நமது செய்தித்தாள்கள் காலங்காலமாகச் சிலருக்குச் சாதகமாகவும், சிலருக்குப் பாதகமாகவும் இயங்கி வருகின்றன. அவர்களின் தீர்ப்புகள் எப்போதும் திறமைகளை அடிப்படையாக வைத்து வருவதில்லை. வாய்ப்பு கிடைக்கின்ற போதெல்லாம் (அமைச்சரின்) பதவி விலகல் பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புகிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை நல்ல விதமாகவும், வேண்டாதவர்களை மோசமாகவும் முன்னிறுத்துவதாகவே இது இருக்கும். இதுபோன்ற அணுகுமுறை என் விஷயத்திலும் நடந்தது.

அமைச்சரவைக்குள் நடைபெறும் அதிகார அரசியல் விளையாட்டுகளுக்கு நான் ஒருபோதும் உடந்தையாக இருந்ததில்லை. அதுபோலவே, துறைகள் காலியானால் அதைப் பிடுங்கிக் கொள்ள நடக்கும் போட்டிகளிலும் ஈடுபட்டது இல்லை. நான் பணி செய்வதில் மட்டும்தான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.

அரசின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனதற்கான மற்றோர் செய்தி, அது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் நடத்தப்பட்ட விதம் குறித்ததாகும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டம் எந்தவிதப் பாதுகாப்பும் அளிப்பதில்லை என்பதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

தாழ்த்தப்பட்டோரின் இன்றைய நிலை என்ன? நான் பார்த்த வரையில், முன் எப்போதும் போலத்தான் இருக்கிறது. அதே சர்வாதிகாரம்; அதே அடக்குமுறை. முன்பு எப்போதும் இருந்து வந்த அதே பிரிவினை வாதம்தான் இன்னும் இருக்கிறது. சொல்லப்போனால், இன்னும் மோசமான வடிவில் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோரின் இந்த இழிநிலைக்கு இணையாக, உலகில் வேறு எங்கேனும் உள்ளதா என்று எனக்குப் புலப்படவில்லை.

என்னைப் பெரிதும் அதிருப்தி கொள்ள வைத்தது மட்டுமல்லாமல், ஆர்வமிழக்கவும் வைத்தது என்னவென்றால், நம் நாட்டின் அயல்நாட்டுக் கொள்கை 1947 ஆம் ஆண்டு 15 ஆம் நாள், நாம் சுதந்திர நாடாக மாறத் தொடங்கியபோது, எந்த நாடும் நாம் நலிந்திருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நமது நண்பர்களாக இருந்தன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று நமது நண்பர்கள் நம்மை கைவிட்டு விட்டார்கள். நமக்கு இன்று எந்த நண்பர்களும் இல்லை. நாம் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். அய்.நா. அவையில் நமது தீர்மானங்களை முன் மொழியக்கூட யாரும் இல்லாத அளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட பாதையில் நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.

நமது அயல் நாட்டுக் கொள்கையால், அதிகளவில் ராணுவ செலவுகள் செய்தும், பஞ்சத்தில் வாடும் கோடானு கோடி மக்களுக்கு உணவு வழங்க முடியாமல் தவிப்பதும், தொழில் துறைக்குப் பணம் புரட்ட சிரமப்படுவதும், நமது வளங்கள் எவ்வாறு சுரண்டப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்று தேவையானதை செய்ய முடியாமல் திணறிக்கொண்டு, மிகவும் நல்லவர்களாக இருக்க முயற்சிக்கும் நமது அயல்நாட்டுக் கொள்கை, எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

ஓர் ஆண்டில் நாம் வரியாக வசூலிக்கிற 350 கோடி ரூபாயில் 180 கோடியை ராணுவத்திற்குச் செலவிடுகிறோம். இதற்கு இணையான வீண் செலவு வேறு எதுவும் இருக்க முடியாது. நமது அயல்நாட்டுக் கொள்கையின் விளைவாகவே இதன் வீண் செலவு ஆகிறது.

பாகிஸ்தானுடனான தகராறு, நமது அயல்நாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெரிதும் அதிருப்தியளிக்கிறது. பாகிஸ்தானுடனான நமது உறவு இரண்டு நிலைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்தில் உள்ள மக்களின் நிலை.

காஷ்மீர் பிரச்சினையையே நாம் எப்போதும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு போலியான பிரச்சனைக்காகப் போராடிக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். யார் சரி, யார் தவறு என்ற விவாதத்திலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். என் மனதுக்குட்பட்டவரை, யார் சரி என்பது உண்மையான பிரச்சினை அல்ல; எது சரி என்பதுதான் முக்கியம். இதை (முக்கிய கேள்வியாக) வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரிப்பதுதான் சரியான தீர்வு என்று எனக்குத் தோன்றுகிறது.

இந்தியாவை நாம் எவ்வாறு பிரித்தோமோ அதே போலவே, இந்து மற்றும் புத்தமதப் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுத்துவிட வேண்டும் காஷ்மீரில் உள்ள இஸ்லாமியப் பகுதியைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அது, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரத்து முஸ்லிம்களுக்கு இடையேயான பிரச்சினை. அவர்கள் விருப்பப்படி அதை முடிவு செய்து கொள்ளட்டும்.

("பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 14,2 ஆம் பகுதி, பக்கம் : 1318.)

Pin It