பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளில் பெரியார் - அம்பேத்கர், முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக் கூட்டங்களும், ஒருநாள் பெரியாரின் பயிலரங்கு நிகழ்ச்சியும் எழுச்சியோடு நடத்தப்பட்டன.

சனவரி 29, சனி மாலை பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவீரன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக் கூட்டம் நகர செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட கழகத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, பொள்ளாச்சி நகர பொருளாளர் கலை இராசேந்திரன், ஆனைமலை நகர செயலாளர் வே. அரிதாசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் சம்பத் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர்கள் சி. விஜயராகவன், ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் சு. துரைசாமி, மாவட்ட செயலாளர் காசு. நாகராசன் ஆகியோரது உரைகளுக்குப் பின்னால் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களுக்கு நேர்ந்த, நேர்கிற பேரபாயங்கள், பார்ப்பன - பனியா - பன்னாட்டு சக்திகளின் சதிகள், இவற்றிற்கெதிராக தமிழர்கள் செய்தாக வேண்டிய பணிகள் குறித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுச் செயலளார் விரிவான உரை நிகழ்த்தினார். அவரது உரை தமிழர்கள் முன் வைக்கப்பட்ட வேலைத் திட்டங்களாகவும், தமிழ்ப் பகைவர்களுக்கு விடுத்த அறைகூவல்களாகவும் அமைந்தது. இந்நிகழ்வில் ம.தி.மு.க., நாம் தமிழர், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டஇயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

மறுநாள்  30.1.2011 ஞாயிறு காலை ஆனைமலை  ரோஸ் மகாலில் பொள்ளாச்சி வட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் பேரவை அமைப்பாளர் சி. விசயராகவன், கடவுள் மறுப்பு முழக்கங்களைக் கூறி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி நகர செயலாளர் வே. வெள்ளிங்கிரி தோழர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து, ‘பெரியார் தொண்டர்களின் பெரும் பணி’ எனும் தலைப்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் சு. துரைசாமி தொடக்க உரையாற்றினார்.

முதல் அமர்வின் இறுதியில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியாரின் தேவை - அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் நிறைவுரை ஆற்றினார். பயிற்சியாளர்கள் எழுப்பிய வினாக்களக்கு விரிவாக விளக்கமளித்தார். மதியம் தோழர்கள் அனைவருக்கும் அசைவ விருந்தளிக்கப்பட்டது.

பிற்பகலில் தொடங்கிய இரண்டாவது அமர்வில் “களப்பணியில் தோழர்கள்” எனும் தலைப்பில், மடத்துக்குளம் இரா. மோகன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து ‘கடவுள் மறுப்பு கட்டாயம் - ஏன்?’ எனும் தலைப்பில் சிற்பி இராசன் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து மாலை 7 மணியளவில் சுயமரியாதை போராளி ஆணைமலை நரசிம்மன் நகரில், பெரியார் அம்பேத்கர் நினைவேந்தல் பொதுக் கூட்டம் நகர செயலாளர் வே. அரிதாசு தலைமையில் நடைபெற்றது. சிற்பி இராசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சியைக் காண பெண்களும், சிறுவர்களும் பெருமளவில் திரண்டு வந்தனர். கடவுள், சாதி, மதம், மூடச் சடங்குகள் குறித்து சிற்பி இராசன் செயல்முறை விளக்கமாய் ஆற்றிய உரை கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இறுதியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது, அரசியல் கட்சிகள் சாதி மதவாத இயக்கங்கள், ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றில் தமது உழைப்பை வீணடிக்கிற தமிழ் இளைஞர்களால் அவர்களது சொந்த வாழ்வு மட்டுமின்றி, சமூக நலனும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றுவதால் தமது சொந்த வாழ்வு நலனும், சமூக நலனும் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பதையும் ஒப்பிட்டுக் காட்டி, பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பெரியாரியலைப் பின்பற்றவும், பரப்பவும் முன் வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவர் கேட்டுக் கொண்டபடியே கூட்ட முடிவில் பத்துக்கும் மேற்பட்ட புதிய இளைஞர்கள் முன் வந்து பெயர் முகவரிகளைக் கொடுத்துச் சென்றனர்.

சட்ட எரிப்புப் போராளியும், மூத்த பெரியார் தொண்டருமான ஆனைமலை ஆறுமுகம் மற்றும் ஆனைமலை நரசிம்மன் நண்பர்கள் வந்திருந்து கழகப் பணிகளைப் பாராட்டி பொதுச் செயலாளரிடம் பேசிக் கொண்டிருந்தனர். நிகழ்வுகளில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் வெள்ளமடை நாகராசு, திருப்பூர் மாநகர செயலாளர் முகில் இராசு, ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரியார் மணி, இரா. சீனிவாசன், த. கண்ணன், ஆனந்த், நகர கழகப் பொறுப்பாளர்கள் பெரியார் மணி, இரா. சீனிவாசன், த. கண்ணன், ஆனந்த், நகர கழக பொறுப்பாளர்கள் த. இராசேந்திரன், அப்பாதுரை, கதிரவன், நிர்மல் மற்றும் தமிழ்நாடு மாவணவர்கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகளை பகுதித் தோழர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Pin It