'தமிழராகிய நாங்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்த பின்னரும் அர்ச்சகராய்ப் பணியாற்ற பிராமணர்கள் தடை செய்வதால். பெரியார் வழியில் சாதிகளைக் கடந்து தமிழராய் ஒன்று கூடி, பிராமண ஆதிக்கத்தை முறியடிப்போம்’

என்ற தமிழ் அர்ச்சகர் சு, சீனிவாசனின் துடிப்புமிகு ஆதங்கம் நம் ஆசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்திற்குத் தெரிய வந்தது. 22-7-2010 நாளிட்ட புரட்சிப் பெரியார் முழக்கம் என்னும் பெரியார் திராவிடர் கழக வார ஏட்டில் இச் செய்தியைப் படித்தார்; படித்தவுடன் தன்மானத் தமிழ் அர்ச்சகரின் இந்த ஆதங்கத்தை அறிந்து பெரு மகிழ்வு கொண்டார் ஆசிரியர். அடுத்த நாள் காலையிலேயே விடிந்தும் விடியாததுமாகப் புறப்பட்டு விட்டார் அந்த அர்ச்சகரைக் காண. தமிழின ஆன்மீக விடுதலைப் பணியில் ஆர்வம் கொண்டவரான அன்பரசன் என்ற நண்பரும் ஆசிரியருடன் சென்றார்.

சென்னையிலிருந்து புறப்பட்டு இராணிப்பேட்டை சென்றடைந்தனர்; கோவில் கோவிலாகச்
 சென்றுஅவர்இருக்கும் இடத்தைத் தேடியலைந்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தார் ஆசிரியர். தான் பெரியார் கூட்டத்தில் பேசியதைப் படித்துவிட்டு    சென்னை அயன்புரத்திலிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் பயணித்துத் தன்னைப் பார்க்க வந்திருக்கின்றாரே ஆசிரியர் என்பதால் மிகுந்த ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார் அந்த அர்ச்சகர். ஏற்கெனவே ஆசிரியர் தமிழர்களின் கருவறை வழிபாட்டுக்காகப் போராடி வருவதை நாம் அறிவோம்.

தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, தமிழர்களால் கட்டப்பட்ட, தமிழர் சமயக் கோவில்களாகிய சைவ, வைணவக் கோவில்களின்  கருவறை சென்று தமிழ் மொழியில் வழிபட. தமிழர்களுக்கு உரிமையில்லையா?

ஏன் உரிமையில்லை? ''தமிழ் இனம் கீழான நீச இனம்”, ''தமிழ் மொழி கீழான நீச மொழி”

என்கின்றனர் ஆரிய பிராமணர்,

தமிழர் சமயக் கோவில் கருவறைகளில் வழிபாடு செய்ய  பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையா? பிராமணரல்லாத தமிழருக்கு அந்த உரிமை கிடையாதா? 200க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தமிழ் அர்ச்சகர்கள் பிராமணரல்லாத தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே நடுத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனரே.

ஏன்?

என்ற கேள்வி கேட்டுப் போராடி வருவதால் இது தொடர்பான வெளியீடுகளை எல்லாம்  அவரிடம் கொடுத்தார். அவற்றை ஆர்வமுடன் பெற்றுக் கொண்ட அர்ச்சகர் அவற்றைப் படித்துவிட்டு ஆசிரியருக்கு உருக்கமான கடிதம் எழுதியதோடு நேரில் வந்து பார்த்தார். நேரில் அவர் தன் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் கொட்டி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆதங்கப் பேட்டி இதோ….

- முனைவர் தெ.தேவகலா

வணக்கம்.  என் பெயர் சு. சீனிவாசன். நான் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா மின்னூர் கிராமத்தைச் சார்ந்தவன். தமிழ்நாடு அரசால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கலைஞர் மூலமாகச் சட்டம் இயற்றப்பட்டதால் அதன் மூலமாகத் தான் அர்ச்சகர் பயிற்சி பயின்றோம். தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையிலே சைவ சமயம் ஏற்றிப் போற்றும் திருவண்ணாமலையிலே இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்தேன்.

நாங்கள் மொத்தம் 40 பேர் பயின்றோம்.  திருவண்ணாமலையில் அந்தப் பாடங்களையும் வேதங்களையும் கற்றுக் கொடுப்பதற்கு. பிராமண ஆசிரியர்கள் யாரும் முன்வரவில்லை. எந்த ஆசிரியரும் வராத காரணத்தால் ஒரு மூன்று மாத காலம் எங்களுக்கு ஏற்கனவே அர்ச்சகர்களாக இருந்த மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

அதாவது, எங்களுக்கு முன்பாகவே பயிற்சி பெற்று அர்ச்சகராகவே பணி புரிந்திருக்கிறார்கள். பிராமணர் அல்லாதவர்கள் கூட புரோகிதம் அதாவது  வாழ்வியல் சடங்குகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எங்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் யாரும் முன்வரவில்லை. தமிழாசிரியர்கள் மட்டும் வந்தார்கள். பிராமணர்கள் யாரும் முன்வரவில்லை; இறுதியாக  ஒரு மூன்று மாத காலம் மாணவர்களே எங்களுக்குப் பாடம் நடத்தினார்கள்.

புரோகிதம் செய்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட தமிழ்ச் சாதியினர் ஆசாரியர்கள், மர வேலை செய்பவர்கள் நிறைய பயின்றிருக்கிறார்கள். அர்ச்சகராகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலமாகவே எங்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. அதன்படி நாங்கள் பயின்று கொண்டிருக்கும்போது சேலத்திலிருந்து ஓர் ஆசிரியர் ராமகிருஷ்ண ஜீமான். பிராமணராய் இருப்பினும் உலகம் முழுவதும் தன்னுடைய வேதத்தைப் பாடமாகச் சொல்லி கொடுக்கிறவர். 80 வயதுக்கு மேல் இருக்கும். அவர் எங்கள் ஆசிரியரானார்.

அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆன்மீகத்துக்குள் தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் ஒரு மந்திரம் சொன்னால் அது தெளிவாகவும் ஓசையுடனும் கேட்கும். அவர் ஒவ்வொன்றையும் சொல்லும்போது அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். மிகச் சிறந்த ஆசிரியர். அவர் பாடம் சொல்லிக் கொடுக்க, அதை அந்த 40 மாணவர்கள் சொல்லும்போது வெளியே கோயிலுக்குச் செல்பவர்கள் நின்று பார்ப்பார்கள்.

இவர் மிகச் சிறந்த முறையில் கற்பிக்கிறார், கற்பித்துக் கொண்டிருக்கிறார், மாணவர்களும் நன்றாகக் கற்கிறார்கள, இவர்கள் எங்களை விட மிகச் சிறந்த முறையில் கற்கிறார்கள் என்று ஆத்திரப்பட்ட பிராமணர்கள், என்ன செய்தார்கள்? என்னுடைய ஆசிரியர் ஒரு நல்ல மனிதர். சாதி ஏற்றத்தாழ்வு பாராதவர்; நல்ல ஆன்மீகவாதி. அவர் தினந்தோறும் சிற்றுண்டி அருந்துவதற்குக் காலை 8 மணி அளவில் சென்று 15 நிமிடம் கழித்து வருவார். நாங்கள் மாணவர்கள் எல்லோரும் வந்துவிடுவோம். ஆனால் அவர்  எங்களுக்கு முன்பாகவே வந்துவிடுவார்; இளைஞரைப் போலவே இருப்பார். அப்படி ஒரு துடிப்பு மிகுந்தவர். ஒரு நாள் 10 மணி ஆகியும் ஆசிரியர் வரவே இல்லை. நாங்கள் எல்லாரும். 'என்ன இது. ஊருக்கு ஏதேனும் சென்று விட்டாரா?’ என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஏறக்குறைய 10 மணிக்கு அந்த வாசலிலே மிகவும் நடக்க முடியாத நிலையில் அவர் நின்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்துக் கேட்டோம்.

என்ன ஐயா, ஏன் இப்படி நடக்கக் கூட முடியாமல் நிற்கின்றீர்களே ஏன்? என்று கேட்டோம்.

கோயிலில் இருக்கும் அர்ச்சகரே ஒரு நான்கைந்து பேரை வைத்து 80 வயதிற்கும் மேலான அந்த ஆசிரியரை அடித்திருக்கிறார் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. திருவண்ணாமலை கோயிலில் உள்ள போது நான்கைந்து பேரை வைத்து அடித்ததாகக் கூறினார். இது மாணவர்கள் மத்தியிலும் மாணவர்கள் அல்லாது அறநிலையத் துறையினர் மத்தியிலும் ஒரு பெரும் கோபத்தை உண்டாக்கியது.

எதற்காக அவரை அடித்தார்கள்? எங்களுக்கெல்லாம்  கற்றுக் கொடுத்ததற்காகவா? ஆம்.

'யாருமே இந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முன் வராத போது நீங்கள் ஏன் வந்தீர்கள்? மீண்டும் சேலத்திற்கே சென்று விடுங்கள்’

என்று 80 வயதிற்கும் மேலான அந்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள்.

பிறகு ஒரு சில காலங்கள் இந்தப் பிரச்சனையில் தான் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அது திரும்பப் பெறப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் நாங்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றோம். கோயிலுக்குள் செல்லும்போதெல்லாம் கூட பிராமண அர்ச்சகர்கள் எங்களை கேவலமாகத்தான் பார்ப்பார்கள். நாங்கள் வரும்போதெல்லாம் ஒரு வெறுப்பாகத்தான் பார்ப்பார்கள். அர்ச்சகர் என்றால் அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டும். ஆனால். எதிரிகளைப் பார்ப்பது போலதான் எங்களைப் பார்ப்பார்கள். நாங்கள் தினந்தோறும் மூலவர் சன்னதிக்குச் சென்று தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி விட்டுதான் செல்வோம்.

இரண்டு ஆண்டுகாலம் தினந்தோறும் இதுதான் நடைபெற்றது. கருவறையினுள் நுழைந்து நாங்கள் 40 மாணவர்களும் பாடல் பாடுவோம். தேவாரம். திருவாசகம், ருத்ரம் எல்லாம் பாடி எங்கள் பக்தியை வெளிப்படுத்தி மகிழ்வுடன் வெளிவருவோம். அர்ச்சகர்கள் ஒரு எதிரியைப் பார்ப்பது போல் எங்களைப் பார்ப்பார்கள். அந்தக் கோயில் அதிகாரி D.C. வாசுநாதன் என்ற ஒரு ஐயா. அவரும் தமிழ் ஆர்வம் கொண்டவர். அவர் வந்து எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார்.

நல்ல மனிதர்; தமிழ் உணர்வு கொண்டவர். எங்களுக்கு ஆசிரியர்; பாடம் கற்றுக் கொடுத்ததை விட அவர் நிறைய நடைமுறை உண்மைகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தினந்தோறும் வருவார். எங்களுடன் கலந்துரையாடுவார். எங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தி, பேச்சுப் போட்டி நடத்தி எங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்வார்; அவரும் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதி. தமிழ் உணர்வு கொண்டவர்.

எப்போதெல்லாம் அலுவலகத்திற்கு வருகிறாரோ. அப்போதெல்லாம் எங்கள் அர்ச்சகர் பயிற்சி நிலையத்திற்கு வருவார். அவருடைய ஆதரவால் திருவண்ணாமலை அர்ச்சகர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் போனது. எதிரிகளாகப் பார்க்கலாம். அதை வெளிப்படுத்தினால் பாதிப்பு என்ன என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே நிறைய எதிர்ப்புகள் இருந்தாலும் அதிகாரிகள் மத்தியில் எங்களுக்கு நிறைய ஆதரவு இருந்தது.

பிராமணர்களாகிய இவர்களை எதிர்க்க முடியாத நிலையில்மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.

அதனால் நாங்கள் ஒரு முழுமையான அர்ச்சகர் என்ற முறையில் ஒரு சிறப்பான பயிற்சி பெற்றோம். ஆனால் எங்களுக்கோ அர்ச்சகர் பயிற்சி வாழ்நாள் பணி கிடைக்கவில்லை. என்றாலும் வாழ்வின் ஒழுக்கத்திற்கு இது ஓர் ஆதரவாக உள்ளது. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் அர்ச்சகர்க்குப் பயின்று விட்டோம். அர்ச்சகர் ஆகப் போகின்றோம். இறைவனுக்குப் பணிச் செய்யப் போகின்றோம் என்று  மிகவும் மகிழ்வோடு இருந்தோம்.

ஆனால் பிராமணர்கள் நாங்கள் அர்ச்சகராகப் பணிபுரிய முடியாதபடி  வழக்கு போட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு மிகவும் பின்னால்தான் தெரிய வந்தது . அர்ச்சகர் பயிற்சி முடிந்த பின்புதான். ஒன்றரை ஆண்டுகள் முடிந்த பின்பு இரண்டு இரண்டு மாதங்கள் கூட்டிக் கொண்டே சென்றார்கள். அப்போது விசாரித்தபோது அதிகாரிகள் சொன்னார்கள். 'பிராமணர்களால் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு முடிகின்ற வரைக்கும் அர்ச்சகர் பயிற்சி உங்களுக்குத் தொடரப்பட்டிருக்கின்றது. எத்தனை ஆண்டுகள் வழக்கு நீட்டிக்கப்படுகிறதோ. அத்தனை ஆண்டுகாலம் உங்களுக்கு மேலும் பயிற்சி நீட்டிக்கப்படும்’ என்று D.C. வாசுநாதன் ஐயா கூறினார்.

இரண்டு ஆண்டுகள் தாம் பயிற்சி. 16 வயதிலிருந்து 24 வயது வரை  உள்ளவர்களை மட்டும்தாம் அர்ச்சகர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் வயது கடந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இப்பொழுது என்ன நிலை என்றால் நாங்கள் 25, 26 வயது கடந்தவர்கள்.  எனக்கு வயது 24. இன்னமுள்ள மாணவர்கள் எல்லாம் என்னைவிட 2, 3 வயது கூடுதலாக உள்ளவர்கள். ஒரு 10 மாணவர்கள் அப்படி இருப்பார்கள். அவர்களுடைய கருத்து என்னவென்றால் 'கல்வி கற்கும் வயதை நாங்கள் கடந்துவிட்டோம். மீண்டும் எங்களால் ஓரிடத்தில் அமர்ந்து கல்வி கற்க முடியாது’ என்பது.

நாங்கள் படிக்கும் காலத்தைக் கடந்துவிட்டோம். இத்தனை ஆண்டுகள்தான் பயிற்சி என்று சொன்னீர்கள். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மீண்டும் எங்களால் பயில முடியாது. கல்வி பயிலுகின்ற காலத்தைக் கடந்த காரணத்தால், மீண்டும் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறதை ஒரு சிலர் எதிர்த்தனர்.

'அர்ச்சகர் பயிற்சி பயின்று விட்டோம். இனி வேறு பணிக்கு எங்களால் செல்ல முடியாது’ என்கின்றனர் சில மாணவர்கள்.

எங்கள் கிராமங்களிலும் நாங்கள் அர்ச்சகர் என்று தெரிந்தாகிவிட்டது; நாங்கள் வேறு பணிக்குச் சென்றால் எங்கள் வாழ்வியல் எங்களைப் பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து. இந்தச் சூழ்நிலையில் பிராமணர்கள் வழக்கு தொடர்ந்து விட்டார்கள். கடவுள் கொள்கையில் அனைவரும் சமம். புத்தகங்களிலே சைவ, வைணவ ஏட்டிலே 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றிலே சாதிகளே குறிப்பிடப்படவில்லை.

அப்படி இருக்கும்பொழுது இறைவனுடைய கொள்கையையும் இறையுணர்வையும் இவர்கள் பெறாமல் அர்ச்சகர் பணி செய்கிறார்கள். இறை கொள்கைக்கு எதிரானவர்கள் அங்கு இருப்பதற்கே தகுதியற்றவர்கள். காரணம் கடவுள் கொள்கையையும் பின்பற்றவில்லை. சைவ, வைணவக் கொள்கையையும் பின்பற்றவில்லை. இவ்வாறு இருக்கும் போது இவர்கள் சைவ, வைணவ இந்துமதக் கொள்கை பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இது தவறு. கொடுமை. அநியாயம்.

கடவுள் கொள்கையைப் பின்பற்றுகிற பிராமணர்களாக இருந்தாலும் சரி. பிராமணரல்லாத தமிழராக இருந்தாலும் சரி. பயிற்சி பெற்ற உண்மையான ஆன்மீகவாதிகள் தாம் உள்ளே இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பிராமணரல்லாத தமிழ் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்வதற்கு பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு போடுவது இவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆக உண்மையான ஆன்மீகவாதிகளை இறைவனுக்கு அர்ச்சனை செய்பவர்களாக ஆக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது என்ன கூறுகிறோம் என்றால் தமிழரால் கட்டப்பட்ட கோயிலில் ஒரு தமிழனால் அர்ச்சனை செய்ய முடியவில்லை. தமிழரின் உரிமை என்னவாயிற்று?

எங்கள் கோயிலுக்குள் சென்று நாங்கள் அர்ச்சனை செய்யக் கூடாது என்று பிராமணர்கள் தடைவிதிப்பதற்கு இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அது மட்டுமின்றி இவர்கள் ஆன்மீகக் கொள்கையையும் இந்து மதக் கொள்கையையும் பின்பற்றாதவர்கள். எனவே அர்ச்சகர் பயிற்சி பயின்ற பிராமணர்களைத் தவிர ஒரு பிராமணன் கூட தமிழ்நாட்டிலே அர்ச்சகராக இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. இதனை நிறைவேற்ற வேண்டும்.

யாராய் இருந்தாலும் சரி, அர்ச்சகர் பயிற்சி பயின்றவர்கள்தாம் அர்ச்சகராக இருக்க முடியும். அதற்கு விதிமுறைகள் இருக்கிறது.  அரசாங்கம் மூலமாகவும் பயின்று இருக்கலாம். தனியாகவும் பயின்று இருக்கலாம். அர்ச்சகராக இருப்பவர்கள் இந்தக் கொள்கைகள். அதாவது சைவ, வைணவ, இந்துக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும்.

இக் கொள்கையின்படி அனைத்துச் சாதியினரும் ஒன்றே; இறைவனுக்கு முன் வேறுபாடு இல்லை என்று வந்துவிடும். இந்தக் கருத்துகளைக் கொண்டவர்களைத் தவிர வேறு யாரும் அர்ச்சகராகக் கூடாது. சைவம் வைணவத்தை எதிர்க்கிற பிராமணர்கள். தமிழகத்தில் ஒரு திருக்கோயிலில் கூட அர்ச்சகராகப் பணி செய்யக் கூடாது.

மக்களிடத்திலே இதை எடுத்துக் கூறி, சைவ, வைணவக் கொள்கைகளைப் பின்பற்றாத பிராமணர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. இதை நாம் செய்ய முடியும்; செய்ய வேண்டும். இதுதான் நம் கடமை; இது இறைவன் நமக்குக் கூறியிருக்கிறார். காரணம் 63 நாயன்மார்களும் பல சாதியினராக இருக்கிறார்கள். ஆகவே இறைவன் அனைத்துச் சாதியினருக்கும் அறிவித்துச் சென்றார். இவர்களின் சாதி ஏற்றத்தாழ்வு என்னும் இந்துத்துவாவைப் புனிதமான இந்து மதத்திலே சேர்க்கக் கூடாது. இந்துத்துவாவைச் சேர்ந்தவர்கள் இந்து கோயில்களில் இருக்கக் கூடாது.

தமிழராகிய நமக்கு ஏற்பட்டுள்ள இந்த இழிவைத் துடைத்து. சாதிகளைக் கடந்த தமிழராய் ஒன்றுபட்டு பிராமணர் ஆதிக்கத்தை முறியடிப்போம்.

- அர்ச்சகர் சு. சீனிவாசன்

(கட்டுரை: தமிழர் சமயம் - செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)

Pin It