“இந்தி தெரியாததால் தமிழர்கள் வடநாட்டில் மரியாதை இழக்கிறார்கள்” -பண்டிட் சாலமன் பாப்பையா.

தமிழ்மக்கள் மொழிப் போராட்டம் நடத்தினோமேயொழிய உலகின் மிகப்பெரும் அடிமைச் சமூகங்களுக்குள், 'யார் மிகச்சிறந்த அடிமைகள்?' என்று போட்டி வைத்தால் நாம் தான் மிகப்பெரும் பெரும்பான்மையில் ஜெயிப்போம். உதாரணமாக, நாம் இந்தி பாட்டு பாடும்போதோ அல்லது இந்தி படம் பார்த்துகொண்டு இருக்கும்போதோ, இந்தியின் மீது பிடித்தமே இல்லாதவன் கூட என்ன சொல்கிறான்?, "பெரிய இவரு... இந்தி பாட்டுதான் கேப்பாரு" என்கிறான். இது மேலோட்டமாகப் பார்த்தால் சாதரணமாகத் தெரியலாம். ஆனால் எவ்வளவு பெரிய அடிமைப் புத்தி இது? இந்தி பாடலோ, இந்தி படமோ பார்த்தால் 'அவரு பெரிய இவரு' என்று இந்தியே தெரியாத அல்லது இந்தியே பிடிக்காத ஒரு சராசரி தமிழன் மனதில் கூட பதியவைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு உதாரணம். இதுபோல் அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். இரண்டு வருடம் டெல்லியில் ஒரு தமிழ் குடும்பம் இருந்தால் போதும், தமிழ்நாடு வந்தபின்னும் கூட இந்தியிலேயே அவர்களுக்குள் கதைப்பதும், சுற்றி இருப்பவர்களுக்கு இந்தி தெரியுமா என்ற நினைப்பே இல்லாமல் தங்கள் குடும்பத்திற்குள் இந்தியில் பேசிக்கொள்வதும் கூட இந்தி பேசுவதை எதோ பெருமையெனச் நினைத்துச் செய்யும் இழிசெயல்கள் தான். என்றாவது தமிழகத்தில் வாழும் வடநாட்டவர்கள் தமிழ் நன்றாக பேசத்தெரிந்தால் கூட தங்கள் குடும்பத்திற்குள் தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா தமிழர்களே?

இந்தி என்பது சராசரியான ஒரு மொழி. ஆனால் மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் அதை ஒரு ஏழாம் அறிவாக நினைத்துச் செயல்படுவதுதான் தவறு. தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டங்கள், 'இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்' அல்ல. அவை 'இந்தி திணிப்பு எதிர்ப்பு' போராட்டங்கள். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இந்தி படிப்பதை தமிழகத்தில் யாரும், எந்த இயக்கமும், எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. அப்படிப்பட்ட உரிமைக்கான, வேண்டிய மொழியை சுயமாய் சிந்தித்துப் படிப்பதற்கான சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை, சிலர் 'இந்தி மொழிக்கு எதிரான போராட்டமாக' சித்தரிப்பது, திராவிட இயக்கங்களுக்கு எதிராக செய்யப்படும் படுபயங்கர விஷப்பிரச்சாரம்.     

சாலமன் பாப்பையா போன்ற தமிழ் அறிஞர்கள் முக்கியமாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளில் இந்தி உண்டு. தமிழ் எழுதப் படிக்கவே தெரியாமல் இந்தி மட்டுமே கற்றுவைத்துள்ள ஏராளமான 'மானமுள்ள' தமிழர்களும் தமிழகத்தில் உண்டு. அங்கவை சங்கவையை கிண்டல் செய்தால் கூட கைதட்டிச் சிரிக்கும் தாராள மனப்பான்மையுள்ள தமிழர்களும் உண்டு. நிலைமை இப்படி தாராளமாக இருக்கையில், பேராசிரியர் சாலமன் பாப்பையா இந்தி படித்து பண்டிட் பாப்பையா ஆகவேண்டாம் என இங்கே யார் அவரைத் தடுத்தது? தாராளமாய் இந்தி படித்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் "இந்தி படிக்காததால் தமிழருக்கு வடநாட்டில் மரியாதையே இல்லை" என சிந்தனையே இல்லாமல் பேச பாப்பையாவால் எப்படி முடிகிறது? ஒருவேளை அந்தக் கூற்று உண்மை என்றே வைத்துக்கொள்வோம். இருமொழிக்கொள்கை உடைய இந்தியாவில், "அப்படி நடப்பது நியாயமா?" என்றல்லவா சாலமன் பாப்பையா கேள்வி கேட்டிருக்க வேண்டும்? சிந்தையின்றி அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் அறிஞர் எனப்படுபவருக்கு அழகா? இன்று இந்தி படித்தால் மரியாதை என்று சொல்லுவான். நாளை நிர்வாணமாக நடந்தால் மரியாதை எனச் சொன்னால் அதையும் செய்வாரா பாப்பையா?

தமிழகத்தில் இந்தி படிக்க தடையேதும் இல்லை. படிக்கத் தோன்றினால் படியுங்கள். ஆனால் "இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, இந்தி படித்தால் தான் இந்தியாவில் எங்கும் வேலை, எங்கும் மரியாதை" என்றெல்லாம் அடிமைத்தனமான, பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம். வடநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் ஆறு மாதத்தில் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தி சரளமாக வந்துவிடும். இந்தியை ஏட்டில் படிப்பவர்களை விட பழக்கத்தில் படிப்பவர்கள் தான் தொடர்ச்சியாக நன்றாக இந்தி பேசுகிறார்கள். வடநாட்டில் இருக்கும் தமிழர்களைக் கேட்டாலே இது தெரியும். மேலும் தமிழர்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசுபவர்கள் என்று வடநாட்டில் மரியாதை அதிகம். ஏனெனில் வடநாட்டான் ஆனால் தென்நாட்டான் ஆனாலும் ஆங்கிலம் தான் பலருக்கு சோறு போடுகிறது.

ஆனால் ஏற்கனவே, தமிழால் சோறு தின்று, தமிழால் புகழ்பெற்று, பாரியின் மகள்களான அங்கவை சங்கவையைக் கேவலப்படுத்திய பாப்பையா போன்ற தமிழ் விரோதிகளின் முட்டாள்த்தனமான, அடிமைத்தனமான பேச்சுக்களை கடுமையாக கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தே ஆகவேண்டும். சாலமன் பாப்பையா போன்ற ஊடக வெளிச்சத்தில் உள்ளவர்கள் தவறான கருத்துக்களைப் பரப்பும்போது அதைக் கேட்பவர்களின் மனதில் எவ்வளவு அதிகமான உளவியல் ரீதியான மாற்றங்களை அது நிகழ்த்தும்? ஏற்கனவே எவ்வளவு பழமை என்றே ஆராய இயலாத அளவிற்கு உலகின் மிகத்தொன்மையான மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்களில் பலர் தங்கள் மொழியின் அருமை தெரியாமல் அடிமைப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான பேச்சுக்களை அனுமதிக்கலாமா? இதையெல்லாம் விடக் கொடுமை பல தமிழர்கள் சாலமன் பாப்பையாவிற்கு கைத்தட்டிக்கொண்டும், அவரை எப்படி நாசூக்காக விமர்சிக்கலாம் என நமக்கு வகுப்பெடுத்துக்கொண்டும் இருப்பதுதான்! சூடாக கண்டித்தால் தான் சாலமன் பாப்பையா போன்ற தமிழால் சோறு உண்டு தமிழை இகழும் துரோகிகள் திருந்துவார்கள் அல்லது குறைந்தபட்சம் நாக்கை சுருட்டிக்கொள்வார்கள்.

Pin It