தமிழகம் ஊமைத் துயரத்தில் ஆழ்ந்துள்ள நேரம் இது. தமிழீழத்தில் நம்மின மக்கள் சிங்களவெறிப் படையினரால் கொத்துக் கொத்தாய்க் கொலையுண்டு போவதை நம்மால் தடுக்க முடியவில்லையே! இன்றளவும் அங்கே முள்வேலி முகாமில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை மீட்க வழி தெரியவில்லையே! நமது அரசு என நாம் நினைத்திருந்த இந்திய அரசு நம் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்துப் போரை நிறுத்தச்சொல்லவில்லை. ஈழத் தமிழர்களைக் காக்கத் துரும்பும் அசைக்கவில்லை. இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால், சிங்கள அரசு நடத்திய இன அழிப்புப் போருக்கு ஆயுதம், கருவி, பொருள், ஆதரவு அனைத்தும் கொடுத்து உடந்தையாகச் செயல்பட்டது தில்லி அரசு.

ஈழத் தமிழர்கள் இருக்கட்டும், இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினரின் கொலைத் தாக்குதலிலிருந்து காக்கவும் கூட இந்திய அரசு அக்கறையுடன் முயன்றதாக வரலாறு இல்லை.

இந்த உலகில் தமிழினம் தன் உயிருக்கும் உரிமைக்கும் காப்பின்றிக் கலங்கி நிற்கும் இந்தச் சூழலில்தான் இந்தியாவின் விடுதலை நாள்- சுதந்திர தினம் – ஆட்சியாளர்களால் கொண்டாடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாயும், பணியாளர்களுக்கு விடுமுறையும் தவிர இந்த விடுதலை நாளில் மகிழ்ச்சி கொள்ள என்ன இருக்கிறது?

1947 ஆகஸ்டு 15 இந்திய விடுதலை நாள் என்பது தமிழர்கள் மீதான ஆதிக்கம் ஆங்கிலேயர் கையிலிருந்து இந்தியப் பார்ப்பன – பனியாக்களின் கைக்கு மாற்றித் தரபட்ட நாளே தவிர வேறல்ல; எனவே இது துக்க நாள் என்று அன்றே அறிவித்தார் தந்தை பெரியார். அவர் கூறியதே உண்மை என்பதைக் கடந்த் அறுபத்திரண்டு ஆண்டு கால வரலாறு மெய்ப்பிக்கிறது.

ஆம், அன்றும் இன்றும் ஆகஸ்டு 15 தமிழர்களுக்குத் துக்க நாளே!

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை ஒழியவில்லை. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகள் ஒழியவில்லை. வெண்மணியும் விழுப்புரமும் ஊஞ்சனையும் மேலவளவும் தாமிரவருணியும் தாழ்த்தப்பட்ட மக்களின் குருதியில் பாரத மாதா திரும்பத் திரும்பக் குளித்தெழும் தொடர் நிகழ்வின் சில புள்ளிகளே அல்லவா?

ஒடுக்குண்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடிந்ததா சுதந்திர இந்தியாவால்? இன்றளவும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், எய்ம்ஸ் போன்ற உயர் தனிக் கல்வி நிறுவனங்கள் பார்ப்பன மேலாதிக்கக் கோட்டைகளாகவே இருந்து வருகின்றன.

உழபவனுக்கு நிலம் சொந்தம் என்ற முழக்கத்தை ‘இடதுசாரிகளே’ மறந்து போய் விட்டார்கள். உலகமயத்துக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று கருதும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போன்றவர்கள் ‘டாடாவுக்கே நிலம் சொந்தம்’ என்ற புதிய முழக்கத்தோடு புறப்பட்டிக்கிறார்கள். இப்போது சிவப்புப் பொருளியலைக் கைவிட்டு சிறப்புப் பொருளியலைத் தழுவியுள்ளர்கள். எல்லாம் நாற்காலி அரசியல் செய்த மாயம்! இந்துத்துவ பாசக, இந்தியத் தேசிய காங்கிரசு, இடதுசாரி முன்னணி... எல்லாரும் இந்திய வல்லாதிக்கச் சேவையில் கைகட்டி நிற்கக் காண்கிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று கொட்டி முழக்கி அரசியல் வளர்த்த திராவிட இயக்கம் இப்போது தில்லி வல்லாதிக்கத்தின் தரகு முகவாண்மையாகச் சீரழிந்து விட்டது. கொள்கையை வேட்டி என்றும், பதவியை மேல்துண்டு என்றும் வர்ணித்தவர் அண்ணா. தம்பி கருணாநிதியோ வேட்டி போனாலும் துண்டுதான் உயிரெனத் துடித்து நிற்கிறார். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துவதில் அவருக்கும் செயலலிதாவுக்கும் வேறுபாடில்லை.

தமிழ்நாட்டின் உழவும் நெசவும் சுதந்திர இந்தியாவில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. பன்னாட்டுக் குழுமங்களின் சுரண்டல் கொள்ளை நம் காற்றையும் மண்ணையும் கெடுத்து வருகிறது. நாம் உண்ணும் உணவையும் குடிக்கும் நீரையும் நஞ்சாக்கி வருகிறது.

இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமானால், இந்தியச் சிறையிலிருந்து தமிழகம் விடுதலை பெறவெண்டும். விடுதலைக்காகத் தமிழர்கள் ஒன்றுபடுவதற்குத் தடையாக நிற்கும் சாதியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியமும் சமுக நீதியுமான குறிக்கோள்களுக்கான போராட்டமே நமக்கு உண்மையான விடுதலையைத் தரும். அந்த விடுதலைக்கான போராட்டத்திற்கு அணி திரள்வோம், தமிழர்களே!

தமிழர் விடுதலைப் போர் முழக்கம்! சமூக நீதித் தமிழ்த் தேசம்!

-தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தொடர்புக்கு: தோழர் தியாகு: 929283110603

தோழர் சிவ.காளிதாசன்: 9283222988

Pin It