“முள்ளிவாய்க்கால் மே 19 – ஈழத் தமிழர் வரலாற்றில் நேர்ந்த ஓர் ஊழிப் பெருவெள்ளம் (பிரளயம்). அது எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்டது. பழைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. புதிய சூழலுக்கேற்பப் புதிய பார்வைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை''. அண்மையில் வட அமெரிக்கா சென்றிருந்த போது, ஈழத் தமிழ்ப் பெரியவர் ஒருவர் இவ்வாறு பேசக் கேட்டேன். அவர் தம்மை ஈழத் தமிழர் என்றுகூட சொல்லிக் கொள்ளாமல், “இலங்கைத் தமிழர்'' என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்.

கருத்துப் பிளவு

தமிழர் தாயகம், இறைமை மீட்பு, தமிழீழ விடுதலை; இந்தக் குறிக்கோள்களையெல்லாம் அடியோடு மறந்து விட்டு, அங்கே துயருற்ற மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்தால் போதும் என்ற முடிவுக்கு இந்தப் பெரியவர் மட்டுமின்றி வேறு பலரும் வந்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் இந்தப் “புதிய பார்வை''க்கு மாறியிருப்பதை உணர முடிகிறது. மொத்தத்தில் இவர்கள் பெரும்பான்மையினரா இல்லையா என்பதை நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், சொற்பத் தொகையினர் அல்லர் என்பது உறுதி.

இப்போதும் தமிழீழ விடுதலை மீது நம்பிக்கை வைத்து அதற்காக இயன்றதனைத்தும் செய்து கொண்டிருப்பவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். ஆனால் இவர்களோடும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது.

புலம்பெயர் ஈழத் தமிழரிடையிலான கருத்துப் பிளவு அயல்வாழ் தமிழகத் தமிழர்களிடமும் ஓரளவுக்குப் பிரதிபலிப்பதை உணர முடிகிறது. ஈழத்தில் வாழும் தமிழர்களும் இவ்வாறே பிரிந்து கிடப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. அதிலும் குறிப்பாகச் சிறைக் கூடங்களிலும், முள்வேலி முகாம்களிலும், இவற்றுக்கு வெளியே ராணுவ கண்காணிப்பில் திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற சூழலிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே நம்பிக்கைச் சிதைவின் அளவும் தீவிரமும் கூடுதலாகவே இருக்கக் கூடும் என அஞ்சுகிறேன். அண்மையில் அங்கு சென்று வந்த சிலரோடு உரையாடிய போது இந்த அச்சம் உறுதிப்படவே செய்தது.

பின்னடைவு என்னும் தன்னாறுதல்

சிங்களப் பேரினவாதம் தமிழின அழிப்புப் போரில் பல்லாயிரம் தமிழர்களைக் கொடிய முறையில் கொன்றொழிப்பதிலும், தமிழீழ விடுதலைப் படையை நசுக்கி அழிப்பதிலும் வெற்றி கண்டிருப்பதோடு, தமிழீழ விடுதலைக் குறிக்கோளில் ஈழத் தமிழர்களும், பொதுவாக உலகத் தமிழர்களும் கொண்டிருந்த நம்பிக்கையையும் பற்றுறுதியையும் பெருமளவுக்கு ஆட்டங்காணச் செய்திருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முள்ளிவாய்க்கால் முழுப் பேரழிவின் இந்த முழுப் பொருளையும் உள்வாங்கிக் கொள்ளாமல் “சிறு பின்னடைவு'', “தற்காலிகப் பின்னடைவு'' என்றொல்லாம் தன்னாறுதல் தேடிக் கொண்டிருப்போமானால், விடியலை நோக்கி ஓரடியும் எடுத்து வைக்க முடியாது.

eelam_549

ஈழத் தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரத்தையும், இன்றளவும் அடைந்து வரும் துன்பத்தையும் உங்களால் உணர்ந்து கொள்ள முடிந்தால், “விடுதலை வேண்டாம், நிம்மதியாக உயிர் வாõழ்ந்தால் போதும்'' என்று பேசுகிற அத்தனை பேரையும் கோழைகள், துரோகிகள் என்று முத்திரையிட்டு ஒதுக்கி விடுவதற்கில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இடர் மிகுந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பகைவனின் காலில் விழும் கோழைகள், அவனிடம் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் சிலர் உண்டு என்பது உண்மையென்றாலும், எல்லாரையும் அப்படி ஒதுக்கித் தள்ளுவது உதவாது. கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த சிலரும்கூட இப்போது நம்பிக்கையிழப்புக்கு ஆளாகியிருப்பதைப் பார்க்க வேண்டும்.

மே 19 உடன் எல்லாம் முடிந்து விட்டது என்னும் மனச் சோர்வுக்குள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டு, அதேபோது "புதிய பார்வை' என்று முன்வைக்கப்படுவது சரிதானா? என்ற வினாவை எழுப்பி உரையாடிய போது புலப்பட்ட உண்மை : இவர்கள் யாரும் தமிழீழம் வேண்டாம் என்று சொல்லவில்லை, அதற்கு இனி வாய்ப்பில்லை என்ற முடிவுக்குத்தான் வந்து விட்டார்கள்.

தொடரும் கொடுமைகள்

எல்லாம் முடிந்து விட்டது என்றால் எதெல்லாம் முடிந்து விட்டது? சிங்களப் பேரினவாதம் முடிந்து விட்டதா? அதன் இன ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் முடிந்து விட்டதா? இல்லை. தமிழர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலையங்கள் நீடிப்பதோடு, புதிய படைமுகாம்கள் அமைக்கும் வேலைகளும் தொடர்கின்றன. முள்வேலி முகாம்களில் இப்போதும் லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைபட்டுக் கிடக்க, முகாம்களிலிருந்து மீண்டவர்களில் பெரும்பாலார் அவரவர் பழைய இடத்தில் மீள் குடியமர்த்தம் செய்யப்படவும் இல்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றும் முயற்சிகளும் தொடர்கின்றன.

விடுதலை இயக்கத்தின் முன்னோடிகள் பலர் சரணடைந்த பின் துன்புறுத்திக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரசியல், கலை இலக்கியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். நடேசன் – புலித்தேவனுக்கு என்ன நடந்தது என்று உலகறியும். பாலகுமாரன், புதுவை ரத்தினதுரை, யோகி போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்குச் சிங்கள அரசிடமிருந்து விடையே இல்லை. கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் எவ்வித நீதிமன்ற உசாவலுமின்றிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கிக் கண்ணைக் கட்டிக் கையைக் கட்டிக் குப்புறத் தள்ளிச் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சிகள் உண்மையே என்பதை ஐ.நா. வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். தமிழ் இளைஞர்களைக் கொடிய முறையில் துன்புறத்திக் கொலை செய்யும் காட்சிகள் லண்டனைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு இராசபக்சே கும்பலின் போர்க் குற்றங்களையும், மானுட விரோதக் குற்றங்களையும் தக்க சான்றுகளுடன் மெய்ப்பித்துள்ளது. 2009 மே முழுப் பேரழிவு நிகழ்ந்தபோது அதைத் தடுக்கக் தவறிவிட்ட ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் இவ்வளவு காலம் கழித்து இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து அறிக்கையளிப்பதற்காக அமர்த்திய மூவர் குழுவை எதிர்த்துச் சிங்கள அரசு அரங்கேற்றிய அநாகரிகமான நாடகங்கள் அது தன் குற்றங்களை மறைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதைக் காட்டி விட்டன. நடந்தவற்றுக்கும் நீதி கிடைக்கவில்லை, தொடரும் கொடுமைகளை நிறுத்திக் கொள்ளவும் இல்லை என்னும் போது, எல்லாம் முடிந்து விட்டது என்று தமிழர்களைப் பார்த்துச் சொல்வதன் பொருள் என்ன? “உரிமை கொண்ட மனிதர்களாக வாழும் ஆவலைத் துறந்து விடுங்கள், அடிமைகளாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்'' என்பதாகத்தான் இருக்க முடியும்.

அரசியல் உரிமைகள், விடுதலை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இயன்ற வரை ஈழத் தமிழ் மக்களுக்கு உதவிகள் மட்டும் செய்வோம் என்ற நிலைக்குச் சிலர் வந்துள்ளனர். இதற்காகச் சில அமைப்புகளையும் நிறுவியுள்ளனர். அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் மறுப்புக்கு இடமில்லை. ஆனால் இதற்காக அரசியல் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்பதுதான் சரியில்லை. அரசியல் வெற்றிடத்தில் உதவிகள் வழங்குவது என்பது ஓட்டைப் பாத்திரத்தில் சோறு பொங்கும் முயற்சியே தவிர வேறில்லை.

செயற்கை ஊழிப் பெருவெள்ளம்

ஊழிப் பெருவெள்ளம் என்றால் அது எல்லாரையும், எல்லாவற்றையும் மூழ்கடித்திருக்க வேண்டும். மே 19 ஊழிப் பெருவெள்ளம் தமிழர்களுக்கு மட்டுமே பேரழிவு! பேரினவாதத்தில் மூழ்கிய சிங்களவர்களுக்கோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம்! பிறகு எப்படி இதனை இயற்கை ஊழிப் பெருவெள்ளத்தோடு ஒப்பிட முடியும்? வேண்டுமானால், இதனைச் செயற்கை ஊழிப் பெருவெள்ளம் எனலாம். இந்திய அரசுடன் சேர்ந்தும் சீனா, பாகிஸ்தான் போன்ற அரசுகளின் துணையோடும் சிங்கள அரசு தமிழர்களை அழிப்பதற்காகத் தோற்றுவித்த ஊழிப் பெருவெள்ளம் இது.

பல்லாயிரம் உயிர்களைப் பறிகொடுத்துத் தமிழர்கள் கற்றுக் கொண்டிருக்கும் படிப்பினைகள் என்ன? முதலாவதாக, சிங்களப் பேரினவாத அரசின் கீழ் இலங்கைத் தீவில் தமிழர்கள் உரிமையோடு வாழ முடியாது என்பது மட்டுமல்ல, உயிரோடும் வாழ முடியாது என்று தெரிந்து விட்டது. ஒன்றுபட்ட இலங்கை என்பதே தமிழர்களைக் கொன்று போட்ட அமைப்பு என்பது கண்கூடாய்த் தெரிந்து விட்டது.

தமிழீழத் தனியரசின் தேவை கூடியுள்ளதே தவிர, கிஞ்சிற்றும் குறையவில்லை. இரண்டாவதாக, பொதுவாய்த் தமிழீழ மக்களுக்கு இருந்து வந்த இந்திய மயக்கம் அதிர்ச்சியோடு கலைந்து போய்விட்டது. இந்திய அரசு ஈழத் தமிழர்களைக் காக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகி விட்டது. இந்தியா காக்காது. அழிக்கும் என்ற உண்மை தமிழினத்திற்கு வலிக்க வலிக்கத் தெரிந்து விட்டது.

தீர்க்க வேண்டிய முரண்பாடு

இப்போது நம் முன்னுள்ள கேள்வி : தமிழர்களுக்குத் தமிழீழத் தனியரசு தேவை என்ற புறநிலைக்கும், அவர்களில் பலர் நம்பிக்கை குலைந்து சோர்வடைந்துள்ளனர் என்ற அகநிலைக்குமான முரண்பாட்டைத் தீர்ப்பது எப்படி? தமிழீழக் கனவு ஈடேறுமா, கலைந்து விடுமா என்பது இந்த முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதைப் பொறுத்ததே.

ஒரு சிலர் இதற்கு ஓர் எளிய தீர்வை முன் வைக்கின்றனர். அவர்கள் சொல்வது : தமிழீழத் தேசியத் தலைவர் சாகவில்லை, எங்கோ உயிரோடு இருக்கிறார், ஈழப் போரைப் புத்துயிர் பெறச் செய்வதற்கு ஏதோ திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில், மூன்று மாதம் கழித்தோ மூன்றாண்டு கழித்தோ, ஆயுதப் போர் மீண்டும் தொடங்கும். “தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத் தருவார்'', “விரைவில் ஐந்தாம் கட்ட ஈழப் போர்'' என்ற முழக்கங்கள் மெய்ந்நிலைமைகளின் புறஞ்சார் மதிப்பீட்டிலிருந்து அல்லாமல் அகஞ்சார் விருப்பங்கள் – உணர்ச்சிகளிலிருந்தே பிறப்பதாகத் தெரிகிறது.

தலைவர் இருக்கிறாரா? இருந்தால் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்த வினாக்களுக்கு விடை சொல்லும் நிலையில் நாம் இல்லை. இருக்க வேண்டும் என்று விரும்புவது. இருந்தால் நல்லதென்று நினைப்பது. இருக்கிறார் என்று நம்புவது... இதெல்லாம் வேறு, இருக்கிறார் என்று அறுதியிட்டுச் சொல்வது வேறு. அதே போல் சிங்கள அரசு வெளியிட்டுள்ள சான்றுகளையும் அவரவர் உள்மன ஆசையையும் கலந்து, பிரபாகரன் இறந்து விட்டார் என்றும் அவர் இப்படிதர்தான் இறந்தார் என்றும் பரப்புரை செய்து கொண்டிருப்பவர்களோடும் நாம் உடன்படவில்லை. இதில் நம் நிலைப்பாட்டை முன்பே முன் வைத்துள்ளோம்.

நம்மைப் பொறுத்தவரை, பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா என்பது? கருத்துத் தொடர்பான அல்லது நம்பிக்கை தொடர்பான சிக்கலன்று. நடந்தது என்ன? என்னும் மெய்ம்மை தொடர்பான சிக்கலே அது. முள்ளிவாய்க்காலில் மூழ்கிப் போன எத்தனையோ உண்மைகளைப் போலவே இந்த உண்மையும் ஒரு நாள் முழுமையாக வெளிப்படும். அது வரை இந்த வினாவை ஒத்தி வைத்து விட்டு, நம் கடமைகளைச் செய்வோம். உறுதியில்லாத் தரவுகள் மீது ஊக விளையாட்டு ஆடுவதை விடுத்து, உறுதிப்பட்ட செய்திகள் மீது தேர்ந்து தெளிந்து செயற்படுவோம். பிரபாகரனைப் பற்றிய வினாவின் மீதே நம் கவனத்தையும் உலகின் கவனத்தையும் குவியச் செய்து, முள்ளிவாய்க்கால் இனப் பேரழிப்பை முழு அளவில் பார்க்க விடாமல் செய்யும் பகைவரின் சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விட வேண்டாம்.

தலைவர் இருக்கிறாரா? என்று கேட்ட போது “சில கேள்விகளுக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்'' என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் உருத்திரகுமாரன் விடையளித்திருப்பது கருத்திற்குரியது.

– தொடரும்

Pin It