தன்மையுடன் செயல்படுகிறார்கள். அவரது ஜூப்ளி ஹில் சொத்துக்கு (1125 சதுர கெஜம் அல்லது 10,000 சதுர அடிக்கும் கூடுதல்) ரூ 23.20 லட்சம் மதிப்பு காட்டப்படுகிறது. இப்போது இது ஆந்திராவிலேயே மிகவும் மதிப்புக் கூடுதலான பகுதியாகும். ஆக அங்கு 10,000 சதுர அடியில் வீடு கட்டுவது அந்தத் தொகையில் பெரும் சிக்கன நடவடிக்கை தான். ஆனால் அது ஏறத்தாழ அவரது 2009 தேர்தல் உறுதிமொழி ஆவணத்தில் ரூ.9 கோடியாக அல்லவா இருந்தது. இம்முறை நாயுடு ‘வாங்கிய விலை’யைத் தான் நமக்குக் காட்டுகிறார், அதன் சந்தை மதிப்பை அல்ல, ஏனென்றால் பின்னது ‘அவ்வப்போது மாறக் கூடியதல்லவா?’.

புத்திக்கூர்மையுள்ள கணக்காளர்கள் தேவை என்பதற்கும் அப்பால் இவையனைத்திலிருந்தும் கற்றுக் கொள்ளவேண்டிய தீவிரமான படிப்பினைகள் இருக்கின்றன. அளவுக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு அதிகரிப்பது அமைச்சர்களோடு மட்டும் நின்று விடவில்லை; பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மற்றும் முதன்மையான அரசியல் சக்திகளின் அனைத்து மட்டங்களிலும் உள்ள தலைவர்கள், குறிப்பாக, காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மாநிலங்களில் உள்ள பெரும்பாலான ஆளும் கட்சிகள் அல்லது பெரிய கட்சிகளின் தலைவர்களிடமும் உள்ளது. பாராளுமன்றத்தில், சட்டமன்றங்களிலும் கூட கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் 2004ல் 108ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2009ல்
186 ஆக உயர்ந்தது. மத்திய அமைச்சரவையில் நான்கில் மூன்று பங்கினர் கோடீசுவரர்கள் ஆவர். அவர்களுடைய புதிய சொத்துக்களில் பெரும்பகுதி பதவியில் இருக்கும் பொழுது அடைந்தவையாகும்.

பொது மக்களின் கோபம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய் தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவற்றின் விடாமுயற்சியால் இது பற்றிய தரவுகள் மேலும் வெளிப்படையாக வருகின்றன. இது மிகவும் சிறந்தது. ஆனால் அனைத்து அறிவிப்புக்களிலும் அவர்கள் வரியாக என்ன செலுத்தினார்கள் என்பது வரவேண்டும். அது மக்களிடம் எண்ணிக்கை குறித்து ஓரளவுக்கு அறிந்துணரச் செய்யும். பொதுச் சேவையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நிச்சயமாக அனைத்து வருவாய்க் கணக்குகளும் இணையம் வழித்தரப்பட வேண்டும்.

இது நமக்கு மிகவும் தேவைப்படும் பலவற்றில் ஒரு முக்கியமான சீர்திருத்தமாக இருக்கும். இன்னொன்று மோசடிக்கு தண்டம் விதிப்பதாகும். தங்களுக்குச் சொந்தமான 12 குடியிருப்புக் கட்டிடங்கள் குறித்து தகவலில் சேர்க்காத அமைச்சர்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

மத்திய அமைச்சரவையின் சொத்துக்கள் தொடங்கி நமக்கு ஒரு தீவிரமான தணிக்கை தேவைப்படுகிறது. மனிதர்கள் பதவியில் இருக்கும்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாயை எப்படித் திரட்டுகிறார்கள்? அவர்களில் பெரும்பான்மையினர் மக்களுக்குச் ‘சேவையாற்றும்’ போதுதான் தங்கள் சொத்துக்களில் மிகப்பெரும் பகுதியைச் சேர்த்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நிச்சயமாக நமக்கு இதற்கான பதில் தெரியும். வெறுமனே சொத்துக்களை அறிவித்தால் மட்டும் போதாது. அது அருவருக்கத்தக்க வகையில் மிகுதியாக இருக்குமானால் அது எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பதை நாம் அறிந்தாக வேண்டும்.

ஏப்ரல் பிற்பகுதியில், திட்டக் குழு உச்சநீதிமன்றத்தில் ஒரு உறுதிமொழி ஆவணத்தைத் தாக்கல் செய்தது. அதில் நகர்ப்புற இந்தியாவில் வறுமையைத் தீர்மானிப்பதில் தலை ஒன்றுக்கு ரூ.20 செலவழிப்பது ஒரு ஒப்பேறக்கூடிய எல்லைக் கோடாக இருக்கும் என்று வாதிட்டது. கிராமப் புற இந்தியாவுக்கு அது ரூ.15 ஆக இருந்தது. அவர்கள் ரூ.25 ஐ பெருந்தன்மையுடன் ரூ.25 க்கு உயர்த்துவதாகக் கூறுகிறார்கள். காலஞ்சென்ற டாக்டர் அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான அமைப்புசாராத் துறையில் தொழிலகங்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கையை நினைவில் கொள்வோம். அது 83.6 கோடி இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.20க்கும் குறைவான தொகையைக் கொண்டே வாழ்கிறார்கள் என்று பதிவு செய்துள்ளது. இந்த மக்கள்திரளை நமது கோடீஸ்வர மன்ற உறுப்பினர்கள் எவ்விதம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? அல்லது ஏதாவது செய்யத் தொடங்கி எப்படி விரைவாக அதைக் கைவிடுகிறார்கள்? இதை நாம் எப்படித் தடுக்கப் போகிறோம்? இதை எண்ணிப்பார்க்க வேண்டும். கோடீஸ்வரர்களைத் தவிர வேறு யாரும் தேர்தல்களில் போட்டியிட முடியாது, அவர்கள் தான் வெல்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மற்றவர்கள் போட்டியிடுவதே மிகவும் கடினம் எனும் அளவுக்கு கடந்த இருபதாண்டுகளின் தீவிரமான மாற்றங்கள் செய்துவிட்டிருகின்றன.

பி.சாய்நாத், தி இந்து, 21.09.2011.

தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It