வெறுமையே
அடர்த்தியான முள்வேலியாய்
வீட்டின்
நுழைவாயில் முதல்
உள்முகாந்தரம் வரை
கதவிடுக்குகளின் வழியாய்
புகுந்து கொண்டு
என்னை
கொன்று
கொண்டிருக்கிறது
உங்களின் இல்லாமையால்

அலமாரியில்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
புத்தகங்கள்
பதுக்கி வைத்திருந்த
தன்
சோகக் குவியல்களை
மெல்லிய பக்கங்களால்
நகர்த்தித் தொடங்கியது
துணைத் தேடின
அதன்
யாசிப்பு தீர்ந்ததற்காக
நிறைவேறாத
என் ஆசைகளுக்கு
ரத்தினக் கம்பளம்
விரித்தது போன்று
என் வீடு
விசாலமானதாய்
தடுமாறின
என் கால்கள்
நடுக்கத்தின்
தளர்ச்சிகளையும் மீறி
விடுபட முடியா
சோகக் கறைகளை
வெட்டி எடுத்ததற்காக
இல்லாமையை
இனிதாக்க முயன்ற
சொப்பனங்களின் வரிசையில்

Pin It