விலக்கி வைத்த
கனியை உண்ட பாவம்
எல்லைகளற்று
விரிந்து கிடக்கின்றது

கனியைக் காட்டித் தந்த
சர்ப்பமோ
கால்கள் போனாலும்
ஊர்ந்து பிழைக்கும் வலியை
கழட்டிப் போட
கற்றுக்கொண்டு விட்டது.

விழுங்குமுன்னே
மாட்டிக்கொண்ட ஆதாம்
தண்ணீர் குடிக்கும் பொழுதெல்லாம்
தொண்டையில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
ஓர் ஆப்பிளோடு
தப்பிப் பிழைத்துக் கொண்டார்.

விலக்கப்பட்ட கனியும் கூட
விமோசனம் பெற்றுவிட்டது
தினம் தினம்
உண்ணச் சொல்லும்
மருத்துவனின் தயவோடு

விழுங்கி தொலைத்த
ஏவாள் மட்டும்
வயிற்றினுள் திணிக்கப்பட்ட
கர்ப்பப் பையிடம்
இன்றளவும் அடிமைகளாய்...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.