இன்றைய அறிவியலின்படி, சைவம் சாப்பிடுபவர்களும் உயிர் வதை செய்கிறார்கள். ஆட்டை அறுத்தால்தான் அது உயிர்வதை என்று நினைக்க முடியாது. கத்தரிக்காய் செடியாக இருந்தாலும் அது உயிர்தான். அறிவியலின்படி, உயிரில்லாத எதுவும் வளராது. நம்முடைய பேனாவோ, பென்சிலோ வளர்கின்றனவா? உயிர் இருந்தால் மட்டுமே வளர இயலும். இனப்பெருக்கம் செய்வதாக இருந்தால் உயிர் வேண்டும். சமீபகால கண்டுபிடிப்புகளின் மூலம், செடி கொடிகளும் உணர்வுகள் உள்ளவை என்று தெரிகிறது. நம் கண்களுக்கு புலப்படாத வகையில் அவை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

நவீன தோட்டக் கலையில் இசைக்கருவிகள் மூலம் தாவரங்களை செழிப்பாக வளர வைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம். இசையின் மூலம் விளைச்சல் அதிகமானால் அது எதைக் காட்டுகிறது? செடி கொடிகளும் உணர்வுகள் உள்ளவை என்பதைத்தானே? தொட்டால் சிணுங்கி எனும் தாவரம் நாம் தொட்டவுடன் சுருங்குகிறது. சூரியகாந்தி எனும் மலர் சூரியனை நோக்கியே இருக்கிறது. தாவரங்கள் உயிரும், உணர்வும் உள்ளவை என்று அறிய இதை விட என்ன வேண்டும்? எனவே, உயிரைக் கொல்வது பாவம் என்ற அடிப்படையில் மட்டுமே நோக்கினால், சைவத்தையும் நாம் தவிர்த்திட வேண்டும் அல்லவா? 

தண்ணீரிலும் நுண்ணிய உயிரினங்கள் உள்ளன. தண்ணீரைக் கொதிக்க வைப்பதின் மூலம் அந்த உயிரினங்களை நாம் கொல்கிறோம். கொதிக்க வைத்த தண்ணீரும் ஒருவிதமான சூப்தான் என்பது உண்மை. தண்ணீரிலும் இலட்சக் கணக்கான உயிரினங்களை நாம் கொல்ல வேண்டி உள்ளது. அவை கத்தரிக்காய் அளவிற்கு பெரிதாக இல்லாவிட்டாலும் உயிர்கள்தானே? எனவே, யார் உயிர்வதை செய்யவில்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்!

உயிர்வதை செய்யாமல் மனிதன் வாழ இயலாது. ஒரு மனிதன் 'நான் மற்ற உயிர்களை வதை செய்ய மாட்டேன்' என்று இருந்தால் அவனும் சாக வேண்டியதுதான். அவன் மண், கல், இரும்பு போன்றவற்றை வேண்டுமானால் தின்று வாழலாம்! எனவே, நாம் எதைத் தின்றால் வாழ முடியும் என்று பார்த்தால், மற்ற உயிர்களைத்தான் உண்ண வேண்டியுள்ளது. மற்ற உயிரினங்களைத் தின்று வாழும் வகையில்தான் மனித உடல் உள்ளது.  'நான் சைவம்' என்று யாரேனும் கூறினால், பகுத்தறிவின்படி அது சுத்தமான பொய்யாகிறது.

லட்சக்கணக்கான எலிகளை நாம் பயிரைப் பாதுகாக்கக் கொல்கிறோமே? அதன் மூலம்தானே தானியங்களை விளைவிக்கிறோம்? கொசுவர்த்தியை ஏன் பயன்படுத்துகிறோம்? கொசுக்கள் செத்து விழுவதைப் பார்த்து வருந்துகிறோமா? மாடுகளைக் கொன்றுதானே நாய்கடி மருந்து தயாரிக்க முடிகிறது? மீன் சாப்பிட மாட்டேன் என்று கூறுபவன் மீன் மாத்திரை சாப்பிடுவதில்லையா? அவ்வளவு ஏன், சைவம் என்று கூறுபவர்கள் பால் குடிக்கின்றனர் அல்லவா? பால் சைவம் என்று எப்படி முடிவெடுக்கிறீர்கள்? பருத்திப் பாலை குடித்து விட்டு வேண்டுமானால் 'சைவம்' என்று கூறலாம். மாட்டுப் பால் எப்படி சைவமாகும்? எருமைப் பாலையும், பசும்பாலையும் சாப்பிடுவதன் மூலம் அந்த மாமிசத்தின் ஒரு பகுதியை உண்கிறோம் என்று ஆகிறது. இன்னும் சொல்லப் போனால், பால் சாப்பிடுவதே ஒரு அநியாயமான மிருக வதைதான். அது கன்னுக் குட்டிக்காகத்தானே சுரக்கிறது? உங்களுக்காகவா சுரக்கிறது? "நம்முடைய நன்மைதான் முக்கியமானது; மற்றவை எல்லாம்அப்புறம்தான்" என்றுதானே நாம் நியாயம் கற்பிக்க முடியும்?

இந்த அறிவியல் யுகத்தில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் 'உயிர்வதை' பற்றி பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. எல்லோரும் உயிர்களை தினம் தினம் வதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனவே, இந்த உலகில் வெஜிடேரியன் என்று எவரும் இருக்க முடியாது. அந்த காலத்தில், அறிவியல் அறிவில்லாத காலத்தில், மக்கள் சைவம் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கலாம். இப்போது அப்படி நினைத்தால் அது அறிவின்மையாகும்.

- தஞ்சை வெங்கட்ராஜ்

Comments

4 comments

4
ConcernedAnon
ஒரு ஆடு கத்திரிக்காயை சாப்பிடும் ஆனால் கோழிக்காலை சாப்பிடாது. ஒரு நரி கோழிக்காலை சாப்பிடும் ஆனால் கத்திரிக்காயை சாப்பிடாது. மனித இனம் முதலில் ஒரு தாவர உன்னி. கூடவே அது தாவரங்களில் கிடைக்கும் சிறுபூச்சிகளையும் நத்தைகளையும் சுவை பார்க்கும். சமயங்களில் இயற்கையில் இறந்த அல்லது மற்ற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளையும் சுவை பார்க்கும். இந்த இனத்திற்கு சிங்கம் புலி போன்று ஓடிப்பிடித்து கடித்து குதறி கொன்று வேட்டையாடி இறைச்சி உண்ணும் வடிவமைப்பு இல்லை. மிக பெரிய உடலைக் கொண்ட கொரில்லாக்களும் பெரும்பாலும் தாவர உணவையே உண்கின்றன. மனித இனத்திற்கும் இதே நிலைதான். காலபோக்கில் மனித இனம் தனது உணவுக்கான தாவரங்களை தானே வளர்க்க ஆரம்பித்து தன்னிறைவை அடைந்துவிட்டது. விரைவிலேயே இறைச்சி சுவைக்காகவும் ஏற்பாடுகள் செய்துவிட்டது. ஆனால் இதில் தான் அது எல்லை மீறி விட்டது. இருபது கிலோ தானியத்தை ஊட்டி ஒரு கிலோ கோழிக்கறியை சுவைக்கிறது. வகை தொகை இல்லாமல் மிருகவதை செய்ய ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் சமநிலையை மிகவும் கெடுத்து விட்டது. மிருகவதையே இல்லாத இயற்கையில் இறந்த விலங்குகளின் இறைச்சியை உண்பதையும் சிறுமை படுத்தி விட்டது. இயற்க்கை மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறது.
SHAIKMOHAMEDALI
THANNGAL ELUTHIYA KATTURAI NAAN ETRUKOLGIREAN, VARAVETKIREAN.. INNUM PALA KATTURAIGAL ELUTHA VAAZHTHUKKAL.....
rajan
மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும். www.vallalar.org
Guest
தஞ்சை வெங்கட்ராஜ்.....வாழ்த்துக்கள் நல்ல படைப்பு

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.