பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை; கல்நெய் (பெட்ரோல்) முதலியவை பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும், பேருந்துக் கட்டணம் எட்டாண்டுகளாக உயர்த்தப்படாமலே உள்ளது’ என்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர். நம்புங்கள்! ஒரு முதலமைச்சர் பொய் சொல்வாரா? நம்புவோம்! பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாக எந்த அறிவிப்பையும் முதலமைச்சரும் வெளியிடவில்லை. அரசு போக்குவரத்துக் கழகங்களும் வெளியிடவில்லை. பின் ஏன் பொதுமக்கள் பொருமு கிறார்கள்; பொசுங்குகிறார்கள்?

 

கரணியம் இல்லாமல் இருக்குமா? இழப்பிலேயே இயங்கிக் கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழகங்கள் இப்போது தெம்புடன் ஓடுகின்றனவே! ஊதியமும் ஈட்டுகின்றனவே, எப்படி?

 

வெளியூர்ப் பேருந்துகள்

அப்போதெல்லாம் வெளியூர் செல்லும் வண்டிகளில் தொலைவு செல்லக்கூடியவை, குறிப்பிட்ட நிறுத்தங்கள் நிற்கும் பேருந்துகளாக ஓடும். கட்டணம் இயல்புக் கட்டணமே! அரசு விரைவுப் பேருந்துக் கழகம் மட்டுமே விரைவுப் பேருந்துகளை இயக்கிவந்தன. கட்டணம் சிறிது கூடுதலாக விருக்கும். அவையும் கூட்டம் ஏறாமையால் ‘சாதாரண கட்டணம்’ என்று போட்டு இயல்புக் கட்டணம் வாங்கிய நிலையும் உண்டு.

 

பிறகு, பிற அரசு போக்குவரத்துக் கழகங்களும் ஒன்றிரண்டு விரைவுப் பேருந்துகள் என்று போட்டு இயக்கின. காஞ்சிபுரம் - திருவண்ணாமலை விரைவுப் பேருந்து - 32இல் இருந்து 40 உருபா ஆனது. காஞ்சிபுரம் - சேலம் உரு. 80 - 92 ஆனது. ஆனால், இப்போது மூன்றில் ஒரு பங்கு கூடுதல் கட்டணம் கூட வாங்கப்படுகிறது. வேலூர் - சேலம் 59இல் இருந்து உரு. 80 ஆனது. பின், தொலைவு செல்லும் பேருந்துகள் அனைத்தும் விரைவுப் பேருந்துகள் ஆயின. இப்போது, அவையும் மிகுதியும் குறைக்கப்பெற்று, மிகுசிறப்புப் பேருந்துகளாக (Super Deluxe, Ultra Deluxe) சொகுசுப் பேருந்து மிகுதியாக இயக்கப் படுகின்றன. இவற்றின் கட்டணங்கள் இரண்டரை, மூன்று மடங்குகள். சாய்வு இருக்கைகள், குறைவான இருக்கைகள்! ஏந்தானவர்களுக்கு ஏற்றது. பிற உந்துகள் மணிக்கணக்கில் வராமல் காத்திருந்து காத்திருந்து ஏறி அழாமல் அழும் எளியவர்களை எண்ணிப் பாருங்கள்.

 

மாநகரப் பேருந்துகள்

சென்னை போன்ற மாநகரப் பேருந்துக் கட்டணம் ஏழை எளியவர்களையும் நடுத்தர மக்களையும் வாட்டி வதைப்பதாகவே உள்ளது.

 

நகருந்துக் கட்டணங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இயல்பு (வெள்ளைப் பெயர்ப்பலகை), சில நிறுத்தம் நிற்பது (எல்.எஸ்.எஸ். - மஞ்சள் பலகை) சிறப்பு (சாய்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து) செந்தணப்பு (Air conditioned). வெள்ளைப் பலகை போட்டு வரும் மாநகருந்து குறைந்த கட்டணம் (உரு. 2.00), மஞ்சள் பலகை போட்டு வருவது - நாலில் ஒரு பகுதி கூடுதல் (உரு. 2.50), பச்சைப் பலகை - ஒன்றரை மடங்கு (3.00), சிறப்புப் பேருந்து இரண்டரை மடங்கு (5.00), செந்தணப் பேருந்து - ஐந்து மடங்கு (10.00). முன்னுள்ள மூவகைப் பேருந்து வழித் தட எண்கள் முன்னர் ‘வி’ (எம்) என்ற எழுத்து போட்டு விட்டால், ஓர் உருபா கூடுதல் கட்டணம். (‘எம்’ சர்வீசுக் கட்டணம்) என்ன சர்வீசோ எழவோ பொதுமக்களிடம் பணம் பறிக்க அரசின் திருவிளையாடல்கள் இவை.

 

தெருக்கூத்தில், கோமாளியானவர், யார் வரவில்லையோ, அவருடைய வேடம் தாங்கி ஆடுவார்; ஆண்டியாகவும் வருவார்; அரசனாகவும் வேடம் புனைவார். அக்கூத்தாடி போல், மாநகரப் பேருந்துகளும் பல வேடம் புனைவதில் வல்லவை. வெள்ளைப் பலகை போட்டு வரும் பேருந்து, மஞ்சள் பலகைக்கு மாறும். அடுத்து மஞ்சள் பச்சையாக மாறும். இவ்வாறு ஒரே பேருந்து மூன்று வேடம் போடும் பெருங்கூத்தை நாம் எங்கும் காணலாம். இயல்புப் பேருந்தே சில வழித்தடங்களில் இல்லையென்ற நிலை உருவாகி வருகிறது. பிற பேருந்துகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு, சிறப்பு, செந்தணப் பேருந்துகள் பெருமளவில் ஓட்டப்படுகின்றன.

 

இயல்புப் பேருந்துகள் மிகுதியாகவும், மற்றவை தேவைக்கேற்பக் குறைவாகவும் ஓட்டவேண்டுவது பொதுமக்களுக்கு நலம் சேர்க்க விழையும் அரசின் கடமையாகும்.

 

தனியார் பேருந்துகள்

தனியார் பேருந்துகள், தனியார் விருப்பத்திற்கேற்ப இயங்கி வருவது போல் தோன்றுகின்றன. தனியார் பேருந்துகளில் விரைவுப் பேருந்து என ஓட்டுவது கிடையாது. விரைவாக இயங்கினும் இயல்புப் பேருந்துக் கட்டணமே பெறப்படும். ஆயின் இப்போது விரைவுப் பேருந்து எனப் பெயரிட்டு ஓடுவதுடன், கட்டணங்களும் கூடுதலாகப் பெறப்படுகின்றன. இதற்கெல்லாம் யார் இசைவளிக்கிறார்கள்?

 

தனியார் பேருந்துகள், அரசுப் பேருந்துகள் கட்டணமே பெறப்படவேண்டும். குறைந்த கட்டணம் உரு. 3.50 ஓரிரு ஆண்டுகளாக வாங்குவது கிடையாது உரு. 4.00 தான் வாங்கி வந்தனர். இப்போது உரு. 5 வாங்குகிறார்கள். கேட்டால் ஐந்து தான் ‘மினிமம்’ என்கிறார்கள். (3.50 ஐ 4 ஆக்கினீர்கள். இப்போது 5 என்கிறீர்களே) என்று நாம் கேட்டபோது, உரு. 1 திருப்பிக் கொடுத்தான். சீட்டு உரு. 5க்கு எளியோரும் 5 கொடுத்துச் சீட்டு வாங்குவது வருத்தமளிக்கிறது. அதுவும் சீட்டில் எந்த ஊரிலிருந்து எந்த ஊர் வரை என்று எழுதுவது கூட இல்லை. கட்டணத் தொகையை மட்டும் 5, 6 என்று எழுதிக்கொடுக்கிறார்கள். இந்தச் சீட்டுகளா ஆய்வுக்குப் போகின்றன?

 

4.10.2010இல் தினமணி ஆசிரியவுரையில், ‘அரசு வரையறுத்த கட்டணத்தை மட்டுமே வாங்கிவந்த தனியார் பேருந்துகள், கடந்த மூன்று மாதங்களாகத் தங்கள் விருப்பம் போல கட்டணத்தைத் தாங்களாகவே உயர்த்திக் கொண்டுள்ளன. குறைந்தது 50 காசுகள் முதல் ரூ. 1.50 வரை தனியார் பேருந்துகளில் பரவலாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று எழுதியுள்ளதற்கு அன்றே மறுப்பு தெரிவிக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர்.

 

‘அரசு பஸ்களுக்கு நிர்ணயித்த கட்டணத்தையே தனியார் பஸ் உரிமையாளர்களும் பின்பற்றவேண்டும். இதனை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்’ என்று எச்சரிக்கும் முதல்வர், ‘தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை அரசு போக்குவரத்துக் கழகங்களில் பஸ் கட்டணம் எந்த நிலை யிலும் உயர்த்தப்படவில்லை. இதுகுறித்து அவ்வப்போது அரசு சார்பில் தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. இந்த நிலையில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாகச் சொல்ல வரும்போது, ஏதோ அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த உள்நோக்கத்துடன் முயற்சி செய்யப்படுகிறது.’

 

விழித்திருக்கும் மக்கள் தொடையிலே கயிறு திரிக்கும் போக்கிலிச் செயலல்லவா இது?

 

காஞ்சிபுரத்திலிருந்து பூவிருந்தவல்லி செல்லும் அரசு பேருந்து எண் : 176இல் புற்றுநோய் மருத்துவமனை, மீனாட்சி மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை செல்வதற்கு உரு. 3.50 வாங்க வேண்டும். உரு. 4.00 வாங்கி வந்தனர். இப்போது உரு. 5.00 வாங்குகிறார்கள். கேட்டால், உரு. 5 தான் என்கிறார் நடத்துநர். விரைவுப் பேருந்தும் உரு. 5தான் வாங்குகின்றனர்.

 

சிற்றுந்துகளில் நகருந்துகள் போல் தான் கட்டணம் வாங்கவேண்டும். ஆனால், உரு. 1 கூடுதலாக வாங்கு கிறார்கள்.

 

தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களே!

 

போதும், பேருந்துக் கட்டணங்களில் நடத்தும் பெருங்கூத்து! ஒன்று, சட்டத்தின் ஆட்சியை எல்லா நிலையிலும் நடைமுறைப்படுத்துங்கள். அல்லது கட்டணங் களை முறைப்படுத்திச் செயற்படுத்துங்கள். எப்போதும் தேர்தலையே நினைத்துக் கொண்டிராமல், மக்களை, மக்களின் நலன்களை எண்ணிச் செயற்பட முனையுங்கள்; மக்களின் மனக் குறைகளைக் களைய நல்லதே நினையுங்கள்.

 

 

Pin It