அந்த "மகேஸ்வரி உத்யான்' கல்பெஞ்சில், நமசி கண்மூடி உட்கார்ந்திருந்தார். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாரோ அவருக்கே தெரியாது.

பக்கத்தில் வந்து தோழமையுடன் நாராயண சாஸ்திரி உட்கார்ந்து அவர் தோள்களைப் பிடித்து அசைத்தவுடன் கண்விழித்தார் நமசி.

“என்ன நமசி... இப்போ எல்லாம் இந்தப் பக்கம் வர்றதே இல்லை”.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சாஸ்திரி... மருமகள் பிரசவத்திற்கு ஊருக்குப் போயிருந்தாள். வீட்டில் பாவம் மகனுக்கு உதவியாக சமைத்து வைத்துக் கொண்டு இருப்போமே என்று இருந்திடறதுதான்”.

“என்ன நமசி... தாத்தாவிட்டேனு சொல்லுப்பா... பேரனா பேத்தியா? வாழ்த்துகள்”.

“அட நீங்க ஒண்ணு சார்.. இதிலே நம்ம சாதனை என்ன சார் இருக்கு.. நமக்கு எதுக்கு வாழ்த்துகள் எல்லாம்...”

“என்ன நமசி... என்னாச்சுப்பா.. மனசிலே இவ்வளவு விரக்தியா பேசற மாதிரி என்ன நடந்திருச்சுப்பா...?” நாராயண சாஸ்திரியின்

குரலில் பதட்டமும் உண்மையான அக்கறையும் நட்பும் இருந்தது.

“என்னவோ சாஸ்திரி... பல நேரங்களில் தோணுது.. ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்னு” மூக்குக் கண்ணாடியைக் கழட்டி கண்களைத் தூசி தட்டியது போல் அவர் துடைத்துவிட்டுக் கொண்டார்.

கொஞ்ச நேரம் இருவர் நடுவிலும் அமைதி நிலவியது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் பந்து அவர்கள் நடுவில் விழுந்தது. சாஸ்திரி அந்தப் பந்தை எடுத்துக் குழந்தையிடம் வீசினார்.

“தேங்க்யூ” என்று மழலையில் அந்தக் குழந்தை சொல்லிவிட்டுப் போனபோது இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். அவர்களை நண்பர்கள் ஆக்கியதும் இந்தப் பந்துதானே.. அப்போதெல்லாம் அவர்கள் இருவரும் தங்கள் மனைவி, குழந்தையுடன் இதே இடத்திற்கு வருவார்கள். குழந்தைகள் பந்து விளையாடும் நமசியின் பையனும் சாஸ்திரியின் பெண்ணும்.. அவர்கள் இருவரும் ஊர்க் கதைகள், அரசியல் நிலவரங்கள் எல்லாம் பேசுவார்கள். இடையில் பிள்ளைகளின் பந்து விளையாட்டுப் பருவம் முடிந்து பள்ளிப் பருவம் ஆரம்பித்த பின்னும் அவர்கள் நட்பு தொடரத்தானே செய்தது...

அந்த நினைவுகளில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.

இருவரின் மனக் கண்ணின் முன்னாலும் ஓடுவது ஒரே காட்சிதான் என்பதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள்.

“சாஸ்திரி.. உங்கள் நிலைமை பரவாயில்லை அப்போதே பெரிய வீடு செம்பூரில் வாங்கிவிட்டீர்கள். ஒரே மகள்.. என்னைக்குமே சாஸ்திரி, பொண்ணுகள்தான் அம்மா அப்பாவைக் கடைசி வரைப் புரிந்துகொண்டு கவனிக்குதுக.. இந்த ஆண்பிள்ளைகள்தான் சிரைக்கும்னு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பத் சாஸ்திரி..”

சாஸ்திரி இப்போது சத்தமாகச் சிரித்தார்.

“என்ன சாஸ்திரி சிரிக்கிறீங்க...”

“பின்னே என்ன செய்யச் சொல்றே நமசி..?”

எல்லாம் ஒண்ணுதான் நமசி...

“இல்லை சாஸ்திரி.. நான் ஏத்துக்க மாட்டேன். எங்க வீட்டிலே பாருங்க.. எவ்வளவு கஷ்டப்பட்டு என் பிள்ளையைப் படிக்க வச்சேன். அவனுக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுக்க எவன் காலையெல்லாம் பிடிச்சுத் தொங்கினேன்.

ஆனா.. இப்போ இந்தக் குளிரில் இப்படிக் கல் பெஞ்சில் கார்டனில் வந்து உட்கார்ந்திருக்க வேண்டியதிருக்கு. நான் உங்களை மாதிரி இங்கே காத்து வாங்க.. காலாற நடக்க வரலை சாஸ்திரி...”

“என்னப்பா நமசி.. என் நிலைமையும் அதுதான் இப்போ.. ஒரு காலத்தில் நீ சொன்ன மாதிரி வாக்கிங்க்காக இங்கே வந்திருக்கேம்பா.. இப்போ வந்திருக்கறது.. வாக்கிங் பண்றதுக்க இல்லைப்பா.. இருக்கிறதுக்கு இடமில்லை. இங்கேயாவது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருந்துவிட்டுப் போகலாம்னுதான்...”

“என்ன சாஸ்திரி.. எப்படி இந்த நிலைமை உங்க வீடு பெரியது ஆச்சே. அப்பவே ரெண்டு பெட்ரூம் வசதியோட வாங்கி வச்சிருந்தீங்களே. எனக்குக்கூட நல்லா ஞாபகமிருக்கு. எனக்கு ஒரே பொண்ணு.. நமசி. பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வச்சிக்கற ஐடியாவிலேதான் இரண்டு பெட்ரூம் வசதியோட வாங்கிட்டேன்னு சொன்னீங்களே...”

“நீங்க நினைச்ச மாதிரிதானே பாப்பாவுக்கும் மாப்பிள்ளை அமைஞ்சுது.. இப்போ என்ன ஆச்சு சாஸ்திரி...?” நமசியின் குரலில் பதட்டம்.

“ஆமா... அப்படித்தான் நினைச்சேன். இப்போ.. சாயந்தரம் ஆயிட்டா மருமகன் வந்து அவரோட பெட்ரூமுக்குள்ளே போய் கம்ப்யூட்டர் முன்னாலே உட்கார்ந்து என்னவோ பண்ண ஆரம்பிடறாரு.. பேரன் இன்னொரு பெட்ரூமில் உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்கிறான். நான் தனியா இருக்கேன். ஏதாவது பேச்சு சத்தம் காதிலே விழுந்தா நல்லாயிருக்குமேனு டி.வி. போட்டா மகள் சத்தம் போடறா நமசி. “எனக்கு வரவர புத்தியே இல்லையாம். டி.வி. சத்தத்தில் பையன் படிப்பின் கவனம் சிதறுதாம். அவ வீட்டுக்காரனுக்கு வேற டிஸ்டர்ப்பா இருக்காம். சரி... சரி... உன் கதை என்னாச்சு...”

“வேண்டாம் சாஸ்திரி... என்கிட்டே எதுவுமே கேட்காதீங்க...”

“நமசி... என்னப்பா இது. குழந்தை மாதிரி அழ ஆரம்பிச்சிட்டே...”

“என்னப்பா... என்ன நடந்திச்சி...?”

“எங்க வீடு சின்ன வீடுதானே சாஸ்திரி. மகனுக்குக் கல்யாணம் ஆனப்புறம் வீட்டிலே சாப்பிட்டுட்டு படுக்கறதுக்கு வேற இடம் பார்த்துட்டேன்.”

“இப்போ மருமக பிரசவத்திற்குப் போய்ட்டு வந்ததற்கு அப்புறம்...” நமசி பெருமூச்சு விடுவதும் சொல்லத் தயங்குவதும் தெரிந்தது.

“ஏன் நீ வீட்டுக்குச் சாப்பிட வரக்கூடாதுனு சொல்லிட்டாளா... என்னப்பா என்ன நடந்திச்சி...?”

“அய்யோ அவ அப்படிச் சொல்லியிருந்தாக்கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன் சாஸ்திரி. அவ பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்கறப்போ நான் அந்த வீட்டிலே இருக்கிறது அவளுக்குப் பிடிக்கலையாம்” நமசிகுலுங்கிக் குலுங்கி அழுதார்.

சாஸ்திரியின் கண்களில் கண்ணீர்...

அவதான் சொல்றானா மகனும் சொல்றான் சாஸ்திரி. “வரவர எனக்கு மேனர்ஸ் தெரியலையாம். என்னப்பா... பெரிய பெட்ரூம் வச்சு பிளாட்டா வாங்கி வச்சிருக்கே. இந்த ஒரு அறையிலே பாவம் அவ.. எவ்வளவு கஷ்டப்படறா தெரியுமா”னு கேட்கறான் சாஸ்திரி.

சாப்பிடறதுக்கு மட்டுந்தான் உள்ளே நுழைவேன். அதுகூட சாஸ்திரி.. இந்த வெட்கம் கெட்ட வயிறு... ஏறிப் போயிருக்கிற சுகர்...

“சரி விட்டுத்தள்ளு நமசி...”

“எப்படி சாஸ்திரி.. என் லட்சுமி எப்போ தாய்ப்பால் கொடுத்தா, எப்படி அவன் வளர்ந்தான். அப்போ அதே அந்த வீட்டிலே எத்தனை ஆம்பிளைங்களுக்கு சாப்பாடு ஆக்கிப் போட்டா.. இதெல்லாம் நம்ம பெத்த பிள்ளைக்கே மறந்து போச்சே... நாம ஏன் வந்தவளைக் குறை சொல்லணும்.”

“இதப்பாரு நமசி.. ஒரு அறையா இருந்தா என்ன? ஒன்பது அறை வச்சிருந்தா என்ன? மனசிலே இடம் இருந்தா இதெல்லாம் பெரிய பிரச்சினையா சொல்லு..”

“சரி கிளம்பு நமசி.. நாளைக்கு வா பேசலாம்.”

இருவரும் எழுந்தார்கள்..

அந்தத் தோட்டத்தின் புல்வெளிகள் மறுநாளும் அவர்களுக்காகக் காத்திருந்தது. அவர்கள் இனிக் கட்டாயம் வருவார்கள்.

Pin It