ஜாதி, சுரா, ரோக, ராணா என்ற நால்வகை மக்களின் நிலைமையை உயிர்களின் தன்மை என்று புத்தர்கள் கருதுகின்றார்கள்.

உயிர்கள் பிறப்பதும், தள்ளாமையை அடைவதும், நோயால் துன்புறுவதும், கடைசியில் இறப்பதும் சகல உயிர்களில் இயல்பென்பது சாதாரணமான அனுபவமாகும்.

புல்லாயினும், புழுவாயினும், மிருகமாயினும், மக்களாயினும், பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காட்டை, அடையாத உயிர்கள் இல்லை.

பிறந்த உயிர் இறக்கும் என்பத பிரத்தியட்சம். ஆனால் பிறந்த உயிர், பிணியுடன் சாக வேண்டுமா? என்பதை இச்சிறு கட்டுரையில் விசாரிப்போம்.

மூப்பு என்பது யாது?

மூப்பு, அதாவது தள்ளாமை உயிர்களின் இயற்கை என்பார்கள். மூப்பின் லட்சணத்தை, நாமெல்லோரும் அறிவோம்.

மயிர் நரைப்பது தள்ளாமையின் முக்கிய லட்சணம். ஆனால் சிலருக்குப் “பித்த நரை'' என்பது அக்காலத்தில் உண்டாகின்றது. ஆனால், அது ஏகதேசம். ஏகதேசமாயினும், எந்தக் காரணத்தால் வயதடைந்த மக்களுக்கு மயிர் நரைக்கின்றதோ, அதே காரணத்தையொட்டியே, “பித்த நரை'' என்பது அக்காலத்தில் உண்டாகின்றது.

கறுப்பு மயிர் வெளுப்பாகும் காரணத்தைச் சற்று பின்னால் கண்டறிவோம்.

தள்ளாமையின் முக்கிய லட்சணங்கள் யாவை?

மயிர் வெளுப்பது ஓர் முக்கிய லட்சணமென்றோம். தள்ளாமையில், மேல் தோலும் பளபளப்பை இழந்து வரவரப்பைப் பெறுகின்றது. திரேக எலும்புகள் வலுவிழக்கின்றன. நரம்புகள் தளர்வடைகின்றன. கண்பார்வை மட்டுப்படுகின்றது. காது கேட்பது மெதுவாகின்றது. முதுகெலும்பு, நேர் நிற்க சக்தி அற்று வளைகின்றது. ரத்த ஓட்டமும் மெதுவடைகின்றது. ரத்தக் குழாய்கள் வலுவற்றுப் போகிறபடியால், நாடியும் தளர்வடைகின்றது. மூளையின் வேலை தளர்வடைகின்றபடியால், நினைவும் தளர்வடைகின்றது. திரேக முழுமையும் சுறுசுறுப்பை இழக்க நேரிடுகிறது. தள்ளாமையில் இத்யாதி நிலைமைகளைத் திரேகம் அடைகின்றது.

இவ்வித தள்ளாமையின் லட்சணங்கள் காண்பது மக்களுக்கு மாத்திரமல்ல; மற்ற உயிர்களுக்கெல்லாம் இத்யாதி லட்சணங்கள் உண்டாகின்றன.

பட்சிகளுக்கும், விலங்கினங்களுக்கும் இத்யாதி குணங்கள், தத்தம் முதுமையில் உண்டாகின்றன. தள்ளாமை அடைந்த நாயிக்கும், மூப்படைந்த மனிதனுக்கும், தள்ளாமையில் வித்தியாசமில்லை.

தள்ளாமையின் காரணத்தைக் குறித்து, அநேக பிரபல விஞ்ஞானிகள் விசாரித்து வந்தார்கள். அவர்களின் முதன்மையானவர், மெட்சினிகாப் என்ற ரஷ்யப் பெரியார். இவர் ஆராய்ச்சியில் ஏற்பட்ட சித்தாந்தத்தை இங்குச் சுருக்கமாகச் சொல்லலாம்.

இவர் இயற்றிய நூல்களில் சாமான்ய மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய நூல் இரண்டு. அவையாவன : மனிதனின் இயற்கை என்பது ஒன்று வாழ்வின் நீடிப்பு என்பது மற்றொன்று.

இந்நூல்களில் கூறியுள்ள விஞ்ஞான விஷயங்களைக் கொண்டு, நமது தள்ளாமையின் காரணங்களையும், மூப்பின் தொந்தரவுகளை மட்டுப்படுத்தும் மார்கங்களையும் அறிந்து, நமது வாழ்க்கையை இனிதாக நடத்திக் கொள்ளலாமெனத் தோன்றுகிறது.

தள்ளாமையின் காரணங்களைக் குறித்து, இரண்டு முக்கிய அபிப்பிராயங்கள் விஞ்ஞானிகள் கொண்டுள்ளார்கள்.

ஒரு வகுப்பார் என்ன கூறுகின்றார்களெனில், நாம் பிறந்தது முதல் யவ்வன வயதுவரை, நமது திரேகம் வளர்கின்றதாகவும், அந்த வளர்ச்சி நின்றவுடன், நமது அவயவங்களுக்குச் சரியான போஷிப்பின்மையால் திரேகத்திற்குத் தள்ளாமை உண்டாகின்றதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், நமது நகங்களும், உடல் மயிரும் தள்ளாமையில் வளர்ந்தும் தள்ளாமையில் திரேக உறுப்புகளாகிய கிருமிப் பைகள் வளர்கின்றதென்று சொல்வதற்கில்லை.

இந்த அபிப்பிராயம் இவ்வாறு இருக்க, மெட்சினிகாப் விஞ்ஞானியின் ஆராய்ச்சியின்படி, திரேக வளர்ச்சியில்லாமையால் தள்ளாமை உண்டாவதாகச் சொல்வதற்கில்லை என்றும், நமது திரேகத்திலுள்ள கிருமிகளே தள்ளாமைக்குக் காரணமென்றும் தெரிகிறது என்று கூறுகிறார். இந்த முடிவைப் பல விஞ்ஞானிகள் ஆதரிக்கின்றார்கள்.

நமது திரேகத்தில் இரண்டு வகை கிருமிகள் வளர்கின்றன. நமது திரேக முழுமையும், சிறு பைகளால் கட்டப்பட்டு இருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பைகளில் பெரும்பான்மைகள், திரேகத்தைக் காப்பாற்றி வருகின்றன. எப்படியெனில், திரேகத்திற்கு வெளியிலிருந்து திரேகத்தில் நுழையும் விஷக் கிருமிகளைப் பட்சணம் செய்து விடுகின்றன.

அப்படி விஷக்கிருமிகளை நாசம் செய்து வருகிறபடியால், திரேகம் போஷிப்புப் பெற்றுவருகின்றது. ஆனால் சில வேளையில், விஷக்கிருமிகள் பலப்பட்டு, சுகாதாரக் கிருமிகளை விழுங்க நேரிடுகிறது.

இந்தச் சமயத்தில், சுகாதாரக் கிருமிகள் பலமிழந்து நாசமாகின்றன. சுகாதாரக் கிருமிகள் பலமற்றுப் போகவே, திரேகம் தள்ளாமையின் அடையாளங்களைக் காட்ட ஆரம்பமாகிறது.

திருஷ்டாந்திரமாக, தலைமயிர் கறுப்பு நிறத்தைப் பெற்று வரும் காரணமென்னவெனில், தலைமயிர் வளர ஊக்கும் சுகாதாரக் கிருமிப் பைகள், Black pigment என்ற கருப்பு வர்ணத்தை சிருஷ்டித்துக் கொண்டு, மயிரைக் கறுப்பு நிறமாக வைக்கின்றன. ஆனால், இந்தச் சுகாதாரப் பைகளை, Phagocytes என்ற விஷக் கிருமிகள், சுகாதாரக் கிருமிகளை விழுங்கிவிடுகின்றபடியால், நமது மயிர்களுக்குக் கறுப்பு நிற வஸ்துவின்றி, வெள்ளையாக மாறுகின்றன.

இது போலவே, நமது தசை, நரம்பு மூளை முதலியவற்றின் கிருமிப் பைகள், கொலைபாதக கிருமிகளால் விழுங்கப்படுகின்றமையால், அந்தந்த அவயவங்கள், தங்கள் இயற்கை வாலிபத்தை இழந்து, தோல் சுருங்கவும், சதை தளரவும், எலும்பு பலவீனமாகவும், அறிவு மழுங்கவும் நேரிடுகின்றது.

இவ்விதமாக உண்டாகும் தள்ளாமையைத் தடுக்க மார்க்கம் ஏதாகிலும் உண்டோவெனில், விஞ்ஞானிகள் முக்கியமாக மெட்சினிகாப் விஞ்ஞானியைப் பின்பற்றிய பல விஞ்ஞானிகள், அகால தள்ளாமையைத் தடைச் செய்யக் கூடுமென அபிப்பிராயப்படுகின்றார்கள்.

எப்படி எனில், நமது திரேக சுகாதாரப் பைகளைத் தளர்ச்சி அடையவொட்டாமல், தடுத்து வருவோமேயாகில், கொலை பாதக கிருமிகளுக்குச் சுகாதாரக் கிருமிகளை விழுங்க முடியாமற் போகும்.

இந்த நிலைமையைக் கொண்டுவர, நமது திரேகத்தை நன்றாகப் போஷித்து, சுகாதார வழிகள் படி நடந்து வந்தால், பல காலம் தள்ளாமை அணுகவொட்டாமல் செய்யலாம்.

விஷக் கிருமிகள் உண்டாகும் இடம், நமது திரேக மலஜல இடங்களே. இந்த இடங்களைச் சிறுகுடல், பெருங்குடல் என்பார்கள்.

இந்தக் குடல்களில் மலஜலங்கள் தங்குகின்றபடியால், அவ்விடங்களில், Phagocytes என்ற விஷக் கிருமிகள் கோடி கோடியாக உற்பத்தியாகின்றன. இவைகளே சுகாதாரக் கிருமிகளை நாசமாக்குகின்றன.

இந்த விஷக்கிருமிகள் வளருமிடத்தையும், உற்பத்தியாகுமிடத்தையும், சுத்தமாக வைக்கும்பட்சத்தில், பெருவாரி விஷக்கிருமிகள் உற்பத்தியாகா.

மெட்சினிகாப் ஒரு விசேஷ சிகிச்சையைத் தெரிவிக்கின்றார். அதாவது மலஜலத்திற்கு இருப்பிடம், நமது பெரிய குடலே. இதனைத் திரேகத்தினின்று எடுத்துவிட்டால், தள்ளாமையை நெருங்கவொட்டாமல் செய்யலாமென்கிறார்.

இன்னொரு சிகிச்சையும் அவர் கூறுகின்றார். அதாவது நமது சாதாரண தயிரில் Lactic acid என்ற புளிப்பு உண்டு. அதற்கும், விஷகிருமிகளுக்குச் சத்துருமித்ருக்களாம். நாம் கிரமப்படி மோரை உண்டுவந்தால், தள்ளாமைக்கு இடங்கொடாமல் திரேகத்தைக் காப்பாற்றலாமமென்கிறார்.

Pin It