"உலக சினிமா' என்கிற பிரயோகத்தை ஒரு தனிப்பட்ட ஒன்றாக நம்மிடமிருந்து அகன்று தொலைதூரத்தில் இருக்கிற ஒன்றாகப் பார்க்க முடியாது. உலகப் பரப்பின் ஒரு பகுதியில் இந்தியாவும் இந்தியாவின் ஒரு பகுதியில் தமிழ்நாடும் இருப்பது உண்மையெனில் நம்முடைய சினிமாவும் உலக சினிமாவே.

உலக சினிமா என்பது ஒரு தரமான சினிமா அல்லது அசலான சினிமா என்று சொல்வது வேண்டுமானால் சரியாக இருக்கும். ஒரு நாட்டின் வாழ்வியலை, அதன் அரசியலை, கலாச்சாரத்தை, தொன்மக் கூறுகளை, இன்னபிற அடையாளங்களை இரத்தமும் சதையுமாக பிரதிபலிப்பதே அசலான சினிமாவாக நான் கருதுகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குணாதிசயமும் தனித்துவமும் இருப்பதுபோல ஒவ்வொரு ஊடகத்திற்கும் அதனதற்கேயான குணாதிசயமும் தனித்தன்மைகளும் இருக்கின்றன.

"சினிமா' என்கிற காட்சிக்கலையின் (visual art) முழுமையான சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொணடு அதன் தனித்தன்மையோடு உருவாக்குவது தரமான சினிமாவாகிறது. அப்படித் தரமாகக் காணக் கிடைக்கின்ற சினிமாக்களையே நாம் உலக சினிமா என்கிற பிரயோகத்திற்குள் அடக்குகிறோம்.

"உலகத்தரமான சினிமா', "தமிழில் ஓர் உலக சினிமா' என்பது போன்ற ஒரு பகட்டுப் பிரயோகம், நாம் விரும்பியோ விரும்பாமலோ நம் செவிகளில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் நம்முடைய சினிமா உலகத்தரத்தை நோக்கித்தான் பயணிக்கிறதா என்கிற விவாதத்தை நாம் விரிவாகவும் தெளிவாகவும் நிகழ்த்த வேண்டும்.

இன்றைய சூழலில், சிலருக்கு தங்களது சிரசைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும், மற்றவர்களிடமிருந்து தங்களை அதிபுத்தி ஜீவிகளாகக் காட்டிக் கொள்வதற்காகவும் மசாலா சினிமாச் சந்தைக்கான கச்சாப்பொருளைத் தோண்டி எடுக்கும் ஒரு புதையல் கிடங்காகவும் மட்டுமே உலக சினிமா இருந்து வருகிறது.

உண்மையில் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மொழிகளிலும் உலகத்தரத்திற்கான சினிமாவை பலரும், பல காலகட்டங்களில் உருவாக்கி வந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.

வங்காள மொழியிலும் இந்தியிலும் சத்யஜித்ரே, ரித்விக் கடக், மிர்னாள்சென், தபன்சின்ஹா, பிமல்ராய், நிமாய்கோஷ், நிதின்போஸ், தேவதாஸ் குப்தா, சைதுமிர்ஷா, கௌதம்கோஷ், ரிது பர்னாசென், மணிகௌல், குமார் சாஹினி, ய்யாம் பெனகல், அவதார் கிருஷ்ண கௌல், குருதத், மஹபூப்கான், குர்சார், மீரா நாயர், கேதான் மேத்தா போன்றவர்களும் மராத்தி மொழியில் ஜப்பார் பட்டேல், சாந்தாராம், சாயி பரன்ஸ்பை போன்றவர்களும் கன்னட மொழியில் ஜி.வி.ஐயர், எஸ்.ஆர்.புட்டண்ணா, பி.வி.காரந்த், கிரீஸ் காசரவள்ளி, பி.நரசிங்கராவ், கிரீஸ் கர்னாட் போன்றவர்களும்

அஸ்ஸாமில் ஜானு பர்வா போன்றவர்களும் மலையாள மொழியில் ராமு கரியட், பி.பாஸ்கரன், கே.எஸ்.சேதுமாதவன், பி.என்.மேனன், ஜான் ஆப்ரஹாம், அரவிந்தன், டி.வி.சந்திரன், ஷாஜி கருண், கே.ஜி.ஜார்ஜ் இன்னும் பலரும்

தமிழில் "வீணை' எஸ். பாலசந்தர், பீம்சிங், ஸ்ரீதர், கே.பாலசந்தர், தேவராஜ்மோகன், பாரதிராஜா, ருத்ரைய்யா, மகேந்திரன், பாலுமகேந்திரா,"பசி'துரை, மணிரத்னம் இன்னும் பலரும் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே உலகத்தர வரிசையில் இடம்பெறத்தகுதியான படங்களை படைத்திருக் கிறார்கள். இன்னும் பிற பிராந்திய மொழிகளிலிருந்து பலரும் உலகத் தரத்திற்கான சினிமாவை எப்போதோ உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆனால் உலக சினிமா பற்றி நமக்கு அளிக்கப்பட்டிருக்கிற தரவுகளில் இவர்கள் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள். சினிமா தொடர்பான பதிவுகளில் இவர்களது பங்களிப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதை நாம் பொத்தாம் பொதுவாக மறுத்துவிடவும் முடியாது. ஆனால் அவையெல்லாம் இந்தியாவின் மாற்றுசினிமாக்கள் அல்லது பிராந்திய சினிமாக்கள் என்ற ஒரு குறுகிய பரப்பிற்குள் மட்டுமே அடக்கப்படுகின்றன. அந்நிய இயக்குநர்களின் படங்களாகவோ அல்லது சப் டைட்டிலுடன் காட்டப் படுகிற அந்நிய கலாச்சாரத்தைப் பதிவு செய்யும் படங் களாகவோ இருந்தால் மட்டுமே உலக சினிமா என்கிற தவறான புரிதலே இதற்கு காரணம்.

படைப்பாளுமை, திரைப்படக் கலையின் முழுமையான சாத்தியக்கூறுகள், அவை பிரதிபலிக்கிற பூமிப் பரப்பின் கலாச்சார அடையாளங்கள், சமூகத்தோடு விரவியிருக்கிற அவர்களின் வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் மேற்சொன்ன படைப்பாளிகள் "உலகத்தரம்' என்கிற தராசில் இணையாக வைக்கும் அளவிற்கு தரமான படைப்புகளையே வழங்கி யிருக்கிறார்கள். இன்றைக்கும் நமக்கு காணக்கிடைக்கிற உலகசினிமா என்பது அவர்களின் சமகால வாழ்க்கையை, சமகால அரசியல் சூழலை விவரிக்கும் திரைவரைவாகவே இருக்கின்றன. Thriller, horror, adventure, science fiction, Historical, Romantic, Family drama, Comedy என பல பிரிவுகளில் அவை உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த உலக சினிமாவிலிருந்து அவர்கள் மேலும் வளர்ந்து பல விதத்திலும் முன் நகர்ந்திருக்கிறார்கள். இதன் அடிப் படையில் நாம் நம்முடைய சமகால சினிமாவை, உலகத்தரமான சினிமா என்று சொல்லிக்கொள்கிற சினிமாவை முன்பு எடுக்கப்பட்ட பல திரைப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஊமைப் படங்களிலிருந்து பலவிதமான கதைக்களங்களிலும் வகைப்பிரிவுகளிலும் படிப்படியாக முன்னேறி எண்பது தொண்ணூறுகள் வரை நமது சினிமா வளர்ச்சிப் பாதையில் பயணித்தே வந்திருக்கிறது. நாம் முன்னேறி விட்டோம் என்று சொல்லிக் கொள்வது உண்மையானால் எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ருத்ரைய்யாவின் "அவள் அப்படித்தான்', பாலுமகேந்திராவின் "வீடு', "சந்தியா ராகம்', வன்முறையைத் தவிர்த்து அசலான கிராமத்து மனிதர்களைக் காட்டிய மகேந்திரனின் "முள்ளும் மலரும்', "உதிரிப்பூக்கள்' போல் இங்கு எத்தனைப் படங்கள் உருவாகி இருக்க வேண்டும்? இன்னும் நாம் அந்தப்படங்களிலிருந்த படைப்பு நேர்த்தி யையும், ஆளுமையையும் தாண்டி வரவில்லை என்பதுதான் நிதர்சனம். நாம் இதை வெட்கத்தைவிட்டு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். வன்முறை தவிர்த்த, சமகால யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் கிராமத்து சினிமா இப்போது நமக்கு பார்க்கக் கிடைக்கிறதா? நம்முடைய அரசியல் மாற்றத்தையும் இப்போதைய கலாச்சாரத்தையும் அச்சு அசலாகப் பிரதிபலிக்கிற படங்களைப் பார்க்க முடிகிறதா?

நல்ல திரைப்படங்களுக்கு ஊற்றுக் கண்ணாக இருக்க வேண்டிய, பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டிய திரை இலக்கியத்தில் சினிமாவுக்கான புத்தகங்கள் எத்தனை வந்திருக்கவேண்டும்? அறிவியலின் யுகப் புரட்சியால் உலகமே மேஜைக்கு முன்னால் வந்துவிட்ட ஒரு சூழலில் எத்தனை Science Fiction படங்கள் வந்திருக்க வேண்டும்? அந்நியப் படையயடுப்பினால் மிகப் பெரிய சிதைவையும் கலாச்சார மாற்றத்தையும் கண்ட நம்மிடமிருந்து எத்தனை போர் வரலாற்றுப் படங்கள் வந்திருக்க வேண்டும்? அறிவியலிலும் சினிமாவைப் பற்றிய புரிதலிலும் உலகத்தரத்திற்கு வளர்ந்து விட்ட நம் பார்வையாளர்களுக்கு நாம் அளிக்கின்ற சினிமா வானது கதாநாயகப்போற்றுதல், குத்துப்பாட்டு, நகைச்சுவைக் கூத்துகள் இன்றி நாம் சொல்லிக் கொள்வதுபோல் உலகத்தரத்தோடுதான் இருக்கின்றனவா?

ஆனால் உலக சினிமா வரிசையில் வரும் பிறநாட்டுப் படங்கள் அனைத்துமே இந்த மசாலா சினிமாச் சூத்திரங்களைத் தவிர்த்த அசலான சினிமாவாகவும் பல்வேறு கதைக் களங்களைக் கொண்டதாகவும் உண்மையை உரத்துப் பேசுவதாகவும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது மசாலா சினிமா சூத்திரங்களைத் தவிர்த்த அசலான முயற்சிகளை மேற்கொள்ளும் வரை "உலகத்தரம்' என்கிற பகட்டுப்பிரயோகத் தையாவது நாம் கைவிடவேண்டும்.

சென்ற தலைமுறை படைப்பாளிகளில் சிலர், இந்த மசாலா சினிமா சூத்திரங்களைத் தவிர்த்த படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கித் தந்த தடத்தில் உண்மையிலேயே நாம் பயணித்திருந்தால் நம்முடைய சினிமா சென்றடைந்திருக்கும் உயரம் என்பது பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நாம் போற்றக்கூடிய எல்லா உலக சினிமாக்களுமே, ஒரு நாவலையோ அல்லது சிறுகதையையோ அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் திரைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது "கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்கிற மயக்கம் நம்மிடம் மட்டுமே அதிகமாக இருக்கிறது. நாம் தொழில்நுட்பரீதியில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் உள்ளடக்க ரீதியில் (content) நலிந்திருப்பதற்கு இதுவே காரணம்.

தொடர்ச்சியான புத்தக வாசிப்பின் மூலமாகக் கிடைக்கும் கலானுபவத்திற்குத் தயாராகாததாலும் திரைக்கதை எழுத்தாளர்களின் வறட்சியாலும் வெளிநாட்டு சினிமாக்களை அப்படியே நகல் எடுத்து மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிற கொடுமைகளும் இங்கு நிகழ்ந்து விடுகின்றன.

பர்மா பஜாரின் திருட்டு டி.வி.டி.க்களின் வழியாக மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம் என்கிற கீழான போக்கை கைவிட்டுவிட்டு, திரைக்கதை எழுத்தாளர்களை அங்கீகரிப்பதன் மூலமாகவும் தொடர்ந்து புத்தகங்களை வாசிப்பதன் வழியாகவும் எழுத்து, நாடகம் போன்ற பிற கலைகளையும் ஒரு கலையாக மதிக்கின்ற மனநிலையோடும் நம்முடைய வாழ்க்கையிலிருந்து, மண்ணிலிருந்து, சக மனிதர்களிடமிருந்து, கலாச்சாரத்திலிருந்து, குடும்ப உறவு களிலிருந்து, தொன்மங்களிலிருந்து ரத்தமும் சதையுமான ஒரு படைப்பை உருவாக்குவது மட்டுமே தரமான சினிமாவாக இருக்க முடியும். அதாவது உலக சினிமாவாக இருக்கமுடியும்.

வெளிநாட்டுப் படங்களையும் இயக்குனர்களையும் மட்டுமே பேசிப்பேசி பிரமிப்பையும் மயக்கத்தையும் உருவாக்குகிற அதே வேளையில், தமிழ் மற்றும் இந்தியாவின் பிற மொழிகளிலும் உருவாகிற நல்ல சினிமாக்களையும் அடையாளம் காண வேண்டும். அவையும் உலகளவில் தரமான சினிமாக்களே என்பதை ஒத்துக்கொண்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

"உலகத்தர வரிசைக்கு தமிழ் சினிமாவை இட்டுச் செல்ல முடியும்' என்கிற சாத்தியம் துளியளவு தென்பட்டாலும் அவர்களைத் தேடிப்பிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். பாரபட்சமின்றி அந்த படைப்பாளிகள் அனைவருமே அங்கீகரிக்கப்பட வேண்டும். தரத்தின் அடிப்படையில் ஒரு படத்தை அணுகுவதால் மட்டுமே இது சாத்தியப்படும்.

ஒரு மண்ணின் மனிதர்களிடமிருந்தும் வாழ்க்கையிலிருந்தும் விலகிப்போய்விடுகிற எவராலும் அந்த மண்ணுக்கான படைப்பை உருவாக்க முடியாது என்பதில் திடமான நம்பிக்கை கொள்ளவேண்டும். பல வேளைகளில் வெற்றியும் புகழும் நம்மையுமறியாமல் ஒரு மதில் சுவரைக் கட்டி எழுப்பிவிடுகின்றன. நாம் மற்றவர்களையும் மற்றவர்கள் நம்மையும் எளிதில் நெருங்க முடியாதபடி ஓர் குறுகிய உலகம்.

காலங்காலமாய்க் கையாளப்படும் மசாலா சினிமா சூத்திரங்களையும் மலிவான ரசனைகளையும் தவிர்த்துவிட்டு ஒரு சினிமா எந்தளவிற்கு அந்த மண்ணோடும் மனிதர்களோடும் நேர்மையும் பிணைப்பும் கொண்டிருக்கிறதோ அந்தளவிற்கு அது தரமான சினிமாவாகிறது.

தரமான சினிமாக்கள் யாவுமே உலக சினிமாக்களே.

- மீரா கதிரவன், திரைப்பட இயக்குனர்

Pin It