இறையாண்மையுள்ள தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது என்ற தீர்மானத்தைத் தந்தை செல்வா தலைமையில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாகக் கூடி ஒருமனமாக 1976 மே மாதம் 14 ஆம் தேதி வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றினர். அதையொட்டித் தமிழீழம் அமைப்பதற்காகப் போராளிக் குழுக்கள் உருவாயின. 1983 இல் சிங்கள இன வெறியர்கள் தமிழீழ மக்கள் மீதான பயங்கரத் தாக்குதல் வெறிச் செயலுக்குப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆய்த மேந்தினர்.

தொடக்கக் காலத்தில் போராளிக் குழுக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட இந்தியஅரசு இராசீவ் காந்தி காலத்தில் போராளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. அமைதிப்படை என்ற அக்கிரமப் படையை அனுப்பி ஏராளமான தமிழ் இளைஞர்களைக் கொன்று குவித்துத் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளைச் செய்து கொன்றது. அதன் விளைவாக ஏற்பட்ட இராசீவின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசு போராளிக் குழுக்களை ஒழிக்கத் தீவிரம் காட்டியது.

இந்திய அரசின் உதவியைப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை இன வெறி சிங்கள அரசு. சீனா, பாக்கிஸ்தான் முதலிய நாடுகளின் உதவிகளைப் பெற்றும், தன்நாட்டில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தும் 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பொதுமக்களையும் பல ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் வைத்து உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி அவர்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது. அய்க்கிய நாடுகளின் அவையையே துரும்பென மதித்து, எந்த நாட்டுத் தூதுக் குழுக்களையும் முள்வேலி முகாமைப் பார்வையிட அனுமதி மறுத்துவருகிறது.

இந்தப் போரின்போது பல வெளி நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்களும், தப்பிச் சென்ற விடுதலைப்புலிகளும் கடந்த சில மாதங்களாக ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ ஒன்றை உருவாக்கப் பெருமுயற்சி எடுத்து அமைத்துள்ளனர்.

1.     தமிழர் ஒரு தேசிய இனம், வடக்கு - கிழக்கு தமிழர் தாயக நிலம், ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத் தமிழரின் அரசியல் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பது இதன் நோக்கமாகும்.

2.     சிங்களத் தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துதல்

3.     உலகின் பல அரசுகளுடனும், பன்னாட்டு அரசுகள் சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

4.     உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

5.     தமிழ் மற்றும் முசுலீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைதல். இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்கு பெரும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

6.     வடக்கு - கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களின், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்து முகமாகப் பன்னாட்டு அரசுசார் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படுவதனையும் உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

ஈழத் தமிழர்கள் வாழும் நாடுகளில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

       வாக்காளர்கள் சதவீதம்

சுவிட்சர்லாந்து 16,441 99.49%

டென்மார்க்    4,147 98.2%

இத்தாலி       3,680 98.8%

ஆலந்து      2,750 99.2%

செருமனி      23,089 99.2%

பிரிட்டன்      64,692 99.33%

பிரான்சு       31,148 99.32%

கனடா 48,583 99.82%

நார்வே 5,633 98.95%

ஈழத்தில் தமிழீழம் அமைய வேண்டும் என மேற்கண்ட விழுக்காட்டளவில் வாக்களித்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரச அமைய மதியுரை குழுவிற்காக அவர்கள் தங்களின் பேராளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கனடா - 25, பிரிட்டன் - 20, பிரான்சு - 10, சுவிட்சர்லாந்து - 10, செருமனி - 10, அமெரிக்கா - 10, ஆஸ்திரேலியா - 3, நார்வே - 3, நெதர்லாந்து, பெல்சியம் - 3, நியுசிலாந்து - 2, மொத்தம் - 115. பேராளர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதுவன்றி மேலும் இருபது உறுப்பினர்களை இந்தப் பேராளர்கள் அமர்த்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்கா - 2, சிங்கப்பூர் - 2, மலேசியா - 3, மத்திய கிழக்கு - 2, மாலத்தீவு - 1, ஆசியநாடுகள் - 1, பசுபிக்தீவுகள் - 1, அய்ரோப்பிய நாடுகள் - 1, தென் அமெரிக்கா - 1, ஆப்பிரிக்கர் - 1, இந்தியர் - 1. 16.02.2010 இல் இணையத்தில் கிடைத்த சேதிகளின்படி இக்குழு செயல்பட்டு வருகிறது. உருத்திரகுமாரன் இக்குழுவை ஒருங்கிணைத்துத் திறம்படச்செயல்பட்டுவருகிறார். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் இது ஒரு திருப்புமுனை ஆகும்.

Pin It