அண்மையில் இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட இரண்டு தீர்ப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விஷவாயுப் படுகொலை வழக்கை விசாரித்த போபால் முதன்மை நீதிமன்றம் அளித்த தீர்ப்பும், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும்தான் அவை. போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய அளவிலும், பேருந்து எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தமிழக அளவிலும் பரபரப்பாகப் பேசப்பட்டன.

    Bhopal-Gas-Tragedy-01போபால் வழக்கில் வெளியான தீர்ப்பு அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நீதித்துறைக்கே அவமானம் என்று கண்டிக்கப்பட்டது. அதே சமயம் தருமபுரி படுகொலை வழக்கில் வெளியான தீர்ப்பு பரவலாக அனைவராலும் பாராட்டப்பட்டது. மரண தண்டனையை எதிர்க்கும் கருத்துடையவர்கள் கூட இத்தீர்ப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை அநீதியாகக் கருதவில்லை. இந்த இரண்டு தீர்ப்புகளும் நம்முடைய நீதியமைப்பின் இரண்டு முரண்முகங்களைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் வழங்கப்படும் நீதிக்கு இரண்டு முகங்கள் எல்லாம் இல்லை. எல்லாம் ஒரே முகம்தான்.

    இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போபால் விஷவாயுப் படுகொலை வழக்கில் மொத்தம் 178 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 3008 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கேசப் மகேந்திரா உள்ளிட்ட எட்டு பேரைக் குற்றவாளிகளாக இந்தத் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் உயிருடன் இல்லை. மீதமுள்ள ஏழு பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதே சமயம் அந்த ஏழு பேருக்கும் ஜாமீனும் வழங்கப்பட்டது. (இந்த படுகொலைச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டிய வாரன் ஆண்டர்சன் பற்றி இந்தத் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவே இல்லை.) அதாவது ஏறத்தாழ இருபதாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமாயிருந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை வெறும் இரண்டு ஆண்டுகள் சிறை.

    பத்தாண்டுகளுக்கு முன் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் தமிழ்நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். தருமபுரி அருகே சுற்றுலா சென்ற கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து மீது தீ வைத்துக் கொளுத்தினர். இதில் மூன்று மாணவிகள் கொடூரமாக எரிந்து சாம்பலாயினர். இந்தக் குற்றச்செயலில் நேரடியாக ஈடுபட்ட நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கு சேலம் நீதிமன்றமும், சென்னை உயர்நீதி மன்றமும் உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கின. தற்போது உச்சநீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளது. அதாவது மூன்று மாணவிகள் கொடூரமாக எரிந்து சாம்பலாவதற்குக் காரணமாயிருந்த மூவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மரணம்.

    மூன்று பேரின் சாவுக்குக் காரணமாயிருந்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் இந்திய நீதித்துறை, இருபதாயிரம் பேரின் சாவுக்குக் காரணமாயிருந்தவர்களுக்கு வெறும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்குவதோடு ஒதுங்கிக் கொள்கிறது. இதில் விநோதம் எதுவும் இல்லை. இரண்டு தீர்ப்புகளையும் உற்றுக் கவனித்தால் ஒன்று புரியும். நம் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தண்டனைகள் குற்றங்களை வைத்து நிர்ணயிக்கப் படுவதில்லை. குற்றம் சுமத்தப்பட்ட நபர்களின் அதிகாரம், செல்வாக்கு, வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

    போபால் விஷவாயுப் படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகள். அவர்கள் இதைவிடக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட அவர்களுக்கு நம் நீதிமன்றங்களில் உச்சபட்ச தண்டனை வழங்கப்படுவதாக கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாது. ஆனால் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகக் கொள்ளமுடியாது. அதிகார வர்க்கத்தின் தூண்டலால் உணர்ச்சிவசப்பட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள்தான். இவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை வழங்கப்படுவது நம்முடைய நீதியமைப்பில் எதிர்பார்க்கக் கூடியதுதான்.

    மூன்று அப்பாவிப் பெண்களை இரக்கமின்றி உயிரோடு எரித்துக் கொன்றதற்குரிய தண்டனை இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் இதற்கும் மேலான குற்றங்களில் ஈடுபடும் அதிகாரவர்க்கப் பிரதிநிதிகளுக்கு இது போன்ற தண்டனைகள் ஏன் வழங்கப்படுவதில்லை என்று கேட்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

    தருமபுரியில் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட மாணவிகளான காயத்ரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகியோருக்கும் ஜெயலலிதாவின் பிளசன்ட் ஸ்டே ஊழலுக்கும் ஏதாவது தொடர்புண்டா? அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கும் இம்மாணவிகளுக்கும் ஏதாவது தொடர்புண்டா? அ.தி.மு.க.,வினரின் வன்முறைகளுக்கும் இம்மாணவிகளுக்கும் ஏதாவது தொடர்புண்டா? எதுவுமில்லை. ஆனால் இந்தத் தொடர்ச்சியின் விளைவில் பாதிக்கப்பட்டு உயிரை விட்டிருப்பது இந்த அப்பாவி மாணவிகள்.

    போபால் விஷவாயுக் கசிவினால் நிகழ்ந்த பல்லாயிரக்கணக்கானோர் படுகொலைக்கு அந்நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனும் பொறுப்பு உண்டு என்பது தார்மீக அடிப்படையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதேபோல் அரசியல் வன்முறைகளில் உயிர்கள் பலியாவதற்கு அந்தந்த அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் பொறுப்பு உண்டு என்பதும் உணரப்பட வேண்டும்.

    அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், அரசியல் தலைவர்கள் இறக்கும் போதும் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது தமிழ்நாட்டின் தலைவிதியாகிவிட்டது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நம் நீதித்துறைக்கு உண்டு. எனவே இவ்வாறான சமயங்களில் நிகழும் குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளில் அந்தந்த கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் பெயரையும் சேர்க்க வேண்டும். சட்டம், ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக ஓர் அரசியல் கட்சியே இருக்க நேரும் தருணங்களில் அதனைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய பொறுப்பு அக்கட்சியின் தலைமைக்குக் கண்டிப்பாக உண்டு. அவ்வாறு வைக்கத் தவறும் பட்சத்தில் அதுவும் ஒரு குற்றச் செயலாகவே கருதப்படவேண்டும். அதற்குரிய தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.

    இல்லையென்றால் இனி வரும் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் இடையிலான சின்னச்சின்ன வேறுபாடுகளும் மறைந்துவிடும்.

- கணேஷ் எபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It