இன்று புதிய கட்டடங்கள் கட்டப்படும்போது அவை நிலநடுக்கங்களைத் தாங்கி நிற்கும் அளவுக்கு நுட்பங்களுடன் கட்டப்படுகின்றன. ஆனால் 1000 ஆண்டுகளாகப் பல நில அதிர்வுகளையும் தாங்கி தஞ்சைப் பெரியகோயில் நிலைத்து நிற்கிறது என்பது மிகச்சிறந்த கட்டடக்கலையின் சான்றாகும். 1342ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம், தென்னகத்தை உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் கொச்சி அருகே விபின் தீவு என்ற நிலத்திட்டு உருவானது. தென்னகம் முழுவதும் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் சோழர்காலக் கட்டடங்கள் எதுவுமே பாதிக்கப்படவில்லை. இத்தனைக்கும் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்படாத பகுதி அல்ல. கடந்த 200 ஆண்டுகளில் மட்டும் பத்துமுறை நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேரிடர்களைச் சோழர்காலக் கட்டடங்கள் தாங்கி இன்றும் நிற்கின்றன. இதுவே அன்று கட்டடக் கலை அறிவில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கியதற்குச் சாட்சியாகும்.


இராசராசேச்சுவரம் என்று சொல்லப்பட்ட பெருவுடையார் கோயில், முந்தைய ஆயிரமாண்டின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்குப் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் திகழ்ந்துள்ளது. அக்காலத்திய சமூக, சமய, இலக்கிய, ஆட்சிச் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதற்கான பல்வேறு ஆவணங்கள் இந்த ஆலயத்தில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு பேரரசின் நடைமுறைகள் என்னவாக இருந்தன என்பதன் மீது ஒளிபாய்ச்சுவதாக இந்தக் கோவில் உள்ளது. பேரரசின் அத்தனை பணிகளையும் பதிவு செய்யும் அலுவலகமாக இந்தக் கோயில் செயல்பட்டுள்ளது.


இந்தக் கோயிலைக் கட்டியவர்கள் அதன் அனைத்துத் தேவைகளையும் மனத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கட்டியிருக்க வேண்டும். இந்த உலகில் உள்ள இன்பங்கள் அனைத்துக்குமான இடமாகவும், வாழ்க்கை யின் நற்சிந்தனைகளை வளர்க்கும் நோக்கிலும் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தபின் திட்ட வரைபடத்திலிருந்து இப்பணி தொடங்கியுள்ளது. கட்டுமானப் பொருட்களைச் சேர்த்தல், வேறு வேறு தேவைகளுக்குரிய தகுதியான கற்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை அதன்பின் நடைபெற்றுள்ளது. கல்லில் மிக உயரமான திருக்கோயில் (விமானம்) எழுப்புவது அவர்களது குறிக்கோளாக இருந்தது. இருப்பினும் அந்தத் திருக்கோயில், கட்டுமான உறுதியுடன் நிலைத்து நிற்கவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுள்ளனர்.


இயற்கையாக நடைபெறும் வேதிமாற்றங்களை எதிர்கொள்ள திருச்சிராப்பள்ளியின் மானமலையில் இருந்து உறுதியான கற்கள் கொண்டுவரப்பட்டன. பச்சை மலைப் பகுதியிலிருந்து பெரிய சிலைகளுக்கான கற்கள் கொண்டுவரப்பட்டன. கோவி லின் பெரிய ‘இலிங்க’த்துக் கான கல் திருவக்கரையி லிருந்து  கொண்டுவரப் பட்டது. கருவறையில் உள்ள சிற்பங்களுக்கும் இது பொருந் தும். இக்கற்கள் கொண்டு வரப்பட்ட  இடங்களை மண்ணியல் ஆய்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன.


முன்னாய்வு செய்யா மல் இதுபோன்ற கட்டுமானங் களை அமைக்கமுடியாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த உயரமான கோவிலை அமைக்க ஏற்கெனவே திறனும் பயிற்சியும் பெற்ற உள்ளூர்க் கட்டடக்கலைஞர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் திட்டமிடுதலுடன் செயல்பட்டிருப்பார்கள். கீழே இரண்டு அடுக்குகளுடன் சேர்த்து 13 அடுக்குக் கோபுரமாகக் கட்டத் திட்டமிடப்பட்டு, முழுக்கட்டுமானத்தின் கனத்தைத் தாங்குவதற்காக அகலமான இரண்டு சுவருள்ள அமைப்பாகவே எழுப்பப்பட்டது. மேலே உள்ள கனமான கட்டுமானங்களைத் தாங்குவதற்காக அடிப்பீடமும் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்டது.


கீழேயுள்ள இரண்டு அடுக்குகளும் உள்சுவர் ஒன்றும் வெளிச்சுவர் ஒன்றுமாக அமைக்கப்பட்டது. இதற்கிடையில் சாந்தாரம் எனப்படும் உள்ளறை உள்ளது. இதற்கு முன்பு கட்டப்பட்ட சீனிவாசநல்லூர் திருவரங்கநாதர் கோவிலிலும் இதே அமைப்பு கீழ் அடுக்கில் மட்டும் உள்ளது. இங்குக் கூடுதலாக இரண்டாவது அடுக்கிலும் இப்படிச் செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தின் கனத்தைத் தாங்குவதற்காக இது செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கின் மேல் மிச்சமுள்ள 11 அடுக்குகளும் கற்கள் சேர்த்து அடுக்கிக் கூம்பிய வடிவில் உயர்த்தப்பட்டன. இந்தக் கல் அடுக்குகள் எதுவும் பூசுபொருட்களால் இணைக்கப்படாமல் இயற்பியல் சமநிலைப்படி தன் கனத்தை தாமே தாங்குமாறு உருவாக்கப்பட்டன.

 

முதல் இரண்டு அடுக்குகளை உறுதியான அடித் தளத்தில் அமைத்துவிட்டால் மேல் தளங்களின் கீழ் நோக்கிய அழுத்தம் அழகாகத் தாங்கப்பட்டுவிடும். இத்துடன் இவற்றில் இரண்டு அடுக்காக வெளிப்புறமாக வும் உட்புறமாகவும் அமைக்கப்பட்ட சுவர்களைச் சுற்றியும் கனமான கல் தூண்கள் தரப்பட்டு இடையில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் காரை சேர்த்து மிக நுட்பமாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்தக் கற்கள் ஒன்றையன்று தொடாமல் ஏறக்குறைய தனித்தனியாக நிற்கின்றன. இவற்றில் சிற்பச்செந்நூல் முறைப்படிசிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. இவை கனத்தைத் தாங்கும் வகையில் உதவி செய்கின்றன.


இந்த நடுச்சுவர் அமைப்பை முந்தைய பல்லவர் கட்டடங்களில் காணமுடியாது. இம்முறை பின்பு வளர்த்தெடுக்கப்பட்டு இப் பெருங் கட்டடத்தில் ஆய்ந்துப் பார்க்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு கட்டப்பட்ட பல கட்டடங்களில் இந்த அமைப்பைப் பார்க்கமுடிகிறது. இதுவே பின்னாளில் கோயில்களுக்கும் போலிகையாக அமைந்திருக்கிறது.


கோபுரத்தின் மூன்றாம் அடுக்கிலிருந்து 13ஆம் அடுக்குவரை கல்கட்டுமானங்கள் உறுதியுடன் திகழ்வதற் காகப் பல்வேறு நுண்ணிய முறைகள் கையாளப் பட்டுள்ளதை அண்மைக்கால ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. கல் அடுக்குகளை மேலே கட்டுவதற்கு உயரே எப்படி கொண்டுபோனார்கள்? அது சரிவாகக் கட்டப்பட்ட அமைப்புகள் மூலமா அல்லது சாரங்கள் மூலமா என்பதை அவரவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான். இவற்றைக் கூம்பு வடிவில் அடுக்கியதன் மூலம் உள்ளே உள்ளீடற்ற கூம்பு போன்ற வெற்றிடமும் உருவாகியுள்ளது. இதனால் மேலே உள்ள அடுக்கின் கனம் குறைந்ததுடன், இதனால் உள்ளே காற்றுக்கான இடைவெளியும் இருப்பதால், உள்பக்கம் சீரான தட்பவெப்பத்தில் உள்ளது.


இந்த அமைப்பை மேலே மேலே உயரமாகக் கட்டி எழுப்புவதற்கு வலுவான சாரம் அமைக்காமல் முடியாது. உட்பகுதியின் அளவோ மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டே போகும். உள்ளே வலுவான சாரம் அமைத்துத் தொழிலாளர்கள் வேலை செய்வது கடினம். அத்துடன் உட்பகுதியை வெற்றிடமாக வைப்பதற்கு பக்கவாட்டு ஆதரவும் தேவை. உயரே கற்களைத் தூக்கிச் செல்லும் போது கொடுக்கப்படும் அழுத்தமும் கோபுரத்தைத் தாக்கும். எனவே சோழர்காலப் பொறியாளர்கள் கோபுரத்தின் உட்பகுதியைக் கடினமான மணல்கொண்டு நிரப்பினார்கள். எனவே மேலே கட்டக் கட்ட அது ஒரே கடினமான கோபுரமாக எழுந்துவந்தது. கட்டுமானத்திற்குப் பின்பே உள்ளே இருக்கும் மணல் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட மணலின் தடயங்களைத் தற்போது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிவியல் ஆய்வகம் கோபுரத்தின் உட்பகுதியை வேதியல் பூச்சு செய்தபோது கண்டறிந்துள்ளது. கோபுரத்தின் உள்ளே நிரப்பப்பட்ட மணலானது கோபுரத்தின் உச்சித் திருக்கோயில் கற்கள் அமைக்கப்பட்ட பிறகு மெதுவாக வெளியே எடுக்கப் பட்டுள்ளது. கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் கிழக்குப் பகுதியில் உள்ள துளை வாயிலாக மண் வெளியே எடுக்கப் பட்டுப் பின் கற்கள் வைத்து மூடப்பட்டது.


புதிய கட்டடக்கலைஞர்களும் நிலநடுக்க அறிவியல் ஆய்வாளர்களும் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு மூன்று வரையறைகளை நிலநடுக்கங்களைத் தாங்கும் கட்டடங் களுக்கு வரையறுத்துள்ளனர்.


1) நிலநடுக்கத்தின் அதிர்வு, கட்டப்பட்ட கட்டடத் தின் தாங்கும் அளவைவிட அதிகமாக இருப்பின் கட்டடத்துக்கு இடர் விளையும்.

2) சிறு அதிர்வுகளின்போதும் கொத்தனார்கள் செய்திருக்கும் இணைப்புகள் வலுவிழக்கும்.

3) சுவர்கள் ஒரே அமைப்பாக நிலநடுக்கத்தைத் தாங்கும் அளவுக்கு வலிவான அடித்தளத்துடன் நிற்க வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடித்துத்தான் எந்தக் கட்டடத்தையும் நிலநடுக்கத்தைத் தாங்கும்வகையில் கட்டமுடியும். இந்த முறைகள் அனைத்தும் பெரியகோவி லில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கடைப்பிடிக்கப் பட்டுள்ளன என்பது வியப்பை அளிக்கிறது. உச்சி ஒரே கல்போன்று இணைக்கப்பட்டு, அதன் கனமானது சுவர்களுக்கு அளிக்கப்படுகிறது. கோபுரத்தின் மூலையில் இருக்கும் ‘கர்ணகூடா’ எனப்படும் கல் அமைப்புகள் வலிவான இணைப்பை அளிக்கின்றன. கீழடுக்குகளின் உள்சுவரில் உள்ள கல்தூண்கள் தேவையான கூடுதல் வலிவை அளிக்கின்றன.


பூகம்பம் உள்ளிட்ட அனைத்து இயற்கைப் பேரிடர்களையும் தாண்டி ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோவில் நிற்பது இதனால்தான். இதன் சிறப்பை ஆராய்ந்து கொண்டாடுவது இக்காலத்தில் பொருத்தமானதே.


நன்றி : தி சன்டே இந்தியன், அக்டோபர் 2010

 

 

 

 

Pin It