தாஷா மனோரஞ்சன் ஏல் சட்டக் கல்லூரிப் பட்டதாரி. இலங்கை மக்களுக்கான சமத்துவம் மற்றும் துயர்துடைப்பு என்ற அமைப்பின் இயக்குனர். பெண்ணியங்கள், கட்டமைப்பு வன்முறை மற்றும் இடைக்கால நீதி மாநாடு என்ற பெயரில் டொரண்டோவில் யார்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டதில் அவர் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்:

தமிழ்ப் பெண்கள் இலங்கையில் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் இன மோதலில் தகவுப்பொருத்தப்பாடற்றுப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சமூகங்களின் கட்டமைப்புத் தகர்வு, சமூக நெறிமுறைகளின் தேய்வு ஆகிய இரண்டுக்குமே முகங்கொடுத்து வந்துள்ளனர். எதிர்வினையாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1980கள் தொடங்கி 2009 வரை சேரும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் சென்றது.

dasa manoranjanஇந்த மோதலுக்கு நடுவே வாழ்க்கை சென்றதன் காரணமாக, வழிவழியான தமிழ் ஆண் பெண் உறவு நிலைகளில் மாற்றங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தமிழ்ச் சமுதாயத்துக்குள் பெண்கள் வரலாற்று வழிப்படி பண்பாட்டுக் காலவர்களாகவும், முதன்மையாக வீட்டுப் பராமரிப்பாளர்களாகவும் மதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். பெற்றோர்கள் பெண்களைக் குழந்தைப் பருவந்தொட்டு திருமணம் வரை கண்ணுங்கருத்துமாய் ‘பாதுகாத்துக்" கட்டுப்பாட்டுடன் வளர்ந்து வந்தார்கள். பிறகு அவர்கள் மீதான அதிகாரம் கணவர்களின் கைக்கு மாறும். பெண்களின் வரம்புகள் இயல்பாகவே அவர்களின் இல்லந்தாண்டிச் சென்று விட முடியாது என்பதால், அவர்கள் பொதுவாக அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். பெண்களைப் புனிதத்தைக் காத்துப் போற்றுபவர்களாகவே காட்டும் வழக்கத்தைச் சமுதாயம் கடுமையாகக் கடைப்பிடித்து வந்தது. பெண்களைச் சீராட்டிப் பாராட்டும் பண்பு தமிழ்ப் பெண்களுக்குப் போரின்போது ஏற்பட்ட வன்கொடுமை அனுபவங்கள் தனிமனிதர்கள் என்ற முறையில் மட்டுமல்லாமல், தமிழ்ச் சமூகம் முழுமைக்குமே பெருந்துன்பமாகிவிட்டது.

மிக அண்மை ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்தோரில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கையே மிகுதி. பெண்கள் போராளிகள் ஆனதற்குப் பல தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், இலங்கை இராணுவத்தின் கைகளில் அநீதியை அனுபவித்ததே பலரும் இணைந்ததற்கு முக்கியக் காரணம். பெரும்பாலான பெண்கள் பெரிதும் ராணுவமயமாக்கப்பட்ட வடக்கிலிருந்து வந்தவர்கள். இந்தப் பகுதியில் நிலவி வந்த நிரந்தரமான பாதுகாப்பின்மை விடுதலைக்கும், தனிநாட்டுக்குமான ஆர்வத்தையும், இதன் தொடர்விளைவாகத் துவக்கேந்துவதற்கான ஊக்கத்தையும் கிளறி விட்டது. செந்துளசி என்னும் விடுதலைப் புலிப் போராளி பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் நடந்தவற்றை வர்ணித்தாள்: அவளின் ஒன்று விட்ட சகோதரி வீட்டுக்குத் திரும்பும் வழியில் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டாள். இதனால் பாதிப்புற்றவள் 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து புலிகள் அமைப்பில் சேர்ந்ததாகவும் அவள் உணரும் இந்தக் கையறு நிலைக்கு எதிராகவே போராடி வருவதாகவும் செந்துளசி கூறினாள். என்னிடம் பேசுகையில், அவள் என்னை அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்று மற்றவர்களிடம் தமிழர்களின் உறுதிப்பாட்டை எடுத்துச் சொல்லும்படிக் கூறினாள். சிறுமியர் பென்சில்களையும் புத்தகங்களையும் கையிலேந்துவதற்குப் பதிலாகத் துவக்குகளைத் தூக்குவதற்கும், பள்ளிகளில் படிப்பதற்குப் பதிலாகத் தமிழீழ எல்லைகளைப் பாதுகாத்து நிற்பதற்கும் காரணம் என்ன என்று மற்றர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படிக் கூறினாள். தமிழ்ப் போராட்டத்தின் மீது அவளுக்கிருந்த தீவிரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் கண்டு திகைத்துப் போனேன். அவள் மிக எளிமையாக, ஆனால் இதயத்தை நொறுக்கும் நேர்மையுடன் பேசினாள்.

உள்ளூர் உளத்தியல் மருத்துவர்கள் குறிப்பிட்டது என்னவென்றால் தமிழ்ப் பெண்களைப் பொறுத்த வரை, ‘போராளிகளாகச் சேர்வது விடுதலைக்கான செயலாக இருந்தது. அவர்களுக்கு அதிக சுதந்திரமும் அதிகாரமும் தருவதாக இருந்தது... தமிழ்ச் சமுதாயம் எப்போதுமே பெண்களை அடிமை நிலையிலே வைத்து வந்துள்ளது. விடுதலைக்குரிய பங்கை ஆற்றியது போர்தான்." நான் பேசிய பெண் தமிழ்ப் போராளிகள் பலரும் அவர்களின் இனவுரிமைக் காப்பு, தமிழ்ச் சமுதாயத்திலான அவர்களின் அடிமை நிலை ஆகிய இரண்டுக்குமான விடுதலைக்காகத் தாங்கள் போராடுவதாகக் கூறினர்.

புலிகளின் அமைப்பில் முதலில் பெண்கள் சேரத் தொடங்கிய போது, காயம்பட்டோரைக் கவனிப்பது போன்ற சேவையும் ஆதரவும் நல்கும் பணிகளைத்தான் முதன்மையாகச் செய்து வந்தனர். பின்னர்தான் முன்னணித் தளபதிகளானார்கள். இது முதலில் பழமைவாதத் தமிழ்ச் சமுதாயத்துக்குள்ளேயே எதிர்ப்பைச் சந்தித்தது. தொடக்கக் காலப் பெண் போராளிகள் பலரும் குறிப்பிட்டது என்னவென்றால், ஆண் புலிகள் ‘அவர்கள் குடிமக்களோடு சேர்ந்து தப்பிச் செல்லவே விரும்பினர்’ எனக் கதைத்தனர். பெண்கள் ஆண் புலிகளிடம் தங்கள் வலிமையையும் தகுதியையும் மெய்ப்பித்துக் காட்டி அவர்களின் மதிப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஒரு போராளி என்னிடம் சொன்னார், பெண்கள் தங்களை மெய்ப்பித்துக் காட்ட "அவர்களுக்குப் பெரிய பெரிய குண்டுகளைத் தூக்கிக் காட்டம்படி அறைகூவல் விடுக்கப்பட்டது". ஆனால் பெண்கள் தொடர்ந்து தங்களை மெய்ப்பித்துக் கொண்டு ஆண் பெண் இடைவெளியைக் குறைத்தனர். இசைமொழி என்னும் போராளி கூறுகிறார், இலக்கைக் கூர்மையாகச் சுடுதல் போன்ற குறிப்பிட்ட சில போரியல் துறைகளில் பெண் போராளிகள் ஆண்களை விஞ்சி நின்றார்களாம்! தமிழ்ப் பெண்கள் போர்க்களம் வரதட்சணைப் பழக்கத்தையும் ஒழித்துக் கட்டியது!

ஆனால் இந்தப் போராட்ட வீர வாழ்க்கையை முடித்து வைத்த அந்த 2009க்குப் பிறகு பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை மிகவும் கொடூரமானது . . .

அறிக்கை வேண்டி ஐநா பொதுச் செயலரால் அமர்த்தப்பட்ட வல்லுனர்களில் ஒருவராகிய யாஸ்மின் சூகா 2014 மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையின்படி, "ஆள்கடத்தல், தன்னிச்சைக் கைதுகள், சித்திரவதை, கற்பழிப்பு, பாலியல் வன்முறை ஆகியவை போருக்குப் பிறகு மிகுந்து விட்டன... இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் பரவலாகவும் திட்டமிட்டும் நடக்கும் இத்தகைய அத்துமீறல்கள் மூலம் தெரிவது என்னவென்றால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட செயல்களுக்கு அரசாங்கத்தின் உயர்மட்ட ஒப்புதல் இருக்கிறது."

இராணுவப் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த பலரிடமிருந்து பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் அதிர்ச்சியூட்டுவதாய் உள்ளது. ஒரு படையாள் தன்னிடம் கூறிய ஆபாசச் சொற்களை ஒரு பெண் வெளியிட்டாள்: "நீ தமிழ்ப் பெண், நீ என் அடிமை, நாங்கள் உன்னைக் கர்ப்பமாக்கினால் கருத்தடை செய்து விடுவோம். நீ தமிழச்சி. உன்னைக் கற்பழிக்கத்தான் செய்வோம். இப்படித்தான் உன்னை நடத்துவோம். கருத்தடை செய்த பிறகு நீ மீண்டும் கற்பழிக்கப்படுவாய்."

வட இலங்கையில் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் நீண்ட காலக் கருத்தடைக்கான அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுவது குறித்து உள்ளூர் மனித உரிமைக் குழுக்கள் அண்மையில் தெரிவித்துள்ளன.

2007 மே மாதம் கொழும்புவில் அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கிடைத்த கமுக்கமான தந்திச் செய்தியின்படி, ‘சின்னத்தம்பி என்னும் மருத்துவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக ஐயப்படும் பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடைகள் செய்துள்ளார். வழக்கமான சோதனைகள் என்ற பெயரில் இவை நடந்தன.’

2012இல் வெளியான நலவாழ்வுத் துறை அறிக்கை ஒன்றின்படி, முல்லைத் தீவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் 30 மடங்கு அதிகமாகக் கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுக்கும் பெண்களைச் செவிலியர்கள் எதிர்காலத்தில் வேறெந்த சிகிச்சைகளும் உங்களுக்குக் கிடைக்காதென மிரட்டுகிறார்கள்.

இலங்கையில் வாழ்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பணியாற்றும் அமைப்பாகிய மனித உரிமைகளுக்கான இல்லம் (எச்எச்ஆர்) கூறுவதன்படி, மத்திய இலங்கையில் கருத்தடைக்கு சம்மதிக்கும் பெண்களுக்கு 500 ரூபாய் தரப்படுகிறது, இவ்வகையில் 80 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தமிழ்ப் பெண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது சிறு பணமாய்த் தெரிந்தாலும், பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்

களாகிய இந்த மக்களுக்குப் பெரும்பணமே. இவர்களின் தொகை 1995 முதல் ஒவ்வோர் ஆண்டும் 5 விழுக்காடு குறைந்து வருகிறது. ஆனால் ஒட்டுமொத்த மக்கள்தொகை வளர்ச்சி 14 விழுக்காடு ஆகும். தமிழ் மலையகத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் இந்தத் திட்டமிட்ட அழிப்பு அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடைபெற்று வருவதாக எச்எச்ஆர் கூறுகிறது.

இதற்கு நேர்மாறாக, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் இராணுவ அதிகாரிகளுக்கு அரசு ஒரு லட்சம் பணம் தருகிறது. இது சிங்களர்களின் எண்ணிக்கை ஊதிப் பெருத்துச் செல்வதற்கே வழிவகுக்கும்.

தமிழீழப் பெண்களுக்கு நடக்கும் கட்டாயக் கருத்தடைகள் இனப்படுகொலைக்கு உறுதியான சான்றுகள் ஆகும். ஐநா பாதுகாப்பு ஆணையம் இந்த இலங்கை நடவடிக்கைகளைப் போர்க் குற்றங்களுக்கான புலனாய்வு மற்றும் தண்டனைக்கான பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும்.

இப்போது வடக்கில் மூன்று தமிழர்களுக்கு ஒரு படையாள் என்னும் நிலை உள்ளது. மிக உயர்ந்த இராணுவமயமாக்கல் என்பது பெண்களையே அதிகம் பாதிக்கிறது. போர் முடிவுக்கு வந்த பிறகு சுமார் 90 ஆயிரம் பெண்கள் வீட்டுப் பொறுப்பை ஏற்று நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் வேட்டையாடும் இராணுவத்தினருக்கு இந்தப் பெண்கள் எளிய இலக்காகி விடுகின்றனர்.

பெண்ணுரிமைகளில் கவனம் செலுத்தி வரும் உள்ளூர் அரசுசாரா அமைப்புகளின் அறிக்கையின்படி, நூற்றுக்கு மேற்பட்ட வன்னிப் பெண்களும் சிறுமியரும் எழுத்தர் பணிக்கான தேவை என்ற பெயரில் 99% சிங்கள இராணுவ ஆளுகையில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டுக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்படவில்லை. அவர்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக் கூட அனுமதியில்லை. குடும்பத்தினர் கேட்டால், அப்பெண்கள் இராணுவப் பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டது. 2012 திசம்பரில் அவர்களில் 13 பெண்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலரும் உணர்வற்ற நிலையில் இருந்தனர். அவர்களைப் பார்ப்பதற்குக் குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை.

இந்தக் கொடுமைகள் நீங்க என்ன தீர்வு? இலங்கையின் திணறடிக்கும் அரசியல் நடவடிக்கைகள் மென்மேலும் வன்முறையும் நிலையற்ற தன்மையும் ஏற்படவே வழிவகுக்கும். நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் பொருளியல், அரசியல் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. நியாயமான அரசியல் தீர்வு ஒன்றே வரலாற்று அடிப்படையில் பெண்களுக்குள்ள பாதகச் சூழலை மாற்றியமைக்க உதவும். விடுதலைப் புலிகள் இந்தத் திசையில் பேரடி எடுத்து வைத்தார்கள். ஆயுதப் போராட்டத்திலும் அரசக் கட்டமைப்புச் சாதனங்களிலும் பெண்களுக்குச் சமப் பங்கு அளித்தனர். பெண்கள் போராடிப் பெற்ற முன்னேற்றங்கள் 2009க்குப் பிறகு படிப்படியாகத் தேய்ந்து வருகிறது. பாதுகாப்பு வாழ்வை உணரத் தொடங்கியிருந்த பெண்கள் இன்று மீண்டும் இராணுவத்தின் ஆபத்தான பிடியில் மாட்டித் தவிக்கின்றனர்.

இதற்கு நாம் ஒரு முடிவு கண்டாக வேண்டும். இந்த ஆண்டில் முல்லைத் தீவில் கண்டறியப்பட்ட மக்கள் கல்லறைகள் போன்ற சான்றுகள் பன்னாட்டுத் தளத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. பன்னாட்டு விதிகள் இலங்கையில் மீறப்பட்டது தொடர்பாக இப்போது ஐநா மனித உரிமைகள் ஆணையம் புலனாய்வு செய்து வருகிறது. அது கண்டறிந்தவற்றை அந்த ஆணையத்தில் அடுத்த மார்ச்சில் முன்வைக்க இருக்கிறது. நாம் ஒரு நிம்மதியான எதிர்காலத்தில் வாழ்வதற்குப் பல தடைகளும் நம்முன் எழுந்து நிற்கின்றன. ஆனாலும் நாம் 2009 இரத்தக் குளியலுக்குப் பிறகு எந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளோம் எனத் தன்னாய்வு செய்ய வேண்டும். சிறிலங்காவை ஒரு கொடுங்கோல் சர்வாதிகரமென உலகம் இப்போது ஏற்றுக் கொள்கிறது. 2009இல் கொலையுண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் விதியை அந்த அரசிடம் நம்பி ஒப்படைக்க முடியாது என நம்புகிறது. அப்படியானால், தமிழர்களின் அரசியல் வருங்காலத்தையும் சிறிலங்காவிடம் நம்பி ஒப்படைக்க முடியாது என்பதையும் உலகம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இதைச் சாதித்துக் காட்டும் பொறுப்பு தமிழீழத்தில் குடும்பத் தலைமையை ஏற்று நடத்திவரும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கும், உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான பெண்களுக்குமே மிக அதிகம். ஆக, நாம் அனைவரும் போராட்டக் கால முனைப்பில் விடாது முயன்று, இழந்த பெண்ணுரிமையை மீட்டுக் காட்டுவோம்!

தமிழில்: நலங்கிள்ளி

Pin It