இம்மாதம் ஜனவரி 2011ஆம் ஆண்டு, முதல் மாத இதழ் உங்கள் நூலகம் புத்தகக் கண்காட்சி சிறப்பிதழாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.  வழக்கம் போல இவ்வாண்டும் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்.

இரண்டாம் உலகப் போருக்கு முன் அன்னிய ஆதிக்கத்தின் கீழ் இந்திய மக்கள் அடிமையிலும் ஏழ்மையிலும் வாழ்ந்த காலத்தில் புதிய கருத்துகள் உலகை ஆட்கொண்டு வந்தன.  புதிய கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்று அவர்களைப் பக்குவப்படுத்தி நாட்டு விடுதலைக்காகப் போராடுவது, முற்போக்குக் கருத்துகளை வளர்த்து சமுதாய மாற்றத்திற்கு அடிகோலுவது, இந்திய மக்களையும் - குறிப்பாகத் தமிழக மக்களை மூட நம்பிக்கையி லிருந்து விடுவித்து அறிவியலில் ஈடுபடுத்துவது என்று பல்வேறு இலக்குகளை நோக்கமாகக் கொண்டு எழுந்ததுதான் நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டகம்.

அக்காலத்தில் ஆங்கில ஏகாதிபத்தியம் இந்திய மக்களை அரசியல் துறையில் மட்டுமல்லாமல் அறிவியல் பண்பாட்டுத் துறைகளிலும் அடிமைப் படுத்தியிருந்தது.  எனவே ஏகாதிபத்திய எதிர்ப்பை மையக்கருத்தாகக் கொண்டு 1951ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாளில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்ற பெயரைத் தாங்கித் தமிழகத்தில் கல்விப் பணி ஆற்றிவரும் புதுயுகப் புத்தகப் பண்ணையைத் தமிழ் மக்கள் நன்கறிவர்.  இந்நிறுவனம் 60 வருடங் களாக எழுத்துலகில் நற்பணி ஆற்றி வருகிறது.  எழுத்தாளர்களை ஊக்குவித்தல், எழுதச் செய்தல், எழுத்தாளர்களிடம் மறைந்து கிடக்கும் தரமான படைப்புகளைத் தமிழகத்திற்கு அளித்தல் என்று அன்று முதல் இன்று வரை படிப்படியாக வளர்ந்து முன்னேறி ஒரு பேரமைப்பாக உருவாகியுள்ளது. 

அச்சிட்ட நூல்களைக் கிளைகள் வாயிலாக விற்பனை செய்தல், நடமாடும் புத்தக நிலையங்கள் வழியாக நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நூல்களைக் கொண்டு செல்லுதல், பொது இடங்களிலும் கல்விச் சாலைகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்துதல், வாசகர்களைத் திரட்டுதல் என்ற பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருவதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.  ஏறத்தாழ தமிழக மாவட்டங்களில், எல்லாத் தலைநகரங்களிலும், நகர்ப்புறங்களிலும், ஊர்ப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்துதல், நகரங்களில் முக்கியமான மக்கள் கூடுமிடங்களில் தற்காலிகக் கடைகள் வைத்து விற்பனை செய்தல், ஆண்டு தோறும் சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் புத்தக விழாக்களில் பங்கு பெறுதல், புதுடெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகப் புத்தகக் கண்காட்சியில் தவறாமல் பங்குபெறுதல், மக்களுக்குப் பல்வேறு துறைகளில், படிப்பில் நாட்டம் கொள்ளச் செய்வதிலும் லாப நோக்கமின்றித் தொண்டாற்றி வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

இவ்வாண்டும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை, புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பொழுது பொதுவாக நூல் வெளியீடுகள் பெருகிஉள்ளன.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் துவங்கி வைத்த புத்தகக்காட்சி மூலம் கருத்து பரப்புதல் என்ற பணியை அநேகமாக எல்லா நூல் வெளி யீட்டாளர்களும் தொண்டாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.  நூல்கள் வாசிப்போர் எண்ணிக்கை பெருகியுள்ளது, அறிவியல் முன்னேற்றம் அடைந் துள்ளது என்ற போதிலும் ஊழலும் அதிவேகமாக முன்னேறியுள்ளது.  இந்திய அரசு கடைப்பிடிக்கும் தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமய மாதல் என்னும் தவறான கொள்கையினால் ஊழல் பெருக்கெடுத்து உலக அரங்கில் இந்தியா தலை குனிந்து அவமானப்பட்டு நிற்கும் நிலை கண்டு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வெட்கி நாணித் தலைகுனிய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது.  மேலும் கடந்த இரண்டு இதழ்களிலும் ஊழலைப் பற்றி எழுதியிருந்தோம்.  நல்ல வேளையாக இந்த இதழ் புத்தகக் கண்காட்சி சிறப்பிதழாக வெளி வருவது சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது.  என்.சி.பி.எச் - இன் கடந்தகால புத்தகக் கண்காட்சி அனுபவங்களையும் இதனால் ஏழை எளிய மக்கள் முதல் படித்த அறிவுஜீவிகள் வரை பெற்ற பலன்களை எழுதுவதில் மகிழ்ச்சி உண்டாகிறது.

நடைபெறவிருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் நல்ல தரமான நூல்களைத் தேடிப் பிடித்து வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டும் என விழைகிறோம்.

வருங்காலத்திலாவது சுரண்டலற்ற வர்க்க பேதமற்ற சமுதாயம், இந்தியாவில் வறுமையை விரட்டி அனைவருக்கும் கல்வி, மருத்துவம், அறிவியலில் முன்னேற்றம் போன்ற மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு கண்ட கனா, இலட்சியங்கள் நிறைவேற இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் உந்துசக்தியாக இருக்கும்.  புத்தகக் கண்காட்சி வெற்றிபெற நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் தன் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் வாசர்களுக்கு இனிய புதிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டகத்தின் இதய மாகவும் மூளையாகவும் நுரையீரலாகவும் இயங்கி நூற்றுக்கணக்கான ஊழியர்களை அன்பு, பாசம் என்னும் கயிற்றால் கட்டி இலட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்து அவர்களுடைய உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தூணாகவும், இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நராகவும் பணியாற்றி வளர்த்துக் கட்டிக் காத்த தோழர் இராதாகிருஷ்ணமூர்த்தி 2010ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இயற்கை எய்தினார் என்பதனை இவ்விதழ் வருத்தத்துடனும் வேதனை யுடனும் துயரத்துடனும் தெரிவித்துக்கொள்ளுகிறது.  நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் அவர் காட்டிய வழிநின்று பயணத்தைத் தொடரும் என உறுதி கூறுகிறது.

Pin It