தமிழர் நாங்கள்எனத்
 தம்பட்டம் அடிப்பீரோ?
 சாதிச் சாக்கடையில்
 தான் மகிழ்ந்து குளிப்பீரோ?

உமியளவும் நேர்மை
 உங்களிடம் இல்லை
 உச்சரிக்கா தீர் இனியும்
 தமிழன் என்ற சொல்லை

அமைதியை இழந்து
 அழுகிறது தமிழகம்
 ஆர்ப்பாட்டச் சாதிவெறி
 அடையாளம் உங்கள் முகம்

நமது சொந்தங்கள்
 சேரியர் நம்மக்கள்
 நஞ்சை உமிழாதீர்
 நாட்டைக் கெடுக்காதீர்

ஆதித்திரா விடர்பள்ளர்
 அருந்ததியர் என்பதெலாம்
 ஆதிக்கச்சாதிப்
 பார்ப்பானின் ஏற்பாடு
 அதையே நம்பி
 அடிஉதையில் இறங்கினால்
 அய்யோ தமிழகமே
 ஆகும் சுடுகாடு

பாதிப் பார்ப்பானாய்ப்
 பாழானீர்; சாதியென்ற
 பாழுங்கிணற்றில் வீழ்ந்து
 பகைவெறிக்கு ஆளானீர்;

பாதை வகுத்தவர்கள்
 அம்பேத்கர் பெரியார்
 பண்பாடு தெரிந்தவர்கள்
 அவர்பாதை அறிவார்

சாதி, மறுப்பு மணம்
 புதிதல்ல, தமிழர் நெறி
 சாகடிப்போம் என்பதுவோ
 உங்களது சாதி வெறி
 சமத்துவத்தை உங்கள்
 நெஞ்சில் எண்ணுங்கள்
 தமிழ்நாடு அமைதியுற
 வழிஒன்று பண்ணுங்கள்!

– தமிழேந்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.