இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, நவ 17, 2015

பிரான்சில் உள்ள பாரீஸ் நகரில் நவம்பர் 13, 2015 அன்று மாலை நிகழ்ந்த கொலைகாரத்தனமான தாக்குதல்களில் 120-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதோடு, நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல்களை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. லெபனான் பெய்ரூட்டில், 43 பேர் கொல்லப்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த பயங்கரவாதத் தாக்குதலையும் கெதர் கட்சி கண்டிக்கிறது.

இதற்கும் முன்னர் அக்டோபரில் துருக்கியின் தலைநகர் அன்காராவில் நடைபெற்ற தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களில் நூறு பேர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்துள்ளனர். இப்படிப்பட்ட கொடூரமான குற்றங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட எல்லா குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த துயரத்தையும், ஆதரவையும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

இந்தக் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது. அதன் இலக்காக இருந்த இந்த உழைக்கும் மக்கள் எந்த வகையிலும் அமெரிக்காவும், அதனுடைய கூட்டாளிகளும் கட்டவிழ்த்து விட்டுள்ள அரசு பயங்கரவாதத்திற்கும், போர்களுக்கும் பொறுப்பாளிகள் அல்ல.

பாரீசில் நடைபெற்ற இந்தக் கொலைகளுக்கு, சிரியாவிலும், இராக்கிலும் செயல்பட்டு வரும் ஒரு குழுவை பிரான்சின் அரசாங்கமும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊடகங்களும் குற்றஞ்சாட்டியுள்ளன. இதைக் காரணமாகக் காட்டி, சிரியாவில் பயங்கரமான அளவிற்கு இராணுவத் தலையீட்டைத் தீவிரப்படுத்தப்படுவதை நியாயப்படுத்துகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நேட்டோ கூட்டாளிகளோடு சேர்ந்து பிரான்சு சிரியா மீது பெரிய அளவில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆசாத் அரசைத் தூக்கியெறிவதற்காக சிரியா மீது இராணுவத் தலையீட்டை மேலும் தீவிரப்படுத்துவதென துருக்கியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ சக்திகள் தீர்மானித்துள்ளன.

பிரான்சில் அரசாங்கம், ஒரு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. முஸ்லீம் மக்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்ரிக்காவின் போர் நடந்துவரும் நாடுகளிலிருந்தும், சிரியாவிலிருந்தும் தப்பிஓடி வந்து ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் தான் இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பு என்பது போல அவர்களுக்கு எதிராக மிகப் பெரிய பரப்புரை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எந்த அகதிகளையும் ஏற்றுக் கொள்ள மாட்டோமென போலந்தின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், மக்களுடைய உரிமைகளை மேலும் வெட்டிக் குறைப்பதையும், ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்துவதையும் தடுப்பதற்கு பிரான்சு மற்றும் எல்லா நாட்டு உழைக்கும் மக்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். மக்களுடைய உரிமைகளை மேலும் வெட்டிக் குறைப்பதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க அவர்களுடைய அரசாங்கங்கள் திட்டமிட்டு வருவதை துருக்கியில் நடைபெற்ற ஜி-20 விவாதங்களின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரிட்டனின் பிரதமர் கேமரூனும், பிரான்சின் பிரதமரும் மற்றும் பிற தலைவர்களும் வெளிப்படையாகவே பேசியிருக்கின்றனர்.

பாரீசிலும் மற்ற இடங்களிலும் நடைபெற்ற இந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்பது குறித்து இந்திய மக்கள் அமைதியாகவும், தெளிவாகவும் சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏகாதிபத்தியர்களுடைய பரப்புரைக்கும் அதை ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பக் கூறிவரும் ஊடகங்களுக்கும் நாம் பலியாகிவிடக் கூடாது.

கடந்த ஐந்தாண்டுகளாக சிரியாவில் ஒரு இரத்த வெள்ளம் ஒடுகின்ற உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது என்பதும் அதில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டும் வருகிறார்கள் என்பதும் நன்கறிந்ததாகும்.

சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்காவும் அதனுடைய நேட்டோ கூட்டாளிகளான பிரான்சு, பிரிட்டன், துருக்கி போன்றவர்களும், சவுதி அரேபியாவும் வெளிப்படையாகவே தலையிட்டு வருகின்றனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவர்கள் லிபியா, இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளில் செய்து வருவது போலவே, சிரியாவிலும் அங்குள்ள எண்ணெற்ற குழுக்களுக்கு ஆயுதங்களும் நிதியுதவியும் வழங்கி வருகின்றனர்.

அநியாயமான இந்த இராணுவத் தலையீடுகளுக்கு எதிராக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாரீசில் நடைபெற்ற இந்தக் கொடுமையான நிகழ்வுகளுக்குப் பின்னரும், சிரியாவில் இராணுவத் தலையீட்டுக்கு எதிராக பிரான்சில் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் பிற நாடுகளில் அமெரிக்காவும், அதனுடைய கூட்டணி நாடுகளும் கடைபிடித்துவரும் ஆட்சி மாற்றக் கொள்கை, இந்த நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதை உலகின் உழைக்கும் மக்களும், அமைதியை விரும்பும் மக்களும் அதிக அளவில் உணர்ந்து வருகிறார்கள்.

"பயங்கவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் எண்ணெற்ற நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் ஒடுக்குமுறையான நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளி வகுப்பினரிடமும், மக்களிடமும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேற்காசியாவிலிருந்தும், வட ஆப்ரிக்காவிலிருந்தும் தப்பி ஓடிவரும் அகதிகளின் நிலைமை ஐரோப்பாவெங்கும் மக்களை உலுக்கி வருத்தப்பட வைத்திருக்கிறது. இந்த அகதிகளைத் தங்களுடைய நாடுகளில் அனுமதிக்க வேண்டுமென அவர்கள் தங்களுடைய அரசாங்கங்களைக் கோரி வருகின்றனர்.

இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில், பாரீசில் நடைபெற்ற இரத்தக் கொலைகளைப் பயன்படுத்தி, சிரியாவிலும் பிற நாடுகளிலும் இராணுவத் தலையீடுகளைத் தீவிரப்படுத்துவதற்கு ஆதரவாக வெறியைத் தூண்டிவிடவும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஏகாதிபத்திய சக்திகள் தங்களுடைய நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, கடந்த காலத்தில் பொய்யான கொடி நடவடிக்கைகளை எண்ணெற்ற சூழ்நிலைகளில் எடுத்திருப்பதை இந்திய மக்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு பொய்யான கொடி நடவடிக்கையில் முதலாவதாக நடவடிக்கையின் உண்மையான நோக்கமானது மூடி மறைக்கப்பட்டு, இன்னொரு நோக்கமானது முன் வைக்கப்படுகிறது.

மேலும் இந்த பொய்யான கொடி நடவடிக்கைகளை உண்மையிலேயே நடத்துபவர்கள் அவர்களுடைய குற்றவியலான கொலைகாரக் கைகளை மறைப்பதற்கு, வேறு ஏதாவதொரு சக்தியை சுட்டிக்காட்டக் கூடிய ஒரு தடையத்தை வேண்டுமென்றே விட்டுச் சென்று முன்னெச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்.

உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா முயற்சியெடுத்து வரும் பின்னணியில் பிரான்சிலும், மற்ற நாடுகளிலும் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும். தங்களுடைய இந்த நோக்கத்தை அடைவதற்காக பிரிட்டன் மற்றும் பிரான்சு உட்பட்ட அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியக் கூட்டணி எல்லா இடங்களிலும் குழப்பத்தையும், வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.

ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக இன்னொரு நாட்டில் தலையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லையென இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி உறுதியாக நம்புகிறது. அரசு பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இல்லை.

Pin It