இப்போது பாரத் மாதாவின் குரங்குக் கூட்டங்கள் அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கூக்குரல் விடுகின்றனர். மாதாவின் இன்னொரு வாரிசுகளான மகாத்மாவின் பேரன் பாவி சிதம்பரம் தன் தாத்தா வழியில் பதிலளித்து அவரையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது; “தூக்கில் இடுவதற்கு முன் சில விதிமுறைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. கருணை மனு குடியரசுத் தலைவர் பார்வையில் இருக்கும்போது தண்டனை நிறைவேற்றுவது என்பது சிக்கலானது என்று பாராளுமன்றத்தில் புலம்பினார்'' இவர்கள் இருவருக்கும் அப்சல் குருவை தூக்கிலிடுவதில் வழி முறைகள்தான் வித்தியாசம். அது கோட்சேவுக்கும், காந்திக்கும் இருந்த வித்தியாசமேயொழிய வேறொன்றுமில்லை.

அப்சலுக்கும் பாராளுமன்ற தாக்குதலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று மனித உரிமை அமைப்புகள் நிரூபித்த பின்னும் ஏன் இந்த இரத்த வெறி அடங்கவில்லை என்பது நமக்கு புரியவில்லை. அப்சல் பாராளுமன்றத்தை தாக்கியதாகவே வைத்துக் கொள்வோம். பழம்பெரும் கட்டிடத்தை அவர் தாக்கியதால் இவர்களுக்கு கோபமா? பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனரே அதனால் கோபமா? அல்லது புனித பீடமாக கருதப்படும் பாராளுமன்றமே தாக்கப்பட்டதால் கோபமா?

பழைமை வாய்ந்த கட்டிடம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது 1995 டிசம்பர் 6ல் வெறிபிடித்த இந்து குரங்கு கூட்டங்கள் பழமை வாய்ந்த பாபர் மசூதியை தாக்கியதால் எண்ணற்ற மனித உயிர்கள் பழி வாங்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அலகாபாத் நீதியரசர்கள் முஸ்லீம் உரிமைகளுக்கு எதிராக அளித்த தீர்ப்பு ஞாபகத்திற்கு வருகிறது.

ஆக கட்டிட இடிப்பில் இவர்களுக்கு பிரச்சினை இல்லை. பாதுகாவலர்கள் கொல்லப்பட்டார்களே அதில் ஏதும் பிரச்சினை இருக்குமே என்று நினைத்தால் சமீபத்தில் ஏற்பட்ட அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் அமெரிக்கா கைகாட்டும் நாடுகளை இந்திய ராணுவம் தாக்க வேண்டும் என்ற பொருளாதார நிர்ப்பந்தம் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் கூறிய பிறகும் ராணுவ வீரர்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இடையில் இன்னொரு சந்தேகம் எழுகிறது.

பாராளுமன்ற தாக்குதல் பயங்கரவாத செயலாக கருதுவதால் என்னவோ இவர்கள் கொதித்தெழுகிறார்கள் என்றால் காஷ்மீர் மக்கள், பழங்குடிகள், ஈழத் தமிழர்கள், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய தேசங்களில் வேட்டையாடப்படும் மனிதர்களை, பாரத் மாதாவுக்கு காவு கொடுக்கும் ஆடுகளாக கருதுவது. இவைகள் அரசு பயங்கரவாதச் செயல்கள் இல்லையா?

உண்மைச் சிக்கல் என்னவெனில் புனிதமிக்க பாராளுமன்றம் தாக்கப்பட்டது. அழுகிப் போன இந்த பாராளுமன்ற புனிதத் தன்மை மட்டுமே இவர்கள் கூக்குரல் விடுவதற்கு காரணம். ஆகையால் இப்புனிதத் தன்மை பற்றிதான் நாம் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது.

அ.ராசா போன்ற தலைவர்கள் இப்புனித தன்மையை இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டி கொண்டிருக்கும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்னவெனில் உள்ளார்ந்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியதே. வரலாற்று ரீதியாகப் பாராளுமன்றத்தின் துர்நாற்றத்தை உணர்ந்த நாம் இன்று அரசின் செயல்பாட்டின் மூலம் அதன் பயங்கரவாதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒருபுறம் போராடும் அமைப்புகளிடையே பேச்சு வார்த்தை என்ற பெயரில் வலை விரிப்பது, மறுபுறம் முக்கிய தலைவர்களைக் கொன்று குவிப்பது அல்லது கைது செய்வது இதுதான் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மகத்துவம், மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் கொல்லப்பட்டதில் துவங்கி யு.என்.எல்.எப். தலைவர் என்.எஸ்.சி.என். மற்றும் உல்பா தலைவர் வரை தொடர்கிறது.

இந்த பாராளுமன்ற பயங்கரவாதிகளின் ஜனநாயகத் தன்மை யூ.என்.எல்.எப். தலைவர் கைது நடவடிக்கையின்போது கடைப்பிடித்த நடவடிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆர்.கே. சன்யைமா (மேகென்) வங்களாதேசம் உளவுத்துறை மற்றும் ரா கைது செய்த பிறகு நடத்திய நாடகம் மேலும் இவர்கள் ஜனநாயகத் தன்மையை உணர்த்துகிறது.

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் லால்மட்டியா என்ற பகுதியில் முகமதுபுர் காவல் நிலைய சரத்துக்கு உட்பட்ட இடத்தில் 2010ல் செப்டம்பர் 29 மதியம் 12 மணிக்கு ஆர்.கே. சனயைமா தங்கியிருந்தப் பகுதியில் இருந்து வண்டி எண் டாக்கா, மெட்ரோ G-17-0716ல் பயணித்துக் கொண்டிருக்கும்போது, சாதாரண உடை அணிந்த சில மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர். உடனடியாக தன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் விளைவாக யூ.என்.எல்.எப். சார்ந்த உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது வண்டியும் சனயையா கைது செய்யப்பட்டிருந்தார் (FIR எண் 1981 தேதி 29.09.2010 முகமதுபுர் காவல் நிலையம்) உடனடியாக யூ.என்.எல்.எப். துணைத் தலைவர் கே.எச். பம்பி சனயைமாவை உடனடியாக வங்காதேசம் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆனால் கைது செய்யப்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு சட்ட விரோதமாக சிறப்பு விமானம் மூலம் சனயைமா இந்தியாவுக்கு மாற்றப்பட்டு விட்டார் என்று BBC தன் அறிக்கையில் பதிவு செய்தது. பல ஜனநாயக அமைப்புகளும், ஊடகங்களும், "ரா' சனயைமாவை கடத்தியதை உறுதி செய்து கொண்டிருந்த நிலையில் இந்தியாவின் உள்துறை செயலாளர் பிள்ளை "ரா' வின் அடாவடித்தனம் அறியாததுபோல் பம்மாத்து செய்தார்.

கடந்த அக்டோபர் 18, 2010ல் மணிப்பூர் முன்னேற்றம் என்ற தலைப்பில் இம்பாலில் கிளாசிக் விடுதியில் நடந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பிள்ளை "ரா' சனயைமாவை கைது செய்யவில்லை என்றும் கூறினார். மேலும் வங்காளதேசம் அரசாங்கத்திடம் இருந்து இந்திய அரசால் அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் பெறப்படவில்லை என்று கூறினார். இவைகளைத் தாண்டி இந்த கேடுகெட்ட பிள்ளை அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைதான் இந்தியப் பாராளுமன்ற ஜனநாயகத்தின் உண்மை முகத்தை வெளிக் கொண்டு வந்தது.

அதாவது "ஒருவேளை சனயைமா வங்காளதேசம் அரசால் வேறொரு பெயரால் கைது செய்யப் பட்டிருக்கலாம். ஏனெனில் இப்படிப்பட்ட நபர்கள் பல பெயர்களில் செயல்படுவதால் இவர்தான் சனயைமா என்று அடையாளம் காணப்படுவது கடினம். அம்முயற்சியை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார். இந்திய உளவுத் துறையால் சனயைமா கடத்தப்பட்டதை அறிந்த மணிப்பூர் மக்கள் கொந்தளித்துப் போனார்கள்.

பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியது. மணிப்பூர் இளைஞர் முன்னேற்ற கழகம் அக்டோபர் 20ல் மக்கள் போராட்டத்தை கடத்தலுக்கு எதிராக ஒருங்கிணைத்தது. சட்டமன்றத் தலைவர் நஜாப் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். சனயைமா மகன் ஆர்.கே. சிங்ளான் மற்றும் அவருடைய மனைவி ஆர்.கே. இப்னுங்ஷி ஐ.நா. மனித உரிமைக் கழக உதவியை நாடினார்கள்.

இறுதியாக பீகார் டி.ஜி.பி. தொலைக்காட்சிப் பேட்டியில் பீகாரில் அமைந்திருக்கும் மேலதிகாரி மாவட்டத்தில் சனயைமா கைது செய்யப்பட்டதாக அறிவித்தார். இக் கைது நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக யு.என்.எல்.எஃப். அமைப்பு பத்திரிகை களுக்கு அறிக்கை வெளியிட்டது அதன் முக்கிய அம்சம் பின்வருமாறு:

சனயையா கைது போலவே உல்பா தலைவர், என்.டி.எல்.பி. தலைவர் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) தலைவர், நிங்க்ரகன் சிம்ப்ரே மற்றும் டி.எச்.டி. செயல்வீரர் நிரஞ்சாய் ஒஜாய் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவம் ஷேக் அசினா தலைமையிலான வங்காளதேச அரசு தன் ஸ்திரத் தன்மையை இழந்து முழுமையாக இந்திய அரசுக்கு அடிமையாக ஆக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட நடவடிக்கை ஒரு உண்மையான ஜனநாயக நாட்டால் நடத்த முடியுமா? இந்தியா ஐ..நாவில் இருக்க தகுதி உண்டா? உண்மையாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே (இந்தியாவுடன் இருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதற்கான வாக்கெடுப்பு) பாதுகாப்புப் படையினரால் எண்ணிற்ற பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றனர். இந்திய அரசு தன் பயங்கரவாதத்தை தன் அண்டை நாடுகளிடமும் பரப்பி வருகிறது.

சிறப்பு காவல் படை அதிகாரத்தின் மூலம் மணிப்பூர் மக்களின் மனித உரிமை கேள்விக்குறியாக்கப்படப்படும் நிலையிலும், எந்த ஒரு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காத இந்திய அரசிடமிருந்து சனயைமாவை உயிருடன் கொண்டு வர முடியுமா என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் ஊடகங்கள் உதவியாலும், வங்காள தேசத்தில் செயல்படும் ஜனநாயக அமைப்புகளின் தகவல்களாலும் ஆம்னிஸ்டி சர்வதேசம் தன் கவலையை தெரிவித்ததின் விளைவாகவும், இந்திய அரசின் முகத்திரையை எளிதில் கிழித்தெறிய முடிந்தது.

சனயைமாவை உயிருடன் மீட்பது மணிப்பூர் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் மக்களின் ஆதரவு யூ.என்.எல்.எப்.க்கும் அதன் ஆயுதப் படைக்கும் தொடர வேண்டும் என அதன் அறிக்கை கேட்டுக் கொண்டது.

யூ.என்.எல்.எப். அமைப்பு தமரந்தன் சிங்கால் நவம்பர் 24, 1964ல் மணிப்பூர் சுதந்திரத்தை இலக்காக வைத்து துவங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சனயைமா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரச்சினைக்கு தீர்வு காண நான்கு அம்ச திட்டங்களை முன் வைத்தார்.

அதாவது 1. இந்தியா தன் படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.

2. யூ.என்.எல்.எப். தன் ராணு வத்தை ஐ.நா.விடம் ஒப்படைக்கும்.

3. ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

4. தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு ஜனநாயகப் பூர்வமான திட்டத்தை முன் வைத்தார். ஆனால் இந்திய அரசு ஆயுதம் மூலமே தன் இராம ராஜியத்தை திணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக நாகலாந்து இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டதின் மூலம் பார்ப்பன இந்திய அரசின் தந்திரத்தனம் உலகுக்கு வெளிச்சமாகி விட்டது.

கடந்த 13 ஆண்டுகளாக நடக்கும் பேச்சுவார்த்தையின் உண்மைத் தன்மை அம்பலமாகி விட்டது. கடந்த 26, நவம்பர், 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்திய தீவிரவாத விசாரணைக் குழுமம் நேபால் உளவுத் துறை உதவியுடன் என்.எஸ்.சி.என். வெளியுறவுத் துறை பொறுப்பாளர் அந்தோணி சிம்ரே கைது செய்யப்பட்டார்.

என்.எஸ்.சி.என். அமைப்பு நேரடியாக கைது நடவடிக்கைக்கு "ர'வே என்று குற்றம் சாட்டியது. அவர் மீது கள்ளச் சந்தையில் ஆயுதம் சேகரித்தார் என்று குற்றம் சாற்றப்பட்டு பாட்னா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் இந்தியத் தீவிரவாத எதிர்ப்பு குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

நாகலாந்து மக்கள் அரசாங்கம், இந்திய அரசின் இரட்டைத் தன்மையைக் கண்டித்தது. என்.எஸ்.சி.என். சண்டை நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் பூந்திங் சிம்ராங் இன்னும் இந்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், மிக விரைவில் அந்தோணி விடுதலை செய்யப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பொதுச் செயலாளர் துய்ங்லாங் மொய்வா தன் புகாரை பாரத் மாதாவின் காவலன் மன்மோகன் சிங்கின் பார்வைக்கு கொண்டு சென்றார். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் கைது செய்யப்பட்ட நாகா தலைவர் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு கலந்து கொள்வதாக இருந்தது. இந்தியாவின் 13 ஆண்டு கால நாகா பேச்சுவார்த்தை பின்னணி வருமாறு:

1. கூர்மை அடைந்த தேசியப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மழுங்கடிப்பது, 2. போரில் உழண்டு கொண்டிருந்த நாகா மக்கள் அமைதிக் கால நாட்களில் அமைதியான சூழல் இந்தியாவுக்கு சாதகமாக அமையும், 3. போராடும் அமைப்புகளின் போர் தந்திரங்களையும், வலிமையையும், குறைபாடு களையும் புரிந்து கொண்டு புதிய வகை நடவடிக்கை மற்றும் உளவு வலைப் பின்னலை உருவாக்குவது, 4. அண்டை நாடுகளில் போராட்ட அமைப்பு களுக்கு எதிரான சூழலை உருவாக்குவது, (உம்) நேபாளம், மியான்மர், சீனா. 5. பிரச்சினைக்குரிய பகுதியில் புவியியலைப் புரிந்து கொண்டு போராடும் அமைப்பு களுக்கு எதிராக படைகளுக்கு பயிற்சி அளிப்பது.

மேற்கூறிய அம்சங்கள் கடந்த 13 ஆண்டுகாலத்தில் இந்திய பார்ப்பன அரசால் நிறை வேற்றப்பட்டு விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்பது ராணுவத் தாக்குதல்களே. அதன் ஒரு முன்னோட்டமாகத்தான் அந்தோணி சிம்ரே கைதை கருதமுடிகிறது.

இறுதியாக பயங்கரவாத மகாத்மாக்கள் ஒட்டுமொத்த அசாம் மக்களின் சுய நிர்ணய உரிமையை புதைக் குழிக்குள் புதைத்து விட்டனர். கடந்த 35 ஆண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய "உல்பா' அமைப்பை தன் நய வஞ்சக செயல்களால் இராம ராஜியத்தின் ஒரு அங்கமாகவே மாற்றி விட்டனர்.

"உல்பா' இன்று பிரதானமாக சந்திக்கும் இக்கட்டான சூழலுக்கு அதன் சில பயங்கரவாத செயலும், தூய்மையான இன வாதமும், வர்க்கக் கண்ணோட்டம் இல்லாததும் காரணமாக இருந்தாலும் நாம் முக்கியமாக பகுப்பாய்வு செய்ய வேண்டியது இந்திய மகாத்மாக்களின் ஜனநாயகத் தன்மையையே கடந்த 2009ம் ஆண்டு வரை "உல்பா' அமைதி பேச்சுவார்த்தைக்கு நான்கு முன் நிபந்தனையை முன் வைத்தது.

1. பேச்சுவார்த்தை மூன்றாம் நாடுகளில்தான் நடக்க வேண்டும். 2. பேச்சுவார்த்தை ஐ.நா. முன்னிலையில் தான் நடக்க வேண்டும். 3. நேரடியாக மைய அரசுடன் தான் பேச்சுவார்த்தை நடக்கவேண்டும். 4. அஸ்ஸாம் சுயநிர்ணய உரிமை பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வேண்டும். ஆனால் இன்றோ எவ்வித முன் நிபந்தனையும் இன்றி உல்பா பேச்சுவார்த்தைக்கு நிர்பந்திக்கப்பட்டதற்கு காரணத்தை தேடினோ மானால், இந்திய பாராளுமன்ற ஜனநாயகவாதிகளின் முகத்திரை கிழிந்து விடும். முழுமையாக தன் உளவு வலைப் பின்னலை ஊடுருவி விடுவதன் மூலமாகவும், தனக்கு சாதகமான அரசுகளை அண்டை நாடுகளில் உருவாக்கியதன் மூலமும், வளர்ந்து வரும் அஸ்ஸாம் மத்திய தர வர்க்கத்தின் மூளைகளில் தன் இராம ராஜியத்தைப் புகுத்தியதன் மூலமாகவும் கடந்த சில மாதங்களிலே ஒட்டுமொத்த "உல்பா' தலைமை நிலைய தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் விவரம் பின்வருமாறு:

1. அரீபிந்தா ராஜாக்வா' (தலைவர் உல்பா) விசாரணைக் கைதியாக, 2. பிரதீப் கோகான் கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். 3. அனுப் சிட்டை (பொதுச் செயலாளர் "உல்பா') வங்காளதேசம் சிறையில் அடைக்கப்பட்டார். 4. பீம்கான் புர்காய்ன் (அரசியல் ஆலோசகர் "உல்பா') கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 5. அசார்த் பஜாபுகான் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறார். 6. மித்தான் கா பாய் மேரி (மக்கள் செயலாளர் "உல்பா') கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 7. சித்ரா போன் அகிரிகா (பொருளியல் செயலாளர் "உல்பா') இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். 8. சுஷா சவுத்ரி (வெளியுறவு செயலாளர் "உல்பா') விசாரணைக் கைதி யாக இருக்கிறார். 9. இராஜா பவுருக்கா விசாரணைக் கைதியாக இருக்கிறார். 10. கபீரி கச்சாரி (பெண்கள் இயக்கத் தலைவர் "உல்பா') விசாரணைக் கைதியாக இருக்கிறார். 11. பிரிட்டினி டீக்கா (பண்பாட்டு செயலாளர் "உல்பா') கவுகாத்தி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மற்றும் "உல்பா' இரண்டாம் கட்ட தலைவர்களும் கைது செய்யப் பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்திய ஜனநாயகவாதிகள் பேச்சுவார்த்தைத் தொடங்க துடிக்கின்றனர். ஆனால் இன்னும் தலை மறைவாக இருக்கும் பரேஸ்பவுரா கைது செய்யப்பட்டிருக்கும் தலைவர்களின் கருத்துகளில் இருந்து மாறுபட்ட கருத்துகளையே வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

அதாவது அசாம் சுயநிர்ணய உரிமை பேச்சு வார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும் வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்தியா பயங்கரவாதிகள் அவருடைய மகனைக் கடத்தி பரேஸ்போராவைக் காட்டிக் கொடுக்கும்படி மிரட்டுகின்றனர். இந்திய அரசு தன் நயவஞ்சகத்தை திட்டமிட்டு அஸ்ஸாம் அரசியலில் பரப்பி வருகின்றனர்.

 தேசியப் பிரச்சினைகளை முனை மழுங்க வைக்க இன்று ஒட்டுமொத்த உல்பா தலைவர்களை கைது செய்து இருக்கலாம். பின் நாட்களில் போராடும் அனைத்து அமைப்புகளும் அஸ்ஸாமில் அழிக்கப் படலாம். ஆனால் இந்த இந்திய மகாத்மாக்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர்.

உல்பா போன்ற அமைப்புகள் முன் வைத்த அஸ்ஸாம் விடுதலைக் கோரிக்கையின் முரண்பாடுகள் அம்மண்ணில் இன்னும் நிலவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகையால் புதிய படிப்பினைகளுடன், புதிய எழுச்சிகளுடன் புதிய தலைமுறைகள் புதிய செயல்திட்டத்துடன் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக படையாக திரள்வார்கள் என்பது நிதர்சனம். சமீபத்தில் டெகல்கா பத்திரிகையில் காங்ளேப்பா மக்கள் புரட்சிகர கட்சி தலைமை நிலை உறுப்பினர் இபோடோம்பிக்யூமன் அளித்த பேட்டி இன்றைய வடகிழக்கு தேசங்களின் இன்றைய நிலைமைகளை நம் கண் முன் நிறுத்துகிறது.

பேட்டி பின்வருமாறு:

டெகல்கா நீங்கள் ஏன் இயக்கத்தில் இணைந்தீர்கள்?

பதில்: இபோடோம்பி க்யூமன்: நாங்கள் எங்கள் மக்களையும் தேசத்தையும் நேசித்தோம். ஆனால் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரிந்திருக்க வில்லை. எங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது எல்லாம் இழந்த இறைமையை மீட்கப்பட வேண்டும் என்பதே. இந்தியாவுடன் இணைந்தது செல்லத்தக்க ஒன்றாக இருக்கவில்லை.

எங்களுடைய அரசர் ஷைலாங் வீட்டில் தொடர்பைத் துண்டிக்கப்பட்ட நிலையில் அடைக்கப்பட்டார். துப்பாக்கி முனையில் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட நிர்பந்திக்கப்பட்டார். நாங்கள் ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. ஆகையால் எங்கள் தலைவர் வழி பின்தொடர வேண்டியிருந்தது.

டெகல்கா: நீங்கள் இந்திய அரசால் ஏமாற்றப்பட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: ஆமாம், நாங்கள் ஏமாற்றப்பட்டோம். எங்கள் தேசமும், இறைமையும் ஏமாற்றப்பட்டு கொண்டேயிருந்தது. அடுத்ததாக நாங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. ஆகையால், 1968ல் என்னுடைய 17வது வயதில் ஆர்.ஜி.எம். புரட்சிகர மணிப்பூர் அரசாங்கத்தின் கூட்டு சேர்க்கையின் ஒரு அங்கமாக நானும் இணைந்தேன். நூற்றுக்கணக்கானவர்கள் எல்லைகளைக் கடந்து கிழக்கு பாகிஸ்தானில் யுத்தம் தொடுக்கப் பயிற்சி பெற்றோம்.

டெகல்கா: 1970களில் மணிப்பூர் தலைமறைவு குழுக்கள் மூன்றாக இருந்தது. இன்று முப்பது குழுக்களாக மாறியிருக்கிறது. இப்புரிதலில் இன்னும் சில குழுக்கள் எதிர்பார்க்கலாமா? தலைமறைவு குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலாக மாறி விட்டனர். இங்கு இலட்சியங்கள் இரண்டாம் பட்சமாகவும், பணம் ஈட்டுவது முதலாக மாறியிருக்கிறது. நீங்கள் 1968ல் இணைந்தபோது இருந்த அமைப்பு முறைகள் மாறிவிட்டதாக கருதுகிறீர்களா?

பதில்: நாங்கள் 1968ல் இணைந்தபோது மிகப் பெரிய கடப்பாடும், அர்ப்பணிப்பும் நிறைந்திருந்தது. நாங்கள் உறுதியான இராணுவ கட்டுப்பாடு ஒழுக்கத்தின் கீழ் வாழ்ந்தோம். இது இன்றும் புரட்சிகர மணிப்பூர் அரசாங்க காலத்தின் தலைவர்களிடம் பிரதிபலிக்கிறது. இன்று பலக் குழுக்களின் உறுப்பாக இருந்தாலும், நான் நினைக்கிறேன் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், ஒரே கொள்கையை பின்பற்றுகிறோம். நாங்கள் சிறந்த நிபந்தனைகளுடன் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அந்த 1960 தலைமுறை சார்ந்தவர்கள் ஒரே இலக்கு, ஒரே நோக்கம், விடுதலையே இலட்சியமாக இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் மிகப் பெரிய மக்கள் பலத்தைப் பெற்றிருந்தோம். நாங்கள் அப்போது உணவுக்கும், இடத்திற்கும் வருந்தியதே இல்லை. ஆனால் இன்று அவைகள் மாறியிருக்கிறது. இந்தக் குழுக்கள் மக்கள் ஆதரவை இழந்துக் கொண்டிருக் கிறது. நாங்கள் சம்பாதித்த மக்கள் நம்பிக்கைகள் மறைந்து கொண்டிருக்கிறது.

மணிப்பூரத்தில் 39 அங்கீகரிக்கப்பட்ட இனக் குழுக்கள் இருக்கிறது. ஒவ்வொரு இனக் குழுக்களும் தனி தலைமறைவு இயக்கம் பெற்றிருக்கிறது. சமூகப் பிரச்சினைகளை கையாள்வதற்கு இம்முறை கையாளப்பட்டது. இனக் குழுக்களின் மையமாக அரசியல் கோரிக்கைகள் இருந்தது. இதுவே இயக்கம் துண்டாவதற்கு காரணமாயிற்று. ஒரு குழு தன் இனத் திற்கு மட்டுமே செயல்பட்டால் மற்றக் குழுக்களும் அவ்வண்ணமே செயல்படுவது இயற்கையே. இப்பொழுது நாகா குழுக்கள் நாகாக்களுக்காக செயல்படுகிறார்கள். குக்கீஸ், குக்கீஸ் உரிமைக்காக செயல்படு கிறார்கள். முஸ்லீம் முஸ்லீம் குழுக்களாக மட்டுமே. மெய்ட்டி, மெய்ட்டிக்களுக்காக மட்டுமே செயல்படுகின்றனர். ஒவ்வொரு இனக் குழுக்களுக்குள் உள் முரண்பாடுகள் ஏற்பட்டால் மேலும் சில உடைவுகள் ஏற்படும்.

புரட்சிகர இயக்கம் செயல்பாடு சாதாரணமானது அல்ல. மிகவும் கடினமானது. மணிப்பூர் இயக்கங்கள் இன்று நெளிவு சுழிவான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய புதிய தலைமுறையினர்க்கு இயக்கங்கள் பணம் ஈட்டும் கருவியாக மாறியிருக்கிறது. ஆனால் நான் உண்மையாகவே நம்புகிறேன். ஒரு நீண்ட போக்கு முறையின் மூலமாக எல்லா இயக்கங்களும் தேசிய பிரச்சினைகளை முதன்மையாக கருதி ஒன்றிணைந்து போராடுவோம்.

டெகல்கா: மணிப்பூரில் வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், பெட்ரோலுக்கு இரவு முழுவதும் வரிசை, ஏ.டி.எம். உபயோகப்படுத்த ஐந்து மணி நேர வரிசை, தனியார் தொழிற்சாலைகள் இல்லை. வளர்ந்தோங்கும் கள்ளச்சந்தை, நீங்கள் மக்களை நேசித்ததால் இயக்கத்தில் இணைந்தீர்கள். ஆனால் இன்று உங்கள் மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? யாரை குற்றம் சாட்டுவது?

பதில்: யார் குற்றவாளி என்று அடையாளம் காட்டுவது கடினம். நீங்கள் குட்டையை கலக்கினீர்கள் என்றால் சில மீன்கள் இறந்துவிடும். சில மீன்கள் உயிரோடு இருக்கும். நாம் முன்னரே சொன்ன மாதிரி மணிப்பூர் புரட்சிகர இயக்கம் இருட்டு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எதுவுமே தெளிவாக இல்லை. ஆனால் சுதந்திரம் வந்துவிட்டது என்றால் எல்லாமே தெளிவாகி விடும்.

டெகல்கா: சொல்லுங்கள், நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள். இதே உள் கட்டுமான வசதியுடனும், பெறும் தொழிற்சாலைகள் இல்லாத நிலையிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லாத நிலையிலும், குறைந்த மின்சார வசதியுடனும் பாழடைந்த சாலைகளுடன் மணிப்பூர் கொடுக்கப்படுகிறது. நீங்கள் மணிப்பூர் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா?

பதில்: மெய்ட்டி அரசாட்சி காலத்தில் மணிப்பூர் எந்த நேரத்திலும் சுயத் தேவையைப் பூர்த்தி செய்ய கஷ்டப்பட்டதேயில்லை. மணிப்பூர் நீண்ட காடுகளை தனதாகக் கொண்டுள்ளது. அவைகள் எண்ணற்ற கனிம வளங்களையும், மருத்துவ மகத்துவம் கொண்ட மரங்களையும் கொண்டுள்ளது. உணவு என்று வரும்பொழுது நாங்கள் அதிக அளவு பெற்றிருக்கிறோம். அரிசியை நாகலாந்துக்கும், மிசோரத்திற்கும் ஏற்றுமதி செய்வோம். அவைகளை கொண்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம். இன்று பற்றாக்குறை என்பதாயிரம் இந்திய ஆயுதப் படையால் உருவாக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்புப் படையே அதிக அளவு உணவுப் பொருட்களை உட்கொள்கின்றனர். அவர்கள் இம் மண்ணை விட்டு வெளியேறினார்கள் என்றால் உணவு பற்றாக்குறை தீர்ந்துவிடும்.

டெகல்கா: பொருளாதார முன்னேற்றத்திற்கு உங்களுக்குத் தொழிற்சாலைகள் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு மின்சாரமும், பெட்ரோலும் தேவைப்படுகிறது. இவை இரண்டும் மணிப்பூரில் கிடைப்பது மிகக் கஷ்டம். இதைத் தீர்க்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?

பதில்: எனக்குத் தெரியும், மின்சாரம் வளர்ச்சிக்கு அடிப்படையானது. ஆனால் இன்றைக்குத் தேவைக்கு அதிகமாக பெற்றிருக்கிறோம். "லொடக்' மின்சார நிலையம் 88% சதவீதம் மின்சாரத்தை உருவாக்குகிறது. வெறும் 12 சதவீதம் மட்டுமே மணிப்பூர் மின்சார நிலையத்தால் வழங்கப்படுகிறது. "லொடாக்' வட கிழக்கு மின்சார நிலையத்தின் கீழ் செயல்படுகிறது. அது மணிப்பூர் கீழ் வந்தால் நாங்கள் பெருமளவு மின்சாரத்தைப் பெறுவோம். மணிப்பூர் மியான்மர் மற்றும் அஸ்ஸாம் நடுவே அமைந்திருக்கிறது. இவ்விரு நாடுகளும் போதுமான அளவு பெட்ரோல் வளம் பெற்றிருக்கிறது. வண்டல் மண் வளம் கொண்ட மணிப்பூர் தேசம் மிகுந்த காடுகளையும், குகைகளையும் பெற்றிருக்கிறது. ஒருவேலை நாங்கள் அங்கே பெட்ரோலைக் கண்டெடுத்து விடலாம்.

அப்படி இல்லையென்றால் மியான்மரில் இருந்து வர்த்தகம் செய்து விடுவோம். மூங்கில் தொழிற்சாலை உருவாக்கப் போதுமான வளங்களை பெற்றிருக்கிறோம். அத்தொழிற்சாலைகளைக் கொண்டு பணக் கையிருப்பை அதிகப்படுத்தி வளங்களை நட்பு நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்வோம்.

டெகல்கா: அரசாங்கம் விழித்துக் கொண்டால் வளர்ச்சியை ஏற்படுத்தினால், வேலை வாய்ப்பை உருவாக்கினால், மணிப்பூரின் வலிமையை பெருக்கினால் மணிப்பூர் சுதந்திர கோரிக்கை மறைந்து விடுமா?

பதில்: நாகலாந்து சுயாட்சி உரிமையில் ஒருவேளை அடங்கிப் போகலாம். புரட்சிகர குழுக்களுக்கு சுயாட்சி உரிமைத் தேவையில்லை. எங்களுக்கு முன்னர் இருந்த சுதந்திர மணிப்பூரே தேவை. இந்திய உள் துறை அமைச்சர் பா.சிதம்பரம் திரும்பத் திரும்ப இளைஞர்கள் திசைதிருப்பப்படுவதாக விளக்குகிறார். ஆனால் நாங்கள் எங்கள் மக்களுடைய விருப்ப கடமைகளை நிறைவேற்றி வருகிறோம்.

டெகல்கா: எவ்வழி மணிப்பூர் விடுதலைக்கு இட்டுச் செல்லும்?

பதில்: ஒரு பொதுத் தேர்தல் ஐ.நா. முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். மக்களுக்கு நிச்சயமாக வாய்ப்பளிக்க வேண்டும். இந்தியாவுடன் இருப்பதா அல்லது பிரிந்து போவதா என்கிற முடிவு எடுக்க மக்கள் தீர்ப்பே இறுதியானது. எந்த ஒரு இரகசிய செயல்பாடும் மணிப்பூர் தேசத்தை தீர்மானித்து விடாது மக்களே முடிவெடுக்க வேண்டும்.

என்ன ஒரு தீர்க்கமான பேட்டி!

கடந்த சில ஆண்டுகால இந்திய அரசின் நடைமுறையும், வடகிழக்கு தேசங்களில் போராடும் புரட்சிகர இயக்கங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களும் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் உச்சி முகரும் பாராளுமன்றத்தின் முகத்திரைகள் இன்று கிழிந்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசு திட்டமிட்டு எதிர்ப்பு இயக்கங்களை உருவாக்கிடவும், நம்மிடையில் போராட உளவுத் துறையை அனுப்பி வைப்பது என்ற அரசின் குள்ளநரி வேலைகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வெறுமனே தமிழ் என்று முழங்கிய நபர்களையெல்லாம் தலைவர்களாக ஆக்கியுள்ளோம். அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை தெரிந்து கொள்ளாமலேயே, அடங்கமறு என்று முழங்கியவர்களெல்லாம் இன்று பாராளுமன்ற கட்டிடத்தின் காவல் நாய்களாக மாறியிருக்கிறார்கள்.

தமிழ் என்று திடீர் முழக்கம் எழுப்பிய இயக்குநர்கள் எல்லாம் இன்று பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஈழ மக்களின் தமிழக குத்தகைகாரர்களாக இருந்த தலைவர்கள் இந்தியாவின் செல்லப் பிள்ளையாகத் தான் இருக்கிறார்கள். அனைத்திற்கும் அருமருந்து புதிய ஜனநாயகப் புரட்சி. இறுதியில் சுயநிர்ணய உரிமை கொடுக்கப்படும் என்று முழங்கியத் தோழர்கள் கூட அரசு இயந்திரத்தின் உட் சுழற்சியிலேயே சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 சாதியப் பிரச்சினையை அடுத்தகட்டமாகக் கருதியவர்கள் நிச்சயமாக வடகிழக்கு தேசியங்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும். அங்கு இயக்கங்கள் எப்படி துண்டாகி கொண்டிருக்கிறது என்பதை உணர வேண்டும். அடிநிலையை முரண்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேசியச் சிக்கல் இரண்டாம் பட்சம்தான். ஆகையால் இதை உணர்ந்து நம் தேசிய உள் முரண்பாட்டைத் தீர்க்க போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தை உணர வேண்டும். புதியதோர் தேசத்தை உருவாக்க சாதி ஒழிப்பு போராட்டம் முன் நிபந்தனை என்பதை உணர வேண்டும்.

அப்படி உணரவில்லையென்றால் இந்திய அரசு இப்பிரச்சினையை வருங்காலங்களில் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தக் கூடும் என்பதை உணர வேண்டும். தாழ்த்தப்பட்ட சிக்கலைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மிடுக்காகச் செயல்படும் தேசியவாதிகள் வருங்காலங்களில் இந்திய இராம ராஜியத்தின் செல்லப் பிள்ளையாக மாறுவதில் வியப்பொன்றும் இல்லை. துவக்க நிலையில் இருக்கும் நாம் தமிழருக்காகக் குரல் கொடுக்கும் அனைத்து தலைவர்களையும், சமூக விஞ்ஞானக் கூடத்தில் பரிசோதித்த பின்னர்தான் நம் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வடகிழக்கு தேசிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இன்று உடனடி தேவையாக தேசிய விடுதலையை முன் நின்று நிறைவேற்ற தலைமறைவு இயக்கத்தின் முக்கியத்து வத்தை உணர வேண்டும்.

ஆலமரமாக இயங்கிய வடகிழக்கு தேசங்களின் இயக்கங்களே இன்று நிலை தடுமாறிக் கொண்டிருக்கும்போது கடந்த சில ஆண்டுகளாக வாய்ச்சவடாலில் மூழ்கிய தமிழ் தேசியம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை சுய பரிசீலனை செய்ய வேண்டும். மேற்கூறிய புரட்சிகர இயக்கங்களின் படிப்பினைகளை உணர்ந்து புதிய தமிழகம் படைக்க உறுதிமிக்க இயக்கங்களை கட்டியமைப்போம்!

Pin It